நஜீப் பின் கபூர்
நன்றி:30.08.2026 ஞாயிறு தினக்குரல்

************************
‘இதை தாய் வழக்கு என்று சொன்னால்
சூத்திரதாரிகள் என்று சொல்லப்படுகின்ற
அரசியல்வாதிகள் உளவு அதிகாரிகள்
சம்பந்தப்பட்ட வழக்கை என்னவென்று
இவர்கள் அழைக்கப் போகின்றார்கள்’
************************

போர்க்களத்தில் கொத்துக் கொத்தாக மனிதப் படுகொலைகள் நடந்திருப்பதையும் நடப்பதையும் நாம் வரலாறு தொட்டு இன்றுவரை பார்த்து வருகின்றோம். சரியோ பிழையோ அதற்கு ஏதாவது காரணங்கள் இருக்கலாம்-சொல்லலாம்.
ஆனால் ஒரு புனிதமான தினத்தில் மக்கள் தனது இறை சன்னிதானத்தில் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த நேரத்தில் அவர்களை கொத்துக் கொத்தாக கொன்று குவித்ததை என்னவென்று சொல்வது. இதற்கு மத்தியில் அதனையும் மற்றுமொரு கடவுளின் பேரில் புனிதப் பணி என வரவு வைத்துப் பேசுகின்ற மனித மிருகங்களும் நம்மத்தியில் வாழ்கின்றார்கள்! நமது நாட்டில் 2019 ஏப்ரல் 21திகதி நடந்த மிருகத்தனமான மனித வேட்டை தொடர்பான வழக்குத் தீர்ப்பு செப்தெம்பர் 22ம் திகதி வெளிவர இருக்கின்றது. அது பற்றித்தான் இந்த வாரம் பேச இருக்கின்றோம்.
இந்தத் தாக்குதல் நடந்த முதல் வாரத்திலோ இதன் பின்னணியில் அரசியல் நிகழ்ச்சி நிரல் இருக்க வேண்டும் என்று நாம் எமது வாரா இதழுக்கு எழுதி இருந்த கட்டுரையில் தெளிவாக சொல்லி இருந்தோம். அதனை இன்று உலகமே பார்த்துக் கொண்டிருக்கின்றது ஏற்றுக் கொண்டிருக்கின்றன.
இது தொடர்பாக நாம் அறிந்த வரை முப்பத்தொரு வழக்குகள் பதிவாகி இருக்கின்றது. இதன் தாய் வழக்கு அல்லது மாபெரும் வழக்கு என்று சொல்லப்படுகின்ற வழக்கின் தீர்ப்புக்கள் செப்தெம்பர் 22ல் வெளிவர இருக்கின்றது. சில வேலை குறிப்பிட்ட நாளில் இருந்து ஓரிரு நாட்கள் தீர்ப்பு பின்னால் போனாலும் வழக்கு தீர்ப்பு வெளிவருவது உறுதி. முழு உலகமும் இந்த வழக்குத் தீர்ப்பை ஆவலுடன் எதிர்பார்த்து நிற்கின்றது.
மனிதனாகப் பிறந்த எவனாவது இந்த படுகொலைகளை நியாயப்படுத்த முடியுமா? இந்த நாட்டில் வாழ்கின்ற கிறிஸ்தவ சமூகத்தின் மீது தாக்குதல் நடாத்த முஸ்லிம் சமூகத்துக்கு என்ன தேவை இருந்தது? இது போல மக்கள் வழிபாட்டுத் தளங்களில் இருக்கின்ற நேரங்களில் தாக்குதல்கள் நடக்கின்றன.
ஆப்கான் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் மாற்றுக் கொள்கையுடைய முஸ்லிம்களை வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பங்களில் அதே சமயத்தை சேர்ந்த மற்றுமொரு குழு கொன்று குவிப்பதை நாம் பார்த்திருக்கின்றோம். கடவுளே இது என்ன கொடூரம் அட்டகாசம். இதில் பெரிய அதிர்ச்சி என்னவென்றால் அதற்கும் கடவுளின் விருப்பம் புனிதப் பணி என்றெல்லாம் பெயர் சூட்டிக்கொள்கின்றார்கள். இவ்வாறான தாக்குதல்களின் பின்னணிகளை ஆராய்கின்ற போது அவற்றின் பெரும்பாலானவைக்கு அரசியல் பின்னணி மற்றும் கூலிப்படைகளின் செயல்பாடுகள் இருப்பது உறுதியாக இருக்கின்றது.
இன்று நமது நாட்டில் நடைபெறுகின்ற படுகொலைகளைப் பாருங்கள் பாதாள உலகத்தார் போதை வியாபாரிகள் அரசியல்வாதிகள் தமது தேவைகளுக்கு எப்படி எல்லாம் படுகொலைகளை செய்து கொண்டிருக்கின்றார்கள். காசுக்காக படுகொலைகளை பண்ணும் கும்பல்களைப் பாருங்கள் தான் குறிப்பிட்ட ஒரு மனிதனைத் தீர்த்துக்கட்டும் போது ஏன் இந்த மனிதனை நான் கொல்கின்றேன் சுடுகின்றேன் என்பது அந்த தாக்குதலை நடத்துகின்றவனுக்கோ கும்பலுக்கோ தெரிவதில்லை.
அந்தக் கொலைகள் பற்றி அவன் கவலைப்படுவதும் கிடையாது. இன்னும் பல படுகொலைகள் அரசியல் தேவைகளுக்கு இருப்புக்காக மேற்கொள்ளப்படுகின்றன. லசந்த விக்கிரமதுங்ஹ எகனலிகொட தாஜூதீன் படுகொலைகளை இதற்கு நல்ல உதாரணமாகச் சொல்ல முடியும். இந்தப் படுகொலைகள் அரசியல் தலைவர்களின் தேவைக்காக படைத்தரப்பில் இருப்பவர்களாலே செய்யப்பட்டிருக்கின்றது அல்லது கூலிப்படைகள் மற்றும் மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள் அதற்காகப் பாவிக்கப்பட்டிருப்பது தெரிய வருகின்றன.
இப்படிப்பட்ட சம்பவங்களில் பாவிக்கப்பட்டவர்களே பின்பு படுகொலைகள் செய்யப்பட்டு குறிப்பிட்ட சாட்சிகள் அழிக்கப்படுவதையும் பார்க்கின்றோம். நீதிமன்ற வழக்குகளில் அது பற்றி தகவல்கள்-சாட்சிகள் வெளியே வருவதை நாம் இன்று பார்க்கின்றோம். நவீன தொழிநுட்பங்கள் காரணமாக என்னதான் சாட்சிகளை ஆவணங்களை அழித்தாலும் சில ஆதாராங்கள் அம்பலமாகி விடுகின்றன.
அரசியல் இருப்புக்காக பாதாள போதை வியாபார போட்டிகள் காரணமாக மனிதப்படுகொலைகள் நடப்பது சமகாலத்தில் இயல்பான ஒன்று என்ற நிலை காணப்படுகின்றன. இவ்வாறான படுகொலைகள் அனைத்துக்கும் நியாயம் நீதி கிடைக்கும் என்று நாம் ஒரு போதும் நம்பமுடியாது. தர்மமும் கடவுளும்தான் இதற்குப் பதில் தர வேண்டும்.
ஈஸ்டர் தாக்குதலை எடுத்துக் கொள்ளுங்கள் அதனை மூடி மறைப்பதற்காக எப்படி எல்லாச் சதிகள் திட்டங்கள் வகுக்கப்பட்டிருந்தன என்பதை ஒரு முறை எண்ணிப்பாருங்கள்.! அப்போது மனிதர்களில் எப்படியான கொடூர மிருகங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன என்பதும் தெரிய வரும். இதில் கோட் சூட் போட்டவர்கள் வெள்ளை ஆடை அணிந்த சமூகத்தின் மத்தியில் கௌரவமாக தோன்றுபவர்கள் இருக்கின்றார்கள்.

அப்பாவிகளை குற்றவாளிகளாக்குவதும் குற்றவாளிகளைப் புனிதர்களாக்குவதும் பொலிசும் நீதித்துறையினரும் இப்படியான விசமிகளை பாதுகாத்திருப்பதும் இப்போது பரவலாக அம்பலமாகி வருகின்றன. எனவே இந்த அரசியல் நிருவாகப் பின்னணியில்தான் சமூகம் இதற்கு நீதியை எதிர்பார்த்தும் நிற்க்கின்றது. இது வரை நாம் வாழ்கின்ற இந்த சமூகம் எவ்வளவு நயவஞ்சகமானது அநாகரிகமானது என்பதற்கு சில செய்திகளை சொல்லி இருக்கின்றோம்.
இந்தப் பின்புலத்தில்தான் நாம் செப்தெம்பரில் ஈஸ்டர் தாக்குதல் பற்றி மாபெரும் வழக்கில் தீர்ப்பை எதிர்பார்த்து நிற்கின்றோம். வழக்கு நியாயமாக நடந்தது என்போரும் அநியாயமாக அமைந்தது எப்போரும் நிச்சயம் இருப்பார்கள். அவர்கள் இதற்கு எதிராக மேன்முறைப்பாடு செய்யவும் இடமிருக்கின்றது. இப்போது இந்த வழக்குத் தொடர்பாக மேலதிக தகவல்களைப் பார்ப்போம்.
அதற்கு முன்னர் இந்த ஈஸ்டர் தாக்குதல் பற்றி ஒரு குறிப்பை இங்கு சொல்லி ஆகவேண்டி இருக்கின்றது. காரணம் இதுதான் கடைசியும் முதலுமான வழக்கல்ல. நமக்குக் கிடைத்திருக்கின்ற தகவல்களின் படி ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான இன்னும் முப்பத்தொரு வழக்குகள் இருக்கின்றன. அதில் சலே தொடர்பான வழக்கும் நிலுவையில் இருக்கின்றது.
செப்தெம்பர் 22ல் வர இருக்கின்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் 25 அதில் ஒருவர் மரணம். வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கின்ற படி பிரதான குற்றவாளி நௌபர் மௌலவி. இவரை அந்த இடத்தில் வைத்து வழக்கை முன்னெடுத்து செல்வதில் சரத் வீரசேக்கர போன்றவர்கள்தான் முக்கிய காரணம். வெளிநாட்டு விசாரணைகளும் நௌபர் மௌலவியை அப்படித்தான் சித்தரித்திருந்தது.
ஆனால் கம்மன்பில எழுதிய புத்தகம் பிரதான குற்றவாளி சஹ்ரான் மௌலவி என்று குறிப்பிடுகின்றது. எனவே அந்த அணிக்குள்ளேயே பிரதான குற்றவாளி அல்லது தாக்குதல் தொடர்பில் ஒத்த கருத்துக் கிடையாது. இந்த நிலையில்தான் நௌபர் மௌலவியை பிரதான குற்றவாளியாக வைத்துத்தான் தீர்ப்பு வர இருக்கின்றது.
மொத்தமாக 23270 முறைப்பாடுகள். வழக்கு 255 நாட்கள் விசாரிக்கப்பட்டிருக்கின்றது. 547 பேர் சாட்சிக்காக அழைக்கப்பட்டிருந்தனர். எஞ்சி இருக்கின்ற குற்றம் சாட்டப்பட்ட 24 பேரில் ஒருவர் நீதி மன்றில் மௌனித்து நின்றார். 23 பேர் தமது தரப்பு வாக்குமூலங்களை வழங்கி இருக்கின்றார்கள். இதில் ஏழுபேர் சுயமாக தமது வாக்குமூலங்களை வழங்கி இருக்கின்றார்கள். அதனை நீதிமன்றம் உறுதி செய்து கொண்டிருக்கின்றது.

பலர் இதில் தமக்கு எந்தத் தொடர்புகளும் கிடையாது தம்மிடம் பலாத்காரமாக வாக்குமூலங்களை பெற்றுக் கொண்டார்கள் என்று சொன்னதுடன் வாக்குமூலம் பெறுகின்றபோது தனக்கு கட்டாயப்படுத்தி பன்றி இரைச்சியை ஊட்டினார்கள் என்றும் நீதிமன்றில் கபூர் மாமா என்பவர் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. பிரதான குற்றவாளியான நௌபர் மௌலவி தனக்கும் தாக்குதலுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. இப்படியான மிலேச்சத்தனமான படுகொலைகளை நான் ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறி இருக்கின்றார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் இதற்கு முன்னர் இரண்டு வழக்குகளின் தீர்ப்பு வெளிவந்திருந்தது. அதில் தமது கடமைகளை சரியாக நிறைவேற்றாத குற்றச்சாட்டில் முன்னாள் பொலிஸ் அதிபர் பூஜித ஜயசுந்தர மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிரி பர்ணாந்து என்போருக்கு நீதி மன்றம் மரண தண்டனையும் 7000 வருடங்களுக்கு சிறைத் தண்டனையும் வழங்கி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இது போன்று இன்னும் முப்பத்தொரு வழக்கு பல்வேறு நீதி மன்றங்களில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
எனவே நமது கணிப்பின்படி முன்பு கொடுக்கப்பட்டது போல குற்றவாளிகளுக்கு செப்தெம்பர் 22 தீர்ப்பில் பலருக்கு 7000 வருட சிறையும் மரண தண்டனையும் இன்னும் சிலருக்கு அதனை விட தளர்வான தண்டனைகளும், ஆபூர்வமாக சிலர் குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலையும் செய்யப்படலாம். ஆயிரக்கணக்கான வருடங்கள் சிறை தொடர்பில் ஒரு சிறு குறிப்பை இங்கு பதிவு செய்யலாம் என்று தோன்றுகின்றது.
தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டிருந்த நேரத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயகவுக்கு குண்டு வைக்கப்பட்ட சம்பவத்தில் அவர் தனது ஒரு கண்ணை இழந்ததுடன் சம்பவத்தில் இருபத்தி ஏழுபேர் படுகொலை செய்யப்பட்டனர். இதன் சூத்திரதாரி என்ற வேலாயுதம் வரதராஜ என்பவருக்கு 290 வருடங்கள் சிறையும் மரண தண்டனையும் வழங்கப்படடது. பின்பு தண்டனை முப்பது வருடங்கள் சிறைத்தண்டனை என்று தளர்த்தப்பட்டிருக்கின்றது.
செப்தெம்பர் 22ல் வரும் தீர்ப்புப் பற்றிய எதிர்பார்ப்புக்கள் ஒரு பக்கம் இருக்க… இதில் முன்னாள் உளவுத்துறை பணிப்பாளர் துவான் சுரேஸ் சாலே மற்றும் பின்னணியில் கோட்டா இருந்தார் என்ற கதையும் மக்களிடத்தில் பரவலாக இருக்கின்றது. அது தொடர்பான சில நகர்வுகளையும் இப்போது நீதிமன்றம் எடுத்து வருகின்றது.
எனவே அவர்கள் தொடர்பான வழக்குகள் எப்போது துவங்கும் அதில் உண்மைகள் இருந்தால் அவர்களுக்கு கிடைக்கின்ற தண்டனை என்னவாக அமையும் என்பது தொடர்பாக மக்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்புக்கள் இருக்கின்றன. ஆனால் இந்த வழக்குகளை முன்னெடுத்துச் செல்வதில் அரசு நிறையவே சவால்களையும் எதிர்நோக்கி வருவதை நாம் தினந்தோறும் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.
இது பற்றி மக்களுக்கு வாக்குறுதி கொடுத்துத்தான் இந்த என்பிபி. அரசு பதவிக்கு வந்தது. எனவே தமது முதல் பதவிக் காலத்தில் இது தொடர்பான வழக்குகளை முடித்து மக்களுக்கு ஆட்சியாளர்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்களா என்ற கேள்வியும் இருக்கின்றது.
இந்த நிலையில்தான் இது போன்ற பாரதூரமான குற்றசாட்டுக்களில் இருந்து நாம் எப்படி தப்பிப்பது என்று அதில் பங்குகொண்டவர்கள் தன்னாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றார்கள். அதற்காக நாட்டில் இன்னும் பாரதூரமான படுகொலைகள் நடந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு ஏதும் கிடையாது.

பாதிக்கப்பட்ட கிருஸ்தவ சமூகம் மற்றும் இதில் நேரடியாக பங்கு கொண்ட முஸ்லிம் கூலிப்படையை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்கள் அதன் பின்னணி என்பனவும் கண்டறிய வேண்டி இருக்கின்றது. அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஒரு இடத்தில் பேசும் போது தவ்ஹீத் அமைப்புக்கும் ஞானசார அணியினருக்கும் உளவுத்துறையிலிருந்து பொது மக்கள் பணத்திலிருந்து கடந்த ஆட்சியாளர்கள் சம்பளம் வழங்கி இருந்தார்கள் என்று கூறி இருந்தார்.
ஈழ விடுதலைப் போர் காலத்தில் இஸ்ரேல்-மொசாட் இலங்கை பாதுகாப்புப் படைகளுக்கு பயிற்சிகளை வழங்கிக் கொண்டிருந்த அதே காலத்தில் ஈழ விடுதலைப் போராட்டக் குழுக்களுக்கும் பயிற்சிகளை வழங்கி வந்தது தெரிந்தது. அப்படி ஒரு நிலைதான் இதுவும்.
நாம் வாழ்கின்ற சமகால உலகில் எப்படியான செயல்பாடுகள் நடந்து வருகின்றன. அதில் போர் தந்திரங்கள் எப்படி எல்லாம் அமைந்திருக்கின்றன.? ஈரான் போரில் உளவாளிகள் எப்படி எல்லாம் பயன்படுத்தப்பட்டிருக்கின்றார்கள் என்பதை எல்லாம் பார்க்கின்ற போது பாமர மக்களால் இவற்றை எல்லாம் எந்தளவுக்கு விளங்கிக் கொள்ள முடியும். இதில் ஈடுபட்டவர்கள் பங்கு கொண்டவர்களையே அழித்தொழிக்கின்ற வியூகங்கள் எல்லாம் பற்றி மக்கள் எந்தளவுக்கு புரிந்து கொள்வார்கள்.
ஈஸ்டர் தாக்குதலைத் திட்டமிட்டவர்களே பிற்காலதில் அதிகாரத்தில் அமர்ந்ததால் இந்த வழக்கில் அவர்கள் கனிசமான தாக்கங்களையும் சேதங்களையும் ஏற்படுத்தி இருந்த பின்னணியில்தான் தாக்குதல் தொடர்பான அனைத்து வழக்குகளும் நகர்கின்றன. எனவே தீர்ப்புக்களிலும் அதன் சேதாரங்கள் வெளிப்படும்.




