நஜீப் பின் கபூர்
நன்றி:23.08.2026 ஞாயிறு தினக்குரல்
*******************************************
நீதிபதிகள் வயது: உத்தேச தீர்ப்பு எப்படி அமையப்போகிறது!
நரேந்திர மோடியும் அனுரகுமார திசாநாயகாவும் ஒரு பார்வை!
*******************************************

மேற்சொல்லி இருக்கின்ற அரசு சரிவு மற்றும் நீதிபதிகளின் வயது தொடர்பான இரு தலைப்புக்கள்-குறிப்புக்கள் தனித்தனியாக தெரிந்தாலும் அவை இரண்டுக்குமிடையில் ஒரு தொடர்பு இருக்கின்றது. இது முட்டையின் மஞ்சள் கருவுக்கும் வெள்ளைக் கருவுக்குமிடையில் இருப்பதைப் போல மெல்லியதாகவோ அல்லது அதனை விட சற்றுக் கனதியானதாகவோ இருக்கலாம். இப்போது இந்தத் தலைப்புக்கள் பற்றி பார்ப்போம்-பேசுவோம்.
அரசின் செல்வாக்கு இன்று என்ன நிலையில் இருக்கின்றது. இது பற்றிய புதிய தகவல்கள் என்ன சொல்கின்றன. அதில் யதார்த்தங்கள் ஏதும் இருந்து வருகின்றனவா? என்பதுதான் இந்தக் கட்டுரையின் கருப்பொருளாக இருந்தாலும். அதற்கு முன்னர் இன்று நீதி மன்றத்தில் வந்திருக்கின்ற நீதிபதிகளின் வயது தொடர்பான சில குறிப்புக்களை முதலில் வாசகர்களிடத்தில் சொல்லிவிட வேண்டும்போல் தோன்றுகின்றது.
அரசுக்கும் சட்டத்தரணிகளில் கணிசமான ஒரு தொகையினருக்குமிடையே நடக்கின்ற இந்தப் போராட்டத்தில் ஒட்டு மொத்தமாக எதிரணிகள் அனைத்தும் போல இதில் சட்டத்தரணிகள் பக்கத்தில் நிற்கின்றார்கள். எதிரணியினரின் இந்த நிலைப்பாட்டுக்கு என்ன காரணம் என்பதை குழந்தைகள் கூட நன்கு அறியும். இதுதான் இன்று நாட்டில் பேசு பொருளாகவும் இருக்கின்றது.

சட்டத்தரணிகள் எதிர்க் கட்சிகளின் உதவியையும் பெற்றுக் கொண்டு பிரதான பௌத்த பீடாதிபதிகளின் ஆதரவையும் தமக்கு சாதகமாக பெற்றிருந்தனர். இதனைத்தான் அவர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கடிதத்தில் நாம் பார்க்க முடிந்தது. அந்தக் கடிதம் கூட வயதை நீடிப்பதற்கு எதிரான சட்டத்தரணிகள் வடிவமைத்துக் கொடுத்தது என்ற குறிப்பையும் நாம் கடந்த வாரம் சொல்லி இருந்தோம்.
சர்ச்சைக்குரிய கடிதம் தொடர்பில் நீதி அமைச்சர் அர்ஷனவையும் சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸாவையும் பீடாதிகளிடத்தில் அனுப்பி நீதி பதிகளின் வயது விவகாரத்தில் ஜனாதிபதி அனுர தனது பக்க நிலைப்பாட்டை பீடாதிபதிகளுக்குத் தெளிவுபடுத்தி இருந்தார்.
அப்போது அவர்களிடத்தில் அங்கு வந்தவர்கள் தம்மிடம் வேறுவிதமாக அல்லவா இந்தக் கதைகளை எங்களிடத்தில் சொன்னார்கள்.! உங்களுடைய விளக்கங்கள் வேறு கோணத்தில் இருக்கின்றன. சரி நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மை பயக்குமாக இருந்தால் நீங்கள் உங்களுடைய பணிகளை முன்னெடுப்பதில் தமக்கு ஆட்சேபனைகள் இல்லை என்று பீடாதிபதிகள் தம்மிடத்தில் சொன்னதாக அனுர தரப்பில் தூது போனவர்கள் வெளியில் பேசி வருகின்றார்கள்.

அரசு தரப்பில் பகிரங்கமாக சொல்லப்பட்டு வருகின்ற இந்தக் கருத்துக்களுக்கு மாற்றமாக பீடாதிபதிகளும் எந்த மாற்றுக் கருத்துக்களையும் இதுவரை பேசவில்லை. இதிலிருந்து நாம் என்ன புரிந்து கொள்ளமுடியும்.? பீடாதிபதிகள் இருதலைக் கொல்லி எறும்பின் நிலையில் இருக்கின்றார்களா? அல்லது அனைவருக்கும் ஆசீர்வாதம் என்ற வகையில் எதிரணிக்கும் ஆசீர்வாதம் அரச தரப்புக்கும் ஆசீர்வாதம் என்று அவர்கள் நிலைப்பாடோ தெரியாது.
பீடாதிபதிகள் கருத்துக்கள் என்னவாக இருந்தாலும் இந்த நாட்டில் குடிமக்கள் நீதிபதிகளின் வயதை நீடிக்கின்ற விவகாரத்தில் என்ன மன நிலையில் இருக்கின்றார்கள் என்பது சிந்திக்கக் கூடிய ஒன்றாகவே நமக்குத் தெரிகின்றது. இந்த குழப்பமான நிலையில் அரசு இந்த விவகாரத்தை கடந்த வாரம் நாடாளுமன்றத்துக்குக் கொண்டு வந்தது.
இனி வேறு மார்க்கங்கள் கிடையாது என்ற நிலையில் நீதி பதிகளின் வயதை நீடிக்கக் கூடாது என்ற தரப்பினர் இப்போது நீதி மன்றத்துக்குப் போய் இருக்கின்றார்கள். அதே போன்று வயதெல்லையை நீடிக்க வேண்டும் என்ற தரப்பினரும் நாம் இந்தக் கட்டுரையைத் தயாரிக்கின்ற நேரத்தில் ஆதரவாக போய் இருக்கலாம். எனவே இந்த விடயத்தில் அரசுக்கு ஆதரவானவர்களும் எதிரானவர்களும் நீதி மன்றத்தில் வருகின்ற நாட்களில் நேருக்கு நேர் சந்திப்பார்கள்.
இப்போது இந்த வழக்கில் நீதிமன்ற நடை முறைகள் எப்படியாக அமையும். அல்லது அமையக் கூடும் என்று பார்ப்போம். இதிலுள்ள வேடிக்கை என்னவென்றால் யாருக்கு எதிராக நீதிமன்றத்தில் முறைப்பாடுகள் இருக்கின்றனவோ அவர்கள்தான் இந்த வழக்கையும் விசாரிக்க இருக்கின்றார்கள்.
அப்படிப் பார்க்கின்ற போது இது என்ன நியாயம் தார்மீகம் என்ற கேள்வியும் எழுகின்றது. எனவே வேறு ஆட்களை வைத்து இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று முறைப்பாடுகளைக் கொடுத்திருப்போர் தரப்பினர் கேட்கின்றனர். அப்படியாக இருந்தால் யாரையொல்லம் இதற்கு நீதிபதிகளாகக் கொண்டுவர முடியும் என்ற கேள்வி எழுகின்றது. சட்டத்தரணிகளைப் பொறுத்தவரை நீதி பதிகளின் வயதை அதிகரிக்கக் கூடாது என்போரும் அதிகரிக்க வேண்டும் என்ற இரு தரப்பினரும்தான் இருக்கின்றார்கள்.

இதில் நடுநிலை என்று எவரும் கிடையாது. அப்படி இருந்தாலும் அது வெறும் மாயை மட்டுமே. எனவே வழக்கை தாக்கல் செய்திருக்கும் தரப்பினர் எதிர்பார்ப்பது அல்லது கேட்பது போல வயதை நீடிக்கக் கூடாது என்போர் இந்த வழக்கை விசாரிக்கின்றார்கள் என்று வைத்துக் கொண்டால் அடுத்த தரப்பு இந்தத் தீர்ப்பை ஏற்றுக் கொள்வார்களா? அல்லது அரசுதான் அப்படியானவர்கள் இந்த வழக்கை விசாரிக்க அனுமதிக்குமா?
ஜே.ஆர். காலத்திலிருந்து ரணில் ஜனாதிபதியாக இருந்த நாள் வரை நீதித்துறையில் இப்படியான திருத்தங்கள் பல முறை மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கின்றன. இந்த முறை நீதி மன்றத்தில் முன்வைக்கப்பட்டிருக்கின்ற வயது தொடர்பான சிக்கலுக்கு தீர்வு சொல்ல வேண்டிய நிலை உயர் நீதி மன்றத்துக்கு ஏற்பட்டிருக்கின்றது.
நாம் அறிந்த வரையில் இதுவரை ஐந்து முறைப்பாடுகள் வந்திருக்கின்றன. ஆனால் இன்னும் டசன் கணக்கான முறைப்பாடுகள் இரு தரப்பிலிருந்தும் முன்வைக்கப்படலாம் என்று நாம் நம்புகின்றோம். முறைப்பாடுகள் கிடைத்த நாளிலிருந்து 14முதல்21 நாட்களுக்கு இடையில் தீர்ப்பை உயர் நீதிமன்றம் சபாநாயகருக்கு அனுப்பி வைக்க வேண்டும். அங்குதான் நீதிபதியின் தீர்ப்பு என்னவென்று தெரிய வரும்.
இதனை அவர் விசரிக்கக் கூடாது இவர் விசாரிக்கக் கூடாது என்ற முதல் இழுபறி இருக்கின்ற நிலையில் யாரோ வழக்கை விசாரித்துத்தான் ஆக வேண்டும். அல்லது எதிரணிகள் நாடாளுமனற்தில் இதற்கு எதிரான பிரேரணை ஒன்றை கொண்டு வந்து அங்கு நிறைவேற்ற வேண்டும். இது எந்தளவு சாத்தியம். என்ன நகைச்சுவை.

எனவே மூன்று அல்லது ஐந்து பேர் கொண்ட ஒழு குழுதான் இந்த வழக்கை அங்கு விசாரிக்கும் என்று எதிர்பார்க்க முடியும். அப்போதும் இதற்கு ஆதரவானவர்களும் எதிரானவர்களும் தொடர்ந்தும் வர இருக்கின்ற தீர்ப்புக்கள் தொடர்பில் சந்தேகங்களை வெளியிட்டுக் கொண்டுதான் இருப்பார்கள். அந்தக் காட்சிகளையும் நாம் வருகின்ற நாட்களில் அவதானிக்க முடியும்.
நமது அவதானப்படி உச்ச நீதிமன்றம் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் இந்த பிரேரனையை நிறைவேற்றிக் கொண்டு சட்டமாக்கிக் கொள்ள முடியும். அல்லது மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் பொதுசன கருத்துக் கணிப்பும் இதற்குத் தேவை. அல்லது சில பிரிவுகளுக்குத் தேவை என்றும் தீர்ப்பு வெளி வரலாம். இந்த வழக்கு இன்று நட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பதை மறுக்க முடியாது.
சில தினங்களுக்கு முன்னர் ஐமச. உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் அரசு மீதான சொல்வாக்கு கணிசமாக சரிந்து கொண்டு வருகின்றது. எனவே அரசு வேகமாக மாகாணசபைத் தேர்தலை நடாத்தி தன்னை சரி செய்து கொள்ள வேண்டும் என்ற தோரணையில் ஒரு கதையை சொல்லி இருந்தார். இந்த முஜிபுர் ரஹ்மான் என்பவரை அனைவருக்கும் நன்றாகத் தெரியும். ஏதோ அரசு மீது இவருக்கு அனுதாபம் ஏற்பட்டிருக்கின்றது. எனவே அரசு தன்னை சரி செய்து கொண்டு பயணிக்க வேண்டும் என்பது போலத்தான் இவரது கதை கேட்போருக்கு-பார்ப்போருக்கு அமைந்திருக்கும்.
இது சிறு குழந்தைகளுக்கு முட்டாய் கொடுத்து கலத்தில் போட்டிருக்கின்ற மாலையை பிடுங்குவது போல ஒரு கதைதான். எப்படியாவது இந்த அரசாங்கத்தை மாகாணசபைத் தேர்தலுக்கு இழுத்து விட வேண்டும் என்பது முஜிபுர் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. எதிர் கட்சி என்ற வகையில் அவரது முயற்சி ஒகே.

அண்மையில் வெளியான ஒரு கருத்துக் கணிப்பின்படி இந்த அனுர அரசின் மீதான செல்வாக்கு சரிந்திருக்கின்றது என்று சொல்லப்பட்டிருந்தது. கடந்த அரசாங்க காலங்களிலும் இந்த நிறுவனம் கருத்துக் கணிப்புக்களை சொல்லி இருந்தது. அன்று அதனை ஏற்றுக் கொண்டவர்கள் இன்று நிராகரிப்பது நாகரிகமாக இருக்காது. ஆனால் பொதுவாக பதவில் இருக்கின்ற ஒரு அரசாங்கத்தின் மீது குடிமக்களின் செல்வாக்கு வருடமொன்றுக்கு மூன்று சதவீதம் சரிவடையலாம் என்ற ஒரு விதி இருக்கின்றது. அந்தவகையில் தற்போதய அரசு பதவிக்கு வந்து இரண்டு வருடங்களை நெருங்கி வருகின்ற இந்த நாட்களில் ஒரு ஆறு சதவீத சரிவு என்பது இயல்பானதும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றாகவும் இருக்கின்றது.
ரணில் காலத்திலும் மஹிந்த காலத்திலும் கூட குறிப்பிட்ட அமைப்பு கருத்துக் கணிப்புக்களை மேற்கொண்டு சரிவுகளை சுட்டிக் காட்டி இருந்தது. இன்றும் அனுர செல்வாக்கு 36-38 என்ற அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது என்று சொல்லப்பட்டிகின்றது. ஆனால் இது எல்லாத் தலைவர்களுக்கும் பெருந்துவதில்லை. இந்தக் கருத்துக்கள் பற்றி எவரும் பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லாவிட்டாலும் அவ்வப்போது அவை சரியாக அமைந்து விடுகின்ற சந்தர்ப்பங்களும் அமைவதுண்டு.
இந்தியாவை எடுத்துக் கொள்ளுங்கள் மோடி அரசுக்கு இந்தத் தேர்தலில் நிச்சயம் சரிவுதான் மனிதனது அரசியல் அஸ்தமமாகப் போகின்றார் என்று எல்லாம் கருத்துக் கணிப்புக்களும் ஊடகங்களும் எதிரணிகளும் பேசிக் கொண்டிருந்தன. ஆனால் மோடிக்கு சமமான ஒரு தலைவர் இந்தியாவில் இல்லாத நிலையில் அவர் பொதுத் தேர்தலில் 2014ல்- 38 சதவீதம் 2019ல்-45 சதவீதம் 2024ல்-42 என்று இருந்து வருகின்றது. பாராதிய ஜனதா கட்சி முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்டபோது வெறும் இரு ஆசனங்களை மட்டுமே பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. மோடி செல்வாக்கு சரியாமல் இருப்பதற்கு மக்கள் மத்தியில் இருக்கின்ற இந்துத்துவ செல்வாக்கு பிரதான காரணம் என்பது நமது கணிப்பு.
எனவே 2014ல் இருந்து இன்று வரை இந்தியாவில் மோடி தனிக்காட்டு ராஜா. நமது இந்த மூன்று என்ற விதி மோடிக்குப் பொருந்தி இருந்தால் இன்று அவரது செல்வாக்கு முப்பத்து ஆறு சதவீதம் சரிந்திருக்க வேண்டும் ஆனால் அப்படி ஒரு நிலை அங்கு ஏற்படவில்லை. இதனை ஏன் இங்கு கொண்டு வந்து பேசுகின்றோம் என்றால் நமது பார்வையில் அனுரவுக்கு போட்டியான ஒரு அரசியல் தலைமை இன்று நாட்டில் இல்லை. நமது இந்த வாதத்தை குடிமக்கள் நிராகரிக்கின்றார்களோ ஏற்கின்றார்களோ தெரியாது. வெறும் நன்கு சதவீதம் என்றிருந்த அனுர தரப்பு ஆதரவு பொதுத் தேர்தலில் 61.5 சதவீத வாக்குகளைப் பெற்றுக் கொண்டது.
நமது நியதிப்படி இரண்டு வருடங்களுக்கு ஆறு சதவீத சரிவு என்றாலும் அது 55.5 என்றுதான் அமைந்திருக்க வேண்டும். அண்மைய அந்தக் கருத்துக் கணிப்பு இது 36-38 சதவீதம் என்று சொல்லி இருக்கிறது. நமது நாட்டில் வாழ்கின்ற மக்கள் கடந்த காலத்தில் கற்றுக் கொண்ட படிப்பினைகளை வைத்து என்பிபி.யை ஆதரித்திருந்தால் எதிர்க் கட்சிகள் எதிர்பார்க்கின்ற வேகத்தில் அது சரிய வாய்ப்புக்கள் மிகக் குறைவு. ஆனால் என்பிபி. பெற்ற வாக்குகள் கொள்கை ரீதியில் சேர்க்கப்பட்ட வாக்குகள் அல்ல கடந்த கால ஆட்சியாளர்கள் மீது மக்களுக்கு இருந்த கோபத்தில் வெளிப்பாடாகத்தான் நாமும் பார்க்கின்றோம்.
ஆனால் மாகாணசபைகளை இயற்கை மரணம் அடைய வைத்ததே முஜிபுர் பிரதிநித்துவம் செய்த அரசாங்கம்தான். கடந்த ஒன்பது வருடங்களாக இருந்து இந்த மாகாணசபைகள் மரணித்து விட்டது. எனவே அதனை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டிய தேவை இன்று அதனைக் கொன்றவர்களுக்கும் இந்த அரசுக்கும் இருக்கின்றது. இந்த மாகாணசபைத் தேர்தல் நடைபெறுமாக இருந்தால் தனது கட்சி மற்றும் தலைவரின் நிலை என்ன என்பதனை முஜிபுருக்கு பார்த்துக் கொள்ள முடியும். அடுத்து நாம் முன்பு பேசிய நீதிபதிகளின் வயதை நீடிக்கின்ற விடயத்தில் சர்வசன வாக்கெடுப்புக்குத்தான் செல்ல வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு சொல்லி விட்டால் அப்போதும் ஒரு கருத்துக் கணிப்பை நாம் பார்க்க முடியுமாக இருக்கும்.





