‘ரத்தம் தோய்ந்த சட்டை’ – இஸ்ரேல் சென்ற விமானத்தில் நடுவானில் விமானிகள் மோதல், சௌதியில் திடீர் தரையிறக்கம் – நேரில் கண்ட பயணிகள் கூறுவது என்ன?
துபையில் இருந்து டெல் அவிவ் நோக்கிப் புறப்பட்ட ஃப்ளைதுபை பயணிகள் விமானம் புதன் கிழமை காலை செளதி அரேபியாவுக்கு திருப்பிவிடப்பட்டு, அங்கு அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
விமானிகளுக்கு இடையே விமானத்தில் சண்டை ஏற்பட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்தன. இதையடுத்து, விமானத்தில் இருந்து அவசர நிலை தகவல்கள் அனுப்பப்பட்டதால், விமானம் கடத்தப்பட்டு இருக்கலாம் என்ற அச்சமும் சிறிது நேரம் ஏற்பட்டது.
இரு விமானிகள் இடையே ஏற்பட்டதாகக் கூறப்படும் ‘சண்டை’க்குப் பிறகே அவசரக்கால அலாரம் ஒலிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விமானத்தில் பயணித்த இஸ்ரேலிய பயணி ஒருவர், விமானக் குழுவினர் உதவி கேட்டதாகவும், அதன் பிறகு பயணிகள் விமானிகளில் ஒருவரைக் கட்டுப்படுத்தி, அவரைக் கட்டிப் போட்டதாகவும் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு வெளியிட்டுள்ள அறிக்கையில், நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், சௌதி அரேபியாவில் இருந்து இஸ்ரேலிய பயணிகளை தாய்நாட்டிற்குக் கொண்டு வரும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
பயணிகளின் நிலை என்ன?
FZ1073 என்ற விமான எண் கொண்ட அந்த விமானத்தில் சுமார் 180 இஸ்ரேலிய பயணிகள் இருந்தனர். முதலில், பொதுவான அவசர நிலையைக் குறிக்கும் 7700 என்ற ஸ்குவாக் குறியீட்டை விமானம் அனுப்பியது. பின்னர், விமானத்தில் அனுமதியற்ற தலையீடு ஏற்பட்டு இருப்பதைக் குறிக்கும் 7500 என்ற குறியீட்டுக்கு அது மாற்றப்பட்டது. அதன் பிறகு, மீண்டும் 7700 என்ற ஆரம்பக் குறியீட்டுக்கு விமானம் திரும்பியது.
இந்தச் சம்பவத்தின்போது, சாத்தியமான அவசர நிலையை எதிர்கொள்ளும் வகையில் இஸ்ரேலிய விமானப் படை தனது உஷார் நிலையை அதிகரித்ததாக ஜெருசலேம் போஸ்ட் செய்தி வெளியிட்டது.
ஃப்ளைட்ராடார்24 தரவுகளின்படி, செளதியின் வான்வெளியில் விமானம் திடீரெனத் தனது பாதையை மாற்றி, வானில் உயரத்தைக் குறைத்த சிறிது நேரத்திற்குப் பிறகு, சுமார் ஏழு நிமிடங்களுக்கு அவசர நிலை சமிக்ஞையை வெளியிட்டது.
ஃப்ளைதுபை நிறுவனம், தனது விமானம் “ஒரு சம்பவத்தை எதிர்கொண்டது” என்பதை உறுதி செய்திருப்பதுடன், “அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவர்களின் இருப்பிடம் உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும்” தெரிவித்துள்ளது.

மேலும், “2026 செப்டம்பர் 30 அன்று, துபை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பென் குரியன் சர்வதேச விமான நிலையம் நோக்கி இயக்கப்பட்ட FZ 1073 விமானம், பயணத்தின்போது ஒரு சம்பவத்தை எதிர்கொண்டது என்பதை ஃப்ளைதுபை உறுதிப்படுத்துகிறது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
“அந்த விமானம் தபூக் விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டுள்ளது. அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக உள்ளனர் மற்றும் அவர்களின் இருப்பிடம் உறுதி செய்யப்பட்டுள்ளது. எங்கள் பயணிகள் மற்றும் விமானக் குழுவினரின் பாதுகாப்பும் நலனுமே எப்போதும் எங்கள் மிக முக்கியமான முன்னுரிமை. எங்கள் குழுக்கள் தொடர்புடைய அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றன. உறுதிப்படுத்தப்பட்ட விவரங்கள் கூடுதலாகக் கிடைக்கும்போது மேலும் தகவல்கள் வெளியிடப்படும்” என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

‘விமானம் கட்டுப்பாட்டை இழக்கத் தொடங்கியபோது உதவி கேட்டு கத்திய விமானி’
விமானம் தரையிறங்க வேண்டியிருந்த இஸ்ரேலின் பென் குரியன் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியுள்ள யாஸ்மின் அபுகாசிஸ் வழங்கிய கூடுதல் தகவல்களை வழங்கியுள்ளார்.
துபையில் இருந்து டெல் அவிவுக்கு சென்ற அந்த விமானத்தில் பயணித்த தனது மகள், விமானி ஒருவர் உதவி கோரி கத்திக் கொண்டிருந்ததால் விமானத்தில் அலறல் சத்தங்கள் கேட்டதாகத் தன்னிடம் அலைபேசியில் தெரிவித்ததாக யாஸ்மின் கூறுகிறார்.
“விமானம் கட்டுப்பாட்டை இழக்கத் தொடங்கியது. அதனால் அனைத்து பயணிகளும் அலறினர். அவர்கள் இறந்துவிடப் போவதாக அஞ்சினர்,” என்று யாஸ்மின் ஏபி செய்தி முகமையிடம் கூறியுள்ளார். மேலும், ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் பேசிய யாஸ்மின், “வேறு இரண்டு விமானிகள் விமானத்தின் கட்டுப்பாட்டைத் தம்வசப்படுத்திய அதே நேரத்தில் மற்ற பயணிகள் கையில் கத்தி வைத்திருந்த ஒருவரை நோக்கி ஓடிச் சென்றதாகவும்” கூறினார்.
யாஸ்மின் அபுகாசிஸ், “தனது மகள் மிரியம் அந்த விமானத்தில் இருந்ததாகவும், விமானத்தில் அலறல் சத்தங்கள் கேட்டதாகவும் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார். அதோடு, கத்தி வைத்திருந்த நபர் விமானிகளில் ஒருவரை தரையில் தள்ளியதாகவும், எங்கும் ரத்தம் காணப்பட்டதாகவும் அவரது மகள் தெரிவித்ததாக” கூறினார்.
துபையில் இருந்து டெல் அவிவுக்கு சென்ற அந்த விமானத்தில் என்ன நடந்தது என்பது குறித்து இஸ்ரேலிய ஊடகங்களில் மேலும் பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஜெருசலேம் போஸ்ட் ஊடகத்திடம் பெயரைக் குறிப்பிட வேண்டாமென்ற நிபந்தனையுடன் பேசிய பயணி ஒருவர், “ஒரு விமானி, உடனிருந்த மற்றொரு விமானியால் குத்தப்பட்டார். ஆனால் விமானத்தின் முன்பகுதியில் இருந்த பயணிகள் தாக்குதலில் ஈடுபட்ட அவரை காக்பிட்டில் இருந்து வெளியேற்ற உதவினர்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த நேரத்தில் விமானத்தின் பின்புறத்தில் வேறு இரண்டு விமானிகள் இருந்ததாக அவர் குறிப்பிட்டார். “நான் அவர்களிடம் ஓடிச் சென்று விமானத்தின் கட்டுப்பாட்டைப் பெறும்படி கத்தினேன்,” என்று அந்தப் பயணி ஜெருசலேம் போஸ்டிடம் தெரிவித்தார். காயமடைந்த விமானிக்கு விமானத்தில் இருந்த ஒரு பல் மருத்துவர் உயிர் காக்கும் சிகிச்சை அளித்ததாகவும் அந்தப் பயணி கூறினார்.
குறிப்பு: இந்தக் கூற்றுகளை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை.

‘ரத்தத்தில் தோய்ந்துள்ள சட்டைகள்’ – நேரில் கண்ட பயணிகள்
இஸ்ரேலிய நாளிதழான இஸ்ரேல் ஹேயோமுக்கு அளித்த பேட்டியில், விமானத்தில் இருந்த ஒரு பெண் பயணி, விமானம் வேகமாக கீழிறங்கத் தொடங்கியதை உணர்ந்த தருணத்தை “மிகவும் பதற்றமான” அனுபவமாக விவரித்தார்.
“விமானிகள் கட்டுப்பாட்டை இழந்துவிட்டார்கள் என்பதை நாங்கள் புரிந்துகொண்டோம்,” என்று அவர் கூறியதுடன், பயணிகளின் அச்சமூட்டும் அலறல்களையும் நினைவுகூர்ந்தார். தாக்குதலில் ஈடுபட்ட நபர் அவரிடமிருந்து இழுத்து அகற்றப்படுவதற்கு முன், ஒரு விமானி கடுமையான குத்துக் காயங்களுக்கு ஆளானதாகவும் அவர் அந்த நாளிதழிடம் கூறியுள்ளார்.
அதோடு, “இங்கே சிலரின் சட்டைகள் முழுவதும் ரத்தத்தில் தோய்ந்துள்ளன. இப்போது நாங்கள் நலமாக இருக்கிறோம்; வீட்டிற்குத் திரும்ப விரும்புகிறோம்,” என்றும் தெரிவித்தார்.
குறிப்பு: இந்தக் கணக்கை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை.
‘நடுவானில் விமானிகள் இடையே கைகலப்பு’
இஸ்ரேலிய தொலைக்காட்சி நிறுவனமான N12 நியூஸின் தலைமை அரசியல் ஆய்வாளர் அமித் செகல் தனது எக்ஸ் பக்கத்தில், “விமானம் நடுவானில் இருந்தபோது இரு விமானிகளுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதனால் மத்திய கிழக்கு முழுவதும் எச்சரிக்கை நிலை அதிகரிக்கப்பட்டது” என்று பதிவிட்டார்.
அவரது பதிவை மறுபதிவு செய்த இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர் மைக் ஹக்கபி, “இன்று காலை நடந்த சம்பவம் மத்திய கிழக்கு முழுவதும், குறிப்பாக இஸ்ரேலில் உள்ள பொது மக்களையும் பாதுகாப்பு அமைப்புகளையும் முழு உஷார் நிலையில் வைத்துள்ளது. நிலைமை மேலும் மோசமடையாதது நல்ல விஷயம். ஆனால், விமானம் பறந்து கொண்டிருக்கும்போது விமானிகள் கைகலப்பில் ஈடுபட்டு, விமானத்தை வேறு இடத்திற்குத் திருப்ப வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது நிச்சயமாக வழக்கமான சம்பவம் அல்ல” என்று தெரிவித்தார்.

பெயர் வெளியிட விரும்பாத இஸ்ரேலிய அதிகாரி ஒருவர், விமானிகள் இடையே கைகலப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் அவசர நிலை சமிக்ஞைகளை அனுப்பியதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார். எனினும், விமானிகளில் யாரேனும் வேண்டுமென்றே அவசர நிலை சமிக்ஞையை அனுப்பினார்களா என்பது உடனடியாகத் தெரியவில்லை.
முன்னதாக, மூன்று இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம், இந்த விமானம் தொடர்பாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாகத் தெரிவித்தனர். “ராணுவ தலைமைத் தளபதி அயால் ஜமீரும் விமானப் படைத் தளபதி மற்றும் பிற ராணுவ அதிகாரிகளுடன் நிலைமை குறித்து ஆய்வு செய்ததாக” இஸ்ரேலிய ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃப்ளைதுபை நிறுவனம் துபையில் இருந்து டெல் அவி செல்லும் தினசரி விமானங்களை இயக்கி வருகிறது. இந்த விமானப் பாதை இஸ்ரேலியர்கள் இடையே மிகவும் பிரபலமானதாக விளங்குகிறது.
‘இரு நிமிடங்களில் 17,000 அடிக்கும் மேல் கீழிறங்கிய விமானம்’
துபையில் இருந்து புறப்பட்டு இரண்டு மணிநேரத்திற்கும் மேலான நேரத்திற்குப் பிறகு, டெல் அவிவ் நோக்கிச் சென்ற இந்த விமானம் சௌதி அரேபியாவின் வான்வெளியில் மிகவும் வேகமாகத் தனது உயரத்தை இழந்ததை பிபிசி வெரிஃபை ஆய்வு செய்த ஃப்ளைட்ரேடார்24 விமானக் கண்காணிப்புத் தரவுகள் காட்டுகின்றன.
குறிப்பாக, இரண்டு நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில், அது 17,000 அடிக்கும் அதிகமாகக் கீழிறங்கியது. சுமார் 10 நிமிடங்கள் கழித்து, விமானத்தில் இருந்து அவசரக் கால சிக்னல் ஒன்று அனுப்பப்பட்டது.
மேலும், சௌதி அரேபியாவின் தபூக் விமான நிலையம் நோக்கிய மீதமுள்ள பயணம் முழுவதும் விமானத்தின் உயரத்தில் குறிப்பிடத்தக்க ஏற்றத் தாழ்வுகள் தொடர்ந்ததும் இதுவரை கிடைக்கக்கூடிய தரவுகள் காட்டுகின்றன.
துபையில் இருந்து டெல் அவிவ் நோக்கிப் புறப்பட்ட ப்ளைதுபை பயணிகள் விமானம் ஒன்று புதன் கிழமை காலை செளதி அரேபியாவில் திடீரென அவசர நிலை காரணமாகத் தரையிறக்கப்பட்டது.
விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, விமானிகளுக்கு இடையே சண்டை ஏற்பட்டதாக இஸ்ரேலிய ஊடகங்களும், சம்பவத்தை நேரில் கண்டதாகக் கூறும் பயணிகளும் கூறியுள்ளனர்.
இரு விமானிகள் இடையே ஏற்பட்டதாகக் கூறப்படும் ‘சண்டை’க்குப் பிறகே அவசரக்கால அலாரம் ஒலிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விமானத்தில் பயணித்த இஸ்ரேலிய பயணி ஒருவர், விமானக் குழுவினர் உதவி கேட்டதாகவும், அதன் பிறகு பயணிகள் விமானிகளில் ஒருவரைக் கட்டுப்படுத்தி, அவரைக் கட்டிப் போட்டதாகவும் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு வெளியிட்டுள்ள அறிக்கையில், நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், சௌதி அரேபியாவில் இருந்து இஸ்ரேலிய பயணிகளை தாய்நாட்டிற்குக் கொண்டு வரும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் இதுவரை தெரிய வந்த தகவல்கள் என்ன? இன்னும் தெளிவாகாத விஷயங்கள் யாவை?
இதுவரை நமக்குத் தெரிந்தவை
- புதன் கிழமையன்று (செப்டம்பர் 30), துபையில் இருந்து டெல் அவிவுக்கு சென்ற ஃப்ளைதுபை விமானமான FZ103, புறப்பட்டு சுமார் இரண்டு மணிநேரத்திற்குப் பிறகு சௌதி அரேபியாவுக்கு திருப்பிவிடப்பட்டது.
- விமானம் திடீரென திசை மாற்றப்பட்டு வேகமாகக் கீழிறங்கியதைத் தொடர்ந்து, அவசரக்கால சிக்னல் அனுப்பப்பட்டது. பின்னர் கடத்தல் எச்சரிக்கையும் செயல்படுத்தப்பட்டது. வெறும் இரண்டு நிமிடங்களில் விமானம் சுமார் 17,000 அடி உயரத்தை இழந்து வேகமாகக் கீழ்நோக்கி வந்தது.

- விமான சேவை நிறுவனமான ஃப்ளைதுபை தெரிவித்துள்ளதன்படி, அனைத்துப் பயணிகளும் பாதுகாப்பாக உள்ளனர் மற்றும் அவர்கள் இருக்குமிடம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
- விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்திற்கு அவசர அழைப்பு விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த விமானம் உள்ளூர் நேரப்படி காலை 08:44 மணிக்கு தபூக் விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
- அந்த விமானத்தின் கேப்டனும் முதல் அதிகாரியும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு இருப்பதாக விமான நிலையத்தைச் சொந்தமாக வைத்துள்ள நிறுவனம் தெரிவித்துள்ளது.
- விமானத்தின் காக்பிட்டில் ஒரு பைலட் கத்தியால் குத்தப்பட்டதாக பயணிகள் தெரிவித்துள்ளனர். மேலும், விமானத்தின் பின்புறத்தில் இருந்த வேறு இரண்டு விமானிகள் முன்பகுதிக்கு வந்து விமானத்தைத் தரையிறக்க உதவியதாக பெயர் குறிப்பிட வேண்டாம் என்ற நிபந்தனையுடன் பேசிய ஒரு பயணி கூறியுள்ளார். எனினும், இது இன்னும் அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.
- விமானத்தில் குழப்பமான சூழல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இதில் தலையிட்டு விமானத்தை இயக்கி பாதுகாப்பாகத் தரையிறக்கிய பின்புறத்தில் அமர்ந்திருந்த இரு விமானிகளில் ஒருவர் பிரிட்டிஷ் நாட்டவர் என்றும் மற்றொருவர் ஐரோப்பியர் என்றும் பயணிகளில் ஒருவரான அல்மோ இத்தாலி ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். இதில் ஐரோப்பியர் எனக் கூறப்பட்ட விமானி குறிப்பாக எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்று இத்தாலி தெளிவாகக் குறிப்பிடவில்லை.

விமானத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து சௌதியின் தபூக் விமான நிலையத்தில் தரையிறக்கிய வேறு இரண்டு விமானிகளில் ஒருவர் பிரிட்டிஷ் நாட்டவர் என்று பயணிகளில் ஒருவரான அல்மோக் இத்தாலி ஊடகங்களிடம் தெரிவித்தார்
இன்னும் தெளிவாகத் தெரியாதவை
- விமானிகள் இடையே ஏற்பட்ட, வெளிப்படையாகத் தோன்றும் இந்தத் தாக்குதலின் நோக்கம் என்ன, கேப்டன், முதல் அதிகாரி ஆகிய விமானிகளுக்கு ஏற்பட்ட காயங்களின் தீவிரம் என்ன என்பவை குறித்த உறுதியான தகவல்கள் இன்னும் தெரியவில்லை.
- இதில் தொடர்புடையவர்களின் பெயர்கள் அல்லது எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பவை தெரிய வரவில்லை. இதில் காயமடைந்த விமானிகள், விமானத்தை தரையிறக்கிய பிற விமானிகள் ஆகியவர்களின் விவரங்களும் தெரிய வரவில்லை.
- ரத்தத்தையும் ஒரு கத்தியையும் பார்த்ததாக விமானத்தில் சம்பவத்தைக் கண்டதாகக் கூறும் சாட்சிகள் கூறியுள்ளனர். ஆனால் தாக்கியது யார், தாக்கப்பட்டது யார் அல்லது துல்லியமாக இதில் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் என்ன என்பவை குறித்த விவரங்கள் இன்னும் தெரியவில்லை.
- காவல்துறை, அவசர மீட்பு சேவைகள் அல்லது விசாரணை அதிகாரிகளிடம் இருந்து அதிகாரபூர்வ அறிக்கைகள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
- காக்பிட்டில் என்ன நடந்தது என்பது குறித்த துல்லியமான விவரங்கள் தெளிவாகத் தெரியவில்லை என்றும், ஆனால் ரிலீப் பைலட்டுகள் விமானத்தை நிலைப்படுத்தி சௌதி அரேபியாவில் தரையிறக்கியதாகவும் பயணி அல்மோக் இத்தாலி கூறுகிறார்.
இந்த விமானத்தில் என்ன நடந்தது என்பது தொடர்பான விவரங்கள் குறித்து அதிகாரிகளிடம் இருந்து இதுவரை எந்த அதிகாரபூர்வ தகவலும் கிடைக்கவில்லை. முன்னதாக, விமானம் தரையிறங்கிய தபூக் விமான நிலையத்தைச் சொந்தமாக வைத்துள்ள நிறுவனம், கேப்டனும் முதல் அதிகாரியும் காயமடைந்துள்ளதாகத் தெரிவித்திருந்தது.




