கடந்த கால தவறுகள் ரணிலை  அச்சுறுத்துகிறது?

வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையை மீட்டெடுக்கும் நோக்கில் தயாரிக்கப்பட்ட 2023ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் திங்களன்று சமர்ப்பிக்கப்பட்டது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

நிதி அமைச்சர் என்ற விதத்தில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த வரவு செலவுத் திட்டம் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

நிவாரணங்கள் அற்ற ஒரு வரவு செலவுத்திட்டமாக இது அமைந்துள்ளதாக நிதி அமைச்சர் ரணில் விக்ரமசிங்க சபையில் தெரிவித்திருந்தார்.

எனினும், கடந்த காலங்களில் மக்களுக்கு வழங்கப்பட்ட ஓரிரு நிவாரணகள், அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நாட்டை கட்டியெழுப்பும் நோக்கில் இந்த வரவு செலவுத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சர் கூறுகின்றார்.

2023ம் வரவு செலவுத் திட்டம்,  பொருளாதாரத்தை கட்டியெழுப்ப உதவுமா?

இந்த விடயம் தொடர்பில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை சிரேஷ்ட பேராசிரியர் கோபாலபிள்ளை அமிர்தலிங்கத்தை பிபிசி தமிழ் தொடர்புக் கொண்டு வினவியது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் சமர்பிக்கப்பட்டுள்ள 2023ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம், பொருளாதாரத்தை மீட்டெடுக்குமா?

”இது பாரிய சிக்கல்களுக்குரிய காலப் பகுதி. கொள்கை மட்டும் எங்களுக்கு வெற்றியை தராது. கொள்கை அமலாக்கம் முக்கியம். ஸ்ரீலங்கா அரசாங்கம் மூன்று விடயங்களை கூறுகின்றார்கள். இலங்கையை ஏற்றுமதி பொருளாதாரமாக மாற்றுவது, 1977ம் ஆண்டிலிருந்து அந்த விடயம் காணப்படுகின்றது. ஆனால் உரிய வகையில் அது சென்றடையவில்லை. கிரின்-புளு எக்கனோமி (பச்சை-நீள பொருளாதாரம்) என்ற சொல்கின்றார்.

சூழலுக்கு பாதிப்பு இல்லாதது. அது இப்போது உலகம் முழுவதும் இருக்கின்றது. அடுத்தது டிஜிட்டல் பொருளாதாரத்தை பற்றி கூறுகின்றார். அதில் இலங்கை பின்தங்கியுள்ளது. தொழில்நுட்பம் சார்ந்த நிபுணர்கள் தற்போது நாட்டை விட்டு வெளியேறி வருகின்றார்கள். சம்பளம் இல்லை, வேலை வாய்ப்பு இல்லை. இப்படியான காரணங்களினால் வெளிநாடுகளை நோக்கி அவர்கள் செல்கின்றார்கள். இதில் கடுமையான பிரச்னைகள் காணப்படுகின்றன. எந்தளவு தூரம் இது பிரச்னையை தீர்க்கும் என்பதை எங்களால் உடனடியாக சொல்ல முடியாது.”

ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட அறிவிப்புக்கள், அவர் கூறிய விதத்திலேயே அமலாக்கப்படும் பட்சத்தில், இலங்கை எத்தனை வருடங்களில் மீண்டெழ முடியும்?

”இதில் பெரியதொரு பிரச்னை இருக்கின்றது. வளர்ச்சியடைந்த நாடுகளின் அனுபங்களை பார்த்தால், ஊழலுக்கு எதிரான நடவடிக்கை முதலாவதாக இருக்க வேண்டும். அதைபற்றி அவர் கூறவே இல்லை. இலங்கையை அழித்தது ஊழல். வீண்விரயம் போன்றவற்றை பற்றி கதைக்கவே இல்லை. கல்விக்கான நிதி ஒதுக்கீடு கடுமையாக அதிகரிக்கப்பட வேண்டும். அதை செய்யவில்லை. அதற்கு இவர் மீது பிழை சொல்ல முடியாது. இவருக்கு முன்பிருந்தவர்கள் செய்த தவறுகள் இவரின் தலையில் இப்போது வீழ்ந்துள்ளது. எங்களுக்கு சந்தேகமாக இருக்கின்றது. இப்படியாக பட்ஜெட்டை நாங்கள் எத்தனை தடவைகள் பார்த்திருக்கின்றோம்.

70 வருடங்களாக ஒன்றுமே நடக்கவில்லை. மக்கள் அரசாங்கத்தை எதிர்பார்க்கின்றார்கள். அவர்கள் பின்தங்கியுள்ளார்கள். இது 40ம் ஆண்டு காலப் பகுதியிலிருந்து இருக்கின்றது. அது இன்னும் மாற்றவில்லை. இவரும் நீண்ட காலம் ஆட்சியில் இருந்திருக்கின்றார். 78ம் ஆண்டு தொடக்கம் 94 வரை இவர் ஆட்சியில் இருந்தார்.

2001ம் ஆண்டில் ஆட்சியில் இருந்தார். 2015ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்தார். அதனால், இவரும் அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும். அப்படியாக கடுமையான பிரச்னைகள் உள்ளன. கொள்கை அவசியம். ஆனால், கொள்கை மட்டும் வெற்றியை தராது. அதனை அமல்படுத்த வேண்டும். அமலாக்கத்தை பிந்த செய்தால், ஒன்றுமே சரி வராது.”

ஏற்றுமதி பொருளாதாரம் உள்ளிட்ட வெளிநாடுகளுடன் தொடர்புடைய நிறைய விடயங்கள் இந்த பட்ஜெட்டில் உள்வாங்கப்பட்டுள்ளது. இப்போது இருக்கக்கூடிய சூழ்நிலையில் இது சாத்தியப்படுமா?

”1948ம் ஆண்டு முதல் 77ம் ஆண்டு வரை தேயிலை, இறப்பர் ஏற்றுமதி நடைபெற்றது. அது எல்லாம் இலகுவான பயிர்கள். மலிவான ஊழியர்களை மையப்படுத்தியது. 77ம் ஆண்டு முதல் இன்று வரை நாங்கள் ஆடைக்கு மாறினோம். அதுவும் மலிவான ஊழியர்களை மையப்படுத்தியது.

வியட்நாம் என்ற ஒரு நாடு, 90ம் ஆண்டே தமது பொருளாதாரத்தை வலுப்படுத்த ஆரம்பித்தது. 90ம் ஆண்டில் விவசாய பொருட்களும், இயற்கை வளங்களையும் அந்த நாடு ஏற்றுமதி செய்தது. அதன்பிறகு ஆடைக்கு மாறியது. வெறுமனே 10 வருடங்களில் அந்த நாடு பாரிய வளர்ச்சியை கண்டுள்ளது.

இலங்கை 78ம் ஆண்டு முதல் இன்று வரை ஆடையை தான் ஏற்றுமதி செய்கின்றது. அங்கு தான் அந்த சிக்கலை நான் அடையாளம் காண்கின்றேன். நீங்கள் வெறுமனே கொள்கை பிரகடனத்தை மாத்திரம் வாசிக்க கூடாது. கல்விக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். நிதி ஒதுக்கீட்டில் கல்விக்கு முதலாவது இடத்தை கொடுக்க வேண்டும். இன்று வரை இலங்கை அரசாங்கத்தை அதை அடையாளம் காணவே இல்லை. பிலிப்பைன்ஸில் கல்விக்கு முதல் இடம்.

சிங்கப்பூர் 64ம் ஆண்டே அதனை அடையாளம் கண்டுக்கொண்டது. தாய்லாந்து அடையாளம் கண்டுள்ளது. வியட்நாம் அடையாளம் கண்டுள்ளது. வங்கதேசம் இப்போது அதனை அடையாளம் காண்கின்றது. இலங்கை இன்று வரை அதனை அடையாளம் காணவில்லை”

இலங்கை கல்விக்கு முன்னுரிமை கொடுக்காமைக்கான காரணம் என்ன? ”ஒரு காரணம், இலங்கை பாதுகாப்புக்கான நிதியை குறைப்பதற்கு தயாராக இல்லை. பாதுகாப்பு அமைச்சுக்கு நிதியை குறைப்பதற்கு ரணில் விக்ரமசிங்க கூட தயாராக இல்லை. அடுத்தது, வருமானத்தை பற்றி பார்க்காது, செலவு மற்றும் வீண்விரயம் அதிகளவில் செல்கின்றது. அரச நிறுவனங்கள் முழுமையாக நட்டத்தில் இயங்குகின்றது. பெட்ரோலிய கூட்டுதாபனம், ஏயார் லங்கா போன்ற அனைத்து நிறுவனங்களும் நட்டத்தில் இயங்குகின்றன.

அவர்களின் எண்ணம் வேறு திசையில் உள்ளது. அவசியமானதற்கு பயன்படுத்துவதில்லை. கல்விக்கு பயன்படுத்த வில்லை. கல்வியை அடையாளம் காண்பதற்கு முற்படுவதாக தெரியவில்லை. சரியான திசையில் பட்ஜெட் இருந்தாலும், எந்தளவு தூரத்திற்கு இதன் அமலாக்கம் இருக்க போகின்றது என்பது சந்தேகம். கல்விக்கு என்ன முடிவு, ஊழலுக்கு என்ன நடவடிக்கை ஆகியவற்றுக்கு எந்த கதையும் இல்லை. அது எல்லாம் சந்தேகத்தை கொடுக்கின்றது”.

ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அமல்படுத்திய கொள்கை காரணமாக, நாடு பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டது. அதனை ஜே.ஆர் ஓரளவு வழமைக்கு கொண்டு வந்தார். அந்த நேரத்தில் கொண்டு வரப்பட்ட பட்ஜெட்டை அவரது மருமகன் ரணில் விக்ரமசிங்க, ஜே.ஆரின் பட்ஜெட்டை பின்பற்றுகின்றாரா? பட்ஜெட் வாசிப்பின் போது அவர் இதனை கூறினார்.

‘ஜே.ஆரின் கொள்கை வந்தாலும், 94ம் ஆண்டு வரை ஐக்கிய தேசியக் கட்சியே ஆட்சியில் இருந்தது. ரணில் விக்ரமசிங்கவும் அமைச்சராக இருந்தார். ஆரம்பம் சிறப்பாக இருந்தாலும்;, 83ம் ஆண்டு யுத்தம் ஆரம்பித்தது. அதனால், வெளிநாட்டு முதலீடுகள் வராது போனது. ஊழலுக்கு எதிராக தென்கொரியா, மலேசியா, சிங்கப்பூர் போன்று நடவடிக்கைகளை அவர் எடுக்கவில்லை. இப்போது யுத்தம் இல்லை. ஆனால், மோசமான நிலைமை உள்ளது. இவ்வளவு காலம் நடைபெற்ற விடயங்களினால் நாடு மோசமாகியுள்ளது. ஏனைய நாடுகள் மிக வேகமாக முன்னோக்கி செல்கின்றது. நாங்கள் நின்று பார்த்துக்கொண்டிருக்கின்றோம். இப்படி பார்த்துக்கொண்டிருக்க முடியாது அல்லவா?.

ஜே.ஆர் அந்த காலத்தில் பட்ஜெட் கொண்டு வந்த காலப் பகுதியில் தென் ஆசியாவில் மூடிய பொருளாதார கொள்கை காணப்பட்ட காலப் பகுதி. பாகிஸ்தான், பங்களதேஷ், லத்தின் அமெரிக்கா, முழுமையாக மூடப்பட்ட பொருளாதாரம். அதனை திறந்த பொருளாதாரமாக மாற்றியதை, அந்த காலப் பகுதியில் மாபெரும் புரட்சியாக பார்க்கப்பட்டது. அதன்பின்னர் வேலையின்மை குறைந்தது. வறுமை குறைந்தது. வரிசைகள் குறைந்தன. அது எல்லாம் உண்மை தான். ஆனால், குறிப்பிட்ட காலப் பகுதிக்கு பின்னர் அந்த கொள்கைகள் சரியான திசையை நோக்கி செல்லவில்லை. ஏனெனில், யுத்தம் ஆரம்பித்து விட்டது. பல வெளிநாட்டு நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்தன. யுத்தம் காரணமாக வெளியேறிவிட்டார்கள். யுத்தம் தான் சீரழித்தது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பட்ஜெட், வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிக்கும் சாத்தியம் உள்ளதா?

”வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவிக்க வேண்டுமாக இருந்தால், ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். தொழிலாளர் சட்டத்தில் மாற்றத்தை கொண்டு வருவதாக சொல்லியிருக்கின்றார். அது நல்லதொரு விடயம். வெளிநாட்டு முதலீட்டாளர்கள், இந்தியாவிற்கு போவதா, பங்களதேஷிற்கு போவதாக, இலங்கைக்கு போவதா என சிந்திப்பார்கள். ஏனைய நாடுகளை விட இலங்கையின் சட்டத்திட்டங்கள் சரியானதாக இருக்க வேண்டும். இங்கு ஆர்ப்பாட்டங்கள் செய்துகொண்டிருந்தால் ஒன்றும் நடக்காது. 1000 கோடி முதலீடு வரும் போது, அந்த நிறுவனத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் செய்துகொண்டிருந்தால் என்ன செய்வது?”

நிவாரணம் அற்றதொரு பட்ஜெட் என கூறப்படுகின்றது. இலங்கையில் இது முதல் தடவையா?

”நிவாரணம் இல்லாதது என்பது உண்மை தான். அதையும் நம்ப முடியாது. ஏனென்றால், அடுத்த வருடம் தேர்தல் வருகின்றது. தேர்தல் வரும் போது திரும்பவும் நிவாரணத்தை கொண்டு வருவார்கள். ஒரு வருடத்தில் எதையும் சாதிக்க முடியாது. தேர்தலின் போது பழையபடி நிவாரணத்தை வழங்கினால், என்ன செய்வது? நீண்ட காலத்திற்கு பிறகு நிவாரணம் இல்லாமல் வந்த பட்ஜெட். எனினும், சில நிவாணரங்கள் இதில் இருக்கிறது. சமுர்த்தி எல்லாம் சொல்லப்பட்டிருக்கின்றது. நிவாரணம் இருக்கின்றது, எனினும், ஒப்பிட்டளவில் குறைவாக இருக்கின்றது.”

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் இந்த வரவு செலவுத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளனவா?

”பட்ஜெட் அறிவிப்புக்கு முதலிலேயே, சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை அமல்படுத்த ஆரம்பித்து விட்டார்கள். வரி அதிகரிப்பு சம்பந்தமானது. சம்பள அதிகரிப்பு கொடுக்காமை. ராணுவம் குறிப்பிட்ட காலப் பகுதியில் ஓய்வூ பெறுவது. அது எல்லாம் ஆளணியை குறைப்பது. சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் பலவற்றை முதலிலேயே செய்து விட்டார்கள். இந்த பட்ஜெட்டின் வரிகளில் மாற்றங்களை கொண்டு வரவில்லை. நட்டமடையும் நிறுவனங்களை சீர் செய்வதாக சொல்கின்றார். அது சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகள் தான். சர்வதேச நாணய நிதியத்தின் பல்வேறு விடயங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

 

Previous Story

"சம்" அழைப்பும் நிராகரிப்பும்!

Next Story

விழப்போன ஜோ பைடன்.. தாங்கி பிடித்த இந்தோனேசியா தலைவர்..