நமது எதிர்க் கட்சிகள் எங்கு பயணிக்கின்றன!

நஜீப் பின் கபூர்

19.07.2026 ஞாயிறு தினக்குரல் 

நீதியை அமுல்படுத்துவோரை பலி வாங்குவோம்!

குற்றவாளிகளைத் தண்டிக்காதே புதிய கூட்டணி!

புதிய கூட்டு சஜித்-சிறுபான்மை-அச்சாறு-மொட்டு!

ஜனநாயக நாடுகளில் சில சமயங்களில் மிகப்பலமான எதிர்க்கட்சிகள் ஆளும் தரப்புக்கு சவாலாகவும் அதே போன்று மிகவும் பலயீனமான எதிர்க் கட்சிகளும் சில சந்தர்ப்பங்களில் அமைவதுமுண்டு. இது பொதுவான சமாச்சாரம்தான். சில சமயங்களில் நல்ல நிருவாகிகள் பாடசாலைகளுக்கு சமையும் போது அந்தக் கல்லூரிகள் மிளிருவதும் அதே கல்லூரி சில அதிபர் காலங்களில் அரங்கில் இருந்து காணாமல் போவதைக்கூட நாம் பார்த்து வந்திருகின்றோம். இதிலிருந்து குறிப்பிட்ட நிறுவனத்தில் இருக்கின்ற நிருவாகியின் ஆளுமை இதில் தாக்கம் செலுத்தி வருவதை நாம் பார்க்கின்றோம். அரசியல் கட்சிகளுக்கும் ஏனைய அமைப்புக்களுக்கும் இது பொருந்தும்.

இப்போது தலைப்புக்கு வருவோம். இதற்கு முன்பு இந்த நாட்டில் இருக்கின்ற அரசியல் கட்சிகளின் வரலாறுகள் பற்றி நாம் பேசி இருக்கின்றோம். அதே நேரம் எந்த ஒரு கட்சியும் வரலாறு பூராவிலும் அரசியல் அரங்குகளில் நிலைத்திருந்ததுமில்லை. நிலைத்திருக்கவும் முடியாது. ஆனால் சில கட்சிகள் பிறப்பிலே இயற்கை எய்தி விடுகின்றன. இன்னும் சில குறுகிய நாட்களிலே காணாமல் போய் விடுகின்றன. இந்த நாட்டில் இருந்த சம்பிரதாய அரசியல் கட்சிகள் இன்று அரங்கில் காணாமல் போய் இருக்கின்றன. அல்லது அவை காட்சிப் பொருட்களாகி நிற்கின்றன. இந்த நாட்டை பல தசாப்பதங்கள் ஆட்சி செய்த ஐதேக. மற்றும் சுதந்திரக் கட்சி என்பனவும் இன்று நாம் மேற்சொன்ன நிலையில் அல்லது நோய்வாய்ப்பட்டிருக்கின்றன.

Ranil's elephant refurbished - LankaTruth English

அதே போன்று குறுகிய காலத்தில் தோன்றிய மொட்டுக் கட்சி இன்று வங்ரோத்து நிலையில் இருக்கின்றன. அந்த அரசியல் கட்சி ராஜபக்ஸாக்களின் நலன்களை மையமாக வைத்து அவர்களுக்காக அவர்களாலே தோற்றுவிக்கப்பட்ட ஒரு அரசியல் கட்சி. அந்தக் கட்சிக்கு இப்போது மக்கள் செல்வாக்கு கம்மியாக இருந்தாலும் அவர்களிடம் பணப்பலம் நிறையவே இருக்கின்றது. இதனை வைத்து மீண்டெழலாம் என்று அவர்கள் சிந்திப்பதாகத் தெரிகின்றது. பசிலின் சிந்தனையில் சு.கட்சிக்கு எதிராகத் துவங்கிய ஒரு அரசியல் இயக்கம்தான் இந்த மொட்டுக் கட்சி.; பண்டாரநாயகாக்களுக்கு நாட்டில் இருந்த செல்வாக்குக்கு சாவுமணி அடிக்கின்ற நோக்கில்தான் மெதமூலனையில் இருந்து இந்த மொட்டு சித்தாந்தம் வடிவமைக்கப்பட்டது என்பது நமது கணக்கு.

அந்தக் கதைகள் எப்படி இருந்தாலும் இன்று அரசுக்கு அறுபத்தியொரு-61 சதவீத மக்கள் ஆதரவு. 158 ஆசனங்கள். பிரதான எதிரணியான ஐமச.பதினேழு -17 சதவீத வாக்குகள். 40 ஆசனங்கள். இதில் கூட்டணிக் கட்சிகளின் வாக்குகளும் உறுப்பினர்களும் இருக்கின்றார்கள். ஏனைய கட்சிகளில் ஐந்து மூன்று ஒன்று என சில உறுப்பினர்கள் அங்கு இருக்கின்றார்கள். தமிழரசுதான் நாட்டில் மூன்றாவது பெரிய எண்ணிக்கையில் உறுப்பினர்களை வைத்திருக்கின்றது. அத்துடன் நாடாளுமன்றத்தில் இருக்கின்ற எதிரணிக் கட்சிகளிடையே அனேகமான விடயங்களில் தெளிவான நிலைப்பாடுகள் கிடையாது. ஏற்கெனவே பலயீனப்பட்டிருக்கின்ற எதிரணிக்கு இது உகந்ததல்ல. மேலும் இன ரீதியில் தமது சமூக நலன்களில் மட்டும் ஆர்வமாக இருக்கின்ற சில கட்சிகளும் இந்த எதிரணியில் இருக்கின்றன.

அதனால் இன்று நாட்டில் இருக்கின்ற எதிர்க் கட்சிகள் தமது உரிய வீரியத்தைக் கட்சிப்படுத்த முடியாத ஒரு அவல நிலை காணப்படுகின்றது. இது குடிமக்களைப் பொறுப்பதவரை ஆரோக்கியமான ஒரு நிலையாக கருத முடியாது. அடுத்து எதிரணியில் இருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பொறுத்தவரை அவர்கள் தேசிய அளவில் செல்வாக்கான-ஆளுமையான அரசியல்வாதிகளாக இல்லை. சரியோ பிழையோ ஆயிரம் குறைகள் இருந்தாலும் ஐமச. தலைவர் சஜித்தான் எதிர் கட்சியில் இருக்கின்ற முக்கிய தலைவர். ஆனால் சொந்தக் கட்சிக்குள்ளும் தேசிய அளவிலும் அவரது ஆளுமை தொடர்பில் நிறைய-நியாயமான விமர்சனங்கள். உள்ளே இருந்து அவருக்கு முதுகில் குத்துகின்றவர்களும், அவரது பலயீனங்கள் மற்றும் அறியாமையை வைத்து அவரை அவ்வப்போது சிலர் நெருக்கடிகளுக்கு ஆளாக்கி விடுகின்றார்கள். கம்மன்பில புத்தக வெளியீடு இதற்கு நல்ல உதாரணம்.

இந்த நாட்களில் நாட்டில் இருக்கின்ற எதிர்க் கட்சிகள் முட்டிக் குனிவதையும் தட்டித் தடுமாறுவதையும் நாம் அன்றாடம் பார்க்கக்கூடியதாக இருக்கின்றது. எதற்கெடுத்தாலும் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைகளைக் கொண்டு வருவதும் அது நாடாளுமன்றம் விவாதத்துக்கு எடுத்துக் கொண்டாலும் எடுத்துக் கொள்ளாவிட்டாலும் சந்தியில் அவமானப்படுவதைக் காணமுடிகின்றது. பிரதமர் ஹரினிக்கு  எதிரான நம்பிக்கை இல்லாப் பிரேரணை என்றார்கள். அது நூலறுந்த பட்டம் போல காணாமல் போய் விட்டது. இதுபோல எத்தனையோ பிரேரணைகள் வந்தது போனது. ஆனால் அவற்றை பொது மக்கள் கண்டு கொள்ளவில்லை. அவ்வாறான ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் எதிரணியினர் வழக்கமாக மூக்குடைபட்டனர். இப்போது நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கை இல்லாப் பிரேரணை என்று கதைக்கின்றார்கள்.

அப்படி அது  வருகின்றது என்று வைத்துக்கொள்வோம். சிறைச்சாலை நிகழ்வுகள்தான் அதன் கருப்பொருளாக அமையும். அந்த வரலாறு கிளரப்படுகின்ற போது பிரேமதாசவின் சொத்தி உபாளி மஹிந்தவின் ஜூலம்பிட்டி அமர கதைகளும். ஜேஆர் கால சிறைச்சாலைத் தமிழ் படுகொலைகள் மஹிந்த-கோட்டா காலத்து சிறைப் படுகொலைகளும் விவாதிக்கப்படும். நாடாளுமன்றத்தில் இருக்கின்ற என்பிபி. பெரும்பான்மைக்கு அப்பால் அவர்களின் விவாதத்திறமைகளுக்கு முன்னால் பிரேரணையைக் கொண்டு வருபவர்களே தம்மை சுவரில் சாத்தி முகத்தை பதம்பார்த்துக் கொள்கின்ற ஒரு நிலை-காட்சியைத்தான் நாம் நீதி அமைச்சர் அர்ஷன நாயக்காரவுக்கு எதிரான பிரேரணை வந்தால் பார்க்க முடியுமாக இருக்கும். சிறைச்சாலை நெருக்கடிகளுக்கு பிரதான காரணம் அங்கிருக்கின்ற இடநெருக்கடியும் பாதாள தாதாக்களும் போதை வியாபாரிகளும் அதன் பின்னால் இருக்கின்ற அரசியல் செல்வாக்கும்தான்.

இந்த நிலையில் நாடாளுமன்றில் தற்போது இருக்கின்ற எதிரணிகள் பற்றி நாம் வாசகர்களுக்கு ஒரு புதிய அறிமுகத்தைச் செய்யலாம் என்று எதிர்பார்க்கின்றோம். இந்த எதிரணிகளை பொதுவாக செவ்வக அணி என்று எடுத்துக் கொள்ளலாம். காரணம் செவ்வகத்துக்கு நான்கு முனைகள். அத்துடன் அதன் நீள அகலத்தில் வித்தியாங்கள் இருக்கும். ஒட்டு மொத்தமாக 225 நாடாளுமன்ற உறுப்பினர். ஆளும் தரப்பு 158. ஏதிரணி பக்கம் 67பேர். அவர்களை நாம் இன்றுள்ள அரசியல் செயல்பாடுகளை வைத்துப்பார்க்கின்ற போது சஜித் தரப்புக்கு இன்று-28. ஆறு சிறுபான்மைக் கட்சிகள் சேர்ந்து தமது நலன்களைப் பாதுகாக்க புதிதாக அமைத்திருக்கும் கூட்டணியில் -21வரை உறுப்பினர்கள் இருக்கின்றார்கள்.  புதிய ஜனாநாயக முன்னணி என்ற பெயரில் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுடன் இன்று சேர்ந்து செயல்படுகின்ற தயாசிரியுடன் அவர்களை அச்சாறு அணி என்று பெயர் சூடலாம் என  எதிர்பார்க்கின்றோம். அவர்கள் அணியில் -06 உறுப்பினர்கள். நாமலின் மொட்டு தரப்பில் -03பேர்.

இதிலிருந்து நாடளுமன்றத்தில் தமது கொள்கைககள்-நலன்களை பாதுகாக்கின்ற நான்கு அணிகள் செயல்பட்டு வருகின்றன. பிரதான எதிர்க்கட்சிகளால் தமது நலன்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை என்பதனாலே அவர்கள் தனித்துவ வழிகளில் தமது நலன்களைப் பாதுகாத்துக் கொள்ள முனைந்திருப்பார்கள் என்று நாம் வாதிட முடியும். நமக்கு வருகின்ற தகவல்படி சிறுபான்மை அணி சஜித் தரப்புக் கொண்டு வருகின்ற நம்பிக்கை இல்லாப் பிரேரணைக்கு ஆப்பு வைக்க அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன.

நாடாளுமன்றத்தில் இருக்கின்ற எதிர்க் கட்சிகளுக்கு எண்ணிக்கை முக்கியமானதல்ல. கடந்த நாடாளுமன்றத்தில் வெறும் மூன்றே மூன்று ஆசனங்களை வைத்துக் கொண்டு முழு நாடாளுமன்த்தையும் நாட்டையும் ஆட்டிப்படைத்த அனுர தலைமையிலான அணியை ஒரு முறை நினைத்துப்பாருங்கள். மேலும் நாடாளுமன்றத்தில் இன்று இருக்கின்ற எதிரணி அரசியல் தலைமைகளுடன் எஸ்டப்லியூ. ஆர்.டி.பண்டாரநாயக்க, சிரிமா, ஜே.ஆர். பிரேமதாச, செல்வநாயகம், ஜீ.ஜீ. அமீதலிங்கம், என்.எம். கொலிவின், தொண்டா, அஷ;ரஃப், போன்றவர்களின் தலைமைத்துவம். கட்டுப்பாடு ஆளுமை நாவன்மை.யை இன்றைய எதிரணித் தலைவர்களான சஜித், நாமல் மற்றும் அவர்கள் அணியில் இருக்கின்றவர்களுடன் பார்த்தால் அவர்கள் பலயீனங்களை புரிந்து கொள்ள முடியும். அதனால்தான் அவர்களுக்கு இந்தளவு சரிவும் வீழ்ச்சியும். இயலாமையும் அங்கு தெரிகின்றது.

நாம் குறிப்பிட்ட ஆளுமைகளுக்கு எண்ணிக்கை முக்கியமானதல்ல. அதற்கு நாம் தருகின்ற இந்த தகவல்கள் அல்லது புள்ளி விபரங்களை ஒரு முறை பாருங்கள். சந்திரிகா அம்மையார் ஒரு ஆசனத்தை பெரும்பான்மையாக வைத்துக் கொண்டு அரசாங்கத்தை நடாத்திய காலங்களும் இருந்தன. 1970ம் ஆண்டு பொதுத் தேர்தலில் சிரிமா அம்மையார் தலைமையிலான சோசலிச கூட்டணிக்கு 1839979 வாக்குகள் 91 ஆசனங்கள். (36.86 சதவீதம்) ஐக்கிய தேசியக் கட்சிக்கு 1892525 வாக்குகள். (37.91 சதவீதம்) 17 ஆசனங்கள். அதிக ஆசனங்களைப் பெற்றவர்களை விட எதிர்க் கட்சியான ஐதேக.வுக்குத்தான் அதிக வாக்குகள். அதே தேர்தலில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி 433224 வாக்குகள் (8.68 சதவீதம்) அவர்களுக்கு 19 ஆசனங்கள். அப்போது தொகுதி வாரியான தேர்தல் முறை. சிரிமா அம்மையார் கூட்டணியில் இருந்த இடதுசாரிகளும் கனிசமான ஆசனங்களை தமது சின்னங்களில் அன்று பெற்றிருந்தனர். 1970ல் மொத்த ஆசனங்கள்151.

Daily Mirror - Sri Lanka Latest Breaking News and Headlines - Print Edition  President speaks out - EDITORIAL

அதே போன்று 1977ம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஐதே.கட்சிக்கு 3179221 வாக்குகள். (50.92 சதவீதம்) 123 ஆசனங்கள். சிரிமா அம்மையார் தலைமையிலான சு.கட்சி கூட்டணிக்கு 1855331 வாக்குகள் 8 ஆசனங்கள். (29.72சதவீதம்) அதே தேர்தலில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி 421488 வாக்குகள் (6.75 சதவீதம்) அவர்களுக்கு 18 ஆசனங்கள். அப்போதும் தொகுதி வாரியான தேர்தல் முறை. அந்தக் காலங்களில்தான் அப்பக் குட்டி அமிர்தலிங்கம் எதிர்க் கட்சித் தலைவராக வந்தார். இது பேரினத்துக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. அதனால் தமிழர் அரசியல் ஆதிக்கத்துக்கு ஆப்பும் தனது ஐதேக. காலம் முழுதும் பதவியில் அமர்வதற்காகவும் ஜேஆர். 1978ல் தனது அரசியல் யாப்பில் வியூகம் வைத்தார். ஆனால் அந்த தன்னல அரசியல் எதிர்பார்ப்புக் கூட நிலைக்கவில்லை. மக்கள் மனம் வைத்தால் என்பிபி-ஜேவிபி அணிக்கு கூட மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கி வரலாறு படைக்க முடிந்தது.

இதனை நாம் ஏன் இங்கு கொண்டு வந்து நுழைக்கின்றோம் என்றால் அரசியலில் குடிமக்கள் விருப்பங்கள் எப்படி வேண்டுமானாலும் மாறலாம். அதே நேரம் சதிகாரர்கள் திறமைசாலிகளாக இருந்தால் அதனை வைத்து நாடுகளின் அரசியல் அதிகாரத்தை குறுக்குவழிகளில் கைப்பற்றவும் முடியும். அது இராணுவப் புரட்சியாகவோ சதிப் புரட்சியாகவோ வேறும் ஏதாவது வழிகளிலாகவோ இருக்கலாம். அதற்கான வரலாற்றுப் பதிவுகளும் உண்டு. கோட்டாவிடமிருந்து  ரணில் அதிகாரத்துக்கு வந்ததும் ஒருவகையில் ஜனநாயக வழியிலான ஒரு குறுக்கு வழிதான் என்பது நமது கணக்கு. அதே போன்று கோட்டா ஜனாதிபதித் தேர்தலில் நின்ற போது பேரின உணர்வுகளைக் கிளறி அதிகாரத்துக்கு வந்ததும் ஒரு வன்முறையிலான மார்க்கம் தான் என்பதனையும் இங்கு சொல்லி ஆகவேண்டும்.

இதற்கிடையில் நாட்டில் சட்டத்தையும் நீதியையும் அமுல்படுத்தினால் நாம் அதிகாரத்துக்கு வந்ததும் தற்போது ஆட்சி செய்பவர்களை பிடித்து உள்ளே தள்ளுவோம் என்று பகிரங்கமாக எதிரணி அரசியல்வாதிகளில் இன்று ஜனரஞ்சமாக இருக்கின்ற சமர சம்பத் முழங்கி இருக்கின்றார். அவர் இதற்கு வார்தைகளை வேறுவிதமாக உச்சரித்திருந்தாலும் அதன் கருப் பொருள் இதுதான். இதிலிருந்து அவர்கள் அணி என்ன எதிர்பார்க்கின்றது என்பதனை அறிந்து கொள்ள முடியும்.

தற்போது தோன்றி இருக்கின்ற சிறுபான்மை சமூகக் கூட்டணி நாட்டுக்கு சொல்லி இருக்கின்ற செய்திகூட சஜித் தலைமையிலான எதிர்க் கட்சியால் அந்த சமூகங்களின் தேவைகளை நிறைவு செய்ய முடியாது. அல்லது அவர்களை சஜித்தின் எதிரணி நோகடித்திருப்பதால்தான் அவர்கள் புது கூட்டணி சமைத்திருக்க வேண்டும். நம்பியவர்களே அப்படியாக இருக்கின்ற போது இந்த நாமல் விமல் கம்மன்பில தயாசிரி சம்பிக்க திலித் போன்ற அப்பட்டமான இனவதிகள் இருக்கின்ற அணியில் எப்படி சிறுபான்மை சமூகங்கள் தமது தேவைகளை நிறைவு செய்து கொள்ள முடியும் என்று நாம் கேள்வி எழுப்புகின்றோம். கேவலம் அங்கும் சிறுபான்மை சமூகத்தில் போய் குந்தி இருப்பதுதான்?

Previous Story

හිටපු පොලිස්පතිගේ අභිරහස් මරණයේ ඇත්ත මෙන්න.පුතා හා ලේලිය හවුල්