2025ல் புதுக் கூட்டணிகள்!

வருகிறது புதுக் கூட்டணிகள்!

நன்றி: 26.01.2025 ஞாயிறு தினக்குரல்

இன்னும் இரண்டொரு வாரங்களில் உள்ளூராட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு வர இருப்பதை நமக்கு விசுவாசமான தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே தேர்தல் உறுதி. அதே நேரம் இந்தத் தேர்தலில் புதிய கூட்டணிகள் பல களத்துக்கு வர இருக்கின்றன.

ஆளும் அனுர தரப்பு ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தலைப் போலவே  இந்தத் தேர்தலிலும் என்பிபி அணியில் வரும். தெற்கில் நாம் பிரிதொரு இடத்தில் சொல்லி இருப்பது போல சஜித்-ரணில் கூட்டணி பற்றி கருத்துப் பறிமாறல்கள் நடக்கின்றன. கூட்டணி போட்டலும் சிக்கல் தவிர்த்தாலும் அங்கு  லடாய்தான்.

அதே நேரம் சஜித் கூட்டணியில் இருக்கின்ற பல சிறுபான்மைக் கட்சிகள் தனித்து போட்டிக்கு வர இருக்கின்றன. இது ஆளும் தரப்புடன் நல்லுறவுக்கான இராஜதந்திரம். அடுத்து தெற்கில் மொட்டு அணியில் இருந்து பிரிந்து சென்ற பலர் திரும்பி வர இருக்கின்றார்கள்.

இது தவிர சுதந்திரக் கட்சி கதிரைச் சின்னத்தில் புதிய கூட்டணியில் வருகின்றது. வடக்குக் கிழக்கில் ஆளும் அனுர தரப்புடன் மோத தமிழ் தரப்பில் புதிய கூட்டணிகள். தமிழரசுக் கட்சிக்குள் இன்னும் சிறீ-சும மோதல். அதனால் அங்கு குழப்ப நிலை.!

ஐமச – ஐதேக. இணைவு!

நன்றி: 26.01.2025 ஞாயிறு தினக்குரல்

இந்த நாட்களில் பெரும் பின்னடைவை எதிர் நோக்கி வருகின்ற ரணிலின்-ஐக்கிய தேசியக் கட்சியையும் சஜித்தின்-ஐக்கிய மக்கள் சக்தியையும் இணைகின்ற முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த விடயத்தில் ரணிலும் சஜித்தும் மிகவும் எச்சரிக்கையாக காய் நகர்த்தி வருகின்றார்கள்.

இதில் அதிக அச்சம் சஜித்துக்குத்தான். அவருக்கு நெருக்கமானவர்கள் கடந்த காலங்களில் ஊழல் மோசடி செய்தவர்கள், மத்திய வங்கிக்குக் கொள்ளைக்கு ஆதரவு வழங்கியவர்கள் ரணில் அணியில் இருப்பதால் அவர்கள் மீது மக்கள் மிகவும் கோபத்தில் இருக்கின்றார்கள்.

அவர்களை உள்வாங்கிக் கொண்டால் மக்கள் எங்களையும் சேர்த்து நிராகரிப்பார்கள் என்று எச்சரித்திருக்கின்றார்கள். இந்தக் கதை நியாயமான ஒன்றுதான்.

ஆனால் அதே குற்றச்சாட்டு இருக்கின்ற ‘புட்நோட்’ போட்டவர்களும் மத்திய வங்கி கொள்ளை நடக்வே இல்லை என்ற சுஜிவ சேமசிங்ஹ போன்றவர்களும் சஜித் அணியில் ஏற்கெனவே உள்வாங்கப்பட்டிருக்கின்றார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆனால் இந்த ரணில்-சஜித் கூட்டணி சாத்தியமானாலும் நிறையவே பிரச்சினைகள் வரும் என்பதனை முன்கூட்டியே நாம் இங்கு சொல்லி வைக்கின்றோம்.

Previous Story

 வெறும் 48 மணி நேரத்தில் எந்தவொரு கேன்சருக்கும் தடுப்பூசி!

Next Story

காதலனை கொன்ற காதலிக்கு  ஆதாரமே இல்லாதபோதும் மரண தண்டனை! எப்படி?