இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் மூத்த மகன் நாமல் ராஜபக்சவை முறைகேடு வழக்கில் குற்றவாளி என்று அந்நாட்டு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டுக்கு இந்திய முதலீட்டை முறைகேடாகப் பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால் அப்போதிருந்த அரசு கவிழ்ந்தது. தொடர்ந்து மிகப் பெரியதொரு அரசியல் குழப்பம் ஏற்பட்ட நிலையில், இப்போது தான் அங்கு அரசியல் சூழல் மெல்ல சீரடைந்து வருகிறது. தொடர்ந்து அங்கு நடத்தப்பட்ட தேர்தலில் இடதுசாரி கட்சியான மக்கள் விடுதலை முன்னணி வென்று, அநுர குமார திசாநாயக்க அதிபராக தேர்வானார்.
அவர் ஆட்சிக்கு வந்தது முதலே பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாகக் கடந்த காலங்களில் ஊழலில் ஈடுபட்டோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் மூத்த மகன் நாமல் ராஜபக்ச மீது முறைகேடு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
38 வயதான நாமல் ராஜபக்ச க்ரிஷ் ஹோட்டல் திட்டப் பணத்தில் இருந்து 70 மில்லியன் இலங்கை ரூபாயை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. கொழும்பு வர்த்தக மாவட்டத்தில் கிரிஷ் ஹோட்டல் கட்டும் பணிகள் நடந்த நிலையில், முறைகேடு காரணமாகத் திட்டம் கைவிடப்பட்டது. இன்னுமே கூட பாதி கட்டப்பட்ட நிலையில் உள்ள கட்டுமானம் அங்கு எஞ்சி இருக்கிறது.
சமீபத்தில் அதன் பாதுகாப்பற்ற நிலை குறித்தும் கூட நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கு விசாரணை ஆரம்பத்தில் வேகமாக நடந்தது. இருப்பினும், 2016ம் ஆண்டுக்குப் பிறகு வழக்கு விசாரணை தடைப்பட்டது.
இதையடுத்து சமீபத்தில் ஆட்சியை அமைத்த அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசு இந்த வழக்கில் தீவிரம் காட்டியது. இந்தச் சூழலில் தான் நாமல் ராஜபக்சவை குற்றவாளி என்று அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
முன்னதாக இதேபோல மற்றொரு ஊழல் புகாரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மஹிந்த ராஜபக்சவின் இளைய மகன் யோஷித ராஜபக்ச கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுத்துள்ள ராஜபக்ச, அரசியல் காரணங்களுக்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது:-oneindia