பொதுத் தேர்தலில் துப்பாகிப் பாவனை மந்தமான போக்கு!

நஜீப் பின் கபூர்

குமார் சங்கக்கார வாய்ப்பை தட்டிவிடுகின்ற சதியே மந்த கெதியில் நகர்ந்து செல்லும் தேர்தல் களம் தேர்தலுக்குப் பின்பான ஆளும் தரப்பு நெருக்கடிகள் அரச தரப்பு அதிகார பதவிகளுக்கு இழுபறி நிலை சுதந்திரக் கட்சியை வீழத்த பலமுனைத் தாக்குதல்

இலங்கை தேர்தல் வரலாற்றில் ஒரு உணர்வுபூர்வமற்ற பொதுத் தேர்தலாக நாம் இதனை குறிப்பிட விரும்புகின்றோம். இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. நமது நாட்டில் நடந்த எல்லாப் பொதுத் தேர்தல்களிலும் இறுதி நேரம் வரை யார் வெற்றி பெறுவார்கள் என்று தெரியாமல் இருந்தது.

ஒரு முறை மஹியங்கனைத் தேர்தல் தொகுதியை மட்டும் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி கொள்கின்ற போது கூட அந்தக் கட்சி நம்பிக்கையுடன் தேர்தலுக்கு முகம் கொடுத்தது. அதே போன்று 1977 நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஸ்ரீ மா பண்டாரநாயக்காவுக்கு வெறும் எட்டு ஆசனங்கள் கிடைத்து படுதோல்வி அடையும் நேரத்தில் கூட அந்தக் கட்சி தாமே இந்த முறையும் அரசாங்கத்தை அமைப்போம் என்று கருதிக் கொண்டிருந்தது. நடை பெற்ற பொதுக் கூட்டங்களில் மிகப் பெரியளவில் மக்கள் வந்து கலந்து கொண்டிருந்தனர். ஆளும் தரப்பும் எதிர்த் தரப்பும் மிகுந்த நம்பிக்கையுடன் தேர்தலுக்கு அப்போது முகம் கொடுத்தது.

ஆனால் இன்று 2020 நடக்கின்ற பொதுத் தேர்தலில் அரசியல் கட்சிகளிடையே எந்த விதமான உத்வேகத்தையும் போட்டி நிலையையும் நாம் காணவில்லை. இந்த மந்த நிலை ஆளும் தரப்பிலும் எதிரணியிலும் காணப்படுகின்றன. எமது அவதனப்படி அதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. தற்போது நாட்டில் ராஜபக்ஸாக்கள் ஆதிக்கம் மேலோங்கி இருப்பதால் கட்சிகளும் கட்சிகளின் செயல்பாடுகளிலும் ஒரு உணர்வுபூர்வமற்ற செயல்பாட்டை அவதானிக்க முடிகின்றது.

மொட்டுக்களில் அணியில் ஜனநாயக ரீதியிலான தீர்மானங்கள் என்பதனைவிட தனிமனித அல்லது ராஜபக்ஸக்களைத் திருப்திப்படுத்த மேற் கொள்ளப்படுகின்ற அரசியல் நகர்வுகளைத்தான் அங்கு காண முடிகின்றது. எனவே மொட்டுக்கள் கட்சியில் முதலாம் இரண்டாம் மூன்றாம் நான்கம் ஐந்தாம் நிலைத் தலைமைகள் என்ற அனைத்தும் ராஜபக்ஸாக்களை முன்னிருத்தியதாகத்தான் அமைந்திருக்கின்றது. தேர்தல்களத்தில் ஜனாதிபதி, பிரதமர், பசில், நாமல் விசுவாச அணிகள் குழுக்களும் அவர்களுக்குக் கூஜா தூக்கி, அரசியல் மற்றும் தனிப்பட்ட நலன்களை அடைந்து கொள்ளும் ஒரு நிலைதான் இருந்து வருகின்றது.

எனவே தான் அங்கே கட்சி என்பது பெயரளவில் இருக்கின்றது. பேராசிரியர் ஜீ.ல். பீரீஸ் அந்தக் கட்சியின் தலைவர் என்று சொல்லப்பட்ட காலத்தில் கூட ராஜபக்ஸாக்கள் இருக்கின்ற மேடையில் தலைவர் ஜீ.ல். காணாமல் போயிருந்த சந்தர்ப்பங்கள் மிக மிக அதிகமாக இருந்ததை நாம் அவதானித்திருக்கின்றோம். சுதந்திரக் கட்சி இந்த நாட்டை அதிக காலம் ஆட்சி செய்திருந்தாலும் மைத்திரியுடன் அது வெள்ளத்தில் அள்ளுண்டு போன குப்பைகள் போல் இலங்கை அரசியலில் ஓரம் கட்டப்பட்டு விட்டது.

அடுத்து இது வரை நாட்டில் தனிப் பெரும் கட்சி என்றிருந்த ஐக்கிய தேசியக் கட்சி முன்பிருந்த பழைய இடதுசாரிக் கட்சிகள் நிலைக்குத் ஆளாகி விட்டது. வருகின்ற பொதுத் தேர்தல் முடிவுகளில் இதனை நாட்டு மக்கள் அவதானிக்க முடியும். இந்தக் கட்டுரையைத் தயார் செய்து கொண்டிருக்கின்ற நேரத்தில் நம்முடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட சமூக செயல்பாட்டாளரும் கல்லூரி அதிபருமான ஒருவர் அனுராதபுர மாவட்டத்தில் போட்டியிடுகின்ற ஒரு ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் ஊருக்குள் வந்து 70 சதவீதமான கட்சிக்காரர்கள் இன்றும் ரணிலுடன்தான் நிற்க்கின்றார்கள் என்று ஒரு வந்து பேசிக் கொண்டிருந்தார் என்று நமக்குத் தகவல் தந்தார்.

இப்படிப்பட்டவர்கள் யாரைத்தான் ஏமாற்ற முனைகின்றார்களோ தெரியாது. ஜனாதிபதி தேர்தலில் நமது மனோ கனேசன் 16 மாவட்டங்களில் நாம் முன்னணியில் இருக்கின்றோம் என்று மக்களுக்குக் கதை விட்டுக் கொண்டிருந்த போது ஐயா என்ன பூமியில் கால் பதித்துக் கொண்டுதான் கதை சொல்கின்றீர்களா என்று நாம் அப்போது அவரிடம் கேள்வி எழுப்பி இருந்தோம். இந்த வேட்பாளரிடமும் அப்படித்தான் கேட்கத் தோன்றுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சி மோதல்கள் ஒரு பெரிய இசுவே யல்ல. நாங்கள் கூடிப்பேசித் தீர்த்துக் கொள்வோம் என்று அன்று சொன்னவர்கள் இப்போது இருதுருவங்களாக போட்டிக்கு வந்திருப்பது எப்படிச் சாத்தியம் என்று கேட்கத் தோன்றுகின்றது. நாம் அமைக்கின்ற அரசாங்கத்தில் ரணில் தரப்பினரை ஒரு போதும் சேர்த்துக் கொள்ள மாட்டோம் என்று சஜித் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இப்போது நமக்குப் புதுக் கதை சொல்கின்றார்.

இன்றும் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் பலர் தேர்தலுக்குப் பின்னர் நாம் மீண்டும் இணைந்து கொள்வோம் என்று பேசி வருகின்றார்கள். இணைந்து கொள்வது யார்? யாருடன் என்று நாம் கேட்கின்றோம். அரசியல்வாதிகள் மக்களை முட்டால்கள் என்று எண்ணிக் கொண்டு கதை விடுவதை நிருத்திக் கொள்ள வேண்டும். மக்கள் அறிவியல் ரீதியில் சிந்திப்பதால்தான் அரசியல்வாதிகளின் கதைகள் எதையுமே அவர்கள் இப்போது ; மதிப்பதுமில்லை கண்டு கொள்வதுமில்லை. எனவே சஜித் அமைக்கின்ற அரசில் ரணிலுக்கு இடமில்லை என்ற கதையையும் நாம் அரசியல் நகைச் சுவையில் தான் சேர்த்தவிட வேண்டும்.

 

 

 

சஜித், ரணில் இரு தரப்பும் அரசமைப்பது பற்றி பேசும் போது அதனை நம்புகின்ற மக்கள் இன்னும் நாட்டில் இருக்கின்றார்கள் என்றால் இதுபோன்ற அரசியல்வாதிகள் பிழைத்துக் கொள்வார்கள். மைத்திரி-ரணில் நல்லாட்சிக் காலமும், பின்பு அவர்கள் தமக்குள் முட்டி மோதிக் கொண்ட காட்சிகளும் சம்பவங்களும் ராஜபக்ஸாக்களை விட்டால் இந்த நாட்டில் நல்ல தலைமைகள் இல்லை என்ற அளவுக்கு மக்களைச் சிந்திக்கத் தூண்டியது. எனவே மைத்திரி-ரணில் தனிப்பட்ட பலயீனங்களும், நல்லாட்சிக் காலத்தில் மைத்தரி-ரணில் விட்ட தவறுகளும் இன்று அவர்களை மக்கள் அரசியல் குப்பையில் வீசி விட்டார்கள் என்பது எமது கருத்து.

இந்தப் பின்னணியில் எதிரணி அரசியல் தலைமைகளில் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள். பொரும்பான்மை சமூகம் ராஜபக்ஸாக்களை தமது ஏக தலைமைகள் என்ற கருதுமளவுக்கு நிலமை மாறிவிட்டது. அரசியில் ரீதியில் வஞ்சிக்கப்பட்ட மக்கள் இப்போது அரசியல் உணர்வற்றவர்களாக அதன் மீது வெறுப்புடனும் இருந்து வருகின்றார்கள். எனவேதான் தற்போது தேர்தல் நெருங்கி வருகின்ற நேரத்திலும் அனைத்துத் தரப்புக் காரியாலங்களும் பரப்புரைகளும் மந்கெதியில் செல்பட்டு வருகின்றது.

நாட்டிலுள்ள சிங்கள ஊடகங்கள் அனைத்தும் போல் ஆளும் தரப்புக்கு அல்லது ராஜபக்ஸாக்களுக்கு கூஜா தூக்கி பிழைத்து விட்டுப்போவது என்று செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. எனவேதான் இனவாத, மதவாத கருத்துக்களை அவை அடிக்கடி உச்சரித்து பௌத்த வாக்குகளை ராஜபக்ஸாக்கள் பக்கமாகத் தொடர்ந்தும் வைத்திருக்க உதவி வருகின்றன. மாற்று அணிக்கு ஆதரவாக செயலாற்றுகின்ற ஒரு சில ஊடகங்களும் சிறகுடைந்த பறவைகள் என்ற நிலையில் தமது ஊடகங்களை முன்னெடுத்துச் செல்கின்றன. இடையில் வந்த கொரோனா இந்த நாட்டில் பொதுத் தேர்தலை மக்கள் மத்தியில் ஒரு ஆர்வமில்லாத நிலைக்குக் கொண்டு வந்ததில் முக்கிய பங்கை வகிக்கின்றது என்பதிலும் எமக்கு மாற்றுக் கருத்துக்கள் இல்லை கொரோனா வந்திருக்காவிடாலும் 2020 பொதுத் தேர்தலில் பெரியளவில் உற்சாகம் இருந்திருக்கமாட்டாது.

அத்துடன் எம்மால் பதவிக்கு வரமுடியாது என்று சொல்லித் துண்டுப் பிரசுரங்களை அவர்களே அச்சுப் பண்ணி விநியோகித்துக் கொண்டிருக்கின்ற ஒரு நிகழ்வை நாம் கடந்த வராம் சொல்லி இருந்தோம். எனவே எம்மால் பதவிக்கு வர முடியாது என்று அவர்களே சொல்லும் போது எப்படி மக்கள் எதிரணிக்காக தேர்தலில் உணர்வுபூர்வமாக களத்தில் இறங்க முடியும்.? எதிரணியினர் தோல்வி மன நிலையில் நின்று அரசியல் செய்கின்றார்கள். இது வேட்டியைப் பறிகொடுத்து கோவனத்துடன் தெருவில் நிற்க்கின்ற ஒரு நிலை. இது தான் இன்றைய நமது நாட்டு எதிர்க் கட்சிகள் நிலை.

வேட்பாளர்கள் அனைவரும் போல் தற்போது தமது பரப்புரைக்கான துண்டுப் பிரசுரங்களை அச்சேற்றி அவற்றை மக்கள் மத்தியில் விநியோகத்தும் வருகின்றார்கள் அதற்காக அவர்கள் மில்லியன் கணக்கில் பணத்தை செலவு செய்தும் இருக்கின்றார்கள். இப்போது ஜனாதிபதி. ஜீ.ஆர். தனது புகைப் படங்களையோ நாமத்தையோ எவரும் உபயோகிக்கக் கூடாது என்று தமது கட்சிக்காரர்களுக்கு கட்டளை பிறப்பித்திருக்கின்றார். இது எவ்வளவு தூரம் ஏற்புடையது, நடை முறைச் சாத்தியமானது என்று நாம் கேள்ளி எழுப்புகின்றோம்.

ஜனாதிபதி இது போன்ற கட்டளைகளை முன் கூட்டியே அறிவிப்புச் செய்திருந்தால் ஏற்புடையதாக இருந்திருக்கும். அவரது இப்போதய அறிவிப்பு ஒரு வெரும் கண்துடைப்பு அல்லது ஊடக விளம்பரம் மட்டுமே என்று நாம் கருதுகின்றோம்.
மேலும் நாட்டில் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி நிலையும் மக்களிடத்தில் பண நெருக்கடி நிலையும் இருப்பதால் தேர்தலில் அவர்களுக்கு எந்த ஆர்வமும் இல்லாத நிலை. தற்போது நமது நாட்டிலுள்ள இளைய தலைமுறையினரிடத்தில் எந்தவிதமான அரசியல் ஆர்வமும் கிடையாது. அவர்கள் கையடக்கத் தொலைபேசியும் அதனுடன் தொடர்புடைய பொழுது போக்கு நடவடிக்கைகளிலுமே முழு நேரத்தையும் செலவிட்டு வருகின்றனர்.

தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகளிடத்தில் மோதல்கள் நடைபெறுவதுதான் வழக்கம்- சம்பிரதாயம். ஆனால் இந்தத் தேர்தலில் அரசியல் கட்சிகளிடத்தில் எந்த விதமான மோதல்களையும் காண முடியவில்லை. மாற கட்சிகளில் உள்வீட்டு மோதல்கள்தான் மோசமாக நடந்த வருகின்றது.

குறிப்பாக மொட்டு அணியில் இருக்கின்ற சுதந்திரக் கட்சி வேட்பளர்கள் மீது மிக மோசமான தாக்குதல் தற்போது ஆரம்பமாகி இருக்கின்றது. தமது அணியில் தேர்தலுக்கு நிப்பவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றி பின்னர் சஜித்துடன் இணைந்து அரசமைக்கின்ற பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டு வருகின்றார்கள் என்ற ஒரு மிக மோசமான பரப்புரை பகிரங்கமாக நடந்து வருகின்றது.

இதனால் அவர்களுக்கு மொட்டுகள் மேடைகளில் தலைகாட்ட முடியாத நிலை. அடுத்து தமது கட்சிக்காரர்கள் சுதந்திரக் கட்சி வேட்பளர்களுக்கு விருப்பு வாக்குகளை வழங்குவதை முற்றாகத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அப்படி வழங்கி அவர்களுக்கு நாடாளுமன்றம் வர சந்தர்ப்பத்தை எமது ஆதரவாளர்கள் வழங்கினால் எமக்கு நாட்டில் ஒரு நிலையான ஆட்சியை நடாத்த முடியாது போகும் என்று சொல்லி வருகின்றார்கள். இது பற்றி பலமுறை முறைப்பாடுகள் ஜனாதிபதி பிரதமர் மட்டத்தில் முன்வைக்கப்பட்டாலும் அதற்கு எந்த பிரதிபலனையும் நாம் காணமுடியவில்லை என்று அவர்கள் தற்போது கைசேதப்படுகின்றார்கள். இதற்கு மத்தியில் சஜித் அணியினர் பகிரங்கமாகவே நாம் மைத்திரி தரப்பினரை இணைத்துக் கொண்டு அரசமைக்க இருக்கின்றோம் என்று மேடைகளில் பேசி வருக்கின்றார்கள். இது எறியும் வீட்டில் எண்ணை வார்க்கின்ற ஒரு கதை.

மொட்டுக்கள் அணியுடன் மைத்திரி தரப்பு பேச்சு வார்த்தைகள் நடத்த முயன்ற போது, தேர்தல் அறிவிப்புக்கு பல மாதங்களுக்கு முன்னர் இரண்டாம் உலகப் போரில் ஜேர்மர் படைகளுக்கு ரஸ்யாவில் நடந்த கதைதான் மைத்திரி அணிக்கு இந்தத் தேர்தலில் நடக்கப் போகின்றது என்று நாம் எமது வார ஏட்டில் உறுதியாகச் சொல்லி இருந்தோம். அது இப்போது அச்சொட்டாக நடந்து கொண்டு வருகின்றது.
தேர்தல் பரப்புரைகள் மந்த கெதியில் நகர்ந்தாலும் சுதந்திரக் கட்சியருக்கு எதிரன தமது பலமுனைத் தாக்குதல்களை ஆளும் தரப்பிலுள்ள மொட்டுக்களின் முக்கியஸ்தர்கள் முன் னெடுத்து வருகின்றனர்.
இதற்கு உயர் மட்டத்தில் ஆதரவும் ஒத்துழைப்பும் இருந்து வருகின்றது என்றுதான் நாம் கருதுகின்றோம். தேர்தலுக்குப் பின்பான ஆளும் தரப்பு நெருக்கடிகளும் மிக மோசமாக இருக்கும்;. கடும்போக்கு பௌத்த மதபோதகர்களின் கட்டுப்பாட்டில் ஜனாதிபதி இருக்கின்றார். அவரைப் பதவிக்குக் கொண்டு வந்தவர்களில் அவர்களது பங்களிப்பு அளப்பரியது.

அதே போன்று தன்னைப் பிரதமராக் கொண்ட அமைச்சரவையில் தனக்கு வேண்டியவர்களுக்கு முக்கிய அமைச்சுக்களை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ எதிர்பார்ப்பார். அதே போன்று பசில் ராஜபக்ஸாவும் வருகின்ற அரசில் தனது பிடியை இறுக்கிக் கொள்ளும் வகையில் அங்கு கையாட்களை வைத்திருக்க முனைவார். எனவே அவருக்கு ஏற்ற விதமாகவும் இந்த அமைச்சரவை அமைய வேண்டும். வருகின்ற தேர்தலில் மைத்திரி அணியில் குதிரைக் கொம்பு போல் சிலர் கரை சேர்ந்தாலும் அவருக்கு கனதியான எந்த அமைச்சுக்களும் கிடைக்காது. எமது இந்தக் கருத்து மைத்திரிக்கும் பொருந்தும். பொலன்னறுவையில் அவர் கரை சேரக் கடும் போராட்டத்தை நடாத்த வேண்டி இருக்கின்றது என்று அங்கிருந்து கிடைக்கின்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

மொட்டுக்கள் அணியினர் பல இடங்களில் காரியாலயங்களைத் திறந்து கொண்டு வந்தாலும். சுதந்திரக் கட்சி சார்ப்பில் வேட்பாளர்கள் மைத்திரியில் புகைப் படங்களையும் சுதந்திரக் கட்சி பெயரையும் கூட உச்சரிக்க பின்னடிக்கின்றனர். சாந்த பண்டார என்ற குருனாகல மாவட்ட வேட்பாளர், இவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கூட. மேலும் இவர் மைத்திரியின் உறவுக்காரர் என்றும் சொல்லப்படுகின்றது. அவரது துண்டுப் பிரசுரத்தைப் பார்த்தால் மனிதன் மிகப் பெரிய ரஜபக்ஸ விசுவாசிபோல் ஒரு தோற்றம் அதில் தெரிகின்றது. எனவே தமது தனித்துவங்களைப் பாதுகாக்கின்ற வகையில் மொட்டுக்கள் அணியிடன் கூட்டணி அமைத்திருக்கின்றோம் என்ற கதை வெரும் பம்மாத்துக் பேச்சுக்கள் மட்டுமே.

தேர்தலில் சு.கட்சியினர் எவராவது வெற்றி பெற்றால் அவர்கள் செய்கின்ற முதல் வேலையாக இருக்கப் போவது மொட்டுக்கள் கட்சியில் அவர் உறுப்புரிமை பெறுவதாகத்தான் இருக்கும் என்பது எமது கருத்து.
கண்டியில்
குமார் சங்கக்கார
எம்சிசி அணியின் தலைமைப் பதவிக்கு மேலும் ஒரு வருடத்துக்கு ஏகமனதாக நீடிக்கப்பட்டிருக்கின்றார் குமார் சங்கக்கார. தற்போது இலங்கை கிரிக்கட் அணிக்கு எதிராக முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் மிகவும் அநீதியானது. அரசியல்வாதிகள்தான் அன்று போட்டியை விற்பனை செய்தார்கள் என்று விஜேமுனி செய்சா குற்றம் சாட்டுகின்றார்.

கண்டியில் ஆளும் தரப்பு முக்கியஸ்தர்களான மஹிந்தானந்தாவும் திலும் அமுனுகமவும் விருப்பு வாக்கு வேட்டைக்குப்போன இடத்தில் துப்பாக்கியால் சுட்டுக் கொள்ள முனைந்தார்கள் என சொய்சா ஊடகங்கள் முன் பகிரங்கமாகக் குறிப்பிட்டதுடன் அப்போதய விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்தவிடம் வெற்றியை சூதாடி விட்டீர்களே என நான் நேரடியாகவே கேட்டேன். ஏன அவர் பகிரங்கமாக குறிப்பிடுகின்றார்.

சர்வதேச கிரிக்கட் சபைக்கு குமார் சங்கக்கார தெரிவாகும் வாய்பைத் தட்டி விடவே இந்த நாடகம் தற்போது நடந்து கொண்டிருக்கின்றது. போட்டி நடந்து இவ்வளவு காலமாகியும் அமைச்சர் மஹிந்தானந்த இவ்வளவு காலமும் தூங்கிக் கொண்டா இருந்தார்? என விஜேமுனி- அப்பச்சி மலா கேட்க்கின்றார். இதில் உள் நோக்கங்கள் இருக்கின்றது என்றும் அவர் மேலும் அங்கு குற்றம் சாட்டுகின்றார்.

Leave a Reply

Your email address will not be published.

Previous Story

சிரிப்பதற்கு - நல்ல பொண்ணு

Next Story

கண்டி முஸ்லிம் பிரதிநிதித்துவம்