இஸ்ரேல் இன்று அதிகாலை நடத்திய தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சக தலைமையகம் மற்றும் அணுசக்தி திட்ட தலைமையகம் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF), டெஹ்ரானில் உள்ள ஈரான் நாட்டின் அணு ஆயுதத் திட்டத்துடன் தொடர்புடைய இலக்குகளில் தாக்குதல்களை நடத்தியதாகக் கூறியுள்ளது.
இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்:
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் டெஹ்ரானில் உள்ள ஷாஹ்ரான் எண்ணெய் கிடங்கு குறிவைக்கப்பட்டதாக ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலிய இராணுவம் டெஹ்ரானுக்கு அருகிலுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தையும் தாக்கியுள்ளது.
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உலகின் மிகப்பெரிய எரிவாயு வயலான தெற்கு பார்ஸ் பகுதியில் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

அணு மையம்
இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களால் ஈரான் நாட்டின் நடான்ஸ் அணு உலையில் கதிரியக்க கசிவு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அங்கே அணு கசிவு ஏற்பட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்படும் அவலம் ஏற்பட்டு உள்ளது.
சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) இயக்குநர் ஜெனரல் ரஃபேல் க்ரோஸி வெளியிட்ட அறிக்கையில், ஈரான் நாட்டின் நடான்ஸ் அணு உலையில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களால் கதிரியக்க மற்றும் இரசாயனக் கலப்படங்கள் ஏற்பட்டதை உறுதிப்படுத்தினார்.
இருப்பினும், அந்த இடத்திற்கு வெளியே கதிர்வீச்சு அளவு இயல்பாகவே உள்ளது, எனவே பொதுமக்களுக்கோ அல்லது சுற்றுச்சூழலுக்கோ எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
நடான்ஸ் அணு உலை மீதான தாக்குதல்
நடான்ஸ் வளாகத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து க்ரோஸி கூறுகையில், “நடான்ஸில் உள்ள அணு உலகை அமைப்பில் இஸ்ரேல் தாக்குதலால் கதிரியக்க மற்றும் இரசாயனக் கலப்படம் ஏற்பட்டுள்ளது.
அந்த வசதிக்குள் இருக்கும் ஆல்பா துகள்கள் போன்ற கதிர்வீச்சை தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் மட்டுமே இனி கட்டுப்படுத்த முடியும். கசிவு ஏற்பட்டுள்ளது பற்றி தீவிர ஆய்வுகள், சோதனைகளை செய்து வருகிறோம் என்று தெரிவித்தார்.
மேலும், யுரேனியம்-235 ஐ 60 சதவீதம் வரை செறிவூட்டும் பைலட் எரிபொருள் செறிவூட்டும் ஆலையின் மேற்பரப்பு பகுதியை இஸ்ரேலிய தாக்குதல்கள் அழித்துவிட்டது. அங்கேயும் ஆய்வு செய்து வருகிறோம்.
சேதங்களை மதிப்பிடுவதற்கும், அணுசக்தி பாதுகாப்பு மற்றும் ஈரான் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் ஈரான் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்துடன் நமது அமைப்பு தொடர்ந்து தொடர்பில் உள்ளது, என்று தெரிவித்துள்ளனர்.
ஏன் இங்கே அட்டாக்?
தற்போது ஈரானிடம் உயர் ரக யுரேனியம் 5.5 டன் வரை உள்ளது. முன்பு 200 கிலோ மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று இருந்த ஒப்பந்தம் நீக்கப்பட்ட நிலையில் அணு ஆயுதம் செய்ய தயாரான தரத்தில் இருக்கும் உயர் ரக யுரேனியம் 5.5 டன் வரை உள்ளது.
ஈரான் இப்போது யுரேனியத்தை 60-70 சதவிகிதம் தூய்மைக்கு செறிவூட்டுகிறது, மேலும் செறிவூட்டப்பட்டால், அது அணு ஆயுதம் தயாரிக்க ஏதுவாகும். விரைவில் இதனால் ஈரான் அணு ஆயுத சோதனைகளை மேற்கொள்ளவும் முடியும். அவசரமாக தேவைப்பட்டால் உடனே அந்த நாடு அணு ஆயுதம் தயாரிக்கவும் முடியும்.
இதைத்தான் இஸ்ரேல் தாக்க முயற்சி செய்கிறது. நேற்று இதில்தான் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஈரானின் அணு உலை மற்றும் அணு ஆராய்ச்சி மையங்களை இஸ்ரேல் தாக்க திட்டமிட்டதாக கூறப்படுகிறது.
இதற்கான சீக்ரெட் திட்டங்களை இஸ்ரேலின் மொசாத் அமைப்பு மேற்கொண்டதாக சர்வதேச அரசியல் வல்லுனர்கள் கணித்து உள்ளனர். ஈரான் உள்ளே அவர்களின் அணு திட்டங்களை சேதப்படுத்தும், தோல்வி அடைய செய்யும் பணிகளை இஸ்ரேல் தனது உளவாளிகள் மூலம் செய்ததாகவும்.. நேற்று மொசாத் உதவியுடன் இந்த தாக்குதல்களை செய்ததாகவும் கூறப்படுகிறது





