உலகின் முதல் காதல் கடிதம் எது தெரியுமா.. நீங்க நினைப்பதை விட ரொம்ப பழசு
இன்று உலகெங்கும் காதல் தினம் கொண்டாடப்படுகிறது. என்ன தான் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டாலும் காதலர்களிடையே காதல் கடிதம் என்பது ரொம்பவே முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
அந்தளவுக்குக் காதலர்களுக்கு மிக முக்கியமானதாக இருக்கும் காதல் கடிதத்தின் வரலாறு குறித்து நாம் பார்க்கலாம்.
உலகின் முதல் காதல் கடிதம் யாருக்கு யார் எழுதியது என்பது குறித்து நாம் பார்க்கலாம். ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது.
உலகெங்கும் உள்ள காதலர்கள் தங்கள் அன்பிற்குரிய நபர்களுடன் கொண்டாடும் நாளாகக் காதலர் தினம் இருக்கிறது.
காதல் கடிதம்: இந்த காலத்தில் நவீன இளைஞர்கள் இன்ஸ்டாவில் காதல் வளர்த்து வருகிறார்கள். மெசேஜ் அனுப்பி நிமிடங்களில் ரிப்ளை வரவில்லை என்றால் டென்ஷன் ஆகிவிடுகிறார்கள்..
ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்பு வரை காதலர்கள் தொடர்பு கொள்ளும் முறையாகக் காதல் கடிதங்களே இருந்தன. அப்போது நாம் ஒரு விஷயத்தைச் சொல்லி பதிலுக்காகவே நீண்ட காலம் காத்திருக்க வேண்டும்.
நாம் அனுப்பிய லெட்டர் சரியாக அந்த நபருக்குச் சென்று சேர்ந்ததா.. வேறு யாராவது கண்ணில் பட்டுவிட்டதா என ஏகப்பட்ட விஷயங்கள் மனதில் ஓடும்..
பல நாட்கள்.. சில நேரங்களில் பல வாரம் கழித்து வரும் அந்த காதல் கடிதத்தைத் திறந்து படிக்கும் போது ஏற்படும் உணர்வை நாம் சொல்லினால் விவரிக்க முடியாது.
அந்தளவுக்குக் காதலர்களிடையே மிகவும் நெருக்கமான ஒன்றாக காதல் கடிதம் இருக்கிறது. இந்த காதல் கடிதத்தின் பின்பு இருக்கும் வரலாறு. அதன் பின்னணி என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
முதல் காதல் கடிதம்: உலகின் முதல் காதல் கடிதம் என்பது 4,000 ஆண்டுகளுக்கு முந்தையது. இது நாகரிகத்தின் தொட்டில் என்று அழைக்கப்படும் பண்டைய மெசொப்பொத்தேமியா, அதாவது தற்காலத்து ஈராக் பகுதியில் வாழ்ந்தவரால் எழுதப்பட்டதாகும்.
இந்த காதல் கடிதம் சுமேரியர்களால் பயன்படுத்தப்பட்ட எழுத்து முறையான கியூனிபார்ம் எழுத்து முறையில் களிமண்ணில் பொறிக்கப்பட்டு இருக்கிறது.
தற்போதைய ஈராக்கில் உள்ள முக்கிய சுமேரிய நகரமான நிப்பூரின் இடிபாடுகளில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கடிதம் கண்டுபிடிக்கப்பட்டது.
நான்காவது மன்னர் ஷு-சின்: கிமு 2030இல் ஊரு (Ur) வம்சத்தின் நான்காவது மன்னரான ஷு-சின் என்பவருக்கு இந்த கடிதம் எழுதப்பட்டதாக நம்பப்படுகிறது.
அழகிய கவிதை நடையில் எழுதப்பட்ட இந்த கடிதம் இன்று வரை பலரும் பாராட்டிப் புகழும் ஒன்றாகவே இருக்கிறது.
இந்த கடிதத்தில் என்ன இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளும் முன்பு, இதன் வரலாறு குறித்து நாம் தெரிந்து கொள்ளலாம்.
பின்னணி: இந்த கடிதத்தை எழுதிய ஷு-சின் ஒரு சக்திவாய்ந்த சுமேரிய மன்னர் ஆவார். ஊரு வம்சத்தின் மிக முக்கிய மன்னராகக் கருதப்படும் ஷு-சின், அங்கு மிகப் பெரிய செல்வாக்கைக் கொண்டிருந்தார்.
அந்த காலத்தில் இருந்த சுமேரிய மன்னர்கள் அனைவரும் ஒருவித புனித திருமண சடங்கை கடைப்பிடிப்பார்கள். அதாவது இன்னானா என்று அழைக்கப்படும் கடவுளும் மன்னரும் திருமணம் செய்து கொள்ளும் சடங்கு பின்பற்றப்படும்.
அப்போது ஒரு உயர் பதவியில் இருக்கும் பெண் பூசாரி, இந்த சடங்கில் தெய்வத்தை உருவகப்படுத்தும் வகையில் தேர்வு செய்யப்படுவார்..
அந்த பெண் பூசாரி மன்னர் ஷு-சினுக்கு எழுதியதே முதல் காதல் கடிதமாக நம்பப்படுகிறது. அதன் சுருக்கம்: “மணமகனே, என் அன்பே, உன்னுடைய அழகு அற்புதம், தேன் போல இனிமையானது. இனன்னாவின் பிரியமான சிங்கமே..
நீ என்னை ஆட்கொண்டாய்; நான் உன் முன் பேச முடியாமல் நிற்கிறேன்” என்று அந்த கடிதம் இருக்கிறது.