நூபுர் சர்மா சர்ச்சை பேச்சு: மோடி வாய் திறக்காதது ஏன்?

பா.ஜ., செய்தி தொடர்பாளர்கள் நுாபுர் சர்மா மற்றும் நவீன் ஜிண்டால் இருவரின் இஸ்லாமிய மதத்திற்கு எதிரான ‘டிவி’ பேச்சு பெரும் பிரச்னையை கிளப்பிவிட்டது. பா.ஜ., மேலிடம் நுாபுரை ‘சஸ்பெண்ட்’ செய்தும், நவீன் ஜிண்டாலை கட்சியை விட்டு நீக்கியும் இருக்கிறது.

இவர்களின் பேச்சு பிரதமர் மோடிக்கு பெரும் தலைவலியை தந்துள்ளது. ஈரான், ஈராக், சவுதி அரேபியா உள்ளிட்ட மேற்காசிய நாடுகளும், வேறு பல முஸ்லிம் நாடுகளும் பா.ஜ., செய்தி தொடர்பாளர்களின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.

இது சர்வதேச அளவில் இந்தியாவிற்கு பிரச்னையை ஏற்படுத்தி உள்ளது. இந்த விஷயத்தில் பிரதமர் மோடி ஏன் மவுனமாக இருக்கிறார் என எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்கின்றனர். இன்னொரு பக்கம் பா.ஜ.,விற்குள்ளேயே அதிருப்தி. பிரதமர் ஏதாவது பேசியிருக்கலாம் என, பா.ஜ., தொண்டர்களும் விமர்சிக்கின்றனர்.

ஆனால், பிரதமர் மோடி அமைதி காத்ததற்கு, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் தான் காரணம்.

‘இந்தப் பிரச்னையில் நீங்கள் எதுவும் பேச வேண்டாம்; இப்போது எது பேசினாலும் அது பிரச்னையை பெரிதாக்கிவிடும்; விஷயத்தை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்’ என இருவரும் பிரதமரிடம் சொல்லி விட்டனராம்.

தன் வாழ்நாளில் எப்போது தர்மசங்கடமான நிலை ஏற்பட்டாலும், பிரதமர் மோடி 5 நிமிடங்கள் கண்களை மூடி, தன் இஷ்ட தெய்வமான குஜராத்தில் உள்ள அம்பா காளி தேவியை நினைத்து தியானிப்பாராம்.

பின் அந்த பிரச்னையில் முடிவெடுப்பாராம். இந்த பிரச்னையின் போதும், பிரதமர் இதைத்தான் செய்தாராம். மோடி ஒரு காளி உபாசகர் என, அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர்.

 

 

Previous Story

பாக்.பர்வேஷ் முஷாரப் உடல் உறுப்புகள் செயலிழப்பு 

Next Story

உலகம் பூராவும் பிச்சை!