-நஜீப்-
சட்டமா சம்பிரதாயமா தமிழரசு இழுபறி!
இதுவரை தமிரசுக் கட்சி நிருவாகிகள் தெரிவு இணக்கப்பாட்டின் அடிப்படையில் அல்லது ஒரு சிறு குழுவின் விருப்பு வெருப்பு அடிப்படையில்தான் நடந்து வந்திருக்கின்றது. இந்த முறை நிருவாகிகள் உறுப்பினர் விருப்பு வாக்கு அடிப்படையில் தெரிவாக இருப்பதாக சொல்லப்படுகின்றது.
தலைமைத்துவத்துக்காக சிரிதரனுக்கும் சுமந்திரனுக்கும் கடும் போட்டி நிலை. இந்தப் தேர்தலுக்கு அஞ்சுகின்றவர்கள், தெரிவுகளுக்கு தேர்தல் நடாத்தினால் கட்சியில் பிளவுகளுக்கு வாய்ப்பு என்று வாதிடுவதாகவும் தெரிகின்றது.
கட்சியில் ஜனநாயகத்தில் நம்பிக்கை வைக்க முடியாதவர்கள் பொதுமக்கள் முன்னிலையில் எப்படி தேர்தல்களுக்கு வரமுடியும் என்று கேட்கத் தோன்றுகின்றது. சம்பந்தன் உடல் ரீதியாகவும் அரசியல் செயல்பாடுகள் தொடர்ப்பிலும் பலயீன நிலையில் இருக்கின்றார்.
அதனால் அவர் பொதுவாக நாடாளுமன்ற அமர்வுகளைக் கூட தவிர்த்து வருகின்றார் என்பதும் அனைவரும் அறிந்தது. இதனால்தான் புதிய தலைமை காலத்தின் தேவை. அமைகின்ற தெரிவுகள் தமிழர்களின் உணர்வுகளின் வெளிப்பாடாக அமைவதும் கட்டாயமாகும்.
சட்டத்தில் ஒன்றை குறித்துவிட்டு சம்பிராதாயத்துக்கு முக்கியத்துவம் கொடு என்று கேட்பது என்ன நியாயம்?
ரணில் கட்டும் பலஸ்தீன பாடசாலை!
நாட்டில் என்றுமில்லாத பொருளாதார நெருக்கடிகள். பாடசாலை பிள்ளைகளுக்கு புது வருடத்துக்குத் தேவையான பெருட்களை வாங்கிக் கொள்ள வழியில்லாது பெற்றோர்கள் திண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் பலஸ்தீனில் இருக்கும் பிள்ளைகளுக்கு அங்கு சமாதானம் வந்ததும் ரணில் பாடசாலைகளை கட்டிக் கொடுக்கப் போவதாக கூறி இருக்கின்றார். தான் பலஸ்தீன் ஆதரவு ஹூதிக்ளுக்கு எதிராக போருக்கு படையை அனுப்பியதால் வருகின்ற எதிர்ப்பை சமாளிக்கத்தான் அவர் இப்படிச் சொல்லி இருக்கின்றார்.
இது போன்ற நடைமுறைச் சாத்தியமில்லாத கதைகளை தினந்தோரும் ரணில் சொல்லிக் கொண்டிருப்பதால் இந்தக் கதையையும் ஒரு நகைச்சுவையாகத்தான் எடுத்தக் கொள்ள வேண்டி இருக்கின்றது. அவரது இந்தக் கதையைப் பார்க்கின்ற போது அவர் ஜனாதிபதி கதிரையில் இருந்து இறங்குகின்ற நோக்கம் இல்லை என்றுதான் கணிக்க வேண்டி இருக்கின்றது.
ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் ஆறு ஏழு மாதங்களில் தயாராக வேண்டி இருக்கின்றது. இந்த நிலையில் ஜனாதிபதி பலஸ்தீனுக்கு பாடலைகளைக் கட்டிக் கொடுக்க 2025 ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில்தான் இதற்கு நிதி ஒதுக்க வேண்டி வரும். அப்போ ஜனாதிபதி ரணில்தான் தொடர்ந்தும் அதிகாரத்தில் என்று நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.!
அணுர ஜனாதிபதி ஹருணி பிரதமர்!
ஜனாதிபதி தேர்தலா பொதுத் தேர்தலா அல்லது நாட்டில் தேர்தலே இல்லையா என்ற சந்தேகங்கள் தொடர்கின்ற அதே நேரம் ஜனாதிபதி வேட்பாளர்கள் பிரதமர் பதவிகள் தொடர்பாகவும் பல தகவல்கள் வெளியாகி வருகின்றன.
மொட்டுக் கட்சி வேட்பாளர் தொடர்ப்பில் தெளிவில்லாவிட்டாலும் தம்மிக்க, ரணில் என்று பலர் அதில் இருப்பதாக நாமல் கூறி வருகின்றார். அதே நேரம் அந்தக் கட்சியின் பிரதமர் பதவி நாமலுக்கு என்றாலும் அவர் சகாக்கள் அவர் ஜனாதிபதித் தேர்தலுக்கு வர வேண்டும் என்று கேட்க்கின்றார்கள்.
அதே நேரம் சஜித் அணி வெற்றி பெற்றால் அவர் ஜனாதிபதி. பிரதமர் ரஞ்சித் மத்தும பண்டார. அதேநேரம் ஜேவிபி அதிகாரத்தைக் கைப்பற்றினால் அணுரகுமார ஜனாதிபதி. பிரதமர் ஹருனி என்பது விஜித ஹேரத் கதையில் தெளிவாகி இருக்கின்றது.
அத்துடன் நாடாளுமன்றத்தில் 25 சதவீதமானவர்கள் பெண்களாக இருக்க வேண்டியதன் அவசியத்தை ஜேவிபி முக்கிய தலைவர் ஒருவர் நம்முடன் பேசும்போது சுட்டிக் காட்டினார்.
நாடாளுமன்றத் தேர்தலில் தமக்குக் கிடைக்கும் தேசிய பட்டியலில் (75மூ) எழுபத்தி ஐந்து சதவீதமான பிரதிநிதித்துவத்தை அவர்கள் பெண்களுக்கு கொடுக்கத் தயாராக இருக்கின்றார்கள்.
சஜித்துடன் இணைகின்றார் அர்ஜூன?
சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தியில் தற்போது பலர் இணைந்து கொண்டு வருகின்றார்கள். இது அவர்களுக்கு நல்ல செய்தியாக இருக்க வேண்டும். ஆனாலும் அப்படி வருபவர்களினால் தமது அரசியல் இருப்புக்கும் பதவிகளுக்கும் அது ஆப்பாக அமைந்து விடும் என்று அந்தக் கட்சியில் இருக்கின்ற சீனியர்கள் பலர் அதிர்ப்தியில் இருக்கின்றார்கள்.
அண்மையில் வெளவாலுடன் குடித்தனம் என்றால் வருகின்றவர்கள் தொங்கிக் கொண்டுதான் வாழ வேண்டும் என்பதனைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று, அர்ஷத டி சில்லவா குறிப்பிட்டிருந்தார். அவருக்குக் கூட போட்டியாக ஆட்கள் உள்ளே வந்து விட்டார்கள் என்தால் அவர் ஆதங்கத்தின் வெளிப்பாடுதான் இந்த வெளவால் கதை.
வருபவர்களுக்கு தொகுதிகள்-அமைப்பாளர் பதவிகள் என்று கொடுக்கும் போது பழையவர்களுக்கு வரும் அச்சம் இயல்பானதுதான். தற்போது கம்பஹ மாவட்டத்தில் அர்ஜூன ரனதுங்ஹவும் இணைந்து கொள்ள இருப்பதாகத் தகவல்கள்.
அத்துடன் வேறு ஒரு மாவட்டத்தில் இருந்து அவர் அமைப்பாளர் பதவியைப் பெற்றுக் கொள்வது பற்றி யோசிக்குமாறு மொட்டு அண்ணன் விருப்பமாக இருக்கின்றது. ஒரே மாவட்டத்தில் இருவரும் போட்டி என்றால் ஆபத்து என்பதால்தான் இந்த எதிர்பார்ப்பு.
ரணில்-சஜித் இணைவுக்கு முயற்ச்சி!
கடந்த வாரம் ரணிலையும் சஜித்தையும் இணைக்கப் போய் மூக்குடைபட்ட தனித்துவத் தலைவர்கள் பற்றி சொல்லி இருந்தோம். இப்போது நாட்டிலுள்ள அமெரிக்க இராஜதந்திரியும் இந்த இணைப்பு விவகாரத்தில் ஆர்வமாக இருப்பதாகத் தெரிகின்றது.
இலங்கையிலுள்ள அமெரிக்க தூதுவர் அண்மையில் ஜேவிபி அணுரகுமாரவுடன் சினேகபூர்வமான சந்திப்பொன்றை நடாத்தி இருந்தார். என்றாலும் கடும் போக்கு ஜேவிபி ஆட்சியொன்று நாட்டில் அமைவதை அமெரிக்கா இதயசுத்தியுடன் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை.
இதனால்தான் அவர்கள் ரணில்-சஜித் இணைவு பற்றி ஆர்வமாக இருக்கின்றார்கள். அண்மையில் பேராசிரியர் ஜீ.எல் வீட்டில் இது தொடர்பான ஒரு இரகசிய சந்திப்பு நடந்திருப்பதாக சொல்லப்படுகின்றது. அணுர அதிகாரத்துக்கு வந்தால் நாட்டில் சீனாவின் பிடி ஓங்கும் என்பதால் இராஜதந்திரி ஓடித்திரிகின்றார் போலும்.
அதே நேரம் இந்தியாவும் செஞ் சட்டைக்காரர்கள் அதிகாரத்தை கைப்பற்றுவதை எச்சரிக்கையுடன்தான் பார்ப்பார்கள். அண்மையில் மாலைதீவில் பதவியேற்ற புதிய தலைவர் முயிஸ் சீனாவுடன்தான் குடித்தனம். இந்தியப் படைகள் நாட்டிலிருந்து உடன் வெளியேற வேண்டும் என்று நாள் குறித்து இருக்கின்றார்.
எனவே இலங்கையில் நடக்கின்ற தேர்தல்களில் சர்வதேசத்தின் விருப்பு வெறுப்புக்களும் அடங்கி இருப்பதுதை அவதானிக்க முடிகின்றது.
நன்றி: 14.01.2024 ஞாயிறு தினக்குரல்