-ஜஹங்கீர்-
நாம் சீருடை தொடர்பாக இங்கு வெளியிடுகின்ற கருத்துக்கள் அதற்கு ஆதரவானதோ எதிரானதோ அல்ல. ஆனால் இரு தரப்பினர் மத்தியில் இதில் ஒரு வன்முறை இனவாதம் முரண்பாடுகள் அரசியல் பச்சோந்தித்தனம்-சந்தர்ப்பவாதம் புரையோடிப் போய் இருப்பதாகத்தான் நாம் சுட்டிக்காட்ட முனைகின்றோம். ஒரு தெளிவுக்காக இருபக்க யதார்த்தங்களை முன்வைத்து இதனை விமர்சனம் செய்வதுதான் கட்டுரையின் அடிப்படை நோக்கமாக இருக்கின்றது.
நம்மைப் பொருத்து வரை சொல்லப்படுகின்ற எழுதப்படுகின்ற கருத்துக்கள் நடுநிலையான பார்வை என்று நாம் நம்புகின்றோம்.? என்றாலும் வழக்கம் போல இதனை ஏற்றுக் கொள்வதற்கும் நிராகரிப்பதற்கும் வாசகர்களுக்கு உரிமைகள் இருக்கின்றன.
இன்று கல்முனை வடக்கு வைத்தியசாலையில் துவங்கிய இந்த சுகாதார உதவியாளர் சீருடை விவகாரம் கிழக்கிலும் கிழக்குக்கு வெளியேயும் பரபரப்பாகப் பேசப்படுகின்றது. முஸ்லிம்கள் தரப்பில் சீருடை விவகாரத்தில் சொல்லப்படுகின்ற உரிமை அல்லது கலாhச்சாரம் என்ற விடயத்துக்கு வருவோம்.
முஸ்லிம் பெண்கள் பள்ளிக் கூடங்களுக்கே செல்லக்கூடாது அது தவறு வழிகேடு என்று அப்படி துவக்கத்தில் நாட்டில் உருவாகிய முஸ்லிம் பாடசாலைகளை தீயிட்டுக் கொழுத்திய ஒரு காலமும் வரலாறும் இந்த இருந்தது. ஆனால் இன்று முஸ்லிம் பெண்கள் அனைத்துத் துறைகளிலும் தொழில் பார்க்கின்றார்கள். இராணுவம் பொலிஸ் படைகளில் கூட முஸ்லிம் பெண்கள்; இருக்கின்றார்கள்.
அன்று முஸ்லிம் பெண்கள் பாடசாலைப் பக்கமே தலைவைத்துப் படுக்கக் கூடாது என்று சொன்னவர்கள் இன்று அடங்கிப்போய் நிற்கின்றார்கள். அல்லது அவர்களை பிற்போக்குவாதிகள் என்று அதே சமூகம் ஓரம் கட்டிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். எனவே இன்று இந்த நாட்டில் முஸ்லிம் பெண்கள் பாடசாலைக்கு போகக்கூடாது கல்வி கற்கக் கூடாது என்று எவரும் பேசுவதில்லை.
ஆனாலும் அப்படி சிந்தனையுடையவர்கள் இன்றும் முஸ்லிம் சமூகத்தில் இருக்கத்தான் செய்கின்றார்கள். ஆப்கானிஸ்தானில் மட்டுமல்ல இங்கும் சிலர் இருக்கின்றார்கள். இன்று கல்முனை வடக்கில் தோன்றி இருக்கின்ற சீருடை விவகாரத்தில் இனவாதம் வன்முறை அரசியல் விதண்டாவாதம் புகுந்து விளையாடுகின்றது என்பதுதான் நமது அவதானம்.
உலகில் இருக்கின்ற சமயங்களில் மிகவும் கண்டிப்பானதும் கட்டுப்பாடுகளையும் பின்பற்றப்படுகின்ற ஒரு மதமாக இஸ்லம் இருப்பது போல காலாச்சார விடயங்களிலும் முஸ்லிம் சமூகம் எங்கு வாழ்ந்தாலும் மிகவும் இருக்கமான ஒரு நிலைப்பாட்டில்தான் இருக்கின்றது.
தற்போது கல்முனை வடக்கு சுகாதார உதவியாளர் சீருடை விவகாரத்தில் அரசு தமிழ் முஸ்லிம் தரப்பினர் மத்தியில் மட்டுமல்ல பேரின சமூகத்தின் மத்தியிலும் முரண்பாடான நிலைக்கு இது செல்லக் கூடும்.! முஸ்லிம்கள் தரப்பில் இந்த சீருடை விடயத்தில் நடாத்தப்படுகின்ற உரிமைப் போராட்டமும் அதனை மறுக்கின்ற ஏனைய சமூகங்களின் நிலைப்பாடுகள் பற்றி சற்று ஆழமாகப் பார்த்தால் இதில் பெரும்பாலும் விதண்டாவாதங்கள் தெரிகின்றன.
அறிஞர் சித்தி லெப்பையை (1838 -1898) இந்த நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம்கள் ஒரு பெரும் தலைவராக மதிக்கின்றார்கள் பேசுகின்றார்கள். அவர் ஒரு சட்டத்தரணியும் கூட. இந்த நாட்டில் முஸ்லிம் சமூகத்தின் நலன்களை வென்றெடுப்பதிலும் பாதுகாப்பதிலும் அவரது பங்களிப்பு சிலாகித்துப் பேசப்படுகின்றது.
அதில் ஆங்கிலேயர் காலத்தில் நீதிமன்றத்துக்கு துருக்கித் தொப்பி அணிந்து சென்ற போது ஆட்சியாளருக்கு எதிராக அவர் நடாத்திய போராட்டம் இன்றும் முஸ்லிம்கள் மத்தியில் பேசப்பட்டு வருகின்றது. அதில் அவர் வெற்றி பெற்றதுடன் நீதி மன்றில் துருக்கித் தொப்பி அணிந்து கடைசிவரையும் வழக்குகளுக்கு ஆஜரானார்.
இந்த இடத்தில் நமது கேள்வி என்னவென்றால் அவர் வென்றெடுத்த இந்த உரிமையை இன்று எத்தனை சட்டத்தரணிகள் பின்பற்றுகின்றார்கள்? சித்தி லெப்பை வென்றெடுத்த அந்த உரிமையை முஸ்லிம் சட்டத்தரணிகள் நிராகரித்து வருவது அவரது உயரிய இலட்சியத்திற்கு மாசு கற்பிக்கின்ற ஒரு செயலாக நாம் பார்க்க முடியும்.
இன்று முஸ்லிம் சமூகத்தில் பல நூறு சட்டத்தரணிகள் இருக்கின்றார்கள். இந்த நாட்டில் இருக்கின்ற முஸ்லிம்களின் இன வீதத்துக்கும் மேற்பட்ட ஒரு தொகையாகவும் இது இருக்கலாம். இவர்கள் நீதிமன்றங்களில் ஆஜராகும் போது எவராது ஒரு முஸ்லிம் சட்டத்தரணி இன்று தலையில் தமது கலாச்சார தொப்பி அணிந்து ஆஜராகின்றாரா? அல்லது அதற்கான மனநிலையில் இருக்கின்றாரா.?
இதற்கு அவர்கள் தனது மனட்சாட்சிக்கு ஏற்ப பதில் சொல்லிக் கொள்ளலாம். அபூர்வமாக ஒரிருவர் இருக்லாம்.! கலாச்சார சீருடை என்றால் அது எப்படி அபூர்வமாக முடியும்.? முஸ்லிம்களுக்கு தனது கலாச்சாரம்-சீருடை முக்கியமானால் சித்தி லெப்பை தொப்பிக்கு என்ன நடந்தது.? இங்கு சித்தி லெப்பை வென்றெடுத்த முஸ்லிம் காலாச்சார அங்கிகாரத்தை அந்த சமூக சட்டத்தரணிகள் ஏன் நிராகரித்து வருகின்றார்கள் என்று கேட்க வேண்டி இருக்கின்றது.
இந்த நாட்டில் வைத்தியசாலைகளில் நூற்றுக்கணக்கான முஸ்லிம் பெண்கள் சிற்றூழியர்களாக நலா புறங்களிலும் கடமை புரிகின்றாhகள். அவர்கள் அனைவரும் போல வழக்கமான சீருடையில்தான் தமது கடமைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். இந்தப் போராட்டம் தெற்குக்கும் செல்லுமாக இருந்தால் அங்கும் ஒரு இன முறுகலுக்கு வாய்ப்பு இருக்கின்றது.
இது விவகாரமாக நாம் பல முஸ்லிம் தாதிகளை சந்தித்துப் பேசிய போது நாம் நிம்மதியாக எமது கடமைகளை செய்து கொண்டிருக்கின்றோம். இது தெற்கிற்கும் பரவும் போது நாம் நெருக்கடிகளுக்கு ஆளாவோம். அத்துடன் செம்மறி ஆடுகள் மத்தியில் எம்மை கறுப்பாடுகளாக மாற்றி நெருக்கடி பண்ணக் கூடாது என்பதுதான் அனைத்து பெண் தாதிகளின் நிலைப்பாடாக இருக்கின்றது.
இந்த நாட்டில் சுதந்திரத்துக்குப் பின்னர் மிகவும் செல்வாக்கான முஸ்லிம் அரசியல் தலைவர்கள் அரசாங்கங்களில் அமைச்சர்களாக தீர்க்கமான சக்திகளாக இருந்து வந்திருக்கின்றார்கள். ஏன் சுகாதார அமைச்சராக செல்வாக்கான பௌசி கூட இருந்தார்.
அப்படியானால் அவர் காலத்தில் இந்த முஸ்லிம் ஊழியர்கள் விவகாரத்துக்கு தெளிவான முடிவை எடுத்து முஸ்லிம் சமூகத்தின் காலாச்சார சீருடைக்கு அங்கிகாரம் வழங்கி இருக்கலாம். அந்த நாட்களில் எவரும் இது பற்றி பேசவோ கண்டு கொள்ளவோ இல்லை.
மத்திய கிழக்கு அரபு நாடுகளில் பணிபுரிகின்ற பிற சமூக தாதிகளுக்கு அவர்களின் கலாச்சார உடைகளை அணிகின்ற உரிமைகள் வழங்கப்பட்டிருக்கின்றனவா என்றும் ஆராய வேண்டி இருக்கின்றது.! மேலும் இந்த நாட்டில் இருக்கின்ற சில முஸ்லிம் பாடசாலைகளில் பிற சமூகத்தைச் சேர்ந்த பல நூறு அல்லது ஆயிரம் மாணவிகள் கல்வி பயில்கின்றார்கள். அவர்கள் முஸ்லிம் கலாச்சார ஆடைகளை அணிந்து கொண்டுதான் இன்று வரை அங்கு எதுவித முரண்பாடுகளும் இல்லாது தமது கல்வியைத் தொடர்கின்றார்கள்.
அவர்களைத் தூண்டி நாமும் எமது காலாசார ஆடையில்தான் முஸ்லிம் பாடசாலைகளில் கல்வி பயில வருவோம் அதனை அனுமதிக்க வேண்டும் என்று போராட்டத்தை ஆரம்பித்தால் இது விடயத்தில் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் சமூகத் தலைவர்களின் நிலைப்பாடுகள் என்னவாக இருக்க முடியும்.?

இப்போது முஸ்லிம் சமூகம் கண்டு கொள்ளாத அல்லது பேசாத ஒரு பக்கத்தை பார்ப்போம். இராணுவத்திலும் முஸ்லிம் ஆண்களும் பெண்கள் இருக்கின்றார்கள். இவர்களில் எவராவது இதுவரை தாங்களும் இஸ்லாமிய கலாச்சார ஆடை அணிய அனுமதிக்க வேண்டும் என்று கேட்டார்களா அல்லது கேட்கதான் முடியுமா.? எனவே சீருடை என்பது சீருடைதான்.
அப்படியானால் பொலிஸ் மற்றும் முப்படைகளிலும் முஸ்லிம் பிரிவு என்றுதான் அது அமைய வேண்டி இருக்கும்.! அப்போது பௌத்த இந்து கிருஸ்து வேடுவ சமூகங்களுக்கும் தமது கலாச்சார உடைகள் என்ற கோஷங்கள் எழும்ப முடியும். இது எந்தளவு ஏற்புடையது யதார்த்தமானது எனவேதான் சீருடை விவகாரத்தில் விதண்டாவாதமும் வன்முறையும் புரையோடிப்போய் இருக்கின்றது என்று நாம் சுட்டிக்காட்டுகின்றோம்.
மு.கா. கோட்பாதர் அஷ;ரஃப் அரச தொலைக் காட்சிகளில் தமிழ் சமூகப் பெண்கள் செய்தி வாசிக்கின்ற போது அவர்களின் கலாச்சாரத்தில் தோன்றி தமது பணிகளை மேற்கொள்ளும் உரிமையை வென்று கொடுத்தார். எனவே தமிழர்களும் எமது சீருடை விவகாரத்தில் குறுக்கே நிற்கக் கூடாது என்று முஸ்லிம் அரசியல் தலைவர்கள் வாதிடுகின்றார்கள்.

அப்படியாக இருந்தால் அஷ;ரஃப் காலத்திலும் அதற்கு முன்பிருந்தும் முஸ்லிம் சமூகத்தினர் அரச வைத்தியசாலைகளில் தாதிகளாகவும் பணியாற்றி வந்திருந்தார்கள் அப்போது அவர் விரும்பி இருந்தால் அந்த சீருடை உரிமையை அன்று அவர் வென்று கொடுத்திருப்பார் அது பற்றிப்பேசி இருப்பார்.
சீருடை என்று ஒன்றிருந்தால் அதனைத்தான் குறிப்பிட்ட துறைகளில் அணிய வேண்டும். அதில் சிக்கல்கள் நெருக்கடிகள் இருந்ததால்தான் குறிப்பிட்ட துறைகளில் அஷ;ரஃப் அன்று அதுபற்றி பேசவில்லை என்றும் வாதிட முடியும்.
இன்று எதிரணிகள் அரசுடன் கடும் கோபத்தில் இருக்கின்றார்கள். கடந்த கால மோசடிகளுக்காக அவர்கள் நெருக்கடிகளுக்கு இலக்காகி வருவதும். அனுரவை அரசியலில் இருந்து கவிழ்ப்பதற்காக தினந்தோறும் ஏதாவது வம்புகளை இழுக்க வேண்டும் என்ற நிலையில் அவர்கள் தொழில்பட்டும் வருகின்றார்கள்.
அந்த வகையில் அனைத்து முஸ்லிம் அரசியல் தலைமைகளும் அனுர அதிகாரத்துக்கு வந்தால் நோன்பு கிடையாது ஹஜ் கிடையாது என்றெல்லாம் சொன்னவர்கள்தான் இன்று இந்த சீருடை விவகாரத்தில் அனுரவுக்கு தமது பக்கத்தில் வம்பிழுக்கின்ற ஒரு நிலையைத்தான் இதில் பார்க்க முடிகின்றது. அதனால் இதில் அரசியல் குரோதங்களும் வன்மமும் இருக்கின்றது என்பது தெளிவு.
மு.கா. ஹக்கீம் இது விடயத்தில் கண்டு கொள்ளாமல்தான் இருக்க எதிர்பார்த்தார். மனோ கணனேசன் குட்டையைக் குழப்பியதால் தூக்கத்தில் இருந்து விளித்தவன் போல அதற்கு புது விளக்கமும் கதையும் சொல்லத் துவங்கினார். ஆனால் மு.கா. செயலாளர் நிசாம்தான் இது விடயத்தில் இன்று பேச்சாளராக மாறி இருக்கின்றார்.
அல்லது நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார் என்று சொல்ல முடியும். நிசாம் காரியப்பர் ஒரு நல்ல சட்டத்தரணியாக இருக்கலாம், ஆனால் அவர் முஸ்லிம் சமூகத்துக்கோ கிழக்கிற்கோ பொருத்தமான ஒரு சமூகத் தலைவராக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஹக்கீமுக்கு விசுவாசம் காட்டி மனிதன் தேசிய பட்டியலில் நாடாளுமன்றம் வந்தார்.
தொடர்ந்தும் அந்தத் தேசிய பட்டியலை பாதுகாத்துக் கொள்ள அவர் தலைமைக்கு விசுவசம் காட்ட வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் தேர்தலில் நின்று வெற்றி பெறுவது என்பது காரிக்கு கரடி பிறை பார்த்த கதையாகவே இருக்கும்.! அவருக்கும் கிழக்கு சமூகத்துக்கும் ஜனரஞ்சகமான உறவு கிடையாது.
அதனால்தான் அந்த நிலை. ஜீ.எல்.பீரில் சட்டத்துறை பேராசிரியராக இருந்தாலும் அவருக்கும் சமூகத்துக்குமான உறவு சீரோ. அது போலத்தான் இதுவும். அதனால்தான் தேர்தலில் ஹக்கீம் ஹரிஸை தூக்கி காரிக்கு வாய்ப்பை வழங்கினார். ஹசனலி கதையும் அப்படித்தான். மேலும் ஊடகச் சந்திப்புக்களில் காரியப்பர் சீருடை விடயத்தில் உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிடுவதாகவும் இந்த ஹரிஸ் குற்றம்சாட்டி வருகின்றார். இவர்களின் இந்த மோதலும் கூட அரசியல்தான்.
தமிழ் பேசும் பேரவைக்கும் சீருடைக்கும் தொடர்பு கிடையாது.! சமூகப் பிரச்சினை வேறு அதனை இதனுடன் முடிச்சுப்போட வேண்டாம் இது காரியப்பர் வேண்டுகோள். அதனால்தான் ஜேஆர். தந்தையாக ஜனாதிபதி அனுர செயல்பட முனைகின்றார் என்றும் காரி சாடி வருகின்றார். மேலும் சாணக்கியன் மட்டுமல்ல நானும் வாக்குகளுக்காக இப்படித்தான் பேசுவேன் என்றும் நிசாம் காரியப்பர் ஒரு ஊடக சந்திப்பில் பகிரங்கமாகப் பேசி இனவாதத்தை நியாயப்படுத்தி இருந்தார்.
இந்த இடத்தில்தான் தமிழ் பேசுகின்ற கூட்டணியை நாம் சந்திக்கு இழுக்க வேண்டி இருக்கின்றது. சிறுபான்மை அரசியல்வாதிகள் தமக்குள் ஒரு சந்தர்ப்பவாதத்துக்காக சமூக வாக்குகளைக் கொள்ளையடிக்கத்தான் இந்த கூட்டணியை சமைத்திருக்கின்றார்கள். காரியின் கதையில் அதுதான் தெரிகின்றது. இந்த நாடகம்-ஏமாற்று நெடுநாள் ஓடாது என்று நாம் கூட்டணி வந்த துவக்கத்திலே சொல்லி இருந்தேம். அதுதான் சில நாட்களுக்குள்ளே நடந்தும் வருகின்றது.

இப்போது சாணக்கியரும் காரியும் சீருடை விவகாரத்தித்தில் எதிரும் புதிருமாகப் பயணிக்கின்ற போது அந்த சமூகங்கள் இவர்களை நம்பவா போகின்றது.? ஈரானில் இருக்கும் ஜனரஞ்சகமான மகளிர் உதைப்பந்தாட்ட அணியின் சீருடை பற்றியும் காரி பேசி இருந்தார். அந்த அணியில் முஸ்லிம் அல்லாதவர்களும் இஸ்லாமிய சீருடையில்தான் தமது அணிக்காக அதில் விளையாடி வருகின்றார்கள் இதனை காரி அறிவாரா?
கல்முனை பிரதேச சபை விவகாரத்தில் உலகிற்கு உபதேசம் பண்ணும் இந்தக் கூட்டணியால் தீர்வு காண முடியாதுள்ளது. அது வேறு இது வேறு என்று இதற்கும் சொல்லிவிட்டு அதிலும் தப்பிப்போக முனைவது இவர்களது சந்தர்ப்பவாதம். சமூகத்துக்கு வழிகாட்ட முனையும் இந்தத் தலைவர்கள் தம்மை சரி செய்து கொள்ள வேண்டும்.
சாணக்கியரைப் பேசி தனது சீருடையை இந்த கூட்டணியில் மு.கா. முதலில் சரி செய்து கொள்வதுதான் நாகரிகமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். ஐம்பதுக்கு ஐம்பது கேட்டது முட்டாள்தனம் அதனால் தமிழர்கள் அடி வாங்கினார்கள் என்றும் நிசாம் காரியப்பர் பேசி வருகின்றார்.
அப்படியாக இருந்தால் தனிநாட்டுக்காக போராடிய பிரபாகரனை சந்தித்து பேசி விருந்துண்டதை எப்படி உங்கள் தலைவர் பெருமையாக மேடைகளில் பேசித்திரிய முடியும்? தமிழர்களின் போராட்டங்களில் சரி பிழை காண இவர் யார்.?
ஒரு சந்தர்ப்பத்தில் தமிழ் அரசியல் தலைவர்களின் தலையிலே மிளகாய் அரைத்ததை தனது பெரிய இராஜதந்திரம் என்று ஹக்கீம் பகிரங்கமாக பேசிய கதை இந்த சந்தர்ப்பத்தில் தமிழ் தலைமைகளிடம் கேள்வியாக எழுப்பப்படுகின்றது. அத்துடன் சந்தர்ப்பவாத இந்த தலைமைகளுடன் தமிழ் தலைமைகள் கூட்டணி போட்டு ஏன் அவமானப்பட வேண்டும் என்றும் கடும் விமர்சனங்கள்.
சந்தர்ப்பவாத அரசியல் தலைமைகளுடன் கூட்டணிபோடுவதை விட முஸ்லிம் சமூகத்தில் நடுநிலையாக சிந்திப்பவர்களும் சிவில் அமைப்புக்களும் இருக்கின்றன. எனவே தமிழ் அரசியல் தலைமைகள் முஸ்லிம் சமூகத்துடன் நல்லுறவு தேவையாக இருந்தால் அவர்களுடன் கூட்டணி போடுவதுதான் பாதுகாப்பானது.

மேலும் கண்டியைச் சேர்ந்த ஹக்கீம் தன்னை கிழக்கு விவகாரங்களில் கரிசனை உள்ளவன் என்பதனை அந்த சமூகத்தில் காட்சிப்படுத்தவே சுப்பரமணியன் நாய்க் கதைகளை இதில் இணைத்து வன்முறையாக பேசி வருகின்றார். கிழக்கு தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர்களான கோடிஸ்வரன் மற்றும் சிரிநேசன், ஹக்கீமையும் நிசாம் காரியப்பரையும் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் அவர்கள் நிதானம் தவறி நடந்து கொள்கின்றார்கள் என்ற பகிரங்கமாகவே பேசி வருகின்றார்கள்.
சீருடை சுற்றுநிருபத்தை கோட்டா சொன்னது போல எனது வார்த்தைகள் தான் மேலானது என்பதைத்தானே இவர்களும் இங்கு சொல்ல வருகின்றார்கள். அப்படியாக இருந்தால் புதிய யாப்புத் திருத்தம் வருகின்ற போது பௌத்தத்துக்கு முன்னுரிமை என்பது போல அனைத்திலும் கலாச்சார ஆடைகளுக்கு முன்னுரிமை என்ற கோஷத்தை இவர்கள் வலியுறுத்த வேண்டும்.
அல்லது அதற்கு இருபத்தி மூன்றாவது திருத்தத்தை இவர்கள் கொண்டுவரலாமே என்றுதான் சொல்லத் தோன்றுகின்றது. மேலும் கல்முனை வடக்கு நிராகரிக்கின்ற அதே உடையை தெற்கு அஷ;ரஃப் வைத்தியசாலை எப்படி ஏற்கமுடியும்.?
இதிலிருந்து அரச சுற்றுநிருபங்களிலும் வாதப்பிரதிவாதங்களிலும் பெரிய குழப்ப நிலை ஒன்று இருப்பது தெளிவாகின்றது. மேலும் குறிப்பிட்ட ஊழியர்கள் தாம் கொழும்பில் பயிற்சிகளில் இருக்கின்ற போது இந்த கலாச்சார ஆடையை அணிந்து கொண்டுதான் இருந்தோம் அங்கு எம்மை எவரும் கேள்வி எழுப்பவில்லை என்று கேட்கின்றார்கள். அதிலும் ஒரு நியாயம் இருக்கின்றது.
டாக்டர் சுகுனனை எனக்கு நன்றாகத் தெரியும் அவர் மிகவும் திறமையானவர் தனது நல்ல நண்பன் அவர் அரசியலுக்கு நிச்சயமாக வர இருக்கின்றார் அதனால்தான் அவர் இப்படி இனவாதமாக நடந்து கொள்கின்றார் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிசாளர் அமீரலி அடித்துக் கூறுகின்றார். அவர் கதைப்படி இதில் அரசியல் நோக்கங்கள் இருக்கின்றன என்ற எமது வாதம் இங்கு நியாயமாகின்றது.
பொதுவாக தமிழர்களுக்கு எதிரான விடயங்களில் சிங்களவர்களும் முஸ்லிம்களும் ஓரணியில் இணைவதுதான் வழக்கம். ஆனால் கல்முனை வடக்கு சீருடை விவகாரத்தில் அங்குள்ள சிங்கள ஊழியர்களும் தமிழர்களும் ஓரணியில் இணைந்திருப்பதை அவதானிக்க முடிகின்றது. எனவே தமது தனிப்பட்ட அரசியல் இருப்புக்காக அரசியல் சமூகத் தலைமைகள் சமூகங்களைப் பலியிட முனைவது மிகவும் ஆபத்தானது. இதனை அரசியல் வியாபாரிகளும் ஏனையவர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.
சீருடை விவகாரதில் கலாச்சார என்பதனை விட அரசியல் வன்மமும் சந்தர்ப்பவாதமும்தான் இங்கு மேலோங்கி நிற்கின்றது. இவர்களை அனுர அழைத்து அமைச்சர் பதவி பட்டங்களைக் கொடுத்துவிட்டால் ஒரே இரவில் எல்லாம் ஓகே ஆகிவிடும். ஆனால் அதற்கு வாய்ப்பு கிடையாது. பதவிகளிலும் பட்டங்களிலும் வாழ்ந்து பழகிப்போனவர்களுக்கு இப்போது அந்த சொகுசுகளை இழந்து அரசியல் செய்வது என்பது அசௌகரிகமாக இருக்கின்றது.
அதனால்தான் இவர்கள் பச்சோந்தித்தனமாக நடந்து வருகின்றார்கள்-பேசுகின்றார்கள். பல்லின சமூகங்கள் வாழ்கின்ற ஒரு நாட்டில் விட்டுக் கொடுப்பும் புரிதலும் சமூகங்களிடையே மிகவும் அவசியம் இதனைக் கட்டி வளர்ப்பது அனைத்து தரப்பினரினதும் கடமை. இதில் தப்புகள் நடக்கின்ற போது சந்தர்ப்பவாதிகளும் இனவாதிகளும்தான் நன்மை அடைவார்கள். இதனை சிறுபான்மை சமூகங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.




