என்ன அக்கிரமம் இது? அஃப்ரீன் பாத்திமா வீ டு தரைமட்டம்  – யார் அஃப்ரீ…!

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் உள்ள மாணவர் தலைவர் அஃப்ரீன் பாத்திமா வீட்டை அரசு இடித்துத் தரைமட்டமாக்கியுள்ளது. இவரது தந்தை ஜாவேத் முகமது வெல்ஃபர் பார்ட்டி ஆஃப் இந்தியா என்ற கட்சியின் தலைவர்.

அஃப்ரீன் பாத்திமா

முகமது நபி குறித்து பாஜக செய்தித் தொடர்பாளராக இருந்த நூபுர் ஷர்மா தெரிவித்த ஆட்சேபகரமான கருத்துகளைக் கண்டித்து, நடவடிக்கை எடுக்கக் கோரி வெள்ளிக்கிழமை பிரயாக்ராஜில் நடந்த போராட்டத்தில் வெடித்த வன்முறைக்கு சதித்திட்டம் தீட்டியதாக ஜாவேத் மீது அரசு குற்றம்சாட்டுகிறது.

தற்போது போலீஸ் பிடியில் உள்ள ஜாவேதுக்கு அஃப்ரீன் ஆலோசனை வழங்கியதாகவும் போலீஸ் குற்றம்சாட்டுகிறது.

இந்தப் பின்னணியில் பிரயாக்ராஜ் மாநகராட்சி, அஃப்ரீன் பாத்திமாவுக்கு சனிக்கிழமை இரவு ஒரு நோட்டீசை அனுப்பியது. அதில் ஞாயிற்றுக்கிழமை காலை அவரது வீட்டை இடிக்க இருப்பதாகவும், எனவே, வீட்டை காலி செய்யும்படியும் அதில் கூறப்பட்டிருந்தது.

அதன்படி மறுதினம் புல்டோசர் கொண்டு அவரது வீடு முழுவதும் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது.

உ.பி. அரசின் இந்த செயல், ‘சட்ட விரோதம்’ என்றும், ‘புல்டோசர் அரசியல்’ என்றும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

யார் இந்த அஃப்ரீன்?

வெல்ஃபர் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் மாணவர் பிரிவான ஃப்ராட்டர்னிட்டி மூவ்மென்ட்டின் (சகோதரத்துவ இயக்கம்) தேசிய செயலாளராக இருக்கிறார் அஃப்ரீன் பாத்திமா.

இவர், 2021ஆம் ஆண்டு டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பட்டமேற்படிப்பு முடித்தார். படிக்கும்போது பல்கலைக்கழக மாணவர் சங்கத்தில் கவுன்சிலராகத் தேர்வு செய்யப்பட்டு பணியாற்றினார்.

வீடு இடிப்பு

அதற்கு முன்பாக அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் பெண்கள் கல்லூரியில் படித்தபோது கல்லூரி மாணவர் சங்கத் தலைவராக இருந்திருக்கிறார்.

கர்நாடகாவில் எழுந்த ஹிஜாப் சர்ச்சை, புல்லிபாய் செயலி மூலம் முஸ்லிம் பெண்களை இணையத்தில் ஏலம் விட்ட சல்லி டீல் சர்ச்சை, குடியுரிமைத் திருத்தச்சட்டம் ஆகிய விவகாரங்களின் போது போராட்ட செயல்பாடுகளில் ஈடுபட்டவர் அஃப்ரீன் பாத்திமா.

அவரும் அவரது சகோதரி சுமையாவும் சேர்ந்து பெண்களுக்கான ஒரு அமைப்பை உருவாக்கினர்.

விமர்சனங்கள்

அஃப்ரீன் மற்றும் அவரது தந்தை ஜாவேத் வீட்டை இடித்துத் தரைமட்டமாக்கிய உ.பி. அரசின் செயலை பலரும் கண்டித்து வருகிறார்கள்.

ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் தால் மனோஜ் ஜா இது பற்றிப் பேசும்போது, “இது சட்ட நடைமுறைகளை இடித்துத் தள்ளுவது போன்றது’ என்று குறிப்பிட்டார். நிரூபிக்கப்படாத குற்றங்களுக்காக, ‘கும்பல் தண்டனை’ என்ற முறையில் இப்படி வீடுகளை இடிப்பதற்கான ஊக்கத்தை ஹிட்லரின் நாஜி மாடலில் இருந்து எடுத்துக்கொண்டுள்ளனர்.

ஒரு தரப்பு இதனை கொண்டாடிக் கொண்டிருக்கிறது. புல்டோசர்கள் என்பவை பேரளவு அநீதியின் சின்னமாகியுள்ளன. இதனை தொடர அனுமதிக்க முடியாது என்று அவர் கூறியுள்ளார்.

மக்களின் வீடுகளை புல்டோசர் கொண்டு இடிக்கும் உத்தர பிரதேச அரசின் இந்த பகிரங்கமான இந்த விதிமீறலை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். நிர்வாகத்துறையே போலீசாகவும், வழக்குரைஞராகவும், நீதிபதியாகவும் இருப்பதை அனுமதிக்க முடியாது என்று கூறினார் முன்னாள் ஒன்றிய நிதியமைச்சரும் திரிணமூல் தேசியத் துணைத் தலைவருமான யஷ்வந்த் சின்ஹா.

Previous Story

சதி காரர்களும் டீல் காரர்களும் மெகா கூட்டணி

Next Story

அதானிக்கு மின் திட்டம்: கோட்டாபய-மோதியின் அழுத்தம்- அதிகாரி ராஜினாமா