-பவாஸ் ஹமீட்-
ஒருஅரசாங்கத்தில் அமைச்சரவை என்பதுஅதன் அச்சாணி ஆகும். நேற்றைய (18.11.2024) அமைச்சரவைத் தெரிவுமிகச் சிறந்த விஞ்ஞான ரீதியான தெரிவாக, கட்சியின் கொள்கை சட்டதிட்டங்களுக்கு உட்பட்டதாகவும் இருக்கலாம்.
ஆனாலும், இச்சந்தர்ப்பத்தில் ஆகக்குறைந்தது ஒரு இடத்தையாவது ஜனாதிபதியோ,கட்சி உயர் பீடமோ கருத்தில் கொண்டிருந்தால்,அதுசாலச் சிறந்த, ஒரு அலங்காரமிக்க அணி சேர்ப்பாக, முஸ்லிம் சமூகத்துக்கான ஒரு அங்கீகரமாக இருந்திருக்கும்.
பொதுவான கண்ணோட்டத்தில் இலங்கையில் உள்ள தேசிய இனங்களில் முஸ்லிம் இனமும் முக்கியமானது. தொன்று தொட்டு நடைமுறையில் இருக்கும் இந்நாட்டு வரலாறு இதற்கு சான்று பகரும்.
இங்கு ‘முஸ்லிம் அமைச்சர்’ என்ற விடயம், தே.ம.ச.க்கு வாக்களித்த, மற்றும் வாக்களிக்காத பெரும்பலான முஸ்லிம்களின் இயல்பான உணர்வுபூர்வமான ஆதங்கமே அன்றிவேறொன்றுமில்லை.
என்னைப் பொறுத்தவரை அதையாரும் பிழையாக எண்ணத் தேவையில்லை. அதை விடுத்து ‘இதற்கு முன்பிருந்த முஸ்லிம் அமைச்சர்கள் என்ன சாதித்தார்கள்?’ என்பதும் ஒருதேவையற்ற வாதம்.
தேசியமக்கள் சக்தியின் வெற்றிக்கு இம் முறை கணிசமான அளவு முஸ்லிமகள் நேரடியாகக் களத்திலும், சிந்தனை ரீதியாகவும் பல விதமான பங்களிப்புகள், தியாகங்கள் செய்துள்ளனர் என்பதை எல்லோரும் நன்கறிவர்.
தேர்தல் முடிவுகள் இதைத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. நம் எல்லோரினதும் நோக்கம் எமது நாட்டில் கடந்த காலங்களில் இடம் பெற்ற ஊழல் மோசடிகள், இனவாதம், குடும்ப ஆட்சி என்பவற்றை ஒழிக்க வேண்டும் என்பது ஒன்று மட்டுமே!
உண்மையில் தே. ம.ச.யும் முஸ்லிம்கள் மீது மிகுந்த கரிசனையுடன் முஸ்லிம் மக்கள் குறைவாகவாழும் மாத்தறை, கம்பஹா போன்ற முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவு அசாத்தியமான மாவட்டங்களில் கூட பெரும் பிரயத்தனங்கள் செய்து வரலாற்று வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளது மிகவும் போற்றிக் கொண்டாடப்பட வேண்டியது.
தே.ம.ச.யின் இந்த உன்னதமான செயலை இதற்கு முன் எந்த அரசியல் கட்சிகளும் செய்ததாகத் தெரியவில்லை. அந்த வகையில் முஸ்லிம்கள் தே.ம.ச.விமர்சிக்கவோ, சேறுபூசி, காலை வாரும் செயல்களில் எவரும் ஈடுபடமால் இருப்பது நம் அனைவருக்கும், நாட்டுக்கும் நன்மைபயக்கும்.
இதில் ‘முதலைக் கண்ணீர் வடிக்க’ முந்திக் கொண்டு வருவோரும். ‘குளிர்காய’ நினைப்பவர்களுக்கும் இடமில்லை. ‘வெண்ணெய் திரண்டு வரும் போது தாளியை உடைத்த’ பழிசொல் எமக்குத் தேவையில்லை. சற்றுப் பொருமை காப்போம். ‘வளமான நாடு! சுபீட்சமான வாழ்க்கையை எதிர்பார்ப்போம்!