தமிழகத்தில் நெருக்கமான ஒருதேர்தல் முடிவே வரும்

நஜீப் பின் கபூர்

நன்றி: 19.04.2026 ஞாயிறு தினக்குரல்

*****

தொங்கு சபை அல்லது சிறுபான்மை ஆட்சிதான் வரலாம்!

அதிமுக-விஜே தவெக.மும் இரட்டைக்குழல் துப்பாக்கிதான்!

தமிழக அரசியல் அறிவை மதிப்பீடு செய்யும் ஒருதேர்தல்!

*****

உள்நாட்டுத் தேர்தலாக இருந்தாலும் உலகில் எங்காவது நடக்கின்ற ஒரு தேர்தலாக இருந்தாலும் கூட அதில் நமக்கு விருப்பு வெறுப்பு என்று ஒன்று வரும். அவர் வென்றால் சிறப்பு. இவர்வென்றால் நல்லது என்பது போல ஒரு உணர்வு.

ஆனால் தமிழகத் தேர்தல், இந்தியத் தேர்தல் என்று வரும் போது நமது பக்கத்து நாடு.தொப்புல் கொடி உறவுகள். நமது நல்லதிலும் கெட்டதிலும் பங்கேற்கும் உறவுகள் என்ற ஒரு நிலை இருந்து வருவது தெரிந்ததே.

இங்கு விடுதலைப் போராட்டம் நடந்து கொண்டிருந்த நாட்களில் தமிழகத்தில் இருக்கும் உறவுகள் அதனை தங்களது சொந்தப் போராக கருதி குரல் கொடுத்தார்கள். மகிழ்ந்தார்கள் நொந்தார்கள்.

எனவே இந்தத் தேர்தலில் வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்திலும் ஏன் தெற்கிலும் ஒரு ஆர்வம் இருந்து வருகின்றது என்றுதான் நாம் நம்புகின்றோம். அதனால்தான் இந்தத் தலைப்பை தெரிவு செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அதன்படி நமது வாசகர்களுக்கு கடந்தவாரம் கொடுத்திருந்த உறுதி மொழிக்கு இசைவாக இந்தவாரம் தமிழகத் தேர்தல் பற்றி பேசுகின்றோம். அதற்கு முன்னர் தமிழகத் தேர்தல் களம் பற்றிய சில அடிப்டைத் தகவல்களைப் பார்ப்போம்.

வாக்காளர்கள் 5.64 கோடி.தெரிவாகும் உறுப்பினர்கள். 234. தேர்தல் மாவட்டங்கள்.38. அதிகூடிய உறுப்பினர்கள் தெரிவாகும் மாவட்டம் சென்னை.எண்ணிக்கை.22.

இந்த தேர்தலில்-2026ல் களத்தில் இருக்கின்ற பிரதான அணிகள்-4. 1.ஸ்டாலின் தலைமையிலான திமுக. கூட்டணி. 2.எடப்பாடி தலைமையிலான அ.திமுக. 3.சீமான் தலைமையலான நாம் தமிழர். 4.அடுத்து நடிகர் விஜே தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம். இது தவிர சில்லறைகள் சுயேட்சை என்றும் டசன் கணக்கான அணிகள்.

Schedule for #TamilNaduElections2026👇 Election in Single Phase 🗓️Date of Poll: 23-04-2026 🗓️Date of Counting: 4-05-2026 #ECI #TamilNaduAssemblyElections #AssemblyElections2026 #PollsWithAkashvani

கடந்த 2021 தேர்தல் முடிவுகளை இப்போது பார்ப்போம். திமுக. கூட்டணி 133 ஆசனங்கள். 57 சதவீத வாக்குகள். அதிமுக. 66 ஆசனங்கள். 28 சதவீத வாக்குகள் காங்கிரஸ். 18 ஆசனங்கள். 7 சதவீத வாக்குகள். பாட்டளி மக்கள் கட்சி 5 ஆசனங்கள். 2சதவீத வாக்குகள். பீஜேபி. 4 ஆசனங்கள் 2 சதவீத வாக்குகள். விடுதலை சிறுத்தைகள் 4 ஆசனங்கள். இதர 4 ஆசனங்கள்.ஆசனங்களே கிடைக்காவிட்டாலும் கடைசியாக நடைபெற்ற தேர்தலில் சீமானின் நாம் தமிழர் 8.5 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தது.

இங்கு நாம் தந்திருக்கின்ற தகவல்கள் அல்லது புள்ளி விபரங்களைப் படிக்கின்ற போது தமிழகத் தேர்தல் தொடர்பான வரைபடத்தை நமது வாசகர்கள் மனதில் போட்டுக் கொண்டு இந்தத் தேர்தல் தொடர்பான ஏனைய விவகாரங்களை நம்முடன் இணைந்து  ஆராயலாம். அதே நேரம் நமது கருத்துக்களுடன் இணங்கவும் முரண்படவும் வாசகர்களுக்கு உள்ள உரிமையை நாம் வழக்கம் போல் மதிக்கின்றோம்.

வாக்களிப்பு ஏப்ரல் 23. அதாவது இன்னும்  மூன்று நாட்கள் மட்டும்தான் எஞ்சி இருக்கின்றது. வாக்கு எண்ணிக்கை மே 4ம் திகதி. இப்போது இந்த கூட்டணி பற்றி ஆராய்வோம்.

Chennai is watching closely 👀🔥 Elections coming… and the BIG question is 👇 Yaaru next lead panna poraanga Tamil Nadu ah? 🤔 Different leaders, different visions… But only ONE will take the

திமுக:தற்போது அதிகாரத்தில் இருப்பது ஸ்டாலின் தலைமையிலான திமுக.வுடன் ராகுல் காந்தியின் காங்கிரஸ், கப்டன்-பிரேமலதா அணி, திருமாவலன் விடுதலை சிறுத்தைகள், ரமதாஸ் பாட்டாளிகள் பிரிவு, இரு கம்யூனிஸ்டுக்கள், வைக்கோதரப்பு, முஸ்லிம் லீக் என்ற பலமான அணிகளும் தலைவர்களும் அங்கு இருக்கின்றார்கள்.

தமக்குத்தான் மீண்டும் வெற்றிவாய்ப்பு என்று திமுக.தரப்பினர் சொல்கின்றார்கள். ஆனால் அந்த கூட்டணிக்குள் எந்தளவுக்கு ஐக்கியம் பேனப்படுகின்றது என்பதில் நிறையவே குழப்பங்கள்.

உதாரணமாக இந்தக் கட்டுரையை எழுதுகின்ற நேரம் வரை ராகுலும் ஸ்டாலினும் ஒரு மேடையில் தோன்றாமையும் விடுதலை சிறுத்தைகளுக்கும் கப்டன் அணியினருக்குமிடையில் பகிரங்கமாகவே ஈகோ பிரச்சனைகள் தொடர்கின்றன.பெரும்பாலான இடங்களில் உதய சூரியன் சின்னத்திலும் சில இடங்களில் கூட்டணிக்கட்சிகளின் சின்னங்களிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றார்கள்.

தற்போது தமிழக அரசியல் தலைமைகள் பற்றி பார்ப்பதாக இருந்தால் ஸ்டாலின் வாரிசு அடிப்படையில் களத்துக்கு வந்தவர். தனக்குப் பின்னர் தனது மகன் உதயநிதிக்குத்தான் திமுக. தலைமை கைமாற வேண்டும் என்ற சிந்தனையில் அந்தக் கட்சியை வழிநடாத்திக் கொண்டு செல்வதாக குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றது.

இதில் நமக்கும் நூறு சதவீத இணக்கபாடு இருக்கின்றது. ஒரு காலத்தில் வைக்கோ. திமுக.வில் செல்வாக்கு மேலோங்கி வருவதைக் கண்ட கருனாநிதி அவரைத் திட்டமிட்டு வெளியேற்றி தனது மகனுக்கு அந்தத் தலைமை கைமாறுவதை ஒரு சதியின் மூலம் சாதித்தார்.

ஆனால் இன்று அந்த வைவே. திரும்பவும் திமுக. அணியில்தான் இருக்கின்றார். திமுக.வில் கருனாநிதி குடும்ப ஆதிக்கம் இன்றும் அங்கு மேலோங்கி இருக்கின்றது. இதற்கு முரண்பட்டு அங்கு எவரும் வாய் திறக்க முடியாத ஒரு நிலைதான் காணப்படுகின்றது என்பதனை சொல்லித்தான் ஆக வேண்டும்.

அதிமுக:அடுத்து எடப்பாடி தலைமையிலான அதிமுக.அணி. இதில் மோடியின் பாரதிய ஜனதா,  ராமதாஸ் மகன் அன்புமணி தலைமையிலான பாட்டாளிகள் மக்கள் கட்சி. தினகரன் தரப்பு என்பன இந்த கூட்டணியில் இருக்கின்றன.

இந்த எடப்பாடி முன்னாள் முதலமைச்சராக அதிகாரத்தில் இருந்தவர். அவரது கட்சியில் இருந்த மற்றுமொரு முன்னாள் அமைச்சர் பன்னீர்ச் செல்வம் இன்று திமுக. அணியில் இணைந்து போட்டியிடுகின்றார்.

எம்.ஜீ.ஆர். ஜெயலலிதாபோன்று செல்வாக்கான தலைவர்களால் வளர்த்தெடுத்த கட்சி என்ற வகையில் இவர்களுக்கும் கனிசமான வாக்காளர்கள் இருக்கின்றார்கள். இவர்களின் சின்னம் இரட்டை இலையாக இருந்தாலும் பல இடங்களில் கூட்டணிக் கட்சி சின்னங்களிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றார்கள்.

கருனாநிதிக்கும் எம்ஜீஆர்.க்குமிடையே ஏற்பட்ட ஆதிக்கப் போட்டிதான் இந்த அண்ணா திராவிடர் முன்னேற்றக் கழகம் தோன்றுவதற்கு அடிப்படையாக அமைந்தது. எம்ஜிஆர்.க்குப் பின்னர் ஜெயலாலிதாவுக்கு அந்தக் கட்சி ஆதிக்கம் சென்றது.

இன்று எம்ஜிஆர்- ஜெயலாலித்தா செல்வாக்குத்தான் அங்கு ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. இந்தக் கட்சியில் திமுக. வைப்போல குடும்ப ஆதிக்கம் இருப்பதாக சொல்ல முடியாது.

இந்தக் கட்சி கொள்கை கோட்பாடுகள் திமுக. கொள்கையின் அடிப்படை. கருனாநிதி-எம்ஜிஆர். பலப்பரீட்சைதான் அதிமுக. கட்சி தோன்றக் காரணமாக அமைந்தது. இவை இரண்டும்தான் தமிழகத்தில் இருக்கின்ற பலமான சம்பிரதாய அரசியல் கட்சிகள். ஒரு சமயம் திமுக-அதிமுக அரசியல் பற்றி எம்ஜீஆர் பேசும் போது அதிமுகவும் திமுகவும் இரட்டைக் குழல் துப்பாக்கி  என்று சொல்லி இருந்தார்.

நாம் தமிழர்:அடுத்து சீமான் தலைமையிலான அணி. இது சிந்தனை ரீதியில் மாற்றுக் கருத்துக்களைக் கொண்ட ஒரு கட்சி. தமது வேட்பாளர்களில் 117 பெண் வேட்பாளர்களையும் 117 ஆண்வேட்பாளர்களையும் இவர்கள் களத்தில் இறக்கி இருக்கின்றார்கள்.

இவர்களை ஏறக்குறைய இங்குள்ள அனுர தலைமையிலான ஜேவிபியுடன் ஓரளவுக்கு ஒப்பு நோக்க முடியும். இந்த அணியில் எந்த கூட்டணிகளும் கிடையாது. கடைசியாக நடைபெற்ற தேர்தலில் இவர்களுக்கு 8.5 சதவீத வாக்குகள் கிடைத்திருக்கின்றது.

இது இவர்களைப் பொறுத்தவரை நல்ல முன்னேற்றமாக எடுத்துக் கொள்ள முடியும்.தமிழகத்தில் இன்று இருக்கின்ற கவர்ச்சிகரமானதும் சிந்தனை ரீதியிலான பேச்சாளராகவும் நாம் சீமானைத்தான் அடையாளப்படுத்த முடியும்.

சீமான் தமிழகத்துக்கான ஒரு விடுதலைப் போராட்டத்துக்காகத்தான் அங்கு தனது அணியை  வழி நடாத்தி வருகின்றார். இவர்களின் சின்னம் விவசாயி. இவர்கள் பெறுகின்ற வாக்குகள் கூட தொகுதிகளின் வெற்றி வேட்பாளர்களை மாற்றி விடலாம்.

தவெ.கழகம்:இப்போது நடிகர் விஜே தலைமையிலான தமிழக வெற்றிக்கழகத்தை குறிப்பிட வேண்டும். இந்தக் கட்சிக்கு கொள்கை கோட்பாடுகள் சிந்தனை என்று ஏதும் இருப்பதாக நமக்குத் தெரியவில்லை. அங்கு விஜே ரசிகர்களின் ஆதிக்கம்தான் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கின்றது.

சம்பிரதாய அரசியல்வாதிகளும் அரசியல் விமர்சகர்களும் இந்த அணியை தரக்குறைவாக தற்குறிகள் என்றுதான் விமர்சித்து வருகின்றார்கள். ஆனாலும் இவர்கள் தேர்தலில் கனிசமான ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்று நாம் நம்புகின்றோம். அவர்கள் விசில் சின்னத்தில்; நிற்கின்றார்கள்.

பொதுவாகப் பார்க்கின்ற போது மோடியின் பாரதிய ஜனதா பிடியில் சிக்காத ஒரு மாநிலமாக இதுவரை தமிழகம் தன்னைப் பாதுகாத்து வந்திருக்கின்றது. அண்ணா காமராஜர்ஈவேரா பெரியார் என்போரின் தாக்கம் தமிழக அரசியலில் காணப்படுகின்றது. இன்று கருனாநிதி எம்ஜீஆர். என்போரின் செல்வாக்கும் தமிழக அரசியலில் காணப்படுகின்றது.

காங்கிரஸ் செல்வாக்கு சரிந்த பின்னர் திராவிட கட்சிகள்தான் தமிழகத்தில் மேலாதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கின்றன. சீமானின் நாம் தமிழர் கட்சியும் விஜேயின் தமிழக வெற்றிக் கழகமும் திராவிடபின்புலத்திலான கட்சிகள்தான்.

தேர்தல் என்றால் சமகாலத்தில் கருத்துக் கணிப்புக்கள் ஆயிரமாயிரம் வந்து கொண்டிருக்கின்றன. முன்பு ஒரு சில தொலைக் காட்சிகளும் பத்திரிகைகளும்தான் இவற்றை செய்து கொண்டிருந்தன. ஆனால் இன்று கையடக்கத் தொலைபேசி வைத்திருப்போர் கூட கருத்துக் கணிப்புக்களை வெளியிட்டுக் கொண்டிருப்பதால் இது தரம் கெட்டு நம்பகத் தன்மையற்றவையாக மாறி இருக்கின்றன.

என்றாலும் சில ஊடகங்களின் மீது இன்றும் ஓரளவுக்கு சின்ன நம்பிக்கை இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் சில ஊடகங்களை கட்சிகள் விலைக்கு வாங்கி அவர்கள் விருப்பு வெறுப்புக்களைத்தான் அதில் சொல்லிக் கொண்டிருக்கும் தன்மையும் காணப்படுகின்றன.

ஆனாலும் கருத்துக் கணிப்புக்கள் பல சந்தர்ப்பங்களில் தப்பாகவும் அமைந்திருக்கின்றன என்பதும் நாம் அறிவோம்.

இதற்கு அப்பால் இந்தத் தேர்தலில் இன குல ரீதியான ஆதிக்கம்-சிந்தனைகள் காணப்படுகின்றன. மத ரீதியில் தமிழக வாக்காளர்களில் இந்துக்கள் 87.சதவீதம் கிருஸ்தவர் 6.12. முஸ்லிம்கள் 5.86. தலித் மக்களின் எண்ணிக்கையும் தேர்தலில் பெரும் தாக்கத்தை செலுத்தும்.

இவர்கள் கிருஸ்தவ முஸ்லிம்களின் எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு.  கரூரில் விஜே கூட்டத்துக்கு வந்து மரணித்த 41 பேரில் 37 பேர் தலித்இன மக்கள் என்றும் ஒரு கணக்கு இருக்கின்றது. இது கூட அந்த இனத்தில் வாக்குகள் பற்றிய ஒரு சமிக்ஞை என்றுதான் பார்க்க வேண்டும்.

வாக்காளர் எண்ணிக்கை இப்படி இருக்க தமிழக தேர்தல் வரலாறுபூராவிலும் சினிமா ஆதிக்கம் அன்றும் இன்றும் செல்வாக்கு செலுத்திக் கொண்டிருக்கின்றது. இது உலக அரசியலில் நாம் பார்க்க முடியாத அசாதாரண நிலை. தமிழகத் தேர்தல் வரலாற்றில் ஒரு கிறிஸ்தவருக்கு இந்தளவுக்கு மக்கள் செல்வாக்கு கிடைத்திருப்பது இது முதல் முறை.

இதற்கு முன்னர் பீட்டர் அல்பொன்சு என்ற ஒரு செல்வாக்கான அரசியல்வாதி இருந்தார். அவர் கூட இப்படி கட்சி அமைத்து  ஒரு தாக்கத்தை செலுத்த முடியாது போனது. நாம் இங்கு விஜேயின் செல்வாக்கைப்பற்றித்தான் பேசுகின்றோம். அவர் ஒரு கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்தவர்.

விஜேக்கான ஆதரவு என்பது ரசிகர்களின் ஆதிக்கம்தான் அங்கு கொடிகட்டிப் பறக்கின்றது. அதில் அரசியல் உணர்வுகள் செயல்பாடுகள் ஏதும் இருப்பதாக நாம் காணவில்லை.

மேலும் விஜே ஒரு அரசியல் தலைவரோ பேச்சாளரோ சிந்தனையாளரோ கிடையாது. ஒரு மூன்றாம் தரத்தில் கல்வி கற்கின்ற சிறுகுழந்தை பாணியில்தான் அவரது அரசியல் பேச்சுக்கள் காணப்படுகின்றன. அந்தக் கட்சியில் அரசியல் கொள்கைகளோ சிந்தனைகளோ கிடையாது.

அங்கு ரசிகர்கள் கூட்டம்-அட்டகாசம்தான்.நாம் இப்படி கடுமையான வார்த்தைகளில் சொல்வதற்காக அவருக்கு களத்தில் இருக்கும் செல்வாக்கை தரக்குறைவாக மதிப்பீடு செய்ய வரவில்லை. விஜே வரவு அதிமுகவுக்கு அதிக சேதாரத்தை உண்டு பண்ணக்கூடும். இது திமுகாவுக்கு ஓரளவுக்கு வாய்ப்பாக அமையலாம். ஆனாலும் திமுக.விலும் விஜே ரசிகர் ஆதிக்கம் இருக்கத்தான் செய்கின்றது.

இந்தத் தேர்தலில் விஜேயின் த.வெ.கழகம் அனைத்துத் தேர்தல் தொகுதிகளின் தலைவிதியை தீர்மானிக்கும் என்று நாம் உறுதியாக நம்புகின்றோம். இதனால் தமிழகத்தில் தொங்கு சட்டமன்றம் அல்லது சிறுபான்மை அரசுதான் அதிகாரத்துக்கு வரக் கூடும்.  தொங்கு ஆட்சி என்பது கூட்டாட்சி.

சிறுபான்மை ஆட்சி என்று நாம் இங்கு குறிப்பிடுவது வாக்குகள் மூன்று நான்கு தரப்புக்குப் பிரியும் போது வரும் பெரும்பான்மை வெற்றிகள். இங்கு ஆள்பவர்கள் சிறுபான்மை வாக்குகளைப் பெற எதிரணிக்கு பெரும்பான்மை மக்களின் ஆதரவு நிலை.

இதனை இன்னும் விளக்கமாக சுட்டிக் காட்டுவதாக இருந்தால் மொத்த வாக்காளர் -100 என்று வைத்துக் கொள்வோம்.  A-40. B-33. C20. D-5. இதர-2. என்று வாக்குகள் பிரியும் போது -40 வாக்குகளைப் பெற்றவர் வெற்றியாளராக வர 60 வாக்குகளைப் பெற்றவர்கள் தோற்றுப் போய் அமைக்கின்ற அரசைத்தான் நாம் இங்கு சொல்ல வருகின்றோம்.

இப்படியான ஒரு போட்டி நிலைதான் இந்த முறை தமிழகத்தில் அனைத்துத் தொகுதிகளிலும் காணப்படுகின்றது. களத்தில் அதிரடி காட்டுக்கின்ற நடிகர் விஜே தனக்கும் திமுக.வுக்கும்தான் போட்டி என்று பகிரங்கமாகவே கூறிவருகின்றார்.

ஆனால் எடப்பாடி தலைமையிலான அதிமுக.வும் கனிசமான வாக்குகளைப் பெறும். சீமானின் நாம் தமிழர் எடுக்கின்ற வாக்குகள் கூட தேர்தல் தொகுதிகளின் தலைவிதியை தலைகீழாக மாற்றிவிடுகின்ற ஒரு ஆபத்தும் இருந்து வருகின்றது.

இதற்கு அப்பால் இந்தத் தேர்தலில் சொல்லப்படுகின்ற குற்றச்சாட்டுக்களில் அதிமுக. வும் விஜே அணியும் எம்ஜீஆர். சொன்னது போலஇரட்டைக்குழல் துப்பாக்கிதான். இதனால்தான் விஜே வேட்பாளர் எடப்பாடிக்கு விட்டுக் கொடுத்து தப்பாகக் கையளித்து அங்கிருந்து தலைமறைவானார் என்றும் விமர்சனங்கள்.

அதிமுக. கூட்டணியில் பிஜேபி. இருப்பதால் முஸ்லிம்கள் அங்கு நிராகரிக்கப்பட்டிருக்கின்றார்கள். அங்கு ஒரே ஒரு முஸ்லிம் வேட்பாளர் மட்டும்தான் நிறுத்தப்பட்டிருக்கின்றார். திமுக. விஜே மற்றும் நாம் தமிழர் தரப்பில் டசன் கணக்கான முஸ்லிம் வேட்பாளர்கள் இருக்கின்றார்கள்.

இதனால் முஸ்லிம் வாக்குகளில் 85% சதவீதமானவை  திமுக.வுக்குத்தான். அதே போன்று கிருஸ்தவ சமூகத்தின் 65% சதவீதமான வாக்குகள் விஜேக்கே என்பது நமது கணிப்பாக இருக்கின்றது. இந்தத் தேர்தலானது தமிழக மக்களின் அரசியல் அறிவை மதிப்பீடு செய்கின்ற ஒரு தேர்தலாகத்தான் அமையும் என்று நாம் நம்புகின்றோம். தேர்தலில் டீஜிடல் செல்வாக்கும் குறிப்பிடத்தக் அளவு செல்வாக்குச் செலுத்தலாம்.

Previous Story

පාස්කු ප්‍රහාරයට වසර 7 කට දින 4ක් තිබියදී රොහාන් සිල්වා පියතුමා හෙළිකලදේ.

Next Story

சர்வதேச தரமான நூலாம்!