பற்றி எரிந்த இந்தோனேசிய கப்பல்.!
நெஞ்சை உறைய வைக்கும் விபத்து!
இந்தோனேசியாவின் மதுரா தீவு அருகே 271 பேருடன் சென்று கொண்டிருந்த பயணிகள் கப்பலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 41 பேரை மாயமாகி இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் முக்கியமானது இந்தோனேசியா. சர்வதேச அளவில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் விரும்பி செல்லும் நாடுகளில் ஒன்றாக இந்தோனேசியா இருக்கிறது.
அந்த இந்தோனேசியாவில் தான் இப்போது மிக மோசமான ஒரு விபத்து அரங்கேறியுள்ளது. இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள சுரபயா நகரில் இருந்து தெற்கு சுலவேசி மாகாணத்தின் மகாசார் நகரை நோக்கி பயணிகள் கப்பல் சென்று கொண்டிருந்தது.
அந்த கப்பல் இன்று காலை கடலில் சென்று கொண்டிருந்தபோது திடீரென தீப்பிடித்தது. இந்த தீ விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு சென்ற இந்தோனேசிய தேடுதல் மற்றும் மீட்புப் படையினர், மீட்பு பணிகளை தொடங்கினர். மீட்பு பணிகள் துரிதமாக நடந்த நிலையில், கப்பலில் இருந்த 271 பேரில் இதுவரை 225 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
இருப்பினும் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 41 பேர் மாயமாகியுள்ள நிலையில், அவர்களை தேடும் பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடலோர காவல் படையினர், மீட்பு கப்பல்கள் உள்ளிட்ட டீம்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன. கப்பலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.
தொழில்நுட்ப கோளாறு, மின்கசிவு அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தோனேசியாவின் முக்கிய தீவான ஜாவாவின் வடகிழக்கு கடற்கரைக்கு அருகில் மதுரா தீவு அமைந்துள்ளது.
பொதுவாகவே இந்த ரூட்டில் கடல் போக்குவரத்து அதிகம் இருக்கும். இந்த பிஸியான ரூட்டில் இந்த விபத்து நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாயமான 41 பேரையும் விரைந்து கண்டுபிடிக்க மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், கடல் கொந்தளிப்புடன் இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.





