சட்டம் யாவருக்கும் சமம் கதை நிஜமா!

-நஜீப் பின் கபூர்-

நன்றி:08.02.2026 ஞாயிறு தினக்குரல்

இந்த பிரபஞ்சத்தைப் படைத்தவன் என்று ஒருவன் இருக்க வேண்டும் என்பதற்கு சக்தி வாய்ந்த சான்றுகளில் ஒன்றுதான் உலகத்தில் நடக்கின்ற அக்கிரமங்கள் அசாதாரணங்கள் என்று நாம் நம்புகின்றோம். இது என்ன தத்துவம் என்று சிலர் சிந்திக்கக் கூடும். இந்த உலகத்தில் இனம் மதம் கோத்திரங்கள் என்ற வேறுபாடுகள் இருப்பதை எவரும் மறுக்க முடியாது.

அதே போன்று வெள்ளையன் கறுப்பன் ஏழைகள் செல்வந்தர்கள் உயர் சாதி தீண்டப்படாதவன் மற்றும் அதிகார வார்க்கம் பிரபுக்கள் ஆண்டான் அடிமை கூலித் தொழிலாளிகள் ஜமிந்தார்கள் என இன்னோரன்ன ஏற்றத்தாழ்வுகள் இன்றும் மனித சமூகத்தில் இருந்து வருகின்றன.

அதே போன்று ஆண் பெண் ஆரணிகள் என்றும் இங்கு பால் வேறுபாடுகள். இதனால் பிறப்பிலே வேறுபாடுகளும் முரண்பாடுகளும் தோன்றி விடுகின்றன. உலக இயக்கத்துக்கு இந்த முரண்பாடுகளும் பிளவுகளும் தவிர்க்க முடியாது என்ற ஒரு தர்க்கமும் அதற்கு முரணான கருத்துக்களும் இருந்து வருகின்றன.

நாம் மேற்சொல்லி இருக்கின்ற கருத்துக்களினால் எவரும் குழம்பிக் கொள்ள வேண்டியதில்லை. சுருக்கமாக பிறப்பிலிருந்தே பிளவுகளும் ஏற்றத்தாழ்வுகளும் ஏதோ காரணங்களினால் ஆரம்பமாகி விடுகின்றன என்பதனை மனதில் வைத்துக் கொண்டால் போதுமானது. ஆனால் என்ன தர்க்கங்கள் நியாயங்கள் சொன்னாலும் இந்த முரண்பாடுகளை நியாயப்படுத்த முடியாது.

Iran's Nuclear Disarmament

எனவே இதற்கொரு நியாயம் நீதி வேண்டும் என்ற இடத்திலிருந்து பார்க்கும் போது நாம் ஆரம்பத்தில் சொல்லி இருக்கின்ற இறைவன் அல்லது கடவுள்தான் அதற்கு இம்மையிலோ மறுமையிலோ பதில் சொல்ல வேண்டும். அத்துடன் நாம் குறிப்பிட்டிருக்கின்ற இந்த ஏற்றத்தாழ்வுகளும் முரண்பாடுகளும் உலகம் இருக்கும் வரை தொடரத்தான் செய்யும். அதற்கு கடவுள்கூட பதில் தரமாட்டார் என்பதுதான் நமது தர்க்கமாக இருக்கின்றது. இந்த இடத்தில்தான் மறுமை என்ற ஒன்று இருக்க வேண்டும். அதுதான் நிரந்தரம் அங்காவது நியாயம் கிடைக்கும் என்றவாதமும் நம்பிக்கைகளும் வலுவடைகின்றது.

இப்போது நாம் பார்த்த கேட்ட நிகழ்வுகளை வைத்து சட்டம் அனைவருக்கும் சமமானது என்ற வார்த்தை அல்லது ஜனநாயக தத்துவங்கள்  பற்றிப் பார்ப்போம். இங்கு ஒரு குழந்தைக்கு உரிமை பாராட்டிய இரு தாய்மார்கள். அதற்கு மன்னன் செலமான் தந்த தீர்ப்பு. மன்னன் மகன் ஓட்டி வந்த தேருக்குப் பலியான கன்றுக் குட்டியின் தாய் பசுவுக்கு சோழ மன்னன் கொடுத்த நீதி-தண்டனை என்பன வரலாறு போற்றும் கதைகளாக இன்றுவரை பேசப்பட்டு வருகின்றன. ஆனால் ஜனநாயக உலகத்துக்குத் தலைமை தாங்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் செயல்பாடுகள்-வார்த்தைகளை ஒரு முறை சற்றுப்பார்ப்போம்.

நான் வெனிசுலா அதிபரை சிறைப்பிடித்ததும் கனடாவை எம்முடன் இணையுமாறு கேட்பதும் கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைய வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதும் அமெரிக்க மக்களின் நலன்களுக்குத்தானே.! எனவே அமெரிக்கர்கள் என்னை ஆதரித்துத்தானே ஆக வேண்டும் என்ற அவரது வாதமும் அவர் ஜனநாயக அல்லது மேற்கு நாடுகளுக்குத் தலைமைத்துவம் கொடுப்பதை வைத்துப்பார்க்கும் போது அங்கு ஒரு நாட்டின் நலனுக்குத் தேவைகளுக்காக ஏனையோரை அடிமைப்படுத்தலாம் சூரையாடலாம் என்பதiனைத்தானே தெளிவுபடுத்தி வருகின்றது.

இது என்ன நாகரீகம். இந்த நவீன உலகிலும் இப்படி ஒரு அடாவடித்தனமா? மேலும் இதற்கு ட்ரம்ப் சட்டரீதியான அங்கிகாரமும் அதற்கான வாதங்களை முன்வைப்பதையும் என்னவென்று சொல்வது.?

Ben Jennings on the Palestinians killed while waiting for aid – cartoon | Ben Jennings | The Guardian

பாலஸ்தீனத்தில் இலட்சக் கணக்கான அப்பாவிகள் படுகொலைகளை ஏற்றுக் கொள்ளும் இதே அமெரிக்கா ஈரான் அரசுக்கு எதிரான சதி வேலைகளில் ஈடுபட்டார்கள் என்று கைதான தனது சிஐஏ-மொசாட் உளவாளிகளை தண்டிக்கக் கூடாது என்று ட்ரம்ப் ஈரானைக் கேட்பதும் என்றவாதம் எந்தவகையில் ஏற்புடையது.?

சமகால உலகத்தில் விரும்பியோ விரும்பாமலோ இன்றுவரை அமெரிக்கா பொலிஸ்காரன் பாத்திரத்தில்தான் செயலாற்றிக் கொண்டு வருகின்றது. அந்த அட்டகாசங்களுக்கு மத்தியில் உலக சமாதானத்தை காக்கின்ற ஐநா. வெறும் வெங்காயம் என்ற நிலையில்தான் பணியாற்றி வருகின்றது.

அமெரிக்க-ட்ரம்ப் அடாவடித்தனங்கள் முன்னே இன்று ஐ.நா ஒரு பார்வையாளர் மட்டுமே. ஒட்டுமொத்த உலக நாடுகளும் இப்படி அடிமைகளாக இருக்கின்றது. நாடுகள் என்று வரும் போது அங்கு மன்னர்கள் இராணுவ ஆட்சியாளர்கள் கொள்கை தத்துவ ரீதியாலான அரசுகள் பரம்பரை வாரிசுகள் என்ற ஆட்சிகள்தான் இன்று நாடுகளில் காணப்படுகின்றன. அந்த வகையில் நமது நாட்டில் சட்டம் அனைவருக்கும் சமம் என்ற கருத்து என்ன நிலையில் இருக்கின்றது என்பதனை இப்போது பார்ப்போம்.

பொதுவாகப் பார்க்கின்ற போது நாம் மேற்சொன்ன அனைத்து முரண்பாடுகளும் இங்கும் இருக்கின்றன. அதனால்தான் இன ரீதியிலான சிந்தனைகள் கருத்து முரண்பாடுகள். யார் எற்றுக் கொண்டாலும் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் அரசியலிலும் அதற்கு வெளியிலும் இன ரீதியிலான பாகுபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன அதற்கு ஆயிரமாயிரம் கதைகள் சொல்ல முடியும்.

Ben Jennings on the latest UN report on Gaza – cartoon | Ben Jennings | The Guardian

அரசியல் யாப்பு என்ன தத்துவங்களைச் சொல்லி இருந்தாலும் அது சொல்கின்ற சமம் என்ற கருத்தில் கோணல்களும் கீறல்களும் நிறையவே காணப்படுகின்றன.  இன ரீதியான ஏற்றத்தாழ்வுகள் மட்டுமல்ல மொழி ரீதியிலான பாகுபாடுகளும் இங்கு இருக்கின்றன. அவற்றின் அளவு பெருமானங்களிலும் வித்தியாசங்கள் காணப்படுகின்றன.

ஒரு இனத்துக்குள்ளேயும் குல ரீதியான ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றன. விஜேவீர பிரபாகரனது போராட்டங்களும் பல ஆயிரம்பேர் இதற்கு தமது உயிர்களைத் தியாகம் செய்ததும் இந்த ஏற்றத்தாழ்வுகளுக்கு நல்ல ஆதாரங்களாகும். பணம் சொத்துக்கள் என்பன கூட அனைவரும் சமம் என்ற கோட்பாடுகளைத் தகர்க்கின்ற மற்றுமொரு சக்தி.

அதிகாரத்தில் இருக்கின்றவர்கள் செய்கின்ற குற்றங்களை சட்டம் கண்டு கொள்ளாமல் இருந்து வந்திருக்கின்றன. அது நாம் அனைவரும் அறிந்ததே. இதனால் அரசியல்வாதிகள் தொடர்பில் குடிமக்களிடம் கடுமையான கோபம் இருந்து வந்தது. இதனை சரி செய்வோம் குற்றவாளிகளைத் தண்டிப்போம் சட்டம்-நீதி அனைவருக்கும் ஒன்று.

அதனை நாம் அமுல்படுத்திக் காட்டுவோம் என்றெல்லாம் தற்போதய ஆட்சியாளர்கள் கொடுத்த வாக்குறுதிகள் மீது மக்களுக்கு ஒரு நம்பிக்கை ஏற்பட்டது. அதனால்தான் அவர்கள் இன்று என்பிபி.யை அதிகாரத்துக்குக் கொண்டு வந்தார்கள். ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த அனுரகுமாரவையும் ஜனாதிபதிக் கதிரையில் கொண்டு வந்து அமர்த்தினார்கள்.

ஒரு குற்றத்தை பணப் பலம் உள்ள ஒருவன் செய்கின்ற போதும் அதே குற்றத்தை ஒரு ஏழை அப்பாவி செய்கின்ற போதும் பொலிஸ் சட்டம் நீதி அதனை அனுகுகின்ற ஒழுங்கிலும் நடைமுறையிலும் கனிசமான வேறுபாடுகள்-பக்கச்சார்புகள் காணப்படுகின்றன. பணத்தின் முன் அங்கு நீதி நெகிழ்கின்றது வளைகின்றது அல்லது தகர்ந்தே விடுகின்றது. இதில் என்னென்ன அடாவடித்தனங்கள் நடக்கின்றன என்பதற்கு ஒரு சில உதாரணங்களை இப்போது பார்ப்போம்.

President stands on his head and cracks joke | The Sundaytimes Sri Lanka

சுதுவெல்ல வங்கிக் கணக்கில் முன்னாள் ஜனாதிபதி மனைவி சிரந்தி ராஜபக்ஸ சிரிலிய வங்கிக் கணக்கை திறந்து கோடிக்கணக்கில் கொடுக்கல்வாங்கல் செய்கின்ற போது பாவித்த வங்கிக் கணக்கு 222222222வீ மற்றும் 111111111வீ என்ற ஆள் அடையாள அட்டை இலக்கத்தை சமர்ப்பித்திருந்தனர். அதனை வங்கி அதிகாரிகள் எப்படி ஏற்றுக் கொண்டு எப்படி இந்தக் கோடிக் கணக்கில் கொடுக்கல் வாங்கள் செய்ய முடிந்தது.

இப்போது அது தொடர்பான சிஐடி விசாரணைகள்-சட்ட நடவடிக்கைகள் என்று வரும் போது வங்கி ஆவனங்களும் காணமல் போய் இருப்பதாக சொல்லப்படுவதும் மேலும் இந்தத் தவறு தன்னுடையதல்ல அது வங்கி விட்ட தவறு என்று சிரந்தி கருத்துச் சொல்லி இருப்பதான தகவல்கள் எல்லாமே இது திட்டமிட்ட முன்னாள் ஆட்சியாளர்கள் ராஜபக்களின் பகல் கொள்ளை.

வேடிக்கை என்னவென்றால் தற்போதய அரசு விசாரணைகள் என  நடவடிக்கை எடுக்கும் போது இந்த பகற் கொள்ளையர்களுக்காக கூக்குரல் போட சில நூறுபேர் வந்து அவர்கள் எழுப்புகின்ற கோசங்களை நாம் பார்க்க முடிந்தது. வந்திருந்தவர்களிடம் ஏன் இங்குகூடி இருக்கின்றீர்கள் என்று கேட்டால் மொட்டு அமைப்பாளர் வருமாறு கேட்டார். வருவதற்கு வாகனங்களும் வந்தது இதனால்தான் நாம் வந்தோம் என்று பலர் அங்கு வாக்குமூலம் கொடுத்திருந்தனர்.

அதே நேரம் இதே மோசடியை ஒரு பாமரன் செய்திருந்தால் அவரை விட்டு வைப்பார்களா. விமல் வீரவன்ச அரவரது மனைவி ஆகியோரின் போலி கடவுச் சீட்டு ஆள் அடைளாள அட்டைகள் பற்றி செய்திகளையும் நாம் இதற்கு முன்பும் சொல்லி இருந்தோம். எனவே சட்டம் அனைவருக்கும் சமமா?

இது போன்று ராஜபக்ஸ காலத்திலும் முன்னைய ஆட்சியாளர்கள் காலங்களிலும் நடந்த பலநூறு மோசடிகளை கொள்ளைகள் பற்றி தகவல்களை இப்போது மக்கள் அறிந்து வைத்திருக்கின்றார்கள். இவர்களுக்கு நீதி விசாரணை என்று வரும் போது காசுக்கு ஆட்களை அழைத்து வந்து கோசம் போடுகின்றார்கள். அவை பற்றிய ஆவணங்கள் கூட காணாமல் போய்விடுகின்றன அல்லது அழிக்கப்பட்டிருக்கின்றன.

அபூர்வமாக இப்படியான குற்றவாளிகளுக்கு தண்டணை என்று வந்தாலும் கூட சிறைச்சாலைகளில் என்ன நடக்கின்றன. அங்கு விஐபிக்களுக்கு விசேட ஒழுங்குகளும் சலுகைகளும் வசதி வாய்ப்புக்களும் கிடைக்கின்றன. லசந்த எகனலிகொட தாஜூதீன் படுகொலைகளும் அதற்கான விசாரணைகளையும் ஒருமுறை பாருங்கள் இவை அனைத்தும் அரசியல் தேவைகளுக்காக நடந்திருக்கின்றன என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல இருந்தாலும் அவற்றை மூடிமறைக்க பொலிஸ் சட்டம் நீதி மன்றம் வைத்தியர்கள் என்போர் கொடுத்த போலியான தகவல்களினால் விசாரணைகள் குழப்பியடிக்கபட்டிக்கின்றன.

ராஜபக்ஸ காலத்தில் அந்த விசாரணைகள் ஒரு விதமாகவும் இப்போது மற்றொருவிதமாகவும் அமைய என்ன காரணம்.? கொலைகாரர்களும் பகற்கொள்ளையர்களும் தான் எதோ விடுதலை போராட்டத் தலைவர்கள் போல புடைசூல வந்து விசாரணைகளுக்கு ஆஜராகி அதிரடி காட்டி வருகின்றார்கள்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் கைதின் போது அவருக்கு வழங்கப்பட்ட சலுகைகள் வைத்தியர்கள் அவருக்கு வழங்கி இருந்த வைத்திய சான்றுகள் எல்லாம் பெரும் நாடகங்கள் வேடிக்கைகளாக அமைந்திருந்ததை முழு நாடும் பார்த்தது. சட்டம் அனைவருக்கும் சமம் என்பது நிஜமாக இருந்தால் இவை எல்லாம் எப்படி நடந்திருக்க முடியும். இது போன்ற குற்றங்களுக்கான ஆவனங்கள் அரசாங்க நிறுவனங்களில் இருந்து காணாமல் போவது எப்படி.?

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான சம்பவங்களை ஒரு முறை நினைத்ப் பாருங்கள். இந்த நாட்டில் இருக்கின்ற முஸ்லிம் சமூகத்தினருக்கு அப்பாவி கிருஸ்துவ சமூகத்தினர் மீது வெறித்தனமான தாக்குதல்களை நடாத்துவதற்கு என்னதான் தேவைகள் இருந்தன. அங்கு மூலைச்சலவை செய்யப்பட்ட சில முஸ்லிம்களும் மேலும் சம்பளத்துக்கு வேலை பார்க்கவும் சிலர் அங்கு இருந்ததும் இப்போது அம்பலமாகி இருக்கின்றது.

லசந்த கொலையுடன் தொடர்புடைய – சம்பந்தப்பட்ட நான்கு சாட்சிகள் இன்று கொலை செய்யப்பட்டது போல ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய பலர் இன்று கொல்லப்பட்டிருக்கின்றார்கள். இதில் பொலிஸ் மற்றும் இராணுவத்தில் கடமையாற்றிய பல முஸ்லிம்களும் முஸ்லிம்கள் அல்லாதவர்களும் இருக்கின்றார்கள்.

இது சாட்சிகளை அழிப்பதற்காக நடக்கின்ற ஆட்சியாளர்களின் ஏற்பாடுகளே. இதிலும் பொலிஸ் மற்றும் அதனோடு சம்பந்தப்பட்டவர்களின் ஒத்துழைப்பு கொலைகாரர்களுக்கு இன்றும் கிடைத்து வருவதாகவும் சொல்லப்படுகின்றது. இது பற்றிய மேலும் சில தகவல்களை பிறிதோர் இடத்தில் நாம் பதிந்திருக்கின்றோம்.

எனவே கொலையுடன் சம்பந்தப்பட்டவர்கள் இன்று அதிகாரத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டிருக்கும் இந்த நேரத்தில் கூட அவர்களுக்கு தில்லுமுல்ல பண்ண வாய்ப்பு இருக்கின்றது என்றால் அவர்களின் பலம் செல்வாக்கு பணப் பலம் எந்தளவுக்கு வலுவாக இருக்க வேண்டும் என்பதனை ஒரு முறை எண்ணிப்பாருங்கள்.

இந்த நாட்டில் பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களைத் தெரிவு செய்வதற்கான ஒரு ஒழுங்குவிதி இருக்கின்றது. அதற்கு மாற்றமாக தனது ஆதரவாலர்களை அங்கு இணைத்துக் கொள்ளுமாறு ஒரு முறை நாமல் ராஜபக்ஸ சிபார்சுக் கடிதம் கொடுத்ததையும் நாம் பார்த்தோம். இது போன்று சிறிதும் பெரிதுமான  விதிமுறைகளை சட்டத்தை மீறிய சம்பவங்கள் ஆயிரமல்ல மில்லியன்கணக்கில் நாட்டில்  நடந்திருக்கின்றன. இன்றும் நடந்து கொண்டுதான் வருகின்றன.

இந்தளவு அட்டகாசங்கள் நடக்கின்ற உலகத்தில் அதற்கு ஏதாவது ஒரு இடத்தில் நியாயம் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக இருந்தால் மனிதன் கடவுளிடத்தில்தான் தஞ்சம் அடைய வேண்டும். வேறு மாற்றுவழிகள் கிடையாது. கடவுள் காப்பார் நியாயம் தருவார் என்ற எதிர்பார்ப்புடன் பாதிக்கப்படுகின்றவன் தனது உயிரையும் உணர்வுகளையும் ஒருநாள் நிறைவு செய்கின்றான்.

Previous Story

ගෝඨාගේ අපහාස නඩුවට කට කනේ තියාගෙන සුදානම් වූ ලසන්ත | මරණයට පෙර ලද අවසන් ඇමතුම

Next Story

ඇමරිකාවේ එකම ප්‍රශ්නය ඉරානය තමන්ට ගරු නොකිරීම බව කියවෙයි !