சஜித் ரணில் அரசியல்! வாழ்வா சாவா

இணையாவிட்டால் கட்சிகளுக்கும் இருவருக்கும் அழிவே!

துரோகிகள் விடயத்தில் சஜித்தின் அச்சம் நியாயமானது!

நஜீப் பின் கபூர்

நன்றி 22.11.2026  ஞாயிறு தினக்குரல் 

Daily Mirror - Sri Lanka Latest Breaking News and Headlines - Print Edition I am ready to work with Sajith, Anura and Namal if I win: Ranil

இன்றைக்கு 80 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட அரசியல் கட்சிதான் ஐக்கிய தேசியக் கட்சி. துல்லியமாக குறிப்பிடுவதாக இருந்தால் 06.09.1946 அன்றுதான் டொன் ஸ்டிபன் சேனாநாயக்கவால் (டீ.எஸ்) இது ஆரம்பிக்கப்பட்டது.

1947-1956 1965-1970 1977-1994 2015-2019 ஆகிய காலப்பகுதிகளில் இது நாட்டில் அதிகாரத்தில் இருந்து வந்திருந்தது. இதனை நாம் கூட்டிப்பார்த்தால் 33 வருடங்கள் வரை அமைகின்றது.

1978ம் ஆண்டு இந்தக் கட்சியின் தலைவராக இருந்த ஜூனியர் ரிச்சர்ட் ஜெயவர்தன கொண்டு வந்த அரசியல் யாப்பில் தன்னை நிறைவேற்று அதிகாரம் மிக்க ஒரு ஜனாதிபதியாக நியமித்துக் கொண்டதுடன் தனக்கு ஒரு ஆணை பெண்ணாக்கவும் பெண்ணை ஆணாக்கவும் மட்டுமே முடியாது என்று குறிப்பிட்டிருந்தது அனைவரும் அறிந்த தகவல்தான். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்களில் ரணசிங்ஹ பிரேமதாச பங்களிப்பு முக்கியமானது.

இந்த கட்சிக்கு 1994 முதல் இன்றுவரை ரணில் விக்கிரமசிங்ஹ தலைவராக இருந்து வருகின்றார். பதவிக் காலம் 32 வருடங்கள். கட்சி நாட்டை ஆட்சி செய்த காலமும் ரணில் கட்சியின் தலைமைப்பதவியில்  இருந்த காலமும் ஏறக்குறைய சமனாக அமைந்துள்ளது.

தனது மாமனாரான ஜே.ஆர்.ஜெயவர்தன அவர்களினால் அரசியலுக்கு கொண்டு வரப்பட்ட இந்த ரணில் அவரது பின்புலத்தாலே கட்சியில் அதிகாரத்துக்கும் வந்திருக்கின்றார். இதுவும் நாட்டு மக்கள் அனைவரும் அறிந்த தகவல்தான்.

இந்தக் கட்சியின் வரலாற்றைப் பின்னோக்கிப்பார்க்கின்ற போது டீ.எஸ். சேனாநாயக்காவுக்கு பின்னர் வாரிசு அடிப்படையில் டட்லி சேனாநாயக்க கட்சியின் தலைவராகவும் ஆட்சித் தலைவராகவும் இருந்து வந்திருக்கின்றார்.

இதனை ஜீரணிக்காத காரணத்தால்தான் சொலமன் டயஸ் பண்டாரநாயக்க இவர்களுக்கு ஆப்பு வைத்து சுதந்திரக் கட்சியை துவங்கி அதிகாரத்தைக் கைப்பற்றினார்.

பிற்காலத்தில்  அந்தக் கட்சியும் குடும்ப சொத்தாத அரசியல் அதிகாரத்தை தொடர்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. அது பற்றி நாம் இப்போது பேசவரவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியின் எந்தவிதமான குடும்பப் பின்னணியும் இல்லாது அரசியல் அதிகாரத்தை கைப்பற்றியவர்தான்

Meanwhile Namal Rajapaksa Ranil Wickremesinghe Sajith Premadasa

நாம் முன்பு குறிப்பிட்ட ஆர். பிரேமதாச. இதுவரை ஐதேக.வின் தலைமைத்துவத்தில் இருந்த அனைவரும் பிரபுத்துவ பின்னணியைக் கொண்டவர்கள். ஆனால் ஆர். பிரேமதாச ஒரு பிட்பட்ட சமூகப் பின்னணியில் இருந்து வந்தவர்.

ஆனால் கிராமப்புற பாமர மக்கள் மத்தியில் அவருக்கு கனிசமான செல்வாக்கு இருந்து வந்தது. கிராமோதய எழுச்சித் திட்டத்தின் முன்னோடியும் இவர்தான். அவர் அதிகாரத்தில் இருந்த போது லலித் அதுலத் முதலி காமினி திசாநாயக்க ஆகியோர் அவருக்கு எதிராக கிளர்ச்சி செய்தனர். அது அநேகமாக பிரபுத்துவ மற்றும் பிட்பட்ட சமூகப் பின்னணிக்கும் இடையே நடந்த ஆதிக்கப் போட்டி என்பது நமது கணக்கு.

மூன்று தசாப்தங்களுக்கு மேலாக கட்சித் தலைமையில் இருக்கின்ற ரணில் காலத்தில் கட்சி பெரிதாக ஏதையும் சாதிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.  1993-1994 மற்றும் சந்திரிக்க ஜனாதிபதியாக இருந்த போது (2001-2004)  மைத்திரி ஜனாதிபதியாக இருந்த மற்றுமொரு முறையும் (2015-2019) என இவர் மூன்று முறை பிரதமர் பதவியல் அமர்ந்திருந்தார்.

Presidential election: It should be Mahinda vs. Ranil | The Sunday Times Sri Lanka

அதன் பின்னர் கோட்டாபே ராஜபக்ஸவை மக்கள் துரத்தியடித்த போது இவர் இரண்டு வருடங்கள் வரை நாட்டில் ஜனாதிபதியாக இருந்து வந்திருக்கின்றார். அந்தக் காலத்தில் இவர் ராஜபக்ஸாக்களின் நலன்களை பாதுகாக்கின்ற ஒரு காவல் காரனாகத்தான் பணியாற்றி வந்திருக்கின்றார் என்பது நமது கணக்கு. கட்சி இந்தளவு மக்கள் மத்தியில் செல்வாக்கு இழப்பதற்கும் இது முக்கிய காரணமாக இருந்தது என்பதும் நமது அடுத்த குற்றச்சாட்டு.

Ranil vs Sajith Cartoon by Awantha Artigala

தான் கட்சித் தலைவராக  பதவி ஏற்ற 1994 காலப்பகுதியில் இருந்து இவர் கட்சியில் தனது இருப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவும் தொடர்ச்சியாக கட்சியின் தலைவராக இருந்து கொள்வதற்கும் ஏற்றவாறு கட்சியில் அடிக்கடி யாப்புத் திருத்தங்களை செய்து கொண்டிருந்தார்.

தனது தனிப்பட்ட விருப்பத்துக்கு எற்றவாறு செயற்குழுவுக்கு பெரும் எண்ணிக்கையான உறுப்பினர்களை தொடர்ச்சியாக நியமித்துக் கொண்டிருந்தார். மேலும் கட்சி தொடர்ச்சியாக தேர்தல்களில் தோல்விகளை சந்தித்துக் கொண்டு வந்ததால் முக்கியமான தேர்தல்களில் ஜனாதிபதி வேட்பாளர் பதவியை இவர் விட்டுக் கொடுத்திருக்கின்றார்.

இதனால்தான் சரத் பொன்சேக்க-மைத்திரி-சஜித் போன்றவர்கள் ஜனாதிபதி வேட்பாளர்களாக களத்துக்கு வந்தனர். இதில் மைத்திரி மட்டுமே கரை சேரமுடிந்தது. அந்த நல்லாட்சியை கூட முன்னெடுப்பதற்கு இவர் ஒத்துழைக்கவில்லை என்பதனை மைத்திரியே ஒரு முறையல்ல பல முறை பகிரங்கமாக குற்றம் சாட்டியும் இருக்கின்றார்.

கட்சியின் இந்த தொடர்ச்சியான பின்னடைவுகள் காரணமாக முக்கியஸ்தர்கள் மற்றும் தொண்டர்கள் ஆதரவாலர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி தோன்றி இருந்தது. இதனால் இனி இந்த மனிதனுடன் பயணிக்க முடியாது என்ற நிலையில் 10.02.2020 சஜித் தலைமையிலான ஒரு அணி கட்சியில் இருந்து வெளியேறியது.

இதுதிலுள்ள வேடிக்கை என்னவென்றால்  கடைசிவரை ரணிலுடன் இருந்தவர்கள் கூட அவருக்கு ஆப்பு வைத்துவிட்டு சஜித்துடன் இணைந்து கொண்டனர். அதே போன்று சிறுபான்மைக் கட்சிகளும் கூட்டணிகளும் ரணிலை தேர்தல் கூட்டணியில் இருந்து கை கழுவி விட்டன. இறுதியாக நடைபெற்ற தேர்தலில் ரணிலின் ஐதேக. கட்சிக்கு போட்டியிட முடியாத ஒரு நிலை தோன்றியது. இன்று நாடாளுமன்றத்தில் இருக்கின்ற ஒரே ஒரு ஆசனம் கூட ரணிலுக்கு சொந்தமானதல்ல. அது இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கு சொந்தமானது.

2024 நடை பெற்ற பொதுத் தேர்தலில் சஜித் தலைமையிலான ஐமச. கூட்டணி சமைத்து 40 வரையிலான ஆசனங்களை வெற்றி கொண்டுள்ளது. ஆனால் இதில் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் பலர் இருக்கின்றனர்.

தேர்தலில் இவர்கள் 17 சதவீத வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. இது வரை ஐதேக. ரணில் – ஐமச சஜித் ஆகியோர் தொடர்பான தகவல்களை தெளிவு படுத்தி வந்திருக்கின்றோம். ஐதேக. இந்தளவு சரிவடைய முழுக்காரணம் ரணில்தான் என்பது நமது தொடர்ச்சியான குற்றச்சாட்டாக இருந்து வருகின்றது.

ரணிலின் இந்த சர்வாதிகாரப்போக்குக்கு அவரைச் சுற்றி இருக்கின்ற சிலரும் பொறுப்பாகும். இந்த நிலையில் ஐதேக. ரணிலும் ஐமச. சஜித்தும் இணைய வேண்டும் இல்லாவிட்டால் நமக்கு மீட்சியே கிடையாது  அழிவுதான். இப்படி ஒரு ஊடகச் சந்திப்பில் அண்மையில் கருத்துச் சொல்லி இருக்கின்றார் நவின் திசாநாயக. இவர் காமினி திசாநாயக்காவின் மகன்.

நவின் எதிர்பார்க்கின்ற ரணில்-சஜித் இணைவு பற்றி இப்போது சற்று விரிவாக ஆராய்வோம். முதலில் சில புள்ளி விபரங்களை பார்ப்போம். இந்தப் புள்ளிவிபரங்கள் நிலையானதல்ல என்றாலும் ஒரு அளவுகோலுக்காக எடுத்துக் கொள்வோம்.

நாட்டின் தலைமைப்பதவிக்கு போட்டிக்கு வருகின்ற கட்சிகள் அல்லது தலைவர்கள் என்று எடுத்துக் கொண்டால் அனுர சஜித் நாமல் என்றுதான் இருக்கின்றது. சிலர் ரணிலை ஒரு பெரும் அரசியல் தலைவராக எடுத்துக்கொண்டு பேசுகின்றார்கள். அவர் அதிகாரத்தில் இருக்கின்ற போது என்றுமே தேர்தல்களில் ஒரு ஜனரஞ்சக தலைவராக இருந்ததில்லை.

இதனால் தான் தனக்கு கிடைத்த வாய்ப்புக்களை அடுத்தவர்களுக்குக் கொடுத்து வேடிக்கை பார்ப்பவராக பல முறை இருந்து வந்திருக்கின்றார். வருகின்ற தேர்தல்களில் இலங்கை அரசியலில் ரணில் ஒரு தீர்க்கமான சக்தியாக ஒரு போதும் சமைய மாட்டார் என்பது நமது வலுவான நிலைப்பாடு.

2024 இறுதியாக நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்தவர்கள் 10.7மில்லியன். அனுரகுமார 42.31. சஜித் 32.76 ரணில் 17.27. நாமல் 2.57 சதவீதம் என்று அமைந்திருந்தது. இரண்டாம் சுற்று வாக்கு எண்ணிக்கைபடியே அனுரகுமார ஜனாதிபதியானார்.

Torn between two leaders | Print Edition - The Sunday Times, Sri Lanka

அடுத்து வந்த பொதுத் தேர்தல் முடிவுகளின் படி என்பிபி-அனுரவுக்கு 61.58 சதவீத வாக்குகள். 159 ஆசனங்கள். ஐமச.கூட்டணிக்கு 17.66 சதவீத வாக்குகள். 40 ஆசனங்கள். மொட்டுக் கட்சி 2.31 சதவீதம் 3 ஆசனங்கள். தமிழ் கூட்டணிக்கு 2.31 சதவீத வாக்குகளும் 8 ஆசனங்களும் என்ற நிலை. அதன் பின்னர் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலை நாம் இங்கு ஆராயவில்லை.

தேசிய தலைமைத்துவம் கட்சியின் பலம் ஒரு ஜனாதிபதித் தேர்தல் அல்லது பொதுத் தேர்தலில் தான் முடிவாகின்றது என்பதால்தான் அவற்றை இங்கு தவிர்த்திருக்கின்றோம்.

சஜித்தும் ரணிலும் இணையாவிட்டால் இரு கட்சிகளுக்கும் தனிப்பட்ட ரீதியில் அந்த இருவருக்கும் அழிவுதான் என்ற நவின் கருத்துடன் நமக்கு சிறு உடன்பாடுகூட கிடையாது. இலங்கை அரசியலில் ரணிலின் ஐதேக. செல்லாத காசு. இறுதியாக நடைபெற்ற தேர்தல் முடிவுகள் இதனைத் தெளிவாக கோடிட்டுக் காட்டி இருக்கின்றது.

ரணிலும் சஜித்தும் இணைவதால் தேசிய அரசியலில் எந்த மாற்றங்களும் ஏற்பட மாட்டாது. கடந்த பொதுத் தேர்தலில் சஜித் பெற்ற 17.66 வாக்குகளுடன் ரணில் இணைவதன் மூலம் மேலும் ஒரு சதவீத அல்லது மிஞ்சிப்போனால் இரண்டு சதவீதம் வாக்குகள்தான் அதிகரிக்க முடியும்.

ஆனால் ஐதேக.-ஐமச. இணைவதன் மூலம் வேண்டுமானால் நவின் போன்றவர்கள் அடுத்த தேர்தலில் பாராளுமன்றத்துக்குள் நுழையமுடியும். அதற்கு மேல் ஒன்றும் ஆகப் போவதில்லை. நவின் திசாநாயக்கவுக்கும் இது தெரியும்.

எனவே அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் சஜித் ரணில் இணைவதைவிட சஜித்-நாமல் இணைவதன் மூலம் ஒரு சிறிய வாய்ப்பை எதிர்பார்க்கலாம். ஆனால் அப்படியான ஒரு கூட்டணிக்கு பேரின சமூகத்தில் குறிப்பாக இனவாதிகள் மத்தியில் வாய்ப்பிருக்கின்றது என்பதனையும் இங்கு சொல்லி வைக்க வேண்டும்.

ஆனால் அந்த வாய்ப்பை விட பெரும் எண்ணிக்கையான சிறுபான்மை வாக்குகளை நிச்சயமாக சஜித் இழக்க நேரிடும். குறிப்பாக முஸ்லிம் தமிழ் சமூகங்கள் மொட்டுக் கட்சி மீது நல்லெண்ணத்தில் இல்லை. இது பகிரங்க இரகசியம். இப்போது மீண்டும் நவினின் ரணில்-சஜித் இணைவு கதைக்கு வருவோம்.

இது ஒரு கானல் நீர்போலத்தான் நெடுநாளாக பார்க்கப்பட்டு அல்லது பேசப்பட்டு வருகின்றது. இந்த இரு வலதுசாரிகளுக்கும் இணைவதில் கொள்கை ரீதியில்  தடைகள் கிடையாது.  ஆனாலும் மிகப் பெரும் ஆப்புக்கள் இருக்கின்றன. இப்போது அவை பற்றிப்  பார்ப்போம்.

cartoon ranil and maithree | CounterPoint

ரணில் சஜித் ஆகியோரிடம் இருக்கின்ற குரோத மன நிலைதான் இணைவதில் உள்ள மிகப் பெரிய ஆப்பு. ரணில் சஜித்தை கட்சியின் இரண்டாம் நிலை என்று வைத்துக் கொண்டாலும் ரணில் அவரது உறவினர் ருவன் விஜேவர்தனாவைத்தான் தனக்குப் பின்னர் கட்சியின் தலைவர் நிலைக்கு கொண்டுவருவதற்காக வியூகங்களை வகுத்துக் கொண்டிருந்தார்.

இந்த ருவன விஜேவர்தனாவுக்கு அதற்கான அடிப்படைத் தகைமைகள் ஏதுவுமே இருக்கவில்லை. ரணிலின் உறவு முறைதான் ஒரே தகைமையாக இருந்தது. அந்த வகையில் ரணில் சஜித்தைப் பொருத்தவரை ஒரு நம்ப முடியாத மனிதன் என்ற மன நிலை இருக்கின்றார். இதில் நமக்கு நூறுசதவீத உடன்பாடு இருக்கின்றது.

அடுத்து ஐதேக-ரணிலுடன் இருக்கின்ற ஒரு குழுவினர் சஜித்தை ஒரு வேண்டப்படாத ஆளாகவே நடாத்தி வந்திருக்கின்றார்கள். அதில்  வஜிர அபேவர்தன சகல ரத்நாயக்க என்பவர்கள் முக்கியமானவர்கள். இந்த இரு அணிகளும் இணைந்தாலும் அவர்களை உள்வாங்குவதில் சஜித் விருப்பம் அற்றவராக இருக்கின்றார்.

இதனை நாம் தனிப்பட்ட ரீதியிலும் அறிந்திருக்கின்றோம். இவர்கள்தான் இந்த இரு கட்சிகளும் இணைவதில் உள்ள அடுத்த தடைக்கல். ஆனால் அவர்களை கலட்டிவிட்டு ஐதேக. சஜித்துடன் இணைவதற்கான வாய்ப்புக்கள் மிகவும் குறைவு. நாம் அறிந்த வரை நவின் திசாநாயக்க ருவன் விஜேவர்தன போன்றவர்கள் வாய்ப்புக்கிடைத்தால் சஜித்துடன் இணைந்து கொள்ளத் தயாராகவே இருக்கின்றார்கள்.

ஆனால் அவர்களை உள்வாங்குவதில் சஜித்துக்கு ஒரு பெரும் அச்சம் இருக்கின்றது. காரணம் தனது தந்தைக்கே சதி செய்தவரின் பிள்ளைதான் நவின். இவர்களை இணைத்துக் கொணடால் தனது தலைமைக்கு ஆபத்து என்று சஜித் எதிர்பாக்கின்றார் என்பது நமது மதிப்பீடாக இருக்கின்றது.

ரணிலின் ஐதேக.வை இணைத்துக் கொண்டாலும் அவர்களுக்கு என்ன பெரிய வாக்கு வங்கியா இருக்கின்றது. அப்படியே இணைந்தாலும் கட்சி பதவிகளில் பங்கு கேட்பார்கள். ஆனால் அப்படி பதவிகளை கொடுத்து அலங்கரிப்பதற்கு ரணில் தரப்பில் யார்தான் இருக்கின்றார்கள்.

gossiplanka collage

முதுகில் குத்தக் கூடியவர்களுக்கு பதவிகளா  என்ற கேள்விகளும் எழுகின்றன. மேலும் ரணில் உள்ளே வந்தால் கட்சியில் ஆதிக்கம்  செலுத்தவருவார். அது தனக்குத் தலைவலியாக அமையும் என்பதும் சஜித்துக்குத் தெரியும். அதனால் தான் ஐதேக ரணில்-ஐமச சஜித் இணைவு கானல் நீராக அமைகின்றது.

ஆனால் ஐதேக. முழுக் கட்டுப்பாட்டுடன் தனக்கு கிடைக்குமாக இருந்தால் கட்சியை பொறுப்பேற்க சஜித் தயாராகவே இருக்கின்றார். ஆனால் சதிகாரர்கள் விடயத்தில் சஜித் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கின்றார். இது நியாயமான அச்சமும் கூட.!

Previous Story

ட்ரம்ப் நெதன்யா ராஜபக்ஸ!

Next Story

රෝහණ විජේවීර හා,බිරිඳගේ,පවුලේ අයව,මරා පූච්චලා..S.D.I.D.ගේ මස්සිනාත් හවුල්.?