நஜீப் பின் கபூர்
நன்றி:26.07.2026 ஞாயிறு தினக்குரல்

*****
“அரசை ஏமாற்றிப்பிழைக்க போட்ட வியூகமா
அல்லது தம்முடைய பின்னடைவை சரி செய்ய
இவர்கள் மேற்கொள்கின்ற இராஜதந்திர நகர்வா
இந்தக் கூட்டணி என்றும் சந்தேகம்”
*****
சமகாலத்தில் அரசியல் கூட்டணிகள்அமைவது பற்றியும் அதன் உள்நோக்கங்கள்-எதிர்பார்ப்புக்கள் பற்றியும்நாம் தொடர்ந்து பேசி வருகின்றோம். அதனை நமது வாசகர்களும் அறிவார்கள்.பொதுவாக நாட்டில் ஒரு அமைதியான அரசியல் சூழ்நிலைதான் இன்றுகாணப்படுகின்றது. ஆனாலும் இந்த நாட்களில் குற்றச் செயல்களில் சம்பந்தப்பட்டவர்கள் தம்மை தண்டனைகளில் இருந்து காப்பாற்றிக் கொள்ளும் ஒரு கடும் முயற்சியில் இருக்கின்றார்கள். நீதிபதிகளின் பதவிக்காலத்தை நீடிப்பது தொடர்பாக எதிர்க்கட்சிகள் தமது கடுமையான விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றன.
இதில் முனைப்புடன் செயலாற்றுபவர்கள் யாரென்றுபார்த்தால் நாம் மேற்சொன்ன அந்தக் குற்றக் கும்பல்கள்தான் பின்னணியில்காணப்படுகின்றனர்.மேலும் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் மூலம்அரசை வீழ்த்த ஒரு முயற்சியும் நடந்து வருகின்றது. இனவாதத்தைக் கிளரி நாட்டில் அமைதி இன்மையை ஏற்படுத்துவதற்கும் அதே குழு மீண்டும்முயற்சித்து வருகின்றது.இந்த நிகழ்ச்சி நிரலுக்குப் பிரதான எதிர்க் கட்சியும் இப்போது ஆதரவு வழங்கி வருவது புரிந்து கொள்ள முடியாதிருக்கின்றது.
வருகின்ற சின்னச்சின்ன விடயங்களுக்கு முடிச்சுப்போட்டுஅவற்றை ஒன்றாக இணைத்து அரசியலாக்கி ஆளும் என்பிபி அரசுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்துகின்ற ஒரு முயற்சியும் இன்று தொடர்ச்சியாக நடந்து வருகின்றது. இந்தப் பின்னணியில் நாட்டில் பல அரசியல் கூட்டணிகள் காளான்கள்போல தோன்றி வருகின்றன.இவற்றுக்கு ஏதாவது கொள்கை கோட்பாடுகள் இருக்கின்றதா என்று பார்த்தால் அரவே கிடையாது. எதிரும் புதிருமானவர்கள் ஒரு வைராக்கியத்தில் அரசுக்கு எதிரான கூட்டணியாக இணைந்து வருகின்றார்கள். இந்த நிலையில் சிறுபான்மைக் கட்சிகள் அல்லது தமிழ் பேசும் கட்சிகளும் தமக்குள் ஒரு கூட்டணியை உருவாக்கி இருப்பதான கதைகளையும் காட்சிகளையும் நாம்பார்த்து வருகின்றோம்.
இதுவரை காலமும் சிறுபான்மை சமூகங்களின் ஆதரவைப் பெற்ற அதிகாரத்துக்கு வந்த ஐதேகவும் தற்போது பிரதான எதிரணியாக இருக்கின்ற சஜித்தின் ஐம.சக்தியும் இப்போது சிறுபான்மை சமூகங்களைக் கண்டு கொள்ளாமல் பேரின மக்களின் உணர்வுகளைக் கிளரி ஆட்சியைப் பிடிக்கின்ற ஒரு நிகழ்சி நிரலும் இன்று நடந்து வருகின்றன. எனவேதான் சஜித் ரணில் நாமல் போன்ற அரசியல் துருவங்களும் இன்று ஒன்றாகஇணைந்து பேசி வருகின்றார்கள்.

பலமான என்பிபி அரசுக்கு எதிராக எதிரணிகள் ஒன்றிணைவதை தவறு என்று சொல்ல முடியாது. ஆனால் அதில் இனவாதமும் வன்முறைகளும் சட்டத்தையும் நீதியையும் அவமதிக்கின்ற அல்லது கண்டு கொள்ளக் கூடாது குற்றவாளிகளைக் கேள்வி கேட்காதே என்ற கோசம் வருவது மிகவும் ஆபத்தான ஒன்றாகவே நமக்குத் தெரிகின்றது. ஊழல் பேர்வளிகள்இ பொது மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்கள் தமது அரசியல் தேவைகளுக்காக தனி நபர்களையும் கூட்டாகவும் படுகொலைகளை செய்தவர்களுக்கு எதிராக பேசி வந்த சஜித் ரணில் போன்ற அரசியல் தலைமைகள் இதே குற்றக் கும்பலை மீட்பதற்கான முயற்சிகளில் இறங்கி இருக்கின்றார்கள். அந்த வகையில் இன்று எதிரணிகள் அனைத்தும் ஓரணியில் இணைந்து வருவதையும் அவதானிக்க முடிகின்றது
இதற்கு மத்தியில் பௌத்த தேரர்கள் தெளிவாக அரசுக்கு ஆதரவான குழு அரசுக்கு எதிரான அணி என்று பிளவுபட்டு விமர்சனங்களை நடாத்திக் கொண்டு வருகின்றனர். இந்த அரசுக்கு எதிரான பௌத்த தேரர்கள் கூட்டங்களுக்கு சஜித் ரணில் நாமல் திலித் தயாசிரி விமல் கம்மன்பில போன்ற அரசியல்வாதிகளின் அனுசரனை-ஆதரவு இருப்பதையும் அங்கு இனவாதிகளான ஞானார சுமங்கள போன்ற கடும் போக்கு பௌத்த தேரர்கள் அதன் அமைப்பாளர்களாக இருந்து செயல்பட்டு வருகின்றனர்.
இது பற்றி எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவான சிறுபான்மைத் தலைமைகள் தமது கூட்டணித் தலைமைகளிடத்தில் கேள்விகளை எழுப்பினார்களா என்று தேடிப் பார்த்தால் அப்படியான எந்த செய்திகளையும் நாம் இதுவரை காணவில்லை. அவர்கள் பாம்புக்குத் தலையையும் மீனுக்கு வாலையும் காட்சிப்படுத்தும் இராஜதந்திரத்தில்தான் இன்று இருக்கின்றார்கள். இதனை சிறுபான்மை சமூகங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
தற்போது அதிகாரத்தில் இருக்கின்ற அனுர தலைமையிலான அரசுக்கு எதிராக கண்ணுக்குத் தெரிகின்ற தூரத்தில் ஆபத்துக்கள் இல்லை. ஆனால் தண்டனைகளில் இருந்து தப்பித்துக் கொள்ள எதிர்பார்க்கின்ற குற்றக் கும்பல்கள்தான் துரிதமாக அரசுக்கு எதிராக மக்களை தூண்ட முனைகின்றார்கள். ஆனால் அவர்களின் இந்த முயற்சி கல்லில் நார் உரிக்கின்ற வேலையாகத்தான் தெரிகின்றது. ஆனால் சில இடங்களில் என்பிபி. நாடாளுமன்ற உறுப்பினர்கள் முட்டிக் கொள்வதையும் நாம் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. மேற்சொன்ன அரசியல் பின்னணியில்தான் சிறுபான்மைக் கூட்டணி அல்லது தமிழ்பேசும் மக்களின் கூட்டணி உதயமாகி இருக்கின்றது.
இந்தக் கூட்டணியில் இருக்கின்ற பிரதான சக்திகள் என்று பட்டியலிட்டால் சுமந்திரன் தலைமையிலான தமிழர் கூட்டணி. ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ்.ரிசாட் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிஸ்.மனோ தலைமையிலான மலையக கூட்டணி.கஜேந்திரன் தரப்பு என்று பிரதான அணிகளும் அதன் தலைவர்களும் இங்கு இருக்கின்றார்கள். ஆனால் தற்போதய அரசியல் பின்னணியில் எதிரணிக் கட்சிகளுக்கு கைகளும் கால்களும் முடமான ஒரு நிலை இருக்கின்றது.

எனவே இந்த சிறுபான்மைக் கட்சிகளுக்கு அங்கு உள்ளே இருந்து பண்ணுவதற்கு எந்த சோலிகளும் கிடையாது. எனவே அவர்கள் தங்களது பொழுதை போக்குவதற்கும் சிறுபான்மை சமூகங்களை ஏமாற்றுவதற்காகவும் தான் இப்படி ஒரு கூட்டணியை அமைத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதுதான் நமது கணிப்பு. குறைந்த பட்சம் இந்த கூட்டணித் தலைவர்களிடம் தாம் சார்ந்த சமூகங்களின் சமகால அரசியல் சமூக மற்றும் இருப்புத் தொடர்பான பிரச்சனைகள் என்று ஏதாவது ஒரு பட்டியலாவது இருக்கின்றதா என்று நாம் கேள்வி எழுப்புகின்றோம்.
அல்லது இப்படியான சமூகப் பிரச்சினைகள் தொடர்பாக அவர்கள்தாம்சார்ந்த சமூகங்களின் மத்தியிலாவது இது வரை கலந்துரையாடி இருக்கின்றார்களா என்று நாம் கேள்வி எழுப்புகின்றோம். நாடு சுமுகமாக போய்க் கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில் திடீரென்று இப்படி ஒரு கூட்டணியை அமைத்து இவர்கள் என்னதான் செய்யப் போகின்றார்கள்.? அல்லது சமூகத்தின் கவனத்தை பிழையாக திசைதிருப்பி மாகாணசபைத் தேர்தல் ஒன்று வருமாக இருந்தால் இந்த கூட்டணியை வைத்து ஏதாவது பிழைக்கலாம் என்றும் தான் இவர்கள் யோசிக்கின்றார்களோ தெரியாது.

மேலும் வருகின்ற மாகாணசபைத் தேர்தலில் குறிப்பாக வடக்குக் கிழக்கில் ஆளும் என்பிபி. வலுவான ஒரு போட்டியைக் கொடுக்கும் என்று தமிழ் தரப்பினர் எதிர்பார்ப்பதால் இந்தக் கூட்டணியை வைத்து சிறுபான்மை உணர்வுகளை மீண்டும் வென்றுதருகின்றோம் என்று மேடைகளில் முழங்குவதற்கு முன்னேற்பாடாகத்தான் கூட்டணி இருக்குமோ என்னவோ.!
வடக்குக் கிழக்கிற்கு வெளியே இதுவரை ஐதேக.-ஐமச வசமிருந்த சிறுபான்மை வாக்குகள் இன்று என்பிபி கைகளுக்குப் போய் இருப்பது போல ஒரு நிலை தெரிகின்றது. இதற்கு நல்ல உதாரணம்தான் இலட்சக் கணக்கான வாக்குகள் மூலம் கூட்டணி அமைத்து ரணில் அல்லது சஜித் அணிகளில் முதலாம் இரண்டாம் இடத்துக்கு வருகின்ற தனித்துவத் தலைவர்கள் இந்த முறை தமது செல்வாக்கை கணிசமாக இழந்திருக்கின்றார்கள். குறிப்பாக மலையகத்தில் இன்று மிகப் பெரிய வெற்றியை என்பிபி. தான் பெற்றிருக்கின்றது. மாகாணசபைத் தேர்தல் வருமாக இருந்தால் தமது தரப்புக்கு பெரும் பின்னடைவு காத்திருக்கின்றது என்பதனை புரிந்து கொண்ட மலையகத் தலைமைகளும் இப்போது இந்தக் கூட்டணிக்குள் தம்மை இணைத்துக் கொண்டிருக்கின்றனர்.

தெற்கில் என்றும் பெரும்பான்மை முஸ்லிம் வாக்குகளை கொள்ளையடிக்கின்ற சஜித் மற்றும் ரணிலுக்கு வருகின்ற தேர்தல்களில் வாய்ப்புக் கிடைக்காது. அங்கு கூட மூன்றில் இரண்டு சதவிகித அளவு வாக்குகள் அனுரதரப்புக்குப்போய் இருக்கின்றது. இதற்கு நல்ல உதாரணம் ஒரு காலத்தில் கண்டி மாவட்டத்தில் மூன்று உறுப்பினர்கள் ஐதேக. விலிருந்து தெரிவாகி இருந்தனர். ஆனால் இந்த முறை என்பிபி தரப்பில் இரண்டு உறுப்பினர்கள் தெரிவாகியதுடன் ஏ.சி.எஸ். ஹமீதுக்குப் பின்னர் வழக்கமாக நடாளுமன்ற வந்து கொண்டிருந்த ஹலீம் வெற்றிபெற முடியாது வெளியே தள்ளப்பட்டிருக்கின்றார். வெற்றி பெற்ற மு.கா.ஹக்கீம் கூட நூலிலையில் தப்பினார் என்பதுதான் அங்குள்ள தேர்தல் முடிவுகள் இருக்கின்றது. இதே நிலைதான் தெற்கில் ஏனைய இடங்களில் காணப்பட்டன.
இதன் பின்னர் சஜித்-ரணில் அணியுடன் கூட்டணி அமைத்துக் கொண்டு அரசியல் செய்தால் பிழைக்க முடியாது என்பதை உணர்ந்து கொண்டதால்தான் தனித்துவத் தலைமைகள் சிறுபான்மை அல்லது தமிழ் பேசும் மக்கள் கூட்டணியை அமைத்து அடுத்த நகர்வுகளுக்கு தயாராகிக் கொண்டு வருகின்றாhகள் என்றும் விமர்சிக்க முடியும். மேலும் தற்போது சஜித்-ரணில் தலைமையிலான அரசியல் இயக்கங்கள் இன்று அப்பட்டமாக இனவாதிகளுடன் கூட்டணிக்குத் தயாராக வருகின்றனர். இதனைத்தான் கம்மன்பில புத்தக வெளியீட்டிலும் நாம் பார்த்தோம். மேலும் சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற சிறுபான்மை விரோத தேரர்களின் கூட்டங்களுக்கும் சஜித்-ரணில் அணுசரனை வழங்கி வருவதையும் நாம் இங்கு சுட்டிக்காட்ட முடியும். இது பற்றி சிறுபான்மை தலைமைகள் சஜித்-மற்றும் ரணிலிடம் கேள்வி எழுப்பினார்களா என்றும் கேட்க முடியும்.

எனவே சஜித்-ரணில் அப்பட்டமாக இனவாதிகளின் தேர்தல் கூட்டணி ஒன்றுக்குத் தயாராகி வருவது இந்த சிறுபான்மை கூட்டணித் தலைமைகள் புரிந்து கொண்டிருக்கின்றார்களா? அல்லது அதன் ஆபத்தை உணர்ந்துதான் இப்படியான கூட்ணிக்கு இவர்கள் வந்திருக்கின்றார்களா என்றும் நாம் மாற்றிச் சிந்திக்க முடியும். மேலும் இந்த சிறுபான்மை கூட்டணி அமைத்த கையுடன்ஜனாதிபதி அனுராவுடன் ஒரு சந்திப்புக்குத் தயாராகி வருவதாகவும் தெரிகின்றது. இது ஜனாதிபதி அனுரவுடன் நெருக்கமான உறவை வளர்த்துக் கொள்வதாற்கான ஒரு குறுக்குப் பாதையாகவும் இருக்கலாம்.
ஆனால் சிறுபான்மை கூட்டணி வடக்கு கிழக்கு தமிழர்கள் சார்பில் என்ன கோரிக்கைகளை முன்வைக்கப் போகின்றது.? முஸ்லிம் சமூகத்தின் சார்ப்பில் கூட்டணியில் இருக்கின்ற தலைமைகள் முன்வைக்கின்ற கோரிக்கைகள் என்ன? அதே போன்று மலையக சமூகத்தின் சார்பில் முன்வைக்கப் போகின்ற கோரிக்கைகள் என்ன என்பதனை தான்சார்ந்த சமூகங்களுக்கு முதலில் சமர்ப்பித்து அந்த சமூகங்களின் அங்கிகாரத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
வடக்கு மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக தமிழரசு சார்பில் சுமந்திரன் வருவார் என்ற ஓர் எதிர்பார்ப்பு இருக்கின்றது. இதில் ஜனாதிபதி அனுராவுடன் ஒரு நல்லுறவை வளர்த்துக் கொள்வது தனக்கு வாய்ப்பாகவும் பரப்புரைக்கு உதவியாகவும் இருக்கும் என்று ஐயா சுமந்திரன் எதிர்பார்க்கின்றாரோ என்றும் யோசிக்க வேண்டி இருக்கின்றது.அதே போன்று தமது ஒருவரை கிழக்கு முதல்வராக கொண்டு வருகின்ற ஒரு எதிர்பார்ப்பு மு.கா. ஹக்கீமுக்கும் இருக்கின்றது. அதில் தப்பும் கிடையாது.!
அதே நேரம் வடக்கு கிழக்கில் தமிழ் முஸ்லிம் சமூகங்களுக்கு மத்தியில் பல முரண்பாடுகளும் சிக்கல்களும் இருந்து வருகின்றன. அவற்றை தமக்குள் பேசி தீர்வுகளைக் கண்டு இந்தக் கூட்டணி ஒரு முன்னுதாரணத்தை ஏன் கொடுக்கக் கூடாது.? அரசுக்கும் பகையில்லை எதிணிக்கும் பகைகிடையாது என்பதுதான் இந்தக் கூட்டணித் தலைவர்கள் அறிமுக நாளில் ஊடகங்களில் பேசிய வார்த்தைகள்.!இது எவ்வளவு தூரம்யதார்த்தமானது.

மாகாணசபைத் தேர்தல் ஒன்று வருமாக இருந்தால் இந்தக் கூட்டணித் தலைமைகளின் உண்மையான உருவத்தை நாம் பார்க்க முடியும். எனவே இந்த நாட்டு சிறுபான்மை சமூகங்களுக்கு நாம் முன்கூட்டி சொல்லி வைப்பது, இந்த நாடகத்தை நீங்கள் நெடுநாளைக்குநமது அரசியல் களத்தில் பார்க்க வாய்ப்புக்கள் கிடையாது என்பதுதான். புரிந்து கொள்ளுங்கள்.




