சாம்பலும் கானலும்!

-நஜீப் பின் கபூர்-

சாம்பலுக்கும் கானலுக்கும் அப்படி என்னதான் தொடர்புகள் இருக்கின்றன என்று ஒருவர் சிந்திக்கலாம். ஆனால் இலங்கை அரசியலில் இந்த இரண்டுக்கும் இடையே நெருக்கமான ஒரு உறவு முறை இருக்கின்றது அல்லது வளர்ந்து வருகின்றது என்று சொல்ல முடியும்.

முதலில் நாம் இங்கு குறிப்பிட்டிருக்கின்ற சாம்பல் பற்றிப் பார்ப்போம் பீனிக்ஸ் பறவைகள் சாம்பல் மேட்டிலிருந்துதான் பிறப்பெடுக்கின்றன என்று சொல்லப்படுகின்றது. அதே போன்று தற்போது ராஜபக்ஸாக்களும் அல்லது அவர்களுடைய மொட்டுக் கட்சியும் சாம்பலில் இருந்து மீள் எழ இருப்பதாக அவர்களே பகிரங்கமாக கூறிக் கொண்டு வருகின்றார்கள். சில தினங்களுக்கு முன்பு களுத்துறையில் இருந்து தாங்கள் மீள் எழுவதாக சொன்னார்கள்-கூட்;டம் போட்டார்கள்.

அந்தக் கூட்டம் சர்ச்சைக்குறிய அரசியல்வாதி ரோஹித்த அபேகுனவர்தன (தங்கத்தின்) தலைமையில் நடந்தது. அதனைத் தொடர்ந்து ராஜபக்ஸாக்களின் முக்கிய விசுவாசிகளில் ஒருவரான மஹிந்தானந்த அலுத்கமகே தலைமையில் நடந்தது. அந்தக் கூட்டத்தில் நாவலப்பிட்டிய தேர்தல் தொகுதி செயல்பாட்டாளர்கள் மட்டும் கலந்து கொண்டதாகச் சொல்லப்பட்டது.

கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது சஜித் பணிப்புரையில் அந்த அணி மொட்டுக் கூட்டம் நடந்த இடத்திலிருந்து சில நூறுமீட்டர் தொலைவில் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதில் அங்கு இருநூறுபேர் வரை கலந்து கொண்டிருந்தனர். அவர்களைத் தடுப்பதற்கு ஆயிரம் வரையிலான பொலிசார் அங்கு குவிக்கபட்டிருந்தனர்.இந்தக் கூட்டத்துக்குப் போன இடத்தில் மஹவலி ஆற்றில் குளிக்கப் போய் ஒரு பெண் நாடாளுமன்ற உறுப்பினர் நீரில் மூழ்கி மயிரிலையில் சக நடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் காப்பாறியதும் தெரிந்ததே.

கடந்த வியாழக் கிழமை புத்தளம் ஆரச்சிக்கட்டுவை என்ற இடத்தில் மற்றுமொரு சர்ச்சைக்குறிய நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிசந்த தலைமையில்  சாம்பலில் இருந்து எழுவோம் என்ற தொணிப் பொருளில் ஒரு கூட்டத்தை அங்கு நடாத்தி இருக்கின்றார் அதிலும் சில ஆயிரம் பேர் கலந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் எப்படி அழைத்த வரப்பட்டார்கள் அதற்காக அவர்கள் பெற்ற சலுகைகள் வரப்பிரசாதங்கள் என்ன என்பதையெல்லாம் நாம் இங்கு பேசவரவில்லை.

சாம்பலில் இருந்து பீனிக்ஸ் பறவைகள் போல் ராஜபக்ஸாக்களும் மொட்டுக் கட்சியினரும் பறக்க முனைவதை தற்போது பார்க்க முடிகின்றது. தமக்கு எதிராக மக்கள் தெருவில் இறங்கிய போது ஓடி ஒழித்த ராஜபக்ஸாக்கள் தற்போது மீண்டும் பொது வைபவங்களில் மெல்ல மெல்ல தலை காட்டத் துவங்கி இருக்கின்றார்கள்.

சாம்பலில் இருந்து எழுவோம். என்று மொட்டுக் கட்சியினர் சொல்வதில் இருந்து அவர்கள் இந்த நாட்டு மக்கள் மனங்களில் இருந்து விரட்டியடிக்கப்பட்;தை பகிரங்கமாக ஏற்றுக் கொள்வது தெரிகின்றது. அடுத்து அவர்கள் மீண்டும் தமது பலத்தை அரசியலில் காட்சிப்படுத்துவதற்கான ஒரு முயற்சியிலும் இறங்கி இருப்பதும் தெரிகின்றது.

இவர்களுக்கு இலங்கை அரசியலில் மீண்டும் பிரவேசிப்பதற்கு தற்போதய ஜனாதிபதி ரணில்தான் களம் அமைத்துக் கொடுக்கின்றார் என்பது அனைவரும் அறிந்த கதை. தற்போது ஊடகங்களிலும் அரசியல் அரங்குகளிலும் பகிரங்கமாக பேசப்படுகின்ற செய்திகள் சாதாரண குடிமக்களுக்கு பிழையான தகவல்களை அல்லது வழிகாட்டல்களையே சொல்லிக் கொண்டு வருகின்றன.

திரை மறைவில் ரணில் மற்றும் ராஜபக்ஸாக்களிடத்தில் அந்தரங்கத்தில் நடக்கின்ற சந்திப்புக்களும் தீர்மானங்களும்தான் நாட்டினதும் பொது மக்களின் தலைவிதியை தீர்மானிக்கின்றன என்பதை நாட்டிலுள்ள பெரும்பான்மை மக்கள் இன்னும் புரிந்து கொள்ளாமல் இருக்கின்றார்கள்.

எனவேதான் பொதுத் தேர்தல் அரசியல் யாப்புத் திருத்தங்கள் தேர்தல் முறைகளில் திருத்தங்கள் என்றறெல்லாம் பேச்சுக்களும் நிகழ்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றது. இது போன்ற ஒரு செய்திதான் மொட்டுக் கட்சியில் இருக்கின்ற பலர் ரணில் தலைமையில் கூட்டணி சமைக்கத் தயாராக இருக்கின்றார்கள் என்று சொல்லப்படுக்கின்ற செய்திகள்.

இவை எல்லாம் வெரும் கற்பனைக் கதைகள் என்று நாம் உறுதியாக சொல்லி வைக்கின்றோம். சந்தர்ப்பவாத அரசியலில் தற்போது குறுக்கு வழியில் ரணில் ஜனாதிபதியாக இருந்தாலும் வங்குரோத்து ஐக்கிய தேசியக் கட்சியுடன்  மொட்டுக் கட்சியில் இருக்கின்ற எவராவது அதில் இணையவோ கூட்டணிக்கு ஆர்வமாக இருக்கின்றார்கள் என்றால் அவர்களை மன நலம் பாதிக்கப்பட்பட ஒரு கூட்டமாகத்தான் இனம் காட்ட வேண்டி இருக்கின்றது.

ஆனால் ராஜபக்ஸாக்களும் மொட்டுக் கட்சியினரும் மீண்டும் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற முனைவது தெரிந்ந விடயமாக இருந்தாலும் அவர்களால் சாம்பல் மேட்டிலிருந்து பீனிக்ஸ் பறவைகள் போல பறக்க முடிகின்றதோ இல்லையோ என்பது நாட்டில் வாழ்கின்ற பொது மக்களின் கரங்களிலதான்; இருக்கின்றது. இலங்கை போன்ற ஆசிய ஜனநாயக நாடுகளில் அரசியல் செய்வதற்கு நிறை பணம் வேண்டும்.

அந்தப் பணப் பலம் தாராளமாகவே ராஜபக்ஸாக்களிடத்திலும் அவர்களுக்கு நெருக்கமானவர்களிடத்திலும் இருப்பதால் எப்போது தேர்தல் நடந்தாலும் அது என்ன தேர்தலாக இருந்தாலும் அவர்கள் அதில் குறிப்பிடத்தக்க வாக்குகளைப் பெறுவார்கள் என்பது நமது சமகாலக்  கணிப்பாக இருக்கின்றது.

ரணிலின் ஐதேக போல் அவர்கள் படுதோல்வியைத் தழுவமாட்டார்கள்.  கடந்த காலங்களில் பெரும்பான்மை சமூகத்தின் வாக்குகளை பெற்றுக் கொள்ள இனவாதத்தையும் ஒருவகை அடக்கு முறையையும் இவர்கள் பாவித்தார்கள். இந்த முறை இவர்கள் என்ன உத்திகளைக் கையாளப் போகின்றார்கள் என்பதனை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அடுத்து மஹிந்த ராஜபக்ஸ நாம் தவறுகளை உணர்ந்திருப்பதாகவும் பகிரங்கமாகவே தமது ஆதரவாலர்கள் மத்தியில் பேசி வருகின்றார். சாம்பலில் இருந்து பீனிக்ஸ் பறவைகள் மொட்டுக் கட்சியல் இருந்து பறக்கின்றதோ இல்லையோ அடுத்து வருகின்ற தேர்தல்களில் தனது வாரிசுகளுக்கு களத்தை அமைத்துக் கொடுக்கின்ற முயற்சியில்தான் மஹிந்த ராஜபக்ஸ மிகுந்த ஆர்வத்தில் இன்று காய் நகர்த்தி வருகின்றார்.

இலங்கையில் எப்போது தேர்தல்கள் வரும் என்பது பற்றிய அட்டவனைகள்-விதிகள் இருந்தாலும் இந்த விவகாரத்தில் ராணில் மற்றும் ராஜபக்ஸாக்களின் நலன்களை மையமாக வைத்துத்தான் அதற்கான திகதியும் நேரமும்  முடிவாகும். அப்படி நடக்கின்ற தேர்தல்களில் ராஜபக்ஸக் குஞ்சுகளுக்கு எவ்வளவு தூரம் உயரப் பறக்க மக்கள் அனுமதிக்கின்றார்கள் என்பதனையும் பார்க்க முடியும். இது தெற்கு அரசியலில் சம்பல்-பீனிக்ஸ் கதை.

கானல் கதை

இந்தக் கானல் பற்றிய கதை மிகவும் வேதனையானது கேவலமானது என்பதுதான் நமது கருத்து. நாடு விடுதலை பெற்றதிலிருந்து பேரினத்தார் இந்த நாட்டில் வாழ்கின்ற சிறுபான்மை சமூகங்களை வஞ்கக் கண்னோட்டத்தில்தான் நடாத்தி வந்திருக்கின்றார்கள் என்பது அந்த சமூகம் சார்ந்த கருத்ததாக இருக்கின்றது. பேரினத்தார் சிறுபான்மை சமூகங்களை அப்படி நடத்துவது ஒன்றும் அதிசயமோ அல்லது புதிய செய்தியோ அல்ல. அவர்கள் மீதுள்ள அச்சம் பயம் காரணமாக அப்படி நடந்து கொள்கின்றார்கள் என்றும் எடுத்துக் கொள்ள முடியும்.

ஆனால் இங்கு இந்தக் கானல் பற்றிய கதை முற்றிலும் வேறுபட்டது. அப்படியான ஒரு கதையை மீண்டும் கடந்த வாரம் கேட்க முடிந்தது. இலங்கையில் வாழ்கின்ற தமிழர்கள் புத்திகூர்மை மிக்கவர்கள் அறிவு ஜீவிகள் என்று கருத்து உலகம் பூராவும் பரவலாக இருந்து வருகின்றது. அப்படிப்பட்ட ஒரு சமூகத்தை அந்த சமூகத்தை சார்ந்த அரசியல் தலைமைகளே ஏமாற்றிக் கொண்டிருப்பது பற்றி கதைதான் இந்த கானல் பற்றி நமது கதை.

தமக்கு இழைக்கப்படுக்கின்ற அநீதிகள் தொடர்பாக ஒரு காலத்தில் அந்த சமூகத்தை சேர்ந்த தலைமைகள் அகிம்சை வழியில் போராட்டங்களை நடத்தியபோது கடும் போக்குப் பேரித்தார் அவர்கள் மீது தாக்குதல்களை நடாத்தி அவர்களை மேலும் ஒடுக்கவும் அடக்கவும் முனைந்ததால் இளையோர் ஆயுதப் போராட்டத்தில் குதிக்க வேண்டி வந்தது. நாடு ஏறக்குறைய மூன்று தசாப்தங்கள் வரை இரத்த வெள்ளோட்டத்தில் மிதந்து கொண்டிருந்தது.

பெரும் அழிவுகளும் உயிர்ப் பலிகளும் நிகழ்ந்ததுடன் பொருளாதாரத்திலும் பெரும் அழிவுகள் நடந்தது. அந்த நிகழ்வுகள் நமது அரசியலில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தி இருந்ததும் உலகமே அறிந்த செய்தி. அகிம்சை வழியில் அடைய முடியாவிட்டால் ஆயுத பலத்துடன் மோதி உரிமைகளை வென்றெடுக்க முனைவதும் ஒன்றும் புதிய கதையுமல்ல உலகில் பல இடங்களில் இப்படியான போரட்டங்கள் நடந்திருக்கின்றன. இன்றும் பல இடங்களில் அப்படியான போராட்டங்கள் நடந்து கொண்டும் வருகின்றன.

இப்படியான போராட்டங்களும் அதன் மீதான தாக்குதல்களும் கூட ஏதோவகையில் யதார்த்தமானது என்றும் எடுத்துக் கொள்ள முடியும். ஆனால் சொந்த இனத்துக்கே தண்ணி காட்டுவது அல்லது கானலை காட்டி அந்த சமூகத் தலைமைகளே ஏமாற்றிப் பிழைப்பு நடத்துவது என்பது மிகவும் கேவலமான செயல். மறுபுறத்தில் மிகப் பெரும் துரோகச் செயல் என்பதிலும் மாற்றுக் கருத்துக்கள் இருக்க முடியாது. இப்படிப்பட்ட ஒரு அரசியலைத்தான் தற்போது சமூகத்தின் மீட்பாளராக தம்மைக் காட்டிக் கொண்டிருப்பவர்கள் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

இந்த விவகாரம் தொடர்பாக நேரடியாக கருத்துச் சொல்வதாக இருந்தால் பெரியவர் ஐயா சம்பந்தன் இதே வருகின்றது அதோ வருகின்றது தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு என்று இந்தத் தீபாவளி அந்தப் பொங்கள்-புத்ததாண்டு என்று இல்லாத ஒன்றுக்கு உருவம் கொடுத்துக் கொண்டிருந்தார். இது அவரது அரசியல் முதிர்ச்சிக்கு உகந்த செயல் அல்ல. இல்லாத ஒன்றுக்கு ஏன் அவர் உருவம் வரைந்து தமிழ் சமூகத்தை ஏமாற்றிக் கொண்டிருந்தார் என்ற விவகாரத்தில் தமிழ் புத்திஜீவிகளும் சமூகமும் கேள்வி கேட்காமல் விட்டதால் தான் இப்படியான கதைகளை அரசியல்வாதிகள் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்த முறை மூத்தவர் இது பற்றி பேசாது அந்தக் கட்சியின் அரசியல் வல்லுனர் சுமந்திரனை வைத்து சமூகத்துக்கு புதுக்கதை சொல்லி வருகின்றார். அதைப்பறித்தான் நமது இந்த விமர்சம் அமைகின்றது.  பல வருடங்களுக்கு முன்பு பெரியவர் தமிழருக்கு அரசியல் தீர்வு என்று கதை சொன்ன போது இது நடக்கின்ற விடயம் அல்ல பெரியவர் சம் ஐயா சமூகத்தை ஏமாற்றுக்கின்றார் என்று அன்றே நாம் உறுதிபட சொல்லி இருந்தோம். இப்போது ரணில் மீது மிகுந்த விசுவாசத்தில் அரசியல் விட்பண்ணர் சுமந்திரன் விடுகின்ற அரசியல் தீர்வு பற்றிய கதையை நம்பி தமிழ் சமூகத்தினர் ஏமாறக் கூடாது என்று நாம் இந்த முறையும் கடுமையாக எச்சரிக்கின்றோம். இது நடக்கின்ற கதையே அல்ல.

புத்திஜீவிகள் அறிவு ஜீவிகள் என்று பேசப்படுகின்ற தமிழ் சமூகம் இந்த சுற்றிலும் ரணில் தீர்வு தருவார் என்ற சுமந்திரன் கதையை நம்பி மோசம் போனால் அதனை என்ன வென்று சொல்வது.? ரணில் ஜனாதிபதியாக கதிரையில் அமர்த்தப்பட்டிருப்பதே ராஜபக்ஸாக்களின் நலன்களைப் பேணுவதற்கு என்பதனை தமிழ் சமூத்தின் அரசியல் தலைமைகள் புரியாமல் இருக்கின்றதா அல்லது புரிந்து கொண்டு பிழைப்புக்காக காலத்தை ஓட்டுகின்றார்களா என்று நாம் கேள்வி எழுப்புகின்றோம்.

முற்றிலும் இந்த நாட்டில் சிறுபான்மை சமூகங்களின் தயவில் நல்லாட்சி அதிகாரத்துக்கு வந்த போது இந்தியாவையும் துணைக்கு வைத்து அரசியல் தீர்வு விவகாரத்தில் காய் நகர்த்தி இருக்க வேண்டியவர்கள் அன்று கோட்டைவிட்டு  இன்றும் அப்பாவி தமிழ் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.

ரணிலின் ஜனாதிபதிப் பதவி என்பது நீர்க்குமிலி போன்றது அது எந்த நொடியில் வேண்டுமானாலும் காணாமல் போகலாம். அதன் ஆயுள் ராஜபக்ஸாக்களின் கைகளில்தான்  இருக்கின்றது அப்படிப்பட்ட ஒரு மாயையிடம்-பொம்மையிடம் அரசியல் தீர்வை எதிர்பார்ப்பது கோமாளிகள் பார்க்கின்ற ஒரு கூத்தாகத்தான் இருக்க முடியும் என்பது நமது வாதம்.

ராஜபக்ஸாக்கள் தமது தனிப்பட்ட அரசியல் நலன்களுக்காக இந்த நாட்டில் வாழ்கின்ற சிங்கள சமூகத்தை இன்றுவரை ஏமாற்றி அதில் வெற்றியும் பெற்றிருந்தாலும் இப்போது அந்த சமூகம் ஓரளவுக்கு விளிப்படைந்து விட்டது என்றுதான் தெரிகின்றது. ஆனால் தமது அரசியல் தலைமைகள் தொடர்ந்தும் தம்மை ஏமாற்றுவதை இந்த நாட்டு சிறுபான்மை சமூகங்கள் எப்போது புரிந்து கொள்ளப் போகின்றது என்று கேட்க வேண்டி இருக்கின்றது. மொத்தத்தில் பீனிக்ஸ் கதையும் கானல் இருண்டுமே மாயைகள் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்!

நன்றி- 30.10.2022 ஞாயிறு தினக்குரல்

 

 

Previous Story

தேர்தல் திருத்தம் ......?

Next Story

தென் கொரிய நெரிசலில் மரணமானவர் பற்றிய தகவல்