நஜீப் பின் கபூர்
நன்றி: 21.06.2026 ஞாயிறு தினக்குரல்
*****
தேர்தல் கூட்டணிகளும் சிறை தடுப்புக்கான இராஜதந்திர செயலணிகளும்
ட்ரம்ப் வார்த்தைகளைப் போலவே சமாதான உடன்பாடுகளும் அமையலாம்
*****
நமது இந்தக் கட்டுரை அச்சேறிக் கொண்டிருக்கின்ற நேரத்தில் ஜெனீவாவில் அமெரிக்hகாவும் ஈரானும் இடைக்கால சமாதானத்துக்காக நேரடியாகப் பேசிக் கொண்டிருப்பார்கள். ஏறக்குறைய மூன்று மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவும் இஸ்ரேலும் தன்னிஸ்டத்துக்கு ஈரான் மீது தாக்குதலைத் துவங்கி வெறும் மூன்றே மூன்று நாட்களில் அங்கு தமது கைப்பொம்மை அரசொன்றை நிறுவுவதுதான் இவர்களின் நோக்கமாக இருந்தது. ஆனால் இன்று மூக்குடைபட்டிருக்கின்ற அமெரிக்காவும் இஸ்ரேலும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டிருப்பதும் தெரிந்ததே. இஸ்ரேல் கொடுத்த தப்புக் கணக்கால்தான் போரை துவங்கியதை ட்ரம்ப் பகிரங்கமாக ஒத்துக்கொண்ட சந்தர்ப்பங்கள் பல இருந்தன.
மலைக் குகைகளைக் குடைந்து அங்கு தனக்குத் தேவையான ஆயுதங்களை ஈரான் புரட்சியைத் தொடர்ந்து தயாரிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் வடிவமைத்தது. அது வெற்றிகரமாகவும் நிறைவேறி இருந்தது. ஆனால் உலகில் நம்பர் வன் மொசட் மற்றும் சிஐஏயால் கூட இவற்றைக் கண்டுகொள்ள முடியாமல் போய் இருந்தது. இந்தப் பின்னணியில் ஈரான் போர் இராஜந்திரத்தில் அடுத்த பாய்ச்சலையும் மேற்கொண்டிருந்தது. ரஸ்யா சீனா வடகொரிய ஆகிய பலம் வாய்ந்த நாடுகளுடன் ஒரு இராணுவக் கூட்டணியை ஏற்படுத்திக் கொண்டது. இதில் பகிரங்கமான பக்கங்களும் அந்தரங்கப்பக்கங்களும் இருப்பது புரிந்து கொள்ளக் கூடியதே.
இதற்கிடையில் உக்ரைன் போருக்கு தனது ஆயுதங்களை ரஸ்யாவுக்குக் கொடுக்கும் அளவுக்கு ஈரான் பலம் பெற்றிருந்தது. மத்திய கிழக்கிலிருந்து பல முனைகளில் ஓரே நேரத்தில் ஈரான் மீது தாக்குதல் நடாத்தி ஈரானை ஒட்டு மொத்தமாக துவசம் செய்து விடலாம் என்று அமெரிக்காவும் இஸ்ரேலும் உறுதியாக நம்பி இருந்தன. சவுதி கூட இதனால் பிராந்தியத்தில் ஈரான் முதுகெழும்பு முறிய தான் மத்திய கிழக்கில் மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த இஸ்லாமிய உலகிலும் தனிக்காட்டு ராஜா என்று கணக்குப்போட்டு கனவுலகில் மிதந்து கொண்டு அமெரிக்க-இஸ்ரேல் கூட்டணிக்கு மறைமுகமாக உதவிக் கொண்டிருந்தது.

ஆனால் ஈரானோ தனது போர் வியுகத்தை தலைகீழாக புரட்டிப்போட்டு தனது தாக்குதல்களை மத்திய கிழக்கில் இருக்கின்ற அமெரிக்க இஸ்ரேல் நலன்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ள நாம் மேற்சென்ன ஈரான் நட்பு நாடுகள் பகிரங்கமாகவும் மறைமுகமாகவும் தனது ஆதரவை ஈரானுக்கு சலைக்காமல் கொடுத்துக் கொண்டிருக்க அமெரிக்காவும் இஸ்ரேலும் திக்குமுக்காடி நின்றன. அனேமாக அங்கிருக்கின்ற சொந்த மக்கள் கூட இந்த தாக்குதல்களின் போது தமது நாட்டுத் தலைவர்களின் தீர்மானங்களுக்கு மாற்றமான மனநிலையில்தான் கருத்துக்களைத் தெரிவித்துக் கொண்டிருந்தனர்.
மத்திய கிழக்கில் முகாம்களை வைத்து அந்த நாடுகளுக்கு பாதுகாப்பு வழங்குவதாக கதை சொன்ன அமெரிக்க ஈரான் தாக்குதல்களுக்குப் பயந்து ஓடி ஒழித்துக் கொண்டது. இது இந்தப் போரில் ஈரான் பெற்ற மற்றுமொரு வெற்றியாக அமைந்தது. மேலும் இந்தப் போரால் முழு உலக மானிட சமூகமும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீது கடும் கோபத்தில் இருந்து வந்தனர். உள் நாட்டில் அவர் மீது அமெரிக்க மக்களின் எதிர்ப்பு ஆறுபது – எழுபது சதவீதம் என அதிகரித்திருந்தது. இந்த நிலையில் வருகின்ற நவம்பரில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தேர்தலொன்றை சந்திக்கவும் வேண்டி இருக்கின்றது.
அதே போன்று இஸ்ரேலில் போருக்கு எதிரான மக்கள் வீதியில் இறங்கிப் போராடிக் கொண்டிருந்த காட்சிகளையும் நாம் தொடர்ச்சியாகப் பார்த்தோம். அதே நேரம் இன்று ஈரான் அரசு விழும் நாளை விழும் என்று உலகத்துக்கு பரப்புரை செய்து கொண்டிருந்த அமெரிக்க இஸ்ரேல் சார்பு ஊடகங்களும் முகத்தில் கறியை பூசிக் கொண்டது. ஈரானில் இருந்ததாகச் சொல்லப்பட்ட அனைத்து முரண்பாடுகளையும் தூக்கி எறிந்து விட்டு அந்த நாட்டு மக்கள் அனைவரும் அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலுக்கு எதிரான தமது ஒருமைப்பாட்டை அரசுக்கு வெளிப்படுத்தி நின்றனர். ஆனாலும் கூலிக்கு அங்கு வேலை பார்த்தவர்கள் மாட்டிக் கொண்டார்கள்.

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வார்த்தைகளை எந்தளவுக்கு நம்ப முடியாதோ அதேபோல இந்த சமாதான உடன்பாடு மீதும் நாம் சந்தேகத்தில்தான் பார்த்து வருகின்றோம். கடந்த 15ம் திகதி தனது பிறந்த தினத்தில் இந்த சமாதான உடபடிக்கையில் கையெழுத்து போட அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எதிர்பார்த்து அடம்பிடி ஜெனிவாவுக்கு உடனே புறப்பட்டு வருமாறு கூற ஈரான் இதற்கு வேறு ஆளை பார்த்துக்கொள். உனக்கு பிறந்தநாள் பரிசு கொடுப்பதற்கு நாம் ஒன்றும் இழிச்ச வாய்கள் கிடையாது என்ற பாணியில் அந்த தினத்தில் கையெழுத்திட மறுத்துவிட்டது.
ஆனாலும் கடைசி நேரத்தில் ஏற்பாட்டாளர்களான கட்டார் மற்றும் பாகிஸ்தான் கெஞ்சல்கள் காரணமாக டிஜிடல் முறையில் அதற்கு ஈரான் கையெழுத்துப் போட்டுக் கொடுத்திருக்கின்றது. ஏனைய விவகாரங்களை வருகின்ற ஜூன் 19ம் திகதி வெள்ளிக் கிழமை ஜெனிவாவில் நாம் அதனைப் பார்த்துக் கொள்ளலாம் என்று ஈரான் சபாநாயகர் கூறி இருக்கின்றார். ஆனால் இந்த உடன்படிக்கையை இஸ்ரேல் கடுமையாக எதிர்த்து வருகின்றது. குறிப்பிடுகின்றபடி அந்த ஒப்பந்தம் கைச்சாத்தானாலும் அதனை இஸ்ரேல் உயிர் வாழவிடுமா என்பதில் பெரும் சந்தேகம்.
அரசியல் கூட்டணிகள் மற்றும் அரசியல் நண்பர்களும் பகைவர்களும் நிரந்தரமில்லாதது போலவே இந்த சமாதான உடன்பாடும் நிரந்தரமானது என்று நாம் நம்பவில்லை. அதுவும் ட்ரம்ப் போன்ற ஒருவருடைய பேச்சுக்களை எந்தளவுக்கு ஒரு மனிதன் நம்ப முடியும்? ஈரானியர்களுக்கு இதில் கைதேர்ந்த அனுபவமுண்டு. அதே நேரம் இந்த சமாதான ஒப்பந்தம் தம்மை சந்தியில் இறக்கி விட்ட ட்ரம்பில் செயல் இதனை நாம் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று இஸ்ரேல் தரப்பில் கடும் விமர்சனங்கள் வருகின்றன. எனவே அமெரிக்காவுக்குள் இருக்கும் யூதர்களும் இஸ்ரேலும் இந்த சமாதான உடன்பாட்டை முறித்து விட நிறையவே வாய்ப்புக்கள் இருக்கின்றன.
அமெரிக்க ட்ரம்ப் விவகாரம் ஓகே. சரி இங்கு இருக்கின்ற எதிர்க் கட்சிகளுக்கும் இஸ்ரேலுக்கும் என்ன ஐயா உறவு என்று அனைவருக்கும் ஒரு கோள்வி தலைப்பை பார்த்ததும் யோசிக்க இடமிருக்கின்றது. அது பற்றித்தான் பேச வருகின்றோம். இப்போது இந்த நாட்டில் மாகாணசபைத் தேர்தல் ஒன்றுக்கான எதிர்பார்ப்பு இருக்கின்றது. இது பற்றி வருட துவக்கத்தில் நாம் ஒரு காலத்தையும் கொடுத்திருந்தோம். தித்வ மற்றும் அமெரிக்க இஸ்ரேல் ஆகிய நாடுகளுடன் ஈரான் நடாத்திய போரால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி அந்தக் காலத்தை தள்ளிப்போட்டது என்பதுதான் நமது கருத்து.
இப்போது மீண்டும் மாகாணசபைத் தேர்தல் பற்றி பரவலாக பேசப்பட்டு வருகின்றன. சில எதிரணிகள் மாகாணசபைத் தேர்தலை நடாத்த அரசு தயங்குகின்றன என்று ஒரு இசுவை முன்னெடுத்து வருகின்றார்கள். அதற்கு எந்த அடிப்படையும் கிடையாது. காரணம் கடந்த அரசுகள்தான் இந்த மாகாணசபைத் தேர்தலை தொடர்ச்சியாகத் தள்ளிப்போட்டு வந்தது. அவர்கள் இந்தத் தேர்தலை உடனடியாக நடத்த முடியாதவகையில் திருத்தங்களை செய்திருந்தனர். இது பற்றி ஆராய்ந்து உரிய அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நாடாளுமன்றில் ஒரு தெரிவுக்குழு ஒன்று அமைக்கப்பட்டு அது சில தினங்களுக்கு முன்னர்தான் அந்த அறிக்கைகளை கையளித்திருக்கின்றது.
அத்துடன் இது தொடர்பாக அந்தக் குழு பல சிபார்சுகளை முன்வைத்திருக்கின்றன. இதில் அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான குழுவில் எதிரணி உறுப்பினர்கள் பலரும் இருக்கின்றார்கள். ஆனால் பொது மக்கள் முன்னிலையில் பேசும் போது எதிரணியினர் இந்த உண்மையை அவர்கள் மறைத்துவிட்டு ஏதோ அரசு தேர்தலை தள்ளிப்போடுகின்றது என்ற பாணியிலே கதை விடுகின்றார்கள். இது நாகரிகமில்லாத ஒரு அரசியல் நடவடிக்கையாகும். உத்தேச சிபார்சுகளின் படி பழைய விகிதாசார முறையிலே தேர்தலை நடாத்துவதாக இருந்தாலும் பெண்கள் மட்டும் இளைஞர்களுக்கான பிரதிநிதித்துவங்கள் அரசும் எதிரணிகளும்தான் முடிவு செய்ய வேண்டி இருக்கின்றது.
தேர்தல் தொடர்பில் யதார்த்தங்கள் அப்படி இருக்க தேர்தல்களில் தான் நாம் கூட்டணிகளைப் பார்ப்பது வழக்கம். ஆனால் சிறைபோவதைத் தடுப்பதற்காகவும் இப்போது எதிரணியில் இருக்கின்ற ஊழல் பேர்வவழிகளும் மோசடிக்காரர்களும் தமக்குள் கூட்டணிகளை அமைத்து குற்றவாளிகளையும் கொலையாளிகளையும் தண்டிக்கக்கூடாது அவர் அப்படி இப்படி விஐபி. என்றெல்லாம் சான்றிதழ் கொடுத்து அவர்களைப் பாதுகாப்பதற்கான முயற்சிகள்தான் அங்கு நடக்கின்றன. ஆனால் இதற்கு குடிமக்கள் ஒத்துழைப்பதாக தெரியவில்லை. அந்தக் கூட்டணி பட்டியலை நாம் இங்கு வெளிட விரும்பவில்லை. ஆனால் ஊடகங்களில் வருகின்ற போது அவர்களைக் கண்டு கொள்ள முடியும். ஈஸ்டர் சலே-கோடா விவகாரங்களிலும் இதனையே பார்க்க முடிகின்றது.

இஸ்ரேல் இந்த இடைக்கால-இரண்டுமாத சமாதான உடன்பாட்டை எப்படி எதிர்க்கின்றார்களோ- குழப்ப முனைகின்றார்களோ இது போல ஒரு உணர்வில்தான் இங்கிருக்கின்ற எதிரணியினரும் இருக்கின்றார்கள். ஈரான் போர் காரணமாக நாட்டில் பெரும் பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டு மக்கள் அரசுக்கு எதிராக கிளர்ந்தெழுவார்கள் என்பது இவர்களது நம்பிக்கையாக இருந்தது.
சில வாரங்களுக்கு முன்னர் டொலரின் விலை 350 ரூபாவைத் தொட்ட போது எதிர் கட்சித் தலைவர் சஜித் கிழக்கில் இருந்த ஜனாதிபதி அனுரவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இது பற்றி அவசரமாகப் பேச வேண்டும் என்று கேட்ட கதையும், தானாகவே டொலர் மீண்டும் சரிந்த போது அவர் மௌனித்ததும் இந்த நியதிப்படிதான். எனவே இவர்களுக்கு மக்கள் துன்பங்கள் முக்கியமல்ல அதிகாரக் கதிரைதான் பிரதானம்.
நாட்டில் தற்போதய உள்நாட்டு சர்வதேச அரசியல் பின்னணியில் சஜித் அல்லது நாமல் ஜனாதிபதியாக இருக்கின்றார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். தித்வா மலைச் சரிவுகளையும் வெள்ளத்தையும் இவர்களால் தடுத்து நிறுத்தி இருக்க முடியுமா? அல்லது ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலைத் தடுத்து இவர்களால் பெற்றோலிய விலை ஏற்றத்தையும் டொலரின் அதிகரிப்பையும் கட்டுப்படுத்தி இருக்க முடியுமா?
இந்த கேள்விகளுக்கான பதில்களை சிறுபான்மை சமூகங்களை விட பெரும்பான்மை இனத்தவர்கள் மிகத் தெளிவாக புரிந்து வைத்திருக்கின்றார்கள். ஆனால் நாட்டில் என்பிபி. அரசுக்கு எதிராக இருந்த ஒரு முப்பத்தி ஐந்து சதவீதமானவர்கள்தான் இன்றும் ஆட்சி மாற்றம் ஒன்று பற்றி ஆர்வத்தில் இருக்கின்றார்கள்.
எனவே அரசியல்வாதிகளை விட பொது மக்கள் சர்வதேச உள்நாட்டு அரசியல் விவகாரங்களில் நல்ல புரிதலுடன் இருக்கின்றார்கள். எதிரணியினர் மற்றும் அவர்களின் கையாட்களின் கனவுகள் ஆசைகள் என்பவற்றுக்கு இசைவாக இந்த நாட்டில் தற்போதய சூழ்நிலையில் ஒரு ஆட்சி மாற்றத்துக்கான வாய்ப்புக்கள் அமையும் என்று நாம் எதிர்பார்க்கவில்லை.
ஆனாலும் இந்த அரசியல்வாதிகள் சொல்வது போல இன்று அரசு கவிழும் நாளை கவிழும் அடுத்த மாதம் கவிழும் என்று மேடைகளில் பேசும் போது வேண்டுமானாலும் இந்த அப்பாவிகள் கைதட்டி மகிழ்ந்து விட்டுப் போகலாம் அவ்வளவுதான். இது அரசு மீது நமக்கு இருக்கின்ற விசுவாசமல்ல அப்பாவிகள் மீது நமக்கு இருக்கின்ற அனுதாபங்கள் மட்டுமே என்பதனையும் கருத்தில் கொள்ளவும்.





