பேரழிவுகள்! கடவுள்!! அறிவியல்!!!

நஜீப் பின் கபூர்

நன்றி 21.12.2025 ஞாயிறு தினக்குரல்

தாயின் கருவறைதான் மனிதனின் கடவுளைத் தீர்மானிக்கின்றது!

அனுரதான் நமது கடவுள் என்போரும் நாட்டில் இருக்கின்றார்கள்!

மனிதன் வேண்டுமானால் புனிதர்களாகலாம் கடவுளாக முடியாது!

நூறு அடிகளுக்கு மேல் கடல் மேல் எழுந்து ஆர்ப்பரிக்கப்போகின்றது. பெரும்சேதம்-அழிவு. இலட்சக்கணக்கானவர்கள் பலியாகப் போகின்றனர். இப்படிச் சொன்னது நமது சமூக ஊடகங்களோ அல்லது ஜாதகக்காரர்களோ அல்ல. அறிவியலின் உச்சியில் இருக்கின்ற ஜப்பானிய வானிலை அவதான நிலையம்தான். அதுவும் அவர்களின் ஒரு  உத்தியோகபூர்வமாக அறிவிப்பு அது. இந்த அறிவிப்பு கடந்த 12.12.2025 அன்று நிகழ்ந்தது.

அதற்குச் சமாந்திரமாக அமெரிக்காவும் முதல் அறிவிப்பு வந்ததும் பொருத்தமில்லாத  இருப்பிடங்களில் இருந்து உடனே வெளியேறிவிட வேண்டும் என்று தனது பிரசைகளுக்கு கண்டிப்பாக கட்டளையிட்டிருந்தது. நாம் கூறுகின்ற இந்த செய்தியை பலர் ஊடகங்கள் வாயிலாக கேட்டிருக்கலாம் பார்த்திருக்கலாம்.

ஆனால் சொன்னபடி அப்படி எந்த அழிவும் இந்த நாடுகளில் நடக்கவில்லை. இப்போது நவீன கண்டுபிடிப்புக்கள் கருவிகள் பற்றி ஒரு முறை எண்ணிப்பாருங்கள். நமக்கு இவை இருந்திருந்தால் நடந்த பேரழிவில் இருந்து தப்பி இருக்கலாம் அல்லது அழிவை மட்டுப்படுத்தி இருக்கலாம் என்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

என்னதான் நவீன கண்டுபிடிப்பு அறிவியல் விஞ்ஞானம் என்று மார்தட்டிக் கொண்டாலும் நாம் கடந்த வாரம் சொல்லி இருந்தது போல அறிவியலால் மனிதன் அனைத்தையும் சாதித்து விடலாம் என்று பேசுவது மடமை. இதற்கு நல்ல உதாரணம்தான் ஜப்பான் அமெரிக்க வானிலை அறிவிப்புக்கள்.  நவீன கருவிகள் இருந்தால் பேரழிவுகளை தவிர்க்கலாம் என்பதை எப்படி நம்புவது.?

ஜப்பான் வானிலை அவதான நிலையம் சொன்னபடி அங்கு ஏதுவுமே நடக்கவில்லையே. இதிலிருந்து விஞ்ஞானம் அங்கு பொய்த்துப் போய் இருக்கின்றது. சொன்னபடி அழிவு நடந்திருக்க வேண்டும் என நாம் எதிர்பார்க்கின்றோம் என்று எவரும் தப்புக்கணக்குப் போட்டு விடவேண்டாம்.

நாம் என்ன சொல்ல வருகின்றோம் என்றால் அறிவியலையும் விஞ்ஞானத்தையும் மட்டும் நம்பி மனிதன் உலகில் வாழ்ந்து விடமுடியாது என்பது இதிலிருந்து நிரூபனமாகி இருக்கின்றது. விஞ்ஞானத்துக்கும் அறிவியலுக்கும் அப்பால் ஒரு மிகப் பெரிய சக்தி செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதனை தர்க்கங்களுக்கு அப்பால் மனிதன் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்.

நாம் இங்கு குறிப்பிடுகின்ற அசாதாரண சக்தி என்னவென்று பார்த்தால் நிச்சயமாக ஆன்மீகவாதிகள் இதற்குக்கடவுள் என்றுதான் உரிமை கோருவார்கள். அதிலும் எமக்கு ஆட்சேபனைகள் கிடையாது. பெரும்பாலும் மனிதனது கடவுள் மீதான நம்பிக்கைகள் தாயின் கருவறைகள்தான் தீர்மானிக்கின்றன.

Here Are 10 of the Deadliest Natural Disasters in 2023 | Best Countries | U.S. News

வரலாற்றுக் காலங்களில் அரசன் அல்லது மூத்தகுடிமகன் அல்லது குலத் தலைவன் எடுக்கின்ற தீர்மானம்தான் அவன் சார்ந்த கடவுள் யார் என்பதனை முடிவு செய்து வந்தன. இன்றும் சமய பரப்புரைகள் அல்லது கற்றறிந்து சமயங்களைப் பின்பற்றுகின்றவர்கள் இருக்கின்றார்கள்.

இவர்கள் எந்த மதம் இனம் குலம் என்பதெல்லாம் கடந்துதான் இந்தப் பேரிழிவுகள் நடந்து வருகின்றன. சிறிதும் பெரிதுமான இரண்டாயிரம் வரையிலான கடவுள் கொள்கைகள் நம்பிக்கைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.

இதில் கிருஸ்தவம் இஸ்லாம் இந்து பௌத்தம் என்று கோடிக்கணக்கான மக்கள் பின்பற்றுகின்ற மதங்களும் இது தவிர மில்லியன் இலட்சம் பேர் பின்பற்றுகின்ற சமயக் கொள்கைகளும் சில நூறுபேர் வரை கடைப்பிடிக்கின்ற சமயக் கொள்கைகளும் உலகில் பின்பற்றப்பட்டு வருகின்றன. பேரழிவுகள் நடக்கின்ற போது தமது கடவுள்கள் தம்மை ஏன் காப்பற்றாமல் விட்டார் என்று கேள்விகளும் உண்டு.

ஆனால் பொதுவாக மனிதர்கள் அதற்காக தத்தமது கடவுள்களுடன் கோபிப்பதுமில்லை. தமது பக்தர்கள் என்பதற்காக கடவுள்கள் அவர்களுக்குக் கைகொடுப்பதுமில்லை. இதனை நாம் நமது ஆயுள் முழுவதும் பார்த்து வருகின்றோம். நமது தலைமுறையும் அப்படித்தான். ஒருவருக்கு நெருக்கடியான நேரத்தில் மனிதன் கடவுளிடத்தில் வேண்டுகோள்கள் விடுப்பதுண்டு.

அப்படி விடுக்கப்படுகின்ற வேண்டுகோள்களை கடவுள்கள் எந்தளவுக்கு நிறைவேற்றி வைக்கின்றார்கள் என்றும் நமக்குத் தெரியாது. தமது வேண்டுகோள் நிராகரிக்கபட்டு விட்டது என்பதற்காக மனிதன் கடவுளிடத்தில் கோபிப்பதும் கிடையாது.

சரி இந்த விடயத்தை சற்றுப்பாருங்கள் தனக்கு நேசமான ஒரு ஜீவனுக்கு உயிராபத்து அல்லது ஒரு கொடிய நோய் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது சுற்றத்தினர் உறவுகள் அந்த உயிரைக் காப்பற்றித் தரும்படி தமது தெய்வங்களிடம் வேண்டுகோள் விடுப்பார்கள்-பிரார்த்தனைகள் செய்வார்கள். குறிப்பிட்ட உயிரைக் காப்பாற்ற கடவுள் தவறிவிட்டார்.

அந்த ஜீவன் மரணத்துவிட்டது என்று வைத்துக் கொள்ளுங்கள்.! அப்போது மனிதன் தனது வேண்டுகோளை கடவுள் நிராகரித்துவிட்டதே என்று அதனுடன் கோபிப்பதும் கிடையாது. மாறாக அதே கடவுள் கொள்கை சம்பிரதாயங்களின் படி அந்த உடலுக்கான இறுதிக்கிரியைகளையும் செய்து அதிலும் கடவுளைத் திருப்திப்படுத்துகின்றார்கள். இது தான் கடவுள் தொடர்பான மனிதனது நிலைப்பாடாக இருந்து வருகின்றது. இதில் படித்தவனும் பாமரனும் ஒரு நிலையில்.

பல தசாப்தங்களுக்கு முன்னர் ஒரு சிறு சமயக் கோட்பாட்டைப் பின்பற்றி வந்த ஒரு குழுவினர் குறிப்பிட்ட ஒரு தினத்தில் உலகம் அழியப் போகின்றது என்று தமது கடவுள் நம்பிக்கையில் இருப்பதாக கூறி அதற்கு முன்னைய நாள் அதாவது 18 நவம்பர் 1978 அன்று 918 பேர் தமது உயிர்களை மாய்த்துக் கொண்டனர். இது தென் அமெரிக்க-கயானாவில் நடந்த ஒரு சம்பவம். அதே போன்று பொதுவாக மனிதனிடத்தில் சுவர்க்கம் நரகம் என்ற நம்பிக்கைகள் இருந்து வருகின்றன.

தமது சமயம் கூறுகின்ற படி உலகில் வாழ்ந்தால் சுவர்க்கம் போகலாம் என்று கோடிக்கணக்கான மக்கள் நம்புகின்றார்கள். அனேகமாக சமயங்கள் கூறுகின்ற படி தமது கடமைகளை இறைவன் திருப்தி கொள்ளும்வகையில் செய்யும் மக்கள் பல சமயங்களில் இருக்கின்றார்கள் அதனால்தான் இன்றும் வழிபாட்டு இடங்கள் நிரம்பி வழிகின்றன.

இதில் எந்தக் கடவுள் நிஜம் போலி என்று நாம் தர்க்கிக்க வரவில்லை. துவக்கத்தில் ஆதம் ஏவால் என்று இருவரில் இருந்துதான் மானிடம் தோன்றியது என்ற வாதம் உண்மையாக இருந்தால் ஒரே இனம் மதம்தான் இருந்திருக்க வேண்டும். மக்கள் தொகை அதிகரிக்க குலம் கோத்திரம் என்பன வந்திருக்க வேண்டும். அந்தக் குலம் கோத்திரம் கூட அடிப்படையில் மாயை என்பதே இந்த ஆதம் ஏவால் நியதி.

எனவே தன்னைப் பின்பற்றி வரும் அடியானை கடவுள்கள் தனியாகவோ கூட்டணியாகவோ பேரிழிவுகளிலிருந்து காப்பாற்றுவார் என்று மனிதன் நம்பிவாழ்வது எந்தளவு ஏற்புடையது. கடவுள் தன்னைக்காப்பற்றி விட்டார். கடவுள் தமது உறவுகளைப் பறித்துக் கொண்டது.

இப்படியான ஒரு கொடுமை யாருக்கும் வரக் கூடாது. அங்கு அப்படி ஒரு அவலம் இங்கு இப்படி ஒரு கொடூரம் என்றெல்லாம் பேரழிவுகளின்  போது மக்கள் கதை சொல்லியதை நாம் பார்த்தோம். அது அப்படி இருக்க விபத்துக்கள் போர்கள் சண்டை சச்சரவு என்று தினந்தோறும் ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகி வருகின்றன. எனவே இறப்பு அழிவுகள் எந்த உருவத்திலும் வரலாம்.

மானிடப் பிறப்புப் பற்றிய விஞ்ஞானக் கொள்கை அல்லது குரங்குக்கதை ஏட்டுச்சுரக்காய் போலததான் உலகில் மதிக்கப்படுகின்றன. விஞ்ஞானம் கொடிகட்டிப் பறக்கின்ற நாடுகளில்கூட அது வலுவாக இல்லை. வெறும் கோட்பாட்டு வடிவில்தான் அதற்கு அங்கிகாரம்.

இதனை ஒரு மாயையாகத்தான் உலகம் பார்க்கின்றது. எனவே இந்த விஞ்ஞான-அறிவியல் கோட்பாட்டில் மனிதனது பாதுகாப்புத் தொடர்பாக என்னதான் நம்பிக்கைகள்-உத்தரவாதங்கள் இருக்கின்றன.? ஆனால் கடவுள் கொள்கைகளில் அப்படி எதிர்பார்ப்பாவது இருக்கின்றது என்ற வகையில் மனிதனுக்கு ஒரு மன நிறைவு அங்கு.!

பிரபஞ்சம்  அதன் படைப்புக்கள் இரவு பகல் காற்று சூரிய ஒளி உயிரினங்கள் தாவரங்கள் குறிப்பாக மனித பிறப்பு அதன் செயல்பாடுகளில் கூட ஒரு அபூர்வம் இருக்கின்றது. எனவே கடவுள் அல்லது இறைவன் தொடர்பாக மனிதனிடத்தில் தொடர்ந்தும் நம்பிக்கையை விஞ்ஞானக் கருத்தால் தகர்க்க முடியாது. அப்படி எல்லாம் கிடையாது அவை அனைத்தும் பொய் என்று வாதிடுவோர்கள் உலகில் வாழ்கின்ற மானிடர்களில் மிகவும் சொற்பமானவர்களே.! மனிதன் சமூகமாக வாழ்கின்ற  இந்த உலகத்தில் கடவுள்கள்தான் மிகப்பெரும் சக்தி. அந்த சக்தியின் படைப்பாகத்தான் பிரபஞ்சமும் ஏனையவையும் இருக்க வேண்டும்.

நமது பார்வையில் கடவுள் அல்லது இறைவன் என்பது அனைத்து மானிடர்களுக்கும் பொதுவானது. கடவுள் அல்லது இறைபற்றிய கொள்ளைகள் சமூகங்களில் முரண்பாடாக இருக்கக் கூடும்.

எல்லா இனத்தவர்களுக்கும் குலத்தவர்களுக்கும் கடவுள்-இறைவன் ஒரே அகப்பையில்தான் பங்கீடு செய்து கொண்டிருக்கின்றான். மக்கள் மானிடத்துடன் வாழ்ந்தால் எந்தக்கடவுளாக இருந்தாலும் அவனிடத்தில் அதற்கு ஒரு கருனையும் அங்கீகாரமும் இருக்கும்.-இருக்க வேண்டும்.

சரி இப்போது இந்த மழை வெள்ளம்-பேரழிவுகள் தொடர்பாக மனித செயல்பாடுகள் பற்றிய  விமர்சனங்களையும் பார்ப்போம். அதுவும் இந்தக் கடவுள் தொடர்பான மனிட நம்பிக்கைகள் போலத்தான் இருக்கின்றதோ என்று நமக்கு சிந்திக்க வேண்டி இருக்கின்றது. இறுதியாக நடந்த பேரழிவுதான் நமது வரலாற்றில் மிகப் பெரிய இயற்கை அழிவு என்ற கருத்துக்களும் இருக்கின்றன. ஆனால் இந்த வெள்ளம்தான் மிகப் பெரிய மழை வெள்ளமாக இல்லை.

நாட்டில் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கின்ற அபிவிருத்தித் திட்டங்கள் கட்டட நிர்மானங்கள் மற்றும் மனித செயல்பாடுகள்தான் இப்படியான மழை வெள்ளம் மற்றும் இயற்கை அழிவுகளுக்கு மூலகாரணம் என்ற ஒரு விமர்சனம் கடுமையாக இருந்து வருகின்றது.

1900களில் நாட்டில் இந்தளவு அபிவிருத்தித் திட்டங்களோ கட்டடங்களோ வீடுகளோ இருந்திருக்க வாய்ப்பிபில்லை. அன்று நாட்டில் குடித்தொகை வெறும் நாற்பது (40) இலட்சம். 1946களில் இந்தத் தொகை அறுபது (60) இலட்சம் வரையே. அன்றும் இதனைவிட பெரும் மழை வெள்ளம் வந்தாலும் இந்தளவுக்கு சேதம் நடந்திருக்கவில்லை. இதற்கு அடிப்படைக்காரணம் குறைவான மக்கள் தொகையும் குடியிருப்புக்களுமே.!

இப்போது மனித காரணங்களினால்தான் பேரழிவுகள் மழை வெள்ளம் என்று தர்க்கங்கள் இருக்கின்றன. அப்படியானால் நமது வரலாற்றில் மிகப் பெரிய மழை வெள்ளம் 1906.ல் ஒரு முறையும் 1946ல் ஒரு முறையும் நடந்திருக்கின்றது. இது கம்பளை ரயில் நிலைய சுவரில் பதியப்பட்டுள்ளது. மனித காரணங்கள்தான்  அழிவுக்கு அடிப்படை என்றால் எப்படி இன்றைய நிலையையும் கடந்து அன்று மழை வெள்ளம் வந்தது என்று நாம் ஒரு தர்க்கத்ததை இங்கு எழுப்ப முடியும்.? ஆனால் அகுரண போன்ற இடங்களில்; அடிக்கடி வர வெள்ளம் மனித செயல்பாடுகள் காரணம் என்பதற்கு நல்ல சான்றுகள்.

எனவே பேரழிவுகளுக்கான தீர்க்கமான காரணி கண்களுக்குப் புலப்படாத சக்தி அல்லது பெரும்பாலானவர்களின் நம்பிக்கைப் படி கடவுள்-அல்லது இறைவன்தான். ஆனால் இது யாருடைய கடவுள் இறைவன் என்பது எமக்கும் தெரியாது.

காக்கைக்கும் தன்குஞ்சுபோலதான் கடவுள் விடயத்திலும் மனிதனது நம்பிக்கை இருக்கிறன. அடுத்து நாம் பின்பற்றுகின்ற கடவுள்தான் இந்த இயக்கம் என்று சொல்வது எந்தவகையில் ஏற்புடையதாக முடியும். எனவே மனிதனது நம்பிக்கைப்படியே அதற்கு அப்பாலோ ஒரு பெரும் சக்தியின் இயக்கத்தில்தான் பிரபஞ்சத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கின்றது என்ற விதியை நிராகரிக்க முடியாது.

விஞ்ஞானக் கருத்துக்களின் படிகூட நாம் வாழ்கின்ற இந்த பிரபஞ்சம் தனது செயல்பாட்டில் நடக்கும் ஒரு சிறு மாற்றம் கூட உலக அழிவைக் கொண்டு வரலாம். அதனைத்தான் உலக அழிவு என்று ஆன்மீகவாதிகளும் நம்புகின்றார்கள்-ஏற்றுக் கொள்கின்றார்கள். இந்த இடத்தில் விஞ்ஞானமும் கடவுள்கள் ஒரு இடத்தில்.

அப்படியானால் கடவுள் என்பவர் அனைவருக்கும் பொதுவான ஒருவராக இருக்க வேண்டும். ஆக்கத்திலும் அழிவிலும் அவன் தனது பக்தன் மற்றான் கடவுளுடைய ஆள் என்று பேதங்கள் காட்டுவதில்லை. இனம் நிறம் ஐரோப்பியன் ஆபிரிக்கன் என்ற பேதம் அவனிடத்தில் இல்லை.

பேரழிவுகளின் போது நம்மை அறியாத ஒரு சக்தி மேலாத்திக்கம் செலுத்தி வருவது மறுக்க முடியாது. அந்த சக்தியை மனிதனால் வெற்றி கொள்ள முடியாவிட்டாலும் அறிவியல் சேதாரத்தை குறைத்துக் கொள்ளவும் துரிதமாக மீண்டெழவும் அது அவனுக்கு உதவும். அவ்வளவுதான்.

நாமே அறிவியலின் உச்சத்தில் வாழ்கின்ற மனிதர்கள். விஞ்ஞானத்தை வென்றவர்கள் என்று எப்படி இன்று மார்தட்டிக் கொள்ள முடியும்? பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த மக்களால் அல்லது பேரரசர்களால் கட்டப்பட்ட பிரமிட்டுக்களைப் போல ஒன்றையாவது நம்மல் நிர்மானிக்க முடியவில்லை.

இதனை அன்று எப்படி கட்டினார்கள் என்று இன்றும் மனிதன் மூக்கில் விரல் வைத்து சிந்திக்கின்றான். நமது நாட்டில் யோத கால்வாய்மூலம் குளத்திலிருந்து நீரை ஓரங்குல சரிவில் பல கிலோ மீட்டார் வரை அன்று விளைநிலங்களுக்கு எடுத்துச் சென்றது எப்படி.?

இன்று பாரிய அபிவிருத்தித் திட்டங்களை அமைக்க  விஞ்ஞானிகள் கட்டட நிர்மான வல்லுனர்களின் ஒத்துழைப்பை நாம் வெளிநாடுகளில் இருந்து பெற்று வருகின்றோம். எனவே தான் அறிவியலில் உச்சத்தில் வாழ்கின்ற கூட்டம் என்ற வாதம் நாகரிகமானதல்ல என்பது எமது வாதம்.

சில வருடங்களுக்கு முன்னர் மஹிந்ததான் எனது கடவுள் என்று சொல்லி தலையில் தூக்கிக் வைத்துக் கொண்டிருந்தார்கள். பின்னர் அவர் தமக்கு மிகப் பெரிய துரோகங்களை செய்திருக்கின்றார். எம்மை வஞ்சித்திருக்கின்றார் என்று நினைக்கும் குடிகள் இன்று அனுரதான் தனது கடவுள் என்று வொயிஸ்கட் கொடுக்கின்றார்கள்.

இதனை நல்ல சான்றிதழாக எடுத்துக் கொள்ள முடியும். ஆனால் மனிதர்கள் ஒரு போதும் கடவுளாக முடியாது வேண்டுமானால் புனிதராகலாம்.!

முக்கிய குறிப்பு: இந்தக் கட்டுரையில் சொல்லப்படுகின்ற சில வாதங்கள் தர்க்கங்கள் ஆன்மீக கோட்பாடுகளுடன் இணக்கமாகவோ முரண்பாடாகவோ அமையலாம். அத்துடன் இங்கு நம்மால் சொல்லப்படுகின்ற வார்த்தைகளைக் கருத்துக்களை மனதில் போட்டுக் கொண்டு தத்தமது ஆன்மீக நம்பிக்கைகளையும் எவரும் காயப்படுத்திக் கொள்ள வேண்டாம்.

நாம் அறியாத புரியாத சக்தி அல்லது அது கடவுள்-இறைவனாக இருந்தாலும் அந்த சக்தி நமது கற்பனைகளுக்கும் அறிவியலுக்கும் அப்பால் பட்ட ஒரு உன்னத இடத்தில்தான் இருக்கின்றது என்பதனை மனிதன் நிராகரிக்க முடியாது.

Previous Story

BBC Tamil TV News 19.12.2025

Next Story

ලංකා ඉතිහාසේ ලොකුම දුෂණය හම්බන්තොට වරායේ ගනුදෙනුව නීතිඥ අචලා අල්ලස් එකට අරන් එයි