நஜீப் பின் கபூர்
நன்றி: 18.10.2026 ஞாயிறு தினக்குரல்
ஞானசார விவகாரம் சிறுபான்மை தலைமைகள் இரட்டை வேடம்!

கடந்த வாரம் யாரிந்த ஞானசாரர் என்ற தலைப்பில் பல செய்திகளைச் சொல்லி இருந்தோம். இன்று நாட்டில் மீண்டும் இனவாதத்தை உசுப்பேற்றி அரசியல் ஆதிக்கத்தைக் கைப்பற்றுகின்ற ஒரு கடுமையான முயற்சி கோட்டா பாணியில் நாட்டில் நடந்து வருகின்றது. அந்த முயற்சியில் சம்பிரதாய வலதுசாரி அரசியல் கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன.
இந்த ஞானசார விவகாரத்தை வைத்து பௌத்தத்துக்கும் பேரின சமூகத்துக்கும் முதன்மை இடம் வேண்டும் என அந்தக் கட்சிகளும் இப்போது கோரிக்கை விடுத்து வருகின்றன. சிறுபான்மை சமூகங்கள் வழக்கமாக ஆதரவு கொடுத்து வந்த-வருகின்ற ரணிலின் ஐதேக. மற்றும் சஜித்தின் ஐமச.யும் இன்று இந்தக் கோசத்தை கையிலெடுத்து இனவாத கருத்துக்களை கக்கிக் கொண்டிருப்பதை நாம் அன்றாடம் பார்த்து வருகின்றோம். அது பற்றி பேசும் முன்னர் இந்த மனிதப்படைப்பு பற்றி சற்றுப் பார்ப்போம்.
நமது வழக்கமான அரசியல் கட்டுரைகளில் இருந்து இது சற்று வித்தியாசமாக அமையக்கூடும். இதனை எவரும் ஒரு ஆலோசனையாகவோ உபதேசமாகவோ வழிகாட்டலாகவோ எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் நாம் எதிர்பார்க்கவுமில்லை. அதற்கான தேவைகளும் எமக்குக் கிடையாது. இது அரசியல் உள்நோக்கங்களைக் கொண்ட பார்வையும் கிடையாது. ஒரு புரிதலுக்காகவும் தெளிவூட்டலுக்காகவும் தான் நாம் இப்படி ஒரு தலைப்பை இந்த வாரம் தெரிவு செய்திருக்கின்றோம்.
முதல் பகுதியில் சில வரலாற்றுக் குறிப்பு இங்கு தருகின்றோம். அதற்கு மத்தியில் இனம் மதம் காலாச்சாரப் பாரம்பரியங்கள் அதன் மேலாதிக்கம் பரவல் எழுச்சி வீழ்ச்சி கற்றுக் கொண்ட படிப்பினைகள் என்பன பற்றியும் சற்றுப்பார்க்க வேண்டி இருக்கின்றது. பரந்துபட்ட அத்தியாயங்களை சிறியதோர் பரப்புக்குள் கொண்டு வர வேண்டிய கட்டாயமும் நமக்கு இருக்கின்றது.

சில சமயங்களில் நாம் துவக்கத்தில் இங்கு உச்சரிக்கின்ற-பேசுகின்ற வார்த்தைகள் அரசியலுக்கு அப்பால்பட்டவை போன்ற ஒரு எண்ணக்கருவை ஏற்படுத்தலாம். இல்லை இங்கு அரசியல் இருக்கின்றது என்பதை நாம் முதலில் சொல்லி வைக்கின்றோம். மனித பிறப்புத் தொடர்பில் ஆன்மீகக் கருத்துக்கள் பரிணாமக் கொள்கை என்பவற்றிற்கிடையே முரண்பாடு கொண்ட கருத்துக்கள் இருக்கலாம் அது பற்றியும் நாம் இங்கு பேசப்போவதில்லை.
பொதுவாக நாம் பார்க்கின்ற வரலாற்று நிகழ்வுகளின்படி மனித இனம் பல யுகங்களை கடந்து வந்திருக்கின்றது. மனித சிந்தனையில் ஏற்பட்ட வளர்ச்சி அல்லது அவனது அனுபவங்கள் அவனுக்குப் புதிய யுகங்களுக்கு மாற வேண்டிய அறிவையும் அனுபவத்தையும் கொடுத்திருக்க வேண்டும்.
இந்தப் பின்னணியில் செங்குத்தாக பாய்வது போல நாம் நமது நாட்டுக்குள் குதிப்போம். அதில் நாம் பார்க்கின்ற அத்தியாயங்கள் இயக்கர் நாகர் ஆதிக்கம். விஜயன் அவனது சகாக்களின் வரவு. அங்கே ஒரு ஆக்கிரமிப்பு குடிப்பரம்பல் ஒரு இனத்தின் வீழ்ச்சியும் மற்றுமொரு இனத்தின் எழுச்சியும் இருக்கின்றன.

நமது அடுத்த தாவல் மன்னன் தேவனம்பிய தீசன் காலத்தில் மஹிந்த தேரர் இங்கு பௌத்த சமயத்தை கொண்டு வந்தார். பிற்காலத்தில் நாட்டில் அது பலமான சக்தியாக மாறியது. அப்படியானால் அதற்கு முன்பு நாட்டில் இருந்த பெரும்பான்மையினரான இயக்கர் நாகர் என்ற குடிகள் மீது விஜயன் குழு தனது மேலாதிக்கத்தை செலுத்தி இருக்கின்றது. ஆனால் இந்த யதார்த்தத்தை எவரும் இன்று பெரிதாக இப்போது பேசுவது கிடையாது.
பௌத்தமும் சிங்களப் பேரினமும் நாட்டில் அதிகாரம்மிக்க சக்தியாக மாறியது. அதன் பின்னர் இந்த நாட்டுக்கு வந்த தென்னிந்தியர்கள் முஸ்லிம்கள் இந்திய வம்சாவழி மலையக சமூகத்தினரை இன்று சிறுபான்மை இனங்கள் என்று பேசுகின்றார்கள்.

பேரின சிங்கள சமூகத்துக்கும் பௌத்தத்துக்கும் இவர்கள் அச்சுறுத்தல் என்றும் அபாயச் சங்கு ஒலிக்கப்பட்டு வருகின்றது. நாட்டிலுள்ள சிறுபான்மை சமூகத்தினரை பேரின கடும் போக்காளர்கள் சந்தேகமாக பார்க்கின்றார்கள் பேசுகின்றார்கள்.
இந்த முரண்பாடுகள் பிளவுகள் ஆயுதப்போராட்டங்கள் என்ற அளவுக்குக்கூட போய் பல இலட்சம் பேர் தமது உயிர்களை பலிகொடுத்திருந்தனர். இதில் நாம் எதனைச் சொல்ல வருகின்றோம் என்றால் இன்று பெரும்பான்மையாக இருக்கின்ற இனம் மதம் என்பன நிலையானதல்ல அது ஏதாவது ஒரு நாளில் மாற இடமிருக்கின்றது. அது இயல்பானது. இது வரலாறு.

அதனால் இந்த குறுகிய சிந்தனைகளை மூட்டை கட்டிவிட்டு நாம் மனிதத்தை நேசிக்க முதலில் கற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் தேசம் சக்தி பெறும். அனைவரும் ஒரு தேசத்தவர்கள் என்பதனை முதலில் ஏற்றுக் கொள்ள வேண்டும். நாம் வார்த்தைகளில் சொல்லிவிட்டதற்காக இப்படியான மாற்றங்கள் ஒரே இரவில் வந்து விடும் என்று எவரும் எதிர்பார்க்க முடியாது. அது நமக்கும் நன்றாகவே தெரியும்.
மானிட சமூகத்தில் உள்ளதற்கும் இல்லாததற்கும் முரண்பாடுகள் மோதல்கள் துவக்கம் முதல் இன்றுவரை நடந்து கொண்டுதான் வருகின்றது. அதனை போதனைகளால் மாற்றிவிடவும் முடியாது.
அரசியல் சிந்தனைகளும் எண்ணக் கருக்களும் அப்படித்தான். தாம் பின்பற்றுகின்ற சமயக் கோட்பாடுகளை அதே மதத்தை சேர்ந்தவர்களே ஏற்றுக் கொள்ளாத நிலையில் இந்த அற்பமான அரசியல் சிந்தனைகளை அனைத்துக் குடிகளும் சிரம்மேல் வைத்து ஏற்றுக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கவும் முடியாது.
அதனால் அரசியல் முரண்பாடுகள் வருகின்றன. ஆனால் நல்லதொரு சிந்தனையும் அரசியல் தலைமைத்துவமும் இதில் வலுவான மேலாதிக்கத்தை செலுத்த அதிகமான வாய்ப்புக்கள் இருக்கின்றன. சற்று நீண்ட நமது முன்னுரையில் எதனைச் சொல்ல வருகின்றோம் என்றால் மனிதனது பிறப்பு ஆன்மீகக் கொள்ளைகைப்படியும் விஞ்ஞானக் கொள்கைகளின் படியும் ஆரம்பம் ஒன்றே.
ஆனால் இடையில் வந்த இனம் மதம் கொள்கை கோட்பாடுகள் அரசியல் சமூக சிந்தனைகள் மனித சமூகத்தை பிளவு படுத்தி இருக்கின்றது என்பதுதான் நமது வாதம்.
இந்தப் பின்னணியில் நாம் முதல் பந்தியில் சொல்லி இருக்கின்ற இனவாதம் இன்று நமது அரசியலில் பேசு பொருளாகி வருகின்றது. அது பற்றி பேசுவதாக இருந்தால் நாட்டில் அரசியல் பின்னணியை சொல்ல வேண்டும். இது மக்கள் அறிந்ததும் புரிததும்தான்.
ஆனால் பாமர மக்கள் காற்றில் வருகின்ற எல்லாச் செய்திகளையும் காதில் வாங்கிக் கொண்டு தமது விமர்சனங்களையும் விருப்பு வெறுப்புக்களையும் சந்தியில் பேசிக் கொண்டு வருகின்றார்கள். அதில் எதிரும் புதிருமான பார்வைகள் இருக்கின்றன.
நேரடியாக விடயத்துக்கு வருவதாக இருந்தால் சம்பிரதாய அரசியல் சிந்தனைகளுக்கு மாற்றமான ஒரு அரசு இன்று அதிரடியாக பதவிக்கு வந்திருக்கின்றது. அவர்கள் ஏழு தசாப்தங்களுக்கு மேலாக நாட்டில் இருந்து வந்த சம்பிராய சமூக அரசியல் பொருளாதார நடவடிக்கைகளுடன் முரண்படுகின்றார்கள். அவற்றை மாற்றி அமைக்கவும் முனைகின்றார்கள்.
இதனால் பழைமைக்கும் புதுமைக்கும் இடையில் ஒரு இழுபறி வருவது இயல்பானதுதான். அதில் அனைத்து விடயங்களையும் நாம் இங்கு பேச முடியாது. எனவே இன்று பேசு பொருளாக இருக்கின்ற ஞானசார விவகாரத்துக்கு வருவோம். அனுர குமாரதிசாநாயக்கவின் என்பிபி. யிடம் தோற்றுப் போனவர்கள் மீண்டும் அதிகாரத்துக்கு வருவதற்காக எதை வேண்டுமானாலும் செய்வது என்ற ஒரு நிலைக்கு வந்திருக்கின்றார்கள்.
இதற்கான பரப்புரைகளும் சந்திப்புக்களும் ஊர்வலங்களும் கையெழுத்து வேட்டையும் நாட்டில் நடந்து வருகின்றன. அந்த வகையில் சஜித் தலைமையிலான என்பிபி முக்கியஸ்தர்கள் சிலர் கண்டிக்குப் போய் அஸ்கிரிய மல்வத்தை தேரர்களைச் சந்தித்து இன்று பதவியில் இருக்கின்ற அனுர தலைமையிலான அரசால் பௌத்த சமயத்துக்கும் பௌத்த தேரர்களுக்கும் பெரும் நெருக்கடிகள் தொல்லைகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. அதனால் இதில் நீங்கள் தலையிட வேண்டும் என்று எதிபார்த்து மல்வத்த தேரர்களிடத்தில் தமது தரப்பு வாதங்களை முன்வைத்தனர்.
பொதுவாக காகம் கருப்பு என்று சொன்னாலும் வெள்ளை என்று சொன்னாலும் ஆம் அப்படியா என்று சொல்லி வந்தவர்களை ஆசீர்வாதிப்பதும் பார்ப்போம் செய்வோம் என்று சொல்லி சமாளித்து வந்தவர்களை வழியனுப்பி வைப்பதுதான் இதுவரை நடந்து வந்திருக்கின்றது. ஆனால் இந்த முறை அதற்கு மாற்றமான ஒரு நிகழ்வு மல்வத்தையில் நடந்திருக்கின்றது.
அது பற்றித்தான் ஊடகங்கள் இப்போது பேசிக் கொண்டிருக்கின்றன. தலதா மாளிகாவையில் நடைபெற்ற தாக்குதலை அனுர தரப்பு ஜேவிபி.தான் செய்தது என்று அந்த தூதுக் குழுவில் இருந்த ஐமச. செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார குற்றம் சாட்டிய போது குறுக்கிட்ட மல்வத்த மாநாயக்க திப்படுவே சிரி சித்தாரத்தன சுமங்கலத் தேரர் தெரியாத விடயங்களை பேசாதீர்கள். இந்தத் தாக்குதல் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?
நாம் இங்குதான் இருக்கின்றோம். அது ஜேவிபி செய்யவில்லை என்று மல்வத்த பீடாதிபதி சொன்னது மட்டுமல்லாமல் என்பிபி. பதவிக்கு வந்தால் பெரஹர நடக்காது அது நடக்காது இது நடக்காது என்று சொன்னீர்களே அப்படி ஏதாவது நடந்ததா என்றும் அவர் அங்கு கண்ணத்தில் அறைந்தது போல திருப்பி கேள்வி எழுப்பி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றார். இது அபூர்வமான ஒரு நிகழ்வு.
அரசு பற்றி உள்ளது இல்லாத கதைகளை எதிரணி அரசியல் -செயல்பாட்டார்கள் முன்னெடுத்துக் கொண்டு வருவதால் பொறுக்க முடியாத நிலையில்தான் தேரர் அங்கு பொங்கி எழுந்திருக்க வேண்டும் என்று நாம் கருதுகின்றோம்.
அதே நேரம் பௌத்த சமயத்துக்கும் தேரர்களுக்கும் தொந்தரவு கொடுத்த சிறுபான்மை சமூகங்களை சந்தோசப்படுத்தி அவர்களது ஆதரவைப் பெற்றுக் கொள்ளவே அனுர அரசு முனைகின்றது என ஐமச. முக்கியஸ்தரும் முன்னாள் அமைச்சருமான லக்ஸ்மன் கிரிஎல்ல அங்கு கருத்துத் தெரிவித்த போது ஆம் அதுபோல என்று தான் மாளிகாவ தாக்குதல் பற்றி கதை சொல்லப் போன இடத்தில்தான் மல்வத்தை மாநாயக்க தேரர் ஐமச. செயலளர் மத்தும பண்டாராவுக்கு நெத்தியடி கொடுத்திருந்தார்.
சஜித் தலைமையிலான ஐமச. ஏன் இப்படி நடந்து கொள்கின்றது என்பது பற்றி பிறிதொரு இடாத்தில் நாம் குறிப்புச் சொல்லி இருக்கின்றோம்.

இந்த ஞானசாரவை ஏன் நல்லாட்சி சிறைக்கு அனுப்பியது. அவரது காவி ஆடைய களைந்தது.? அதனைத்தான் அனுர அரசு தொடர்கின்றது என்பதனையும் நாம் கடந்த வாரக்கட்டுரையில் சொல்லி இருந்தோம். அதனை மூடி மறைத்து ஏதோ அனுர அரசுதான் தேரக்குக்கு அநீயாயம் பண்ணி வருகின்றது என்று எதிரணியினர் மக்கள் மயப்படுத்த முனைகின்றார்கள்.

இந்த ஞானசாரருக்கு சலுகை வழங்குமாறு நடத்தப்பட்டு வருகின்ற கையெழுத்து வேட்டையில் பல ஆயிரக் கணக்கான முஸ்லிம்களும் இந்து கிறிஸ்தவ சமூக்த்தினரும் வந்து ஆர்வத்துடன் கையெழுத்துப் போடுவதாக அதன் ஏற்பாட்டாளர் தித்தகல்லத் தேரர் ஊடகச் சந்திப்பில் சொல்லி இருந்தார். இதன் யதார்த்தம் ஆராய்ந்து பார்க்க வேண்டிய ஒன்று என்பது நமது கருத்து.
இந்தக் கதைகள் அப்படி இருக்க நமது சிறுபான்மை சமூகத் தலைவர்கள் குறிப்பாக தமிழ் முஸ்லிம் மலையகத் தலைமைகள் தேர்தல் காலங்களில் தமது இனவாத்தை முன்னிறுத்தி ஞானசாரரை பூதமாக காட்டி தமது சமூகங்களின் வாக்குகளை கொள்ளை அடிப்பதை நாம் வழக்கமாகப் பார்த்து வருகின்றோம்.
அதே நேரம் தமது கூட்டணியில் இருக்கின்ற பிரதான கட்சி குறிப்பாக சஜித் தலைமையிலான அணி சிறுபான்மையினரை நோகடிக்கின்ற கருத்துக்களை இப்போது பகிரங்கமாக பேசுகின்ற போது அதே சிறுபான்மை தலைமைகள் ஊமையாகி விடுகின்றன அல்லது மௌனமாகி விடுகின்றன.

ஆனால் இதற்கு எதிராக இதுவரை மனோ கணேசன் தனது கண்டனத்தை வெளிப்படுத்தி இருந்தது பாராட்டத்தக்கது. ஆனால் ஏனைய குறிப்பாக சுமந்திரன் ஹக்கீம் ரிசாட் இதுவரை வாய் திறக்கவில்லை. இந்த சந்தர்ப்பவாதத்தை சிறுபான்மை சமூகங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த நாட்டில் கடந்த ஆட்சி காலங்களின் நடந்த இன வெறி ஆட்டங்களையும் அதற்கு ஆட்சியாளர்கள் கொடுத்து வந்த ஆதரவையும் சிறுபான்மை சமூகங்களுக்கு நன்றாகத் தெரியும். அப்படி ஒரு நிலையை மீண்டும் தோற்றுவிக்கவே முயற்சிகள் தற்போது நடந்து கொண்டிருக்கின்றன.
ஞானசாரரை வைத்துத்தான் ராஜபக்ஸாக்கள் கடந்த காலங்களில் சிறுபான்மை சமூகங்களை அடக்கி வைத்திருந்தனர் என்பது அனைவரும் அறிந்ததே. அப்படி ஒரு நிலை நாட்டில் மீண்டும் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற விடயத்தில் சிறுபான்மை சமூகங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.





