யுக்ரேன் பதற்றம்

யுக்ரேனின் எல்லையில், ரஷ்யா ஒரு லட்சம் வீரர்களைக் குவித்திருக்கும் நிலையில், அமெரிக்கா அங்கு ஆயுதங்களை அனுப்பியிருக்கிறது. பிரிட்டன் தனது வீரர்களை அனுப்பத் திட்டமிட்டிருக்கிறது. இதனால் அங்கு பதற்றம் அதிகரித்திருக்கிறது.

இந்த நிலையில், ரஷ்யாவுக்கு ஆதரவானவரை யுக்ரைனின் அதிபராக நியமிக்க விளாதிமிர் புதின் திட்டமிட்டிருப்பதாக பிரிட்டன் குற்றம்சாட்டியுள்ளது.

முன்னெப்போதும் இல்லாத வகையில், யுக்ரைன் எம்.பி. யெவென் முரயேவ் என்பவரது பெயரைக் குறிப்பிட்டு, அவரை நாட்டின் அதிபராக்க ரஷ்யா முயல்வதாக பிரிட்டன் வெளியுறவுத் துறை கூறியிருக்கிறது.

ரஷ்யா 100,000 துருப்புக்களை யுக்ரைனுடனான தனது எல்லைக்கு அருகில் குவித்துள்ளது. ஆயினும் யுக்ரைன் மீது படையெடுக்கப் போவதாக வெளியாகும் தகவல்களை மறுத்துள்ளது.

ரஷ்யா யுக்ரைனுக்குள் ஊடுருவினால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என பிரிட்டன் அமைச்சர்கள் எச்சரித்துள்ளனர்.

“ரஷ்யா பதற்றத்தைத் தணிக்க வேண்டும். ஆக்கிரமிப்பையும் தவறான தகவல் கொண்ட பரப்புரையையும் முடிவுக்கு கொண்டு வர வேண்டும். ராஜீயப் பாதையை தொடர வேண்டும்”

“பிரிட்டனும், கூட்டாளிகளும் மீண்டும் மீண்டும் கூறி வருவது போல், யுக்ரைனில் ரஷ்ய ராணுவ ஊடுருவல் என்பது கடுமையான சேதத்தை ஏற்படுத்தும் ஒரு பெரிய மூலோபாய தவறாக இருக்கும்.”

2014 ஆம் ஆண்டு கிரிமியாவை தன்னுடன் இணைத்துக் கொண்ட போது ​​யுக்ரைனின் பகுதியை ரஷ்யா கைப்பற்றியது.

2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ரஷ்யப் படைகள் எல்லையில் குவிக்கப்பட்ட நிலையில், மற்றொரு படையெடுப்பு அல்லது ஊடுருவல் நிகழலாம் என்று மேற்கத்திய, யுக்ரைனிய உளவு அமைப்புகள் கூறுகின்றன.

ஆனால் எந்தத் தாக்குதலுக்கும் திட்டமிடவில்லை என்று ரஷ்யா மறுத்துள்ளது.

பிரிட்டன் வெளியுறவு அமைச்சகம் “தவறான தகவல்களைப் பரப்புகிறது” என்றும், ” ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை நிறுத்தவும்” தனது ட்விட்டர் பக்கத்தில் ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தியது.

ஊடக அதிபரான முராயேவ் 2019 தேர்தலில் அவரது கட்சி 5% வாக்குகளைப் பெறத் தவறியதால், அவருக்கு யுக்ரைன் நாடாளுமன்றத்தில் இடம் கிடைக்கவில்லை.

பிரிட்டன் வெளியுறவு அமைச்சகம் “குழப்பத்தில் இருப்பதாக தெரிகிறது” என்று அவர் அப்சர்வர் செய்தித்தாளிடம் கூறியுள்ளார்.

“இது தர்க்கத்துக்கு ஒவ்வாதது. நான் ரஷ்யாவில் தடை செய்யப்பட்டுள்ளேன். அங்குள்ள எனது தந்தையின் நிறுவனத்தில் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது” என்று முராயேவ் கூறினார்.

ரஷ்ய உளவு அமைப்புகளுடன் தொடர்புகளைப் பேணி வருவதாகக் வேறு நான்கு யுக்ரைனிய அரசியல்வாதிகளையும் பிரிட்டன் வெளியுறவு அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

2014 இல் பதவியில் இருந்து அகற்றப்பட்ட ரஷ்ய ஆதரவு அதிபர் விக்டர் யானுகோவிச்சின் கீழ் பிரதமராக பணியாற்றிய மைகோலா அசாரோவும் அவர்களில் அடங்குவர்.

அஸரோவ் பின்னர் ரஷ்யாவுக்குத் தப்பிச் சென்றார், அங்கு அவர் நாடுகடந்த ஒரு பொம்மை அரசாங்கமாக பரவலாக அறியப்பட்ட ஒன்றை நிறுவினார்.

யுக்ரைனிய தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு கவுன்சிலின் முன்னாள் துணைத் தலைவரான வோலோடிமிர் சிவ்கோவிச் என்பவரின் பெயரையும் பிரிட்டன் வெளியுறவு அமைச்சகம் கூறியிருக்கிறது. ரஷ்ய உளவுத்துறையுடன் தொடர்பு இருப்பதாகக் கூறி அவருக்கு அமெரிக்கா தடைகளை விதித்திருக்கிறது.

யானுகோவிச்சின் ஆட்சியில் துணைப் பிரதமர்களாகப் பணியாற்றி செரி அர்புஸோவ், அன்ட்ரி க்ளுயேவ் ஆகியோரின் பெயர்களையும் பிரிட்டன் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

சனிக்கிழமையன்று யுக்ரைனில் பதற்றத்தைக் குறைக்க ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சரும் அவரது அமெரிக்க வெளியுறவு அமைச்சரும் பேச்சுக்களை நடத்திய சில மணி நேரங்களுக்குப் பிறகு, அமெரிக்கவின் “மரண உதவி” சனிக்கிழமை கீவ் வந்தடைந்தது.

முன்கள வீரர்களுக்கான வெடிமருந்துகள் உள்ளிட்டவை இந்தத் தொகுப்பில் அடங்கும்.

2015 ஆம் ஆண்டிலிருந்து டஜன் கணக்கான பிரிட்டிஷ் துருப்புக்கள் யுக்ரைனில் பயிற்சிக்காக தங்கியுள்ளன. 2014-இல் ரஷ்யா கிரைமியா மீது படையெடுத்ததைத் தொடர்ந்து உக்ரைனின் கடற்படையை மீண்டும் கட்டியெழுப்ப உதவ பிரிட்டனும் உறுதியளித்துள்ளது.

இந்த வார தொடக்கத்தில், ஆயுதங்கள் மற்றும் கூடுதல் துருப்புக்களை யுக்ரைனுக்கு அனுப்புவதாகவும் அறிவித்தது.

பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் பல முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகள் தங்களில் ஒருவருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தப்படுவது அனைவருக்கும் எதிரான தாக்குதலாகக் கருதுகின்றன.

புதினுக்கு என்ன வேண்டும்?

ஐரோப்பாவில் கிழக்கை நோக்கி நேட்டோ விரிவடையாது என்று 1990ல் அளித்த உத்தரவாதத்தை அமெரிக்கா மீறிவிட்டது என்று ரஷ்யாவின் அதிபர் புதின் நீண்ட காலமாகக் கூறி வருகிறார். “அவர்கள் எங்களை ஏமாற்றிவிட்டார்கள்!” என்று கடந்த மாதம் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.

ஆனால் அப்போதைய சோவியத் தலைவரான மைக்கேல் கோர்பச்சேவுக்கு சரியாக என்ன வாக்குறுதி அளிக்கப்பட்டது என்பதில் பல்வேறு மாறுபட்ட விளக்கங்கள் தரப்படுகின்றன.

அப்போதிருந்து, சோவியத் ஒன்றியத்தைச் சேர்ந்த, கிழக்கு ஐரோப்பிய நாடுகள் நேட்டோவில் இணைந்துள்ளன. அவற்றில் போலந்து, லிதுவேனியா, லாட்வியா மற்றும் எஸ்டோனியா ஆகியவை ரஷ்யாவுடன் எல்லைகளைக் கொண்டுள்ளன.

இந்த விரிவாக்கம் மற்றும் அதன் எல்லைகளுக்கு அருகே நேட்டோ துருப்புக்கள் மற்றும் ராணுவ உபகரணங்கள் இருப்பது அதன் பாதுகாப்புக்கு நேரடி அச்சுறுத்தல் என்று ரஷ்யா வாதிடுகிறது.

2014 ஆம் ஆண்டு யுக்ரைனியர்கள் தங்கள் ரஷ்ய சார்பு அதிபரை பதவியில் இருந்து அகற்றியபோது, தெற்கு உக்ரைனில் உள்ள கிரைமியா தீபகற்பத்தை ரஷ்யா கைப்பற்றியது. அப்போதிருந்து, யுக்ரைனின் ராணுவம் ரஷ்யாவின் எல்லைகளுக்கு அருகிலுள்ள கிழக்குப் பகுதிகளில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுடன் போரில் ஈடுபட்டுள்ளது.

யுக்ரேனுடனான எல்லையில் ரஷ்யா அதன் துருப்புகளை நிலைநிறுத்தும் செயல்பாடுகளுக்கு எதிராக ஐரோப்பிய தலைவர்கள் “முழு ஒருமித்த கருத்துடன்” இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் நடவடிக்கைகளுக்கு எதிராக மேற்கு சக்திகள் ஒரு பொதுவான மூலோபாயத்தை நோக்கமாகக் கொண்டுள்ளன. இதையடுத்து அந்த நாடுகளின் தலைவர்களுடன் அதிபர் ஜோ பைடன் திங்கட்கிழமை காணொளி காட்சி வாயிலாக கூட்டம் நடத்தினார். யுக்ரேனுக்குள் ரஷ்யா ஊடுருவல் செய்தால் அந்த நாட்டுக்கு எதிராக “விரைவான” மற்றும் “முன்னெப்போதும் இல்லாத” வகையிலான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று பிரிட்டன் எச்சரித்துள்ளது.

யுக்ரேன் எல்லையில் சுமார் ஒரு லட்சம் வீரர்களை குவித்த போதிலும், அந்த நாட்டை ஆக்கிரமிக்கும் திட்டத்தை ரஷ்யா மறுத்து வருகிறது.இந்த விவகாரத்தில் ரஷ்யாவின் செயல்பாடுகளுக்கு பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, போலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்கள் ஓரணியில் உள்ளனர்.

இதையடுத்து அந்த நாடுகளின் தலைவர்களுடனான காணொளி காட்சி கலந்துரையாடலில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் தலைவர்கள் இணைந்தனர். நேட்டோ தலைவர் யென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் விடுத்த அழைப்பின் பேரில் இந்த கலந்துரையாடல் நடந்தது. “இது எனக்கு மிக, மிக நல்ல சந்திப்பு இருந்தது – அனைத்து ஐரோப்பிய தலைவர்களுடனும் முழு ஒருமித்த கருத்து உள்ளது” என்று பைடன் இந்த சந்திப்பு குறித்து தெரிவித்தார்.

முன்னதாக, கிழக்கு ஐரோப்பாவில் கூடுதல் போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்களை நிலைநிறுத்துவதாக நேட்டோ திங்கள்கிழமை (ஜனவரி 24) அறிவித்தது. அப்போது முதல் ரஷ்யா மற்றும் மேற்கு நாடுகளுக்கு இடையே பதற்றங்கள் கடுமையாக அதிகரித்துள்ளன.

மறுபுறம் அயர்லாந்து, யுக்ரேன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சமும் தீவிரம் அடைந்து வருகிறது. இந்த நிலையில், யுக்ரேன் எல்லையில் போர் போன்ற சூழ்நிலை உருவாக அனுமதிக்க மாட்டோம் என்று மேற்கு நாடுகள் எச்சரித்துள்ளன.

இந்த நிலையில், யுக்ரேனில் உள்ள தமது தூதரக ஊழியர்களை பிரிட்டன் திரும்ப அழைத்துக் கொண்டிருக்கிறது.

யுக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே மோதல் அதிகரிக்கும் சூழல்கள் தென்படுகின்றன.

இந்த பதற்றத்தின் தொடர்ச்சியாக பிரிட்டிஷ் தூதரகத்தில் உள்ள அதிகாரிகள் எந்த அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளவில்லை. ஆனால் தலைநகர் கீஃபில் உள்ள தூதரகத்தில் பணியாற்றும் பிரிட்டிஷ் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் தாயகம் திரும்புகின்றனர்.

மறுபுறம் யுக்ரேனில் உள்ள தனது தூதரகத்தில் உள்ளவர்கள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ள அமெரிக்கா, அங்குள்ள தமது நாட்டவர்களை நாடு திரும்புமாறு உத்தரவிட்டுள்ளது.

இப்போதைக்கு ஆபத்து இல்லை

ரஷ்யாவின் தாக்குதல் அச்சத்திற்கு மத்தியில், யுக்ரேன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் இருவரும் தங்களுடைய தூதரக அதிகாரிகளை பரஸ்பரம் திரும்பப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் தற்போது இல்லை என்று கூறியுள்ளனர்.

ஒருவேளை ரஷ்யா அதன் படைகளை யுக்ரேனுக்குள் அனுப்பினால் அந்நாடு மீது கடுமையான பொருளாதார தடைகளை விதிக்க அமெரிக்கா தனது நட்பு நாடுகளுடன் இணைந்து தயாராகி வருகிறது.

இந்த விஷயத்தில் ரஷ்யா உரிய பதிலைக் கொடுக்க நேரிடும் என்று ஐரோப்பிய ஒன்றியமும் கூறியுள்ளது.

இத்தகைய சூழலில்தான், தமது உறுப்பு நாடுகள், கிழக்கு ஐரோப்பா நோக்கி அவற்றின் போர்க்கப்பல்கள் மற்றும் வான்படை தளவாடங்களை அனுப்பியுள்ளதாக நேட்டோ கூறியுள்ளது.

டென்மார்க், ஸ்பெயின், நெதர்லாந்து ஆகிய நாடுகளும் தங்களின் ராணுவத்தினரை தயார் நிலையில் வைத்துள்ளன.

நேட்டோ மற்றும் ரஷ்யா மீதான குற்றச்சாட்டுகள்

நேட்டோ தலைவர் யென்ஸ் ஸ்டோல்டன்பெர்க், “நேட்டோ தனது நட்பு நாடுகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தன்னால் இயன்ற அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க தயாராக உள்ளது” என்றார்.

ஆனால், இந்த விவகாரத்தில் பதற்றத்தை அதிகரிக்கச் செய்வது நேட்டோ தான் என்று ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது. யுக்ரேனில் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளுக்கு எதிரான அந்நாட்டின் நடவடிக்கையை ஆபத்தை நேட்டோ அதிகரிக்கச் செய்து விட்டதாக ரஷ்யா கூறுகிறது.

இந்த நிலையில், ஐரோப்பிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் போரல், கீஃபில் இருந்து தூதர்களை திரும்ப அழைக்கும் திட்டம் எதுவும் தற்போது இல்லை என்றும் ரஷ்யாவுடன் தொடர்ந்து பேச்சு நடந்து வருவதால் எவ்வித களேபரத்துக்கும் இடம் கொடுக்க வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.

டென்மார்க் நிலைப்பாடு

இதேவேளை “மிகப்பெரிய பொருளாதார தடைகள் வந்தாலும் அதற்கு நாங்கள் பதிலளிக்கத் தயாராக உள்ளோம் என்பதில் சந்தேகமில்லை. அந்த எதிர்வினை இதுவரை கண்டிராததாக இருக்கும்” என்று டென்மார்க் வெளியுறவு அமைச்சர் ஜெப் கோஃபோட் கூறினார்.

அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள்ளேயே அதன் உறுப்பு நாடுகள் சில சொந்த பிரச்னைகளைக் கொண்டிருக்கின்றன. ஒன்றியத்தின் 27 உறுப்பு நாடுகள் ரஷ்யாவுடன் வெவ்வேறு வகையில் உறவுகளைக் கொண்டுள்ளன.

இத்தகைய சூழ்நிலையில், ரஷ்யாவுக்கு எதிரான கூட்டு நடவடிக்கையில் ஒருமித்த கருத்தை எட்டுவது ஐரோப்பிய ஒன்றியத்துக்கு சவாலானதாக இருக்கும்.

ஐரோப்பாவின் பொருளாதார மையமான ஜெர்மனி, ஏற்கனவே யுக்ரேன் விவகாரத்தில் அதன் நிலைப்பாட்டுக்காக விமர்சனத்தை எதிர்கொண்டு வருகிறது. அந்த நாடு தமது படைகளை யுக்ரேனுக்கு அனுப்ப மறுத்துள்ளது. அதே சமயம், ரஷ்யா ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டால் ஐரோப்பா கடுமையாக நடவடிக்கை எடுக்கும் என்று ஜெர்மனி வெளியுறவு அமைச்சர் அன்னலினா எச்சரித்துள்ளார்.

ரஷ்யாவுக்கு பிரிட்டன் எச்சரிக்கை

இதற்கிடையே, யுக்ரேனுக்கு இரண்டரை பில்லியன் டாலர்கள் அவசர நிதி உதவி வழங்கும் திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாக ஐரோப்பிய ஒன்றிய தலைவர் வூர்சூலா ஃபொன்டேலயன் தெரிவித்துள்ளார்.

2020ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிட்டன் வெளியேறியது. இந்த நிலையில், அதன் பிரதமர் போரிஸ் ஜான்சன், யுக்ரேனில் தமது ஆதரவு தலைமையை கொண்டு வருவதற்காக ரஷ்யா திட்டமிட்டு வருவதாக குற்றம்சாட்டினார்.

யுக்ரேனை ரஷ்யா தாக்கினால் புதிய செச்சன்யா போன்ற நிலை உருவாக நேரிடும் என அவர் எச்சரித்தார்.

இதற்கிடையே, அட்லான்டிக் பெருங்கடலின் சர்வதேச கடற்பகுதியில் ரஷ்யாவின் ராணுவ பயிற்சிகளுக்கு அயர்லாந்து எச்சரிக்கையுடன் பதிலளித்துள்ளது.

அயர்லாந்து நேட்டோவில் உறுப்பினராக இல்லை. அதே சமயம், ரஷ்ய கடற்படை பயிற்சி மேற்கொள்ளும் இடம் அயர்லாந்தின் தென்மேற்கு கடல் பகுதி அருகில் உள்ளது.

2014 இல் கிரிமியாவை யுக்ரேனுடன் ரஷ்யா இணைத்தது முதல் அங்கு பதற்றம் அதிகமானது. அந்த நாடு ஏற்கெனவே ரஷ்ய ஆதரவு கிளர்ச்சிக் குழுவுடன் கிழக்குப் பகுதியில் சண்டையிட்டு வருகிறது. இந்தப் போரில் கடந்த 8 ஆண்டுகளில் 13,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

 

Previous Story

திடீர் சுகயீனம் - மருத்துவமனையில்  பிரதமர்! NOW OK

Next Story

பிஞ்சுகள்.. "உடல் உறுப்புகள் விற்பனைக்கு"ஆப்கன் வறுமை