சிறைக் கிளர்ச்சி கதை கேட்போம்!

நஜீப் பின் கபூர்

நன்றி: 12.07.2026 ஞாயிறு தினக்குரல் 

சிறைக் கைதிகளும் மனிதர்களே என்று சிறைச்சாலை சுவரில் எழுதி வைத்திருப்பதால் மட்டும் மாற்றங்கள் வந்து விடப்போவதில்லை. சுதந்திரத்துக்கு பின்னர் இன்று வரை துறைக்கு இருபது அமைச்சர்கள் பதவி வகித்திருக்கின்றனர். தற்போது இந்த அமைச்சு அர்ஷன நாணயக்கார பொறுப்பில் இருக்கின்றது. இதற்கு முன்னர் விஜேதாச ராஜபக்ஸ அலி சப்ரி தலா இரு முறை இதற்குப் பொறுப்பாக இருந்திருக்கின்றனர். இந்த சிறைச்சாலையை மையமாக வைத்து அரசியல்வாதிகள் அதிகாரிகள் போதை வியாபாரிகள் பாதாள உலகத்தார் வியாபாரம் பண்ணி அதிலும் வருமானம் ஈட்டி வந்திருக்கின்றனர். இது நெடுங்காலமாக நடந்து வருகின்றன. நமது கட்டுரைகளைப் படிக்கின்ற வாசகர்களுக்கு துறைவாரியான சில விடயங்களை அறிவூட்ட வேண்டும் என்பதால் மேலதிகமான சில செய்திகளையும் அவ்வப்போது நாம் வழக்கமாக சொல்லி வருகின்றோம்.

தற்போது சிறைச்சாலைகளில் 12000 பேர் வரைக்கு மட்டுமே இடவசதி இருக்கின்ற இடத்தில் அங்கு 37000 பேர்வரை இருக்கின்றனர். நீர் கொழும்பு சிறையில் 600 பேருக்கு வசதிகள் இருக்க அங்கு 2452 பேர் இருந்திருக்கின்றார்கள். இது போன்று நாட்டில் ஐந்து முறை சிறைகளில் கலவரங்கள் நடந்து நிறைய கைதிகள் கொல்லப்பட்டிருக்கின்றனர். மேலே குறிப்பிட்ட வாசகம் யதார்த்தமாக இருந்திருந்தால் சுதந்திரத்துக்கு பின்னர் அதிகாரத்தில் இருந்தவர்கள் இந்த 78 வருடங்களில் குறைந்த பட்சம் சிறைக் கைதிகளுக்கு அடிப்படை வசதிகள் சிலவற்றையாவது ஆட்சியாளர்கள் இவர்களுக்குச் செய்து கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை. அந்த வகையில் அதிகாரத்தில் இருந்த அனைவரும் குற்றவாளிகளே.

நாம் கடந்த வாரம்தான் நாட்டில் ஒரு கிளர்ச்சி பற்றிய தகவல்களை வாசகர்களுக்குச் சொல்லி இருந்தோம். அந்தக் கட்டுரையை வாசகர்கள் படித்துக் கொண்டிருக்கின்ற ஞாயிறு நீர்கொழும்புச் சிறைச்சாலையில் கைதிகள் மத்தியில் இரு குழுக்களுக்கிடையில் மோதல்கள் நடைபெற்றிருந்தன. சிறைச்சாலைகளில் கைதிகள் மத்தியில் மோதல்கள் நடைபெறுவது பற்றி நிறைய தகவல்கள் இருக்கின்றன. தென் அமெரிக்க நாடுகளில் அவ்வப்போது நடந்த கைதிகளின் மோதல்களில் பல ஆயிரம் பேர் வரையில் கொல்லப்பட்ட பதிவுகளும் இருக்கின்றன. சில நாடுகளில் கிளர்ச்சிகள் புரட்சிகளாக மாறுகின்ற போது பல்லாயிரக்கணக்கான கைதிகள் சிறைகளை தகர்த்துக் கொண்டு வெளியே தப்பி ஓடி இருக்கின்றனர். இந்த சிறைக்கைதிகளில் பல்வேறு பிரிவினர் இருக்கின்றனர். அதில் சராசரி கைதிகள். அரசியல் கைதிகள் போர்க் கைதிகள். மேலும் இன்று சிறையில் இருக்கின்ற கைதிகளில் பாதாள உலகத்தார் போதைகளுடன் தொடர்பான கைதிகள் என்ற விஷேட பிரிவினர்களும் அங்கே இருக்கின்றனர்.

அரசியல் கைதிகள் மற்றும் போர் கைதிகளை விஷேடமாக நடத்த வேண்டும் என்று ஒரு விதி இருக்கின்றது. கைதிகளும் மனிதர்களே என்ற வார்த்தைகளும் உச்சரிக்கப்படுகின்றன. ஒரு பாடசாலையைத் திறக்கின்றபோது பலநூறு சிறைக்கூடங்கள் மூடப்படுகின்றன.! இப்படி எத்தனையோ வார்த்தைகள் இருந்தாலும் அதில் நமக்கு இனக்கப்பாடுகளும் முரண்பாடுகளும் வருகின்ற இடங்களும் இருக்கின்றன. சிறைக் கைதிகளில் மரண தண்டனை ஆயுள் தண்டனைகளை அனுபவிக்கின்ற கைதிகளும் இருக்கின்றனர். ஆனால் உலகில் பெரும்பாலான நாடுகள் மரண தண்டனை கைவிட்டிருக்கின்றன என்றுதான் சொல்ல வேண்டும். அதே நேரம் போதை தொடர்பான குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கின்ற நாடுகளும் இருக்கின்றன. பாமர மக்கள் மட்டும்தான் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றார்களா என்று பார்த்தால் அப்படியும் இல்லை. சந்தர்ப்ப சூழ்நிலைகள் சமூக பின்னணிகள் என்பவைகள்தான் மனிதனைக் குற்றவாளிகளாக மாற்றி விடுவதும் உண்டு. சமூகம் என்னதான் சிந்தனை ரீதியில் முன்னேறி இருந்தாலும் குற்றச் செயல்கள் குறைந்திருப்பதாகத் தெரியவில்லை.

துவக்கத்தில் போர்களில் தோல்வியுற்ற நாடுகளின் கைதிகளை சித்திரவதை செய்து கொன்று குவிக்கின்ற ஒரு வழக்கமும் இருந்திருக்கின்றது. அல்லது அடிமைகளாக கைதிகளுக்கு குறைவான சாப்பாடு கொடுத்து வேலை வாங்கி அவர்களைப் பலயீனப்படுத்திக் கொன்று விடுகின்ற ஒரு முறையும் இருந்திருக்கின்றன. மத்திய காலத்தில் முஸ்லிம்களிடம் மாட்டிக் கொண்ட எதிரி நாடுகளின் சிறைக் கைதிகளுக்கு உணவும் உடையும் வழங்கப்பட வேண்டும் என்ற ஒரு நடைமுறை இருந்தது. இந்த மனிதாபிமான செயலால் பல்லாயிரம் பேர் இஸ்லாத்தில் இணைந்து கொண்டதாகவும் கதைகள் இருக்கின்றன. ஆனால் சிலுவைப் போரில் கைது செய்யப்பட்ட ஐரோப்பிய கிறிஸ்துவக் கைதிகளை முஸ்லிம் ஆட்சியாளர்கள் அடிமைகளாக விற்பனை செய்த குற்றச்சாட்டுக்களும் இருக்கின்றன. இதற்குக் காரணம் அவர்கள் விசுவாசமாற்றவர்கள் என்று ஆட்சியாளர்கள் கருதியது காரணமாம்.

1648ல் வெஸ்ட் பேலிய உடன்பாடு கைதிகளுக்கு சில உரிமைகளை வழங்கி இருக்கின்றது. பிற்காலத்தில் ஹேக் உடன்படிக்கை மற்றும் ஜெனீவா உடன்படிக்கைகளில் கைதிகளுக்கு மேலும் சில உரிமைகள் கிடைத்தன. இந்த உடன்படிக்கையின் கீழ் போர் மற்றும் அரசியல் கைதிகளை சித்திரவதை செய்வது சட்டவிரோதம் எனத் தடை செய்யப்பட்டது. ஆனால் உலகப் போர்களின் போது நாசிகளும் ஜப்பானியர்களும் இந்த சட்டங்களை மதிக்கவில்லை. ஆனால் இன்றும் கூட அந்த விதிகளை மதிக்காத பல நாடுகள் இருக்கின்றன. அவற்றை கட்டுப்படுத்துகின்ற அதிகாரம் எந்தளவுக்கு வெற்றி பெற்றிருக்கின்றது என்பது தெளிவில்லை.

1841ல் ஆளுநர் கேம்பல் காலத்தில் 48 ஏக்கர் பரப்பில் கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலை அமைக்கப்பட்டது. இங்கு 1750 சிறைக் கைதிகளுக்கு மட்டுமே இடவசதி இருக்கின்றது. அங்கே ஒரு மைதானம் வைத்தியசாலை வாசிகசாலை தொழில் பட்டறைகள் என்றெல்லாம் சிறப்பு வசதிகளும் இருக்கின்றன. அங்கு ஒரு தூக்கு மேடையும் இருக்கின்றது. 1962ல் பிரதமர் சிரிமா பண்டார நாயகாவுக்கு எதிராக சதி செய்தவர்கள் அங்கே வைக்கப்பட்டிருந்தனர். அதற்கு முன்னர் ஆங்கிலேயருக்கு எதிரான பல அரசியல் கைதிகளும் வைக்கப்பட்டிருந்தனர். அடுத்து நாட்டில் இருந்த போகம்பறை சிறைச்சாலை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததும் கவர்ச்சிகரமான கட்டிட வடிவமைப்பை கொண்டதாகவும் இருக்கின்றது. இது 1876ல் அமைக்கப்பட்டது. 1976 வரை இந்த சிறைச்சாலையில் தூக்குத் தண்டனைகள் நிறைவேற்றப்பட்டு வந்திருக்கின்றன. ஆனால் அது 2014ல் மூடப்பட்டு இன்று ஒரு கலாச்சார மையமாக பிரகடனப்படுத்தப்பட்டிருக்கின்றது. பிந்திய தகவல்படி மீண்டும் போகம்பர சிறைக் கூடமாகின்றது.

இப்போது நமது சிறைகளில் நடைபெற்ற கிளர்ச்சிகள் படுகொலைகள் பற்றிப் பார்ப்போம். ஜனாதிபதி ஜே.ஆர். காலத்தில் 1983 கறுப்பு ஜூலை மிகமோசமாக படுகொலைகள் வெலிகட-பிதுனுவௌ சிறைச்சாலைகளில் நடை பெற்றிருக்கின்றன. குட்டிமணி டெலோ தலைவர் தங்கத்துரை போன்ற 51 அரசியல் கைதிகள் பேரின சிறைக் கைதிகளால் அடித்து சித்திரவதை செய்து கொல்லப்பட்டிருக்கின்றனர். இதற்கு அன்றிருந்த ஆட்சியாளர்களும் ஒத்துழைப்புக் கொடுத்ததாக ஒரு குற்றச்சாட்டு இருந்து வருகின்றது. ஜே.ஆர். தனது பொலிசுக்கு அன்று ஒரு வாரம் விடுமுறையை வழங்கி வன்முறைக்கு வாய்ப்பை வழங்கி இருந்தார். இன்று வரை சிறையில் நடைபெற்ற மிக அதிகமான கொலைகள் நடந்த பதிவும் இதுதான். அதன் பின்னர் 2012 மஹிந்த-கோடா காலத்தில் 27 கைதிகள் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர். இது கைதிகளைத் தேடித் தேடி நடைபெற்ற ஒரு மனித வேட்டையாவும் குற்றச்சாட்டுக்கள் இருந்து வருகினறன.

சிறைகளில் இருப்போர் பலம் பலயீனங்கள் பற்றி சில உதாரணத்தைப் பாருங்கள் பொட்ட நௌபர் கொழும்பில் இருக்கின்ற தனது கடைத் தொகுதி உள்ள கடைகளை குத்தகைக்கு சூம் தொழிவுட்பத்தில் அன்று சிறையில் இருந்தவாறு வழங்கி இருந்தார். மேலும் நூற்றுக் கணக்கான சிறைக் கைதிகளுக்கு பாதாளத் தலைவர்களும் போதை வியாபாரிகளும் சம்பளம் வழங்கி வந்திருப்பது பற்றிய தகவல்களும் இருக்கின்றன. எனவே சிறைக் கைதிகள் சிறையில் இருந்தவாறு சிறைக்கு வெளியேயும் வெற்றிகரமாகக் காரியம் பார்த்து வந்திருக்கின்றனர். பொதுவாக சிறையில் நடக்கின்ற அட்டகாசங்கள் அராஜகங்கள் பாலியல் நடவடிக்கைகள் பற்றி தனியான புத்தகங்கள் போடலாம். அப்படியான நூல்களும் இருக்கின்றன. பணம் இருந்தால் சிறைக் கூடங்கள் கூட கைதிகளுக்கு சுவர்க்க வாசஸ்தளங்களாக அமைவதுமுண்டு. தடை செய்யப்பட்ட பொருட்கள் இன்றும் சிறைகளில் வழக்கம் போல பாவனையில் இருப்பதாகச் சொல்லப்படுகின்றது.

இதற்கும் நிறையவே கதைகளும் சம்பவங்களும் இருக்கின்றன. இது தவிர சிறைகளில் இருந்து கைதிகள் தப்பியோடிய சுவையான கதைகள் நாவல்களும் இருக்கின்றன. நமது நினைவுகள் சரியாக இருந்தால் இடதுசாரிகளான என்.எம்.பெரேரா போன்றவர்கள் கூட சிறையில் இருந்து இந்தியாவுக்குத் தப்பி ஓடிய நிகழ்வுகளும் இருக்கின்றன. எல்லா நாடுகளையும் போல நமது நாட்டு சிறைகளிலும் சமூகத்தில் எல்லாத் தரப்புக் குடிமக்களும் இருக்கின்றனர். இப்போது கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற நீர்கொழும்பு சிறைச்சாலை படுகொலைகள் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம். அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கின்ற போது எதிரணியினருக்கு இது வாய்க்கு அவல் கிடைத்த கதையாகத்தான் அமையும் ஆனால் அவர்களின் கடந்த காலச் செயல்பாடுகளை வைத்துப் பார்க்கின்ற போது. எதிர்க் கட்சியின் விமர்சனங்கள் வெறும் வேஸ்ட் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நீர்கொழும்பு சிறையில் நடைபெற்றது என்ன என்பது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை தயாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி பிரியந்த பர்ணாந்து தலைமையில் ஒரு குழுவை அமைத்திருக்கின்றார். இது தவிர மூன்று உளவுக் குழுக்களும் இதற்கு அமைக்கப்பட்டிருக்கின்றன. அவர்கள் அறிக்கைக்கு நாமும் காத்திருப்பதுடன் நமக்கு இது பற்றிக் கிடைத்த சில தகவல்களை வாசகர்களுக்குத் தருகின்றோம். போதை பாவைனையாளர்களுக்கும் அதற்கு எதிரான அணியினருக்கும் இடையில் மோதல் துவங்கியதாக ஒரு தகவல். குறிப்பிட்ட ஒரு அதிகாரி போதை கட்டுப்பாட்டை சிறைக் கைதிகளின் உதவியுடன் சிறப்பாக மடக்கி வந்திருக்கின்றார். அந்த அதிகாரிக்கு ஜூலை முதல் இடமாற்றம். அவர் இடமாற்றத்துடன் தம்மைக் காட்டிக் கொடுத்தவர்களை போதை பிரியர்கள் குழு தாக்கியதாகவும் ஒரு கதை. கடடுவெல்ல மகேஸ் தலைமையிலான போதைக் குழுதான் மோதலை ஆரம்பித்தாகவும் தகவல்கள்.

சிறையில் இருக்கின்ற போதைக்கு ஆதரவான ஒருவரின் மனைவி அதே சிறையில் இருக்கின்ற மற்றுமொருவருடன் தகாத உறவில் இருந்து தனது கணவன் பற்றிய தகவல்களை தனது காதலுக்குக் கொடுத்ததுதான் மோதலுக்கு அடிப்படை என்றும் மற்றுமொரு கதை. சிறையில் எந்த சிகிச்சைகளும் இன்றி 40 வரையிலான டெங்கு நோயாளிகள் இருக்கின்றார்கள் என்று ஊடகங்களில் வந்த தகவல் எந்த அடிப்படையுமில்லாத ஒன்று அதனால் டெங்குதான் காரணம் என்ற கதையும் ஏற்புடையதாக இல்லை.

இந்தக் கட்டுரையைத் தயாரித்துக் கொண்டிருக்கின்ற நேரம்வரை நீர்கொழும்பு சிறைச்சாலை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் வந்திருக்கவில்லை. நாம் ஏன் இப்படிச் சொல்கின்றோம் என்றால் பகுப்பாய்வு அதிகாரிகளும் வைத்தியர்களும் சேதங்களை துல்லியமாக கண்டறிய உள்ளே செல்ல முயன்றபோது போது அவர்களை கைதிகள் அனுமதிக்கவில்லை. மேலும் அங்கிருந்த 2500 வரையிலான கைதிகளில் இன்னும் ஒரு 800 பேர்வரையிலும் உள்ளே இருக்கின்றார்கள். ஏனையோர் வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கின்றனர். இது கடந்த வியாழன் வரையிலான தகவல். அப்படியாக இருந்தால் ஐந்து நாட்கள் கைதிகள் கட்டுப்பாட்டில் சிறைச்சாலை.!

நமது கணிப்பின் படி ஏறக்கறைய இரண்டு நாட்கள் நீர் கொழும்பு சிறைச்சாலை கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருந்திருக்கின்றது. ஆனால் முதல் நாள் சம்பவத்துடன் சிறைச்சாலை கட்டுப்பாட்டில் இருப்பதாக அதிகாரிகள் சொன்னது தவறான தகவல்கள். இது பற்றி அரச தரப்பில் துல்லியமான தகவல்கள் வரத் தாமதமானதால் சமூக ஊடகங்கள் தருகின்ற செய்திகளைத்தான் மக்கள் நம்பவேண்டி இருந்தது. இதிலிருந்து உள்ளே என்ன நடக்கின்றது என்பதை அதிகாரிகள் அறிந்திருக்கவில்லை என்பதுதான் யதார்த்தமாக இருக்க வேண்டும். ஆனால் கிளர்ச்சியாளர்கள் சிறைச்சாலையை சூரையாடி 12-15 வரை கோடி சொத்துக்களை சேதப்படுத்தி இருந்தனர். அரச தரப்பினர் அல்லது ஆதரவாலர்கள் இதன் பின்னணியில் எதிரணியினர்தான் இருப்பதாகவும் எதிரணியினர் அரசுதான் இதற்குப் பொறுப்புக்கூற வேண்டும் என்று பந்தை மற்றவருக்கு மாற்றி இதில் ஒரு விளையாட்டைப் பண்ணிக் கொண்டிருப்பதையும் அவதானிக்க முடிகின்றது.

இந்த சிறைக் கைதிகளை சராசரி கைதிகள், பாரதூரமான குற்றவளிகள், அரசியல் கைதிகள், போதையுடன் தொடர்பானவர்கள், பாதாள உலகத்தார், மரணதண்டனை-ஆயுள் குற்றவாளிகள் மகளிர் என துறைவாரியாக தனித்தனி சிறைகளில் வைத்தால் இதனை விட சிறப்பாக சிறைச்சாலைகளைக் கையாள முடியும் என்ற ஒரு கருத்தும் நம்மிடம் இருக்கின்றது. இதில் யதார்த்தங்களை அரசுதான் ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டும். இந்த கட்டுரையைத் தயாரிக்கின்ற நேரம் இறந்தவர்கள் 28 பேர் அதில் கைதிகள் 20 அதிகாரிகள் 8பேர். எண்பத்துஇரண்டு பேருக்கு (82) காயம். பலர் அவசர சிகிச்சைப் பிரிவில். இது வரை கிடைத்த மரண பரிசோதனைகளின்படி துப்பாக்கி சூட்டில் 14பேர். சித்திரவதை செய்து அடித்து 9.கொலை. இதற்கிடையில் இந்தக் வன்முறையை ஏனைய சிறைச்சாலைகளுக்கும் முன்னெடுத்துச் செல்லும் ஒரு முயற்சியும் இருப்பதாகவும் அதன் மூலம் அரசுக்கு சர்வதேச ரீதியில் அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்கமும் இருப்பதாக ஒரு தகவல்.

Previous Story

LAMINE YAMAL SECRET FACTS FROM LIFE |

Next Story

பைனலுக்கு தூக்கிய இளம் புயல்!