சீனாவின் ஜனநாயகம் அதற்கே உரித்தான சீன பாணியில் தான் இருக்கும்.

சீனாவின் ஜனநாயகம் அதற்கே உரித்தான சீன பாணியில் தான் இருக்கும். சுதந்திரம், மனிதாபிமானம் எல்லாம் மனிதநேயத்தின் அங்கங்கள். அது சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அங்கமும் கூட. அமெரிக்காவின் ஜனநாயகம் அதன் பாணியில் இருந்தால் சீனாவின் ஜனநாயகம் சீன பாணியில் தான் இருக்கும் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் கூறியுள்ளார்.

இந்தோனேசியாவின் பாலி தீவில் உள்ள நூசா துவா பகுதியில், ஜி-20 அமைப்பின் உச்சி மாநாடு இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இதில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று டெல்லியில் இருந்து இந்தோனேசியாவின் பாலி தீவுக்கு விமானத்தில் புறப்பட்டுச் சென்றார்.

இந்நிலையில், சீன அதிபர், அமெரிக்க அதிபர் சந்திப்பு மாநாட்டின் ஒரு பகுதியாக நடந்துள்ளது. இந்த சந்திப்பு குறித்து சீன ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அண்மைக்காலமாக சீனா மீது வைத்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிபர் ஜி ஜின்பிங் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் ஜனநாயகம் அதற்கே உரித்தான சீன பாணியில் தான் இருக்கும். சுதந்திரம், மனிதாபிமானம் எல்லாம் மனிதநேயத்தின் அங்கங்கள். அது சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அங்கமும் கூட. அமெரிக்காவின் ஜனநாயகம் அதன் பாணியில் இருந்தால் சீனாவின் ஜனநாயகம் சீன பாணியில் தான் இருக்கும் என்று அதிபர் ஜி ஜின்பிங் கூறியுள்ளதாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளனர்.

சீனாவில் ஒரு கட்சி ஆட்சி முறை நிலவுகிறது. இதனை பல்வேறு மனித உரிமைக் குழுக்களும், மேற்கத்திய நாடுகளின் தலைவர்களும், சில கல்வியாளர்களும் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். இது சர்வாதிகார போக்கு என்றும் சீனாவில் நீதித்துறை சுதந்திரமாக இல்லை, ஊடக சுதந்திரம் இல்லை என்று விமர்சித்து வருகின்றன.

கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் பைடன் உலகளவில் 100 தலைவர்களை திரட்டி இணையவழியில் ஒரு மாநாட்டை நடத்தினார். அதில் நாம் உரிமைகள், ஜனநாயகம் சரிவதை கண்டுகொள்ளாமல் விடக்கூடாது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து துணிச்சலுடன் மனிதகுல முன்னேற்றத்தையும், மனிதகுல சுதந்திரத்தையும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று பேசியிருந்தார். இந்தக் கூட்டத்திற்கு சீனாவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. மேலும் இந்தக் கூட்டம் பிரிவினையை தூண்டுகிறது என்று சீனா விமர்சித்திருந்தது.

இந்நிலையில் சீன ஜனநாயகத்தை தொடர்ந்து நேரடியாகவும், மறைமுகமாகவும் விமர்சிக்கும் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பாலியில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Previous Story

தெறிப்புத் திரை 7 | Maja Ma - தன்பால் ஈர்ப்பு உறவும், ஒரு தாயின் மனப்போராட்டமும்!

Next Story

"சம்" அழைப்பும் நிராகரிப்பும்!