இலங்கையில் அதானியும், மோடியும் செய்யும்  அடாவடிகள் – காங்கிரஸ் குற்றச்சாட்டு

இலங்கையில் அதானி குழுமத்துக்கு ஒப்பந்தங்களை பெற்றுத்தர பிரதமர் மோடி ஆதரவு திரட்டுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது.  காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது

13-ந் தேதி நாடாளுமன்றம் கூடுகிறது. அங்கு எங்கள் குறுக்கீடுகள், சபை குறிப்பில் இருந்து நீக்கப்படும். ஆனால், பிரதமர் மோடிக்கு நான் இதுவரை விடுத்த 78 கேள்விகளை ஒருபோதும் நீக்க முடியாது. இப்போது, இலங்கையில் அதானி குழுமத்துக்கு ஒப்பந்தங்களை பெற அவர் எப்படி பாடுபட்டார் என்பதை பார்ப்போம்.

2019-ம் ஆண்டு மே மாதம், இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்கே இருந்தபோது, கொழும்பு தெற்கில் உள்ள கிழக்கு கன்டெய்னர் முனையத்தை மேம்படுத்த இந்தியா, ஜப்பான், இலங்கை அரசுகளுக்கிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. பங்குதாரர் ஓராண்டு கழித்து, பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே, அந்த துறைமுகத்தை இயக்குவதற்கு அதானி போர்ட்ஸ் நிறுவனத்தை இந்தியா தேர்வு செய்துள்ளதாக அறிவித்தார். பின்னர், எதிர்பாராதவிதமாக அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.

எனவே, அதற்கு பதிலாக கொழும்பு மேற்கு கன்டெய்னர் முனையத்தை கட்டி இயக்குவதற்கான 35 ஆண்டு குத்தகையை இந்தியா, ஜப்பான் அரசுகளுக்கு அளிப்பதாக ராஜபக்சே அரசு அறிவித்தது. 2021-ம் ஆண்டு அந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. இந்தியா தனது பங்குதாரராக அதானி போர்ட்ஸ் நிறுவனத்தை நியமித்து இருப்பதாக இலங்கை மந்திரிசபை செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

இதற்கிடையே, கடந்த 5-ந் தேதி பேட்டி அளித்த இலங்கை வெளியுறவு மந்திரி அலி சாப்ரி, இது அரசுக்கும், அரசுக்கும் இடையிலான துறைமுக திட்டம் என்று கூறினார். அரசுகளுக்கிடையிலான ஒப்பந்தத்தில், அதானி நிறுவனத்தை என்ன அடிப்படையில் தேர்வு செய்தீர்கள்? மற்ற இந்திய நிறுவனங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டதா? அல்லது நெருக்கமான நண்பர்களுக்கு மட்டும் இதை ஒதுக்கி விட்டீர்களா?

இலங்கை மன்னார் மாவட்டத்தில் 500 மெகாவாட் காற்றாலை மின்திட்டத்துக்கான ஒப்பந்தத்தை அதானி குழுமத்துக்கு பெற்றுத்தர பிரதமர் மோடி அழுத்தம் கொடுத்துள்ளார். அந்த ஒப்பந்தத்தை அதானி குழுமத்துக்கு அளிக்குமாறு இந்திய பிரதமர் தன்னை நிர்பந்திப்பதாக அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு ஜூன் 10-ந் தேதி, இலங்கை மின்சார வாரிய முன்னாள் தலைவர் பெர்டினாண்டோ, இலங்கை நாடாளுமன்றத்தில் இத்தகவலை தெரிவித்தார். பின்னர் அவர் ‘பல்டி’ அடித்தபோதிலும், இந்த தொடர்பு அம்பலமாகி விட்டது. இந்திய மக்களுக்காக பணியாற்றுவதை விட தன்னுடைய நண்பர் அதானிக்கு ஒப்பந்தங்களை பெற்றுத்தருவதுதான் பிரதமர் மோடியின் முக்கிய வேலையா? அவர் தனது மவுனத்தை கலைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Previous Story

பேராசிரியர் தவளையான கதை! 

Next Story

சவூதிக்கும், ஈரானுக்கும் வாழ்த்து- அலி சப்ரி