நஜீப் பின் கபூர்
நன்றி 14.12.2025 ஞாயிறு தினக்குரல்

பேரழிவுகள் பற்றிய நமது பார்வையைக் கடந்த வாரம் எமது வாசகர்களுக்குச் சொல்லி இருந்தோம். அதனை மீண்டும் சுருக்கமாக இங்கு சுட்டிக் காட்டலாம் என்று எதிர்பார்க்கின்றோம்.
இயற்கை அழிவுகள் முற்றும் முழுதாக மனித குலத்தால் தடுத்து நிறுத்தக் கூடிய ஒன்றாக இல்லை. ஆனாலும் அதன் சேதாரங்களை ஓரளவுக்கு மட்டுப்படுத்திக் கொள்ள முடியும். சேதங்களை வேகமாக செப்பனிட்டுக்கொள்ள அறிவியல் மனிதனுக்குத் துணை நிற்க்கக்கூடும்.
நமது சக்திக்கு அப்பால்பட்ட ஒரு இயக்கம் பிரபஞ்ச செய்பாட்டில் மிகக் கடுமையாகச் செல்வாக்குச் செலுத்தி வருகின்றது. அதனைத்தான் உலகில் வாழ்கின்ற மக்கள் கடவுள்கள் என்று நம்புகின்றார்கள். நாம் கூட இதற்கு விதிவிலக்குக் கிடையாது.
இந்த விஞ்ஞான உலகத்திலும் கடவுள் மீதான நம்பிக்கை சமூகங்களிடையே மிகவும் வலுவாகத்தான் இருந்து வருகின்றது. அமெரிக்க ரஸ்யா ஐரோப்பா என்ற வளர்ச்சியடைந்த நாடுகள் அனைத்திலுமே அழிவிலும் ஆக்கத்திலும் மனிதன் தத்தமது கடவுள்களை நினைவுகூற மறப்பதில்லை.
விரைவில் பேரழிவு கடவுள் அறிவியல் என்ற தலைப்பில் வாசகர்களுக்கு ஒரு ஆக்கத்தைக் கொடுக்கலாம் என்று எதிர்பார்க்கின்றோம். இப்போது அரசு பேரிவு தொடர்பான வாக்குறுதிகளை பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பரவலாக கொடுத்திருக்கின்றது. அல்லது அள்ளிக் கொடுத்திருக்கின்றது. அதே நேரம் இந்த வாக்குறுதிகள் பற்றி எதிரணியினர் குறிப்பாக சஜித் நாமல் இதர சில்லறைகள் இந்த அரச வாக்குறுதிகள் மீது ஒரு சந்தேகப்பார்வையை பார்க்கின்றனர்.
எனவே அரசின் உதவித்திட்டங்கள் மற்றும் எதிரணியின் ஓரக்கண் பார்வைகள் தொடர்பாகவும் இப்போது விரிவாக பார்க்கலாம். பதவியில் இருக்கின்ற அரசாங்கங்கள்தான் இப்படி ஒரு பேரழிவை சந்திக்கின்ற போது அது தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். எனவே இப்போது பதவியில் இருப்பது என்பிபி அரசு. இலங்கை வரலாற்றில் முதல் முறையாக புதிய ஒரு அரசு பதவிக்கு வந்ததும் அவர்களுக்கு வரலாற்றில் மிகப் பெரிய அழிவுக்கு முகம் கொடுக்க வேண்டிய அவலநிலையும் வந்தது.
இந்த அனுர தலைமையிலான அரசு பதவிக்கு வந்தபோது அதன் மீது இப்படி ஒரு குற்றச்சாட்டு இருந்தது. ஜேவிபி.காரர்கள் எங்காவது ஒரு பெட்டிக்கடைகளையாவது நடாத்தி இருக்கின்றார்களா? அவர்கள் கொலைகாரர்கள். அவர்களை சர்வதேச சமூகம் நம்பாது-மதிக்காது. அதனால் அவர்களை உலகத்தலைவர்கள் நிராகரித்து விடுவார்கள். இதனால் நாட்டுக்கு இவர்கள் அதிகாரத்துக்கு வந்தால் இருன்ட காலம்தான் என்றெல்லாம் எச்சரித்திருந்தார்கள்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக ஆங்கிலம் தெரியாத ஒரு நாட்டுத் தலைவரால் சர்வதேச அரங்கில் போய் என்னதான் பண்ண முடியும் என்றெல்லாம் கேள்விகளைத் இவர்கள் தொடுத்திருந்தனர். கம்யூனிஸ்டுக்கள் அதிகாரத்துக்கு வந்தால் நாட்டில் மதம் கலாச்சாரம் பாரம்பரியங்கள் எதுவுமே எஞ்சி இருக்க மாட்டாது. பௌத்த சமயத்துக்கு முடிவு காலம்தான் நோன்பும் கிடையாது பெருநாளும் கிடையாது என்றெல்லாம் சொல்லியே இன்று அதிகாரத்தில் இருப்பவர்களை எதிரணியினர் நிராகரித்து வந்தனர்.
என்னதான் குடிமக்கள் மேற்சொன்ன விமர்சனங்களுக்கு மத்தியிலும் அனுர தலைமையிலான அரசாங்கத்தை மிகப் பெருபான்மை வாக்குகளைக் கொடுத்து அதிகாரத்துக்கு கொண்டு வந்து அமர்த்தி இருந்தார்கள். அவர்களின் அரசுக்கு ஓரண்டு நிறைவு அடைந்ததும் வரலாற்றில் மிகப் பெரிய பேரழிவும் வந்தது. இதனை எப்படி அரசின் தலையில் கட்டிவிடலாம் என்று விமர்சனங்களை முன்வைக்கின்ற அரசியல்வாதிகளும் ஊடகங்களும் இன்றும் நாட்டில் செயல்பட்டுக் கொண்டுதான் வருகின்றது.
இதனால் அரசு என்னதான் ஆரோக்கியமான திட்டங்களை முன்வைத்து பேரழிவில் இருந்து மீண்டுவர நகர்வுகளை மேற்கொண்டாலும் எதிரணிகள் அதில் திருப்தி கொள்வதாகத் தெரியவில்லை. பாதிக்கப்பட்டவார்களுக்கு வீடு கணி பொருள் இழப்புகளுக்கு பணம். பள்ளிக் குழந்ததைகளின் தேவைகளுக்கு காசு என்று ஆயிரம் இலட்சம் மில்லியன் கோடி என்று அரசு வழங்குவதாக சொல்லி இருக்கின்றது. நடவடிக்கைகளையும் எடுத்திருப்பதாகத் தெரிகின்றது.
ஆனால் சொல்லும்படி காசு கொடுக்க அரசிடம் பணம் கிடையாது என்று சில எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் விமர்சிக்கின்றார்கள். அரசுக்கு அனுபவம் போதாது எனவே சந்திரிக்கா மஹிந்த மைத்திரி கோட்டா ரணில் ஆகியோரை இந்த சீரமைப்பு பணிகளில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று உதய கம்மன்பில ஹக்கீம் போன்றவர்கள் அரசுக்கு ஆலோசனையை பகிரங்கமாக சொல்லி வருகின்றனர்.
நமது பார்வையில் இது அவர்களை உள்வாங்குங்கள் என்று சொல்வதில் தம்மையும் சேர்த்துக் கொள்ளுங்கள் என்பதுதான் இவர்களின் எதிர்பார்ப்பாக இருக்க வேண்டும். அரசு தரப்பில் ஊழல் பேர்வழிகளை இதில் இணைத்துக் கொண்டால் இந்தப்பணத்திலும் நன்கொடைகளையும் அவர்கள் கொள்ளையடித்து விடுவார்கள் என்றும் ஒரு என்பிபி. தலைவர் குறிப்பிட்டிருந்தார். முன்னாள் ஜனாதிபதிகளை உள்வாங்குவது தொடர்பாக பிரிதொரு கதையும் இருக்கின்றது. மற்றொரு இடத்தில் அதனையும் படிக்கலாம்.
யார் அரசுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடையாது என்ற சொன்னார்களோ அவர்களையே எரிச்சலுட்டும் அளவில் இன்று சர்வதேச உதவிகள் நாட்டுக்குள் வந்து குவிந்து கொண்டிருக்கின்றது. இப்போது இந்த உதவிகளை அரசுக்கு முகாiமைத்துவம் செய்யத் தெரியாது என்றும் புதிய சில கதைகள். அதற்கு அரசு தரப்பில் மத்திய வங்கி பிணைமுறி மற்றும் ஹெல்பிங் ஹம்பாந்தோட்டையில் நாம் இவர்களின் முகாமைத்துவத்தை பார்தோம்.
இதனைக் குடி மக்கள் நன்கு அறிந்து வைத்திருந்ததால்தான் அதிகாரத்தை எமது கைகளில் ஒப்படைத்திருக்கின்றார்கள் என்று பாதில் தரப்படுகின்றது. எனவே இந்த அரசுக்கு எதிரான விமர்சனங்கள் பேரழிவிலும் செயல்பட்டுக் கொண்டுதான் வருவதை அவதானிக்க முடிகின்றது. எனவே அரசு இதனை பொருட்படுத்த வேண்டிய தேவை இருக்காது. காரணம் அதற்கு போதுமான அளவு மக்கள் பெரும்பான்மை கைவசம் இருக்கின்றது.
இன்னும் சிலர் தேசிய அரசு அமைய வேண்டும் என்றும் கோரிக்கைகள் விடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். அப்போதுதானே ஒரு அமைச்சு அல்லது பிரதி அமைச்சாவது தமக்குக் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்போ என்னவோ தொரியாது.? முன்னாள் ஜனாதிபதிகள் அனைவரையும் இணைத்துக் கொள்ள ஹக்கீம் கோரிக்கை ஒரு புறம்.
மரிக்கார் அரசின் புனரமைப்பு பணிகளிலில் நம்பிக்கை கிடையாது அதனால் வழக்குத் தாக்கல் என்றெல்லாம் சொல்லி இருந்தார். ஆனால் இப்போது நான் அப்படிச் சொல்லவில்லை திரிவுபடுத்தி செய்தி கொடுத்து விட்டர்கள் என்று கூறி சமாளிக்கின்றார். அரசு சொல்வது போல பாதிக்கப்பட்ட எல்லோருக்கும் வீடுகளைக் கட்டித்தர முடியாது. அதில் என்னக்கு சிறிதும் நம்பிக்கை கிடையாது காணியை மட்டும் கொடுங்கள் என்று நாமலுடன் ஒரு நிகழ்வில் கலநது கொண்டு ஜீவன் தொண்டமான் பேசி இருக்கின்றார்.
பேரிழிவுகள் பற்றி சஜித் கூறுகின்ற கருத்துக்களும் அவரது சகாக்கள் கூறுகின்ற கருத்துக்களும் ஒன்றுக் கொன்று முரண்பாடாக இருந்தது வருகின்றது. இதனை நாம் கடந்த வாரமும் சுட்டிக்காட்டி இருந்தோம். இன்றும் அதே நிலையே தொடர்ந்து வருகின்றது.
சஜித் தற்போது அரசின் செயல்பாடுகள் உரிய முறையில் நடந்து கொண்டு வருகின்றதா என்று பரிசீலனைகளச் செய்து வருவதாகவும் ஒரு நிகழ்வில் ஊடகங்களில் குறிப்பிட்டிருந்தார். யட்டியந்தோட்டையில் ஒரு இடத்தில் போய் என்ன உங்களுக்கு அரசின் நஸ்டஈடுகள் கிடைத்து விட்டதா என்று அங்கிருந்தவர்களிடம் கேட்டிருக்கின்றார்.
ஜனாதிபதி தமது அறிவிப்புக்களை வெள்ளிக்கிழமைதான் வர்த்தமானியில் அறிவித்திருந்தார். சஜித் ஞாயிறு தான் உதவிகள் வந்து சேர்ந்து விட்டதா என்று மக்களிடத்தில் போய் கேள்வி எழுப்பியபோது மக்கள் இன்னும் இல்லை என்ற போது தான் யட்டியந்தோட்டை பிரதேச செயலகத்துக்கு தொலைபேசி எடுத்துக் கேட்கின்றேன் என்று ஒரு பாடசாலை அதிபர் போல அங்கு கதைவிட்டிருந்தார். இது எந்தளவுக்கு ஏற்புடையது.? இது பற்றி சமூக ஊடகங்ள் கடும் விமர்சனங்களை மேற்கொண்டிருந்தன.
ரணிலும் அவரது சகாக்கங்களும் கூடி பேரழிவு மீட்சி பற்றி கூட்டம் போட்டு பேசி இருக்கின்றார்கள். அதனை ஊடகங்களுக்கு சொல்ல வந்த நவின் திசநாயக்க அரசு பாதிக்ப்பட்டவர்களுக்கு வீடுகளை இழந்தவர்களுக்கும் குறைந்தது ஒரு இலட்சம் இரண்டு இலட்சம் ரூபாய்களாவது வழங்க வேண்டும் என்று அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த மனிதன் இந்த உலகத்திலே இல்லையோ என்றுதான் சமூக ஊடகங்கள் அவரிடம் கேள்விகளை எழுப்பி இருந்தன.
அரசு ஐந்து மில்லியன் கோடி என்று அறிவித்திருக்கின்றபோதுதான் ரணிலின் சாக ஒன்று இரண்டு என்று பேசிக்கொண்டிருக்கின்றார் .இது என்ன நகைச்சுவை. மனிதன் அது தான் அரச அறிவிப்புக்கு முன்னர் சொன்ன கதை என்று கூறுகின்றாராம்.? அப்படியாக இருந்தால் அவர்கள் அதிகாரத்தில் இருந்திருந்தால் உதவித் தொகை அவ்வளவுதான்.
அவர்களின் மற்றுமொரு சாகா டாக்டர் ராஜித சேனரத்தன 120 பில்லினை வைத்துக் கொண்டு 300 பில்லின் நிவாரனம் என்று அரசு கூறுகின்றது என்று சாடுகின்றார். இப்படி எல்லாம் கூட்டம் போட்டு நேரத்தை வீணடிக்காது பாதிக்பட்டவருகளுக்கு ஒரு பத்துப் பார்சல் சோறாவது கொண்டு போய் கொடுங்கள் என்று ஜனாதிபதி அனுர ரணிலிடம் பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்திருந்தார்.அதே நேரம் அரசிடம் நிறையவே காசு கையில் இருக்கின்றது இப்படிக் கூறுகின்றார் சஜித் தரப்பு பொருளாதார விற்பண்ணர் அர்சத டி சில்வா அவர் இப்படி ஊடகங்கள் முன் பேசும் போது ஹக்கீமும் பக்கத்தில் நின்று கொண்டிருந்தார்.
இந்தக் கருத்துக்களைப் பார்க்கின்ற போது எதிரணியினர் தர்க்கங்கள் ஒன்றுக் கொன்று இசைவாக இல்லை. அவர்கள் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி அரசை விமர்சித்துக் கொண்டிருக்கின்றார். அதேநேரம் ஐதேக. செயலாளர் தலதா இயற்கைக்கு மாற்மான ஒரு கருத்தை இந்தப் பேரழிவு விவகாரத்தில் சொல்லி இருக்கின்றார்.
மொட்டுக் கட்சிக்காரர்களிடம் கோடி கோடியாய் பணம் இருந்தாலும் அதனை இந்தப் பேரழிவுக்கு வெளியே எடுக்க அவர்கள் தயாராக இல்லை. இந்த பேரழிவு நேரத்தில் அவர்கள் தமது கட்சியை மக்களிடம் எடுத்துக் கொண்டு போக முடியும்.! ஆனால் அவர்களின் கடந்தகால செயல்பாடுகள் மீது குடிமக்களுக்கு நல்லெண்ணம் கிடையாது.?
அதே நேரம் ஜனாதிபதி அதிரடியாக பாதிக்கப்பட்ட இடங்களுக்குப் போய் மக்களைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றார். மாவட்ட கூட்டங்களை நடாத்தி மிகவும் அறிவுபூர்வமாகவும் விவகாரங்களை ஆராய்ந்து அதற்கான தீர்வுகளுக்கு அதிகாரிகளைப் பணித்துக் கொண்டிருப்பதை பரவலாகப் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. சில இடங்களில் ஜனாதிபதி அனுரவை பாதுகாப்புடன் இருந்து கொள்ளுமாறு குடிமக்கள் அவரிடத்தில் நேசமான வேண்டுகோள்களை விடுத்துக் கொண்டு வருகின்றார்கள். எச்சரித்து வருகின்றார்கள். இது அவரிடத்தில் மக்கள் மீது இருந்து வருகின்ற நல்லெண்ணத்தின் வெளிப்பாடாகும்.அத்துடன் ஜனாதிபதிக்கு உயிராபத்துக்கள் இருக்கின்ற என்பதனை பாரமக்கள் கூட தெரிந்துதான் வைத்திருக்கின்றார்கள்.
உமந்தாவே-சமந்த பத்ர (அவுஸ்திரேலிய) என்ற பௌத்த தேரர் பேரழிவுகளுக்காக எவரும் அனுர அரசுக்கு காசோ உதவிகளையோ கொடுத்து விடாதீர்கள். தான் விரைவில் ஒரு நிதியை ஆரம்பிக்க இருப்பதாகவும் அதற்கு எல்லோரும் காசு போடுகள். நான் நாட்டை மீட்டெடுக்கின்றேன் என்று பகிரங்கமாக கேட்டிருக்கின்றார். அவரை இப்போது சமூக ஊடகங்கள் மிகவும் மோசமாக கிழித்துத் தொங்கவிட்டுக் கொண்டிருக்கின்றன.
கந்தேநுவர பொலிஸார் தமக்கு வானூர்தியில் இருந்து கொண்டுவரப்பட்ட நிவரானப் பொருட்களைக் கொள்ளையடித்து விட்டார்கள் என்று சில நூறுபேர் அந்தப் பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் நின்று கொண்டு போராட்டம் நடாத்திக் கொண்டிருந்தனர். இதன் பின்னணியில் அரசியல் முகவர்கள் இருந்தார்கள் என்றும் ஒரு கதை. சில ஊடகங்கள் சின்ன ஒரு செய்தியை தவறாக மக்கள் மயப்படுத்தும் ஒரு செயல் இது என்றும் சொல்லப்பட்டிருக்கின்றது.
அதே போன்று கொழும்பில் ஒரு பெண் கிராம அதிகாரி நிவாரனத்துக்கு கிடைத்த பொருட்களை கள்ளத்தனமாக தனது வீட்டில் கொண்டு போய் சேர்த்துவிட்டார். அதனை நாம் கையும் மெய்யுமாகப் பிடித்துவிட்டோம் என்ற ஒரு ரகலையும் அண்மையில் நடந்திருந்தது. சில இடங்களில் இன்னும் பாதிக்கப்பட்ட மக்களை அதிகாரிகள் வந்து பார்க்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்களும் இருக்கின்றது.
கெலிஓயா-கலுகமுவ கிராம அதிகாரி தாய்மை அடைந்திருப்பதால் கடமை லீவில் இருப்பதாகவும் அதனால் அதற்கு மாற்றீடு செய்யப்படாததால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல நூறு குடுபங்களுக்கு நிவாரனங்கள் பெற்றுக் கொள்வதில் பெரும் நெருக்கடிகள் இருப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் இருந்து வருகின்றது.
அவை அப்படி இருக்க இதுவரை இறப்புக்கள் 641. காணாமல் போனோர் 191.மொத்தம் 832. பாரிய மண்சரிவுகள் 1241. கண்டியில் மட்டும் 300க்கும் மேல் என்று அமைகின்றது. பதினெட்டு (18) இலட்சம் போர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். முகாம்களில் இருப்போர் 85000 பேர்.
ஒரு பிரபல சோதிடர் அரசின் செயல்பாடுகளை குழப்பி அடிக்கின்ற வேலைகளை கடந்த அரசுக்கு விசுவாசமான அதிகாரிகள் செய்ய வாய்ப்புக்கள் இருக்கின்றன. இதனையும் அனுர தெரிந்து கொள்ள வேண்டும். அதே நேரம் இந்த சோதிடர்களுக்கு முன்கூட்டி ஏன் பேரழிவை கண்டு கொள்ள முடியாமல் போனது என்ற கேள்வியும் இருக்கின்றது. காலநிலை சீர்கெட்டு மீண்டும் பல இடங்களில் மழை கொட்டிக்கொண்டிருக்கின்றது.
என்னதான் அரசும் தொண்டு நிறுவனங்களும் தமது பணிகளைச் செய்தாலும் அழிவு விசலமாக இருப்பதால் அதனை சீர்செய்யும் போது சிக்கல்கள் தாமதங்கள் குறையபடுகளும் ஏற்பட வாய்ப்புக்கள் இல்லாமல் இல்லை. இதனைப் பாதிக்கப்பட்ட மக்களும் புரிந்து கொள்ள வேண்டும். அதே நேரம் அரசும் நிருவாக இயந்திரமும் நிஜமாக பதிக்கப்பட்ட மக்களுக்கு நல்ல பாதுகாவலனாக இருந்து தனது பொறுப்பை நிறைவேற்ற வேண்டும்.





