நஜீப் பின் கபூர்
நன்றி 25.10.2026 ஞாயிறு தினக்குரல்
குற்றக் கும்பல் நடத்துகின்ற விடுதலைப் போராட்டங்கள்!
ஆட்சியாளர் தேரர்களின் சொல்படியே நடக்க வேண்டும்!
மேலான பௌத்த தத்துவங்களுக்கு கரிபூசும் செயல்கள்!

யாரிந்த ஞானசாரர், சிறுபான்மை சமூகத்தினருக்கு அச்சுறுத்தல் என்ற எமது கடந்த வார கட்டுரைகளின் தொடராகத்தான் இந்தக் கட்டுரையையும் வாசகர்கள் பார்க்க வேண்டி இருக்கும். காரணம் கதை ஒன்றோடு ஒன்று சங்கிலித் தொடர்போல இதில் பிண்ணி இருக்கின்றது. இது வரை நமது நாட்டில் அதிகாரத்தில் இருந்து வந்த ஆட்சியாளர்களுக்கு மாற்றமான ஒரு அணியினர் நாட்டில் அதிகாரத்துக்கு வந்ததால் அரசியல் நிருவாகத்துறைகளிலும் கணிசமான மாற்றங்கள் நடந்து கொண்டு வருவதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டி இருக்கின்றது. இந்த மாற்றங்கள் குடி மக்களுக்கு ஆரோக்கியமாக இருந்தாலும் இதில் பாதிக்கப்பட்ட ஒரு கூட்டமும் நாட்டில் இருப்பது அனைவரும் அறிந்ததே.
அப்படிப் பாதிக்கப்பட்ட தரப்புக்கள் பற்றி நாம் நிறையவே இந்தப் பக்கத்தில் பேசி வந்திருக்கின்றோம். மீண்டும் சுருக்கமாக சொல்வதாக இருந்தால் மக்கள் சொத்துக்களை முறைகேடாக பாவித்து சொத்து சேர்த்த ஆட்சியாளர்கள். அதில் தாமும் இலாபமீட்டிய நிருவாக அதிகாரிகள். படைதரப்பு அதிகாரிகள் ஆட்சியாளர்களின் விருப்பங்களுக்கும் ஆசைகளுக்கும் இசைவாக ஒத்துழைப்பு வழங்கிக் கொண்டிருந்த சமயக் குருக்கள் குறிப்பாக பௌத்த தேரர்கள் மற்றும் அரச வளங்களை கொள்ளையடித்துக் கொண்டு வருமானம் ஈட்டிக் கொண்டிருந்தவர்கள் என்று ஒரு பெரும் கூட்டம் புதிய அரசு அதிகாரத்துக்கு வந்ததால் தனிப்பட்ட ரீதியில் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதை அனைவரும் அறிந்த விவகாரம்.

இதனால் இந்த பாதிப்பில் இருந்து மீண்டு தமது சுகபோக வாழ்க்கைக்குப் போவதற்கான வாசலைத் திறந்து கொள்ள வேண்டிய தேவை அவர்களுக்கு இருந்து வருகின்றது. இதனால் தற்போது அதிகாரத்தில் இருக்கின்ற ஆட்சியை உடனடியாக மாற்றி அமைக்க அவர்கள் நடாத்துகின்ற போராட்டங்களில் அவர்கள் பக்கத்தில் ஒரு நியாயம் இருப்பது புரிந்து கொள்ளக் கூடியது. எனவே பொருட்களின் விலை ஏற்றங்கள் சர்வதேச நெருக்கடிகளினால் நாட்டில் ஏற்படுகின்ற பொருளாதாரத் தாக்கங்கள்-சுமைகள் மற்றும் இயற்கை அழிவுகள் நீதி மன்றத் தீர்ப்புக்கள் போன்ற இன்னோரன்ன நெருக்கடிகளை பூதாகரமாகக்காட்டி அரசுக்கு எதிராக மக்களைத் தூண்டி விடுகின்ற செயல்பாடுகள் இன்று பரவலாக நடந்து வருவதை நாம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.
பதவியில் இருக்கின்ற அனுர தலைமையிலான அரசுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இருக்கின்றது. அதனால் அரசு வலுவாக இருக்கின்றது. எனவே அடுத்த தேர்தல் வரும்வரையில் இருந்தால் பெரும்பாலான குற்றவாளிகள் சிறைக்குச் சென்றுவிடுவார்கள். அதனால் அவர்களின் அரசியல் தனிப்பட்ட வாழ்க்கை கம்பி எண்ணும் தொழிலாக மாறிவிடும். எனவேதான் குற்றவாளிகள் இன்று விடுதலைப் போராட்டங்களை நடாத்திக் கொண்டிருக்கின்றார்கள். அந்தக் காட்சிகளை நாம் பல இடங்களில் பல கோசங்களில் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். இது முற்றிலும் தன்னல நோக்கங்களை முன்னிறுத்தியதும் பௌத்த இனவாதத்தை முதன்மைப்படுத்தியதுமான ஒரு போராட்டம் என்பது இப்போது தெளிவாகத் தெரிகின்றது.
இதனால்தான் நாம் முன்னய வாரம் யாரிந்த ஞானசார என்பதை மக்களுக்கு குறிப்பாக சிறுபான்மை சமூகங்களுக்கு தெளிவுபடுத்தி இருந்தோம். அதே போன்று கடந்த வாரம் சிறுபான்மை சமூகங்களுக்கு சில எச்சரிக்கைiயும் சொல்லி நமது சிறுபான்மை அரசியல் தலைமைகளின் செயல்பாடுகளையும் சமூங்களுக்குப் படம் பிடித்துக் காட்டி இருந்தோம். இந்த வாரம் நாம் விடுத்திருந்த எச்சரிக்கைகள் எந்தளவுக்கு துல்லியமாக இருந்து வருகின்றன என்பதற்கு இப்போது சில உதாரணங்ளைப் பார்ப்போம். ஜனாதிபதி எங்களது கோரிக்கையை ஏற்று ஞானசாரரை உடன் விடுவிக்க வேண்டும். அதற்கான காகிதங்களையும் கையொப்பம்போட பேனையையும் ஜனாதிபதி அனுர கையில் வைத்திருக்க வேண்டும். இது ஞானசாரவை விடுவிக்கின்ற போராட்டத்தில் முன்னணியில் இருக்கும் பலங்கொட கஸ்ஸப தேரர் ஜனாதிபதிக்கு விடுத்த கட்டளை.
தற்போது ஞானசாரர் விடுதலைக்கு கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் கூடாரம் போட்டிருக்கின்ற இந்த கஸ்ஸப தேரரின் அடுத்த பிரகடனம் எமது இந்தக் கோரிக்கைகளை ஜனாதிபதி உடனடியாக நிறைவேற்றத்தவறினால் நாம் இந்த ஜனாதிபதியை விரட்டிவிட்டு நமது பேச்சைக் கேட்டு நடக்கின்ற ஒரு ஜனாதிபதியை விரைவில் நியமித்து எமது காரியத்தை சாதிப்போம். என்று கஸ்ஸப தேரர் ஊடகங்கள் முன் பகிரங்கமாக பேசிக் கொண்டு வருகின்றார். இது ஞானசாரத்தேரரை முன்னிறுத்தி ஆட்சி மாற்றம் ஒன்றைக் கொண்டு வருவதற்காக இவர்கள் மேற்கொள்கின்ற போராட்டம். இவர்களின் இந்த மக்கள் ஆணைக்கு எதிரான அப்பட்டமான நடவடிக்கைகள் முற்றிலும் ஜனநாயக விரோத செயல்பாடு என்பது தெளிவாகத் தெரிகின்றது. இதே கஸ்ஸப தேரர் தனது தந்தையை கல்லால் அடித்துக் கொன்றவர் அல்லது காயப்படுத்தியவர் என்ற ஒரு பாரதூரமான குற்றச்சாட்டும் பொலிஸ் பதிவில் இருப்பதாகவும் சொல்லப்படுகின்றது.
இந்த நாட்டில் சட்டம் நீதி என்னவாக இருந்தாலும் நாம் எதனை விரும்புகின்றோமோ அதனைத்தான் அதிகாரத்தில் இருப்பவர்கள் செய்ய வேண்டும். பௌத்தத்தையும் பௌத்த தேரர்களையும் மீறி ஒரு அடிகூட நகரக்கூடாது என்பதுதான் இந்த பௌத்த தேரர் குழுவின் கட்டளையாக இருக்கின்றது. நாம் ஏற்கெனவே குறிப்பிட்ட தரப்பினர் மக்களால் நிராகரிக்கப்பட்ட குற்றக்கும்பல். அவர்கள் அனைவரும்போல இன்று இந்த இனவாத அதாவது பேரின பாதாள உலகத்தேரர்களுக்கு ஆதரவாக ஓரணியில் இணைந்திருப்பது அதிர்ச்சியும் அச்சமும் நிறைந்த ஒரு செய்தியாக இருக்கின்றது. எனவே இந்த நாட்டில் இதுவரை இல்லாத அச்சமும் அச்சுறுத்தலும் நாட்டில் சிறுபான்மை சமூகங்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த மக்கள் ஆணைக்குமே ஏற்படுத்தி வருகின்றது. ஒரு சிறு குழுவாக இருந்தாலும் அது விடுக்கின்ற அச்சுறுத்தல் பெரிதாகவும் ஆபத்தாகவும் இருந்து வருகின்றது.
ஜனாதிபதி நாம் சொல்கின்ற படி எல்லாம் கையெழுத்துப்போட்டுத்தர தயாராக வேண்டும் என்று தேரர்கள் அணி ஒன்று அச்சுருத்தல் கொடுத்துக் கொண்டிருக்கின்றது. இது எந்தளவுக்கு ஆபத்தானது என்பது நாட்டில் வாழ்கின்ற அனைத்து சமூகங்களும் சிந்திக்க வேண்டிய ஒன்று. எங்களது விருப்பங்கள் நிறைவேறாவிட்டால் பதவியில் இருக்கின்ற ஜனாதிபதியை விரட்டுவோம். தேரர்களின் பேச்சை கேட்டு நடக்கின்ற ஒரு ஆட்சியாளரை பதவிக்குக் கொண்டு வருவோம். அதில் நாம் உறுதியாக இருக்கின்றோம் என்று விகாரமகாதேவி பூங்காவில் இருக்கும் அந்தத் தேரர்கள் குழு எச்சரிக்கை செய்து கொண்டிருப்பதை மீண்டும் இங்கு சுட்டிக்காட்டுகின்றோம்.
தற்போது மூன்று வாரங்களுக்கு மேலாக நடந்து வருகின்ற இந்தப் போராட்டம் இன்று விகாரமகாதேவி பூங்காவில் முகாம் அமைத்து அரசுக்கு எதிராக போர்ப்பிரகடனம் செய்து கொண்டிருக்கின்றது. இப்படியான ஒரு கோரிக்கையை சிறுபான்மை சமூகங்கள் ஏதாவது ஓரிடத்தில் நடாத்துகின்றது என்று வைத்துக் கொள்வோம். அப்படியாக இருந்தால் நிலமை என்னவாக இருக்கும். இதிலுள்ள வேடிக்கை என்னவென்றால் அந்தக் கூடாரத்தில் இருந்து கொண்டு கடந்த வாரம் ஜனாதிபதிக்கு எதிராக நாம் சூனியம் பண்ணுகின்றோம். அதற்கு மாத்தறையில் இருந்து கட்டாண்டிகளை-சூனியம் பண்ண பிரசித்த பெற்ற ஆட்களை வரவழைத்திருக்கின்றோம். அதனைப் கண்டுகளிக்க திரண்டு வருமாறும் வேறு பகிரங்க அழைப்பையும் ஏற்பாட்டாளர்கள் செய்திருந்தார்கள். இது பௌத்த கோட்பாடுகளுக்கு எந்தளவு ஏற்புடையது என்று தெரியாது.
ஆனால் இந்த சூனியம் ஜனாதிபதிக்கும் அரசுக்கும் எதிரானது தெளிவானது. அத்துடன் அந்த சூனியத்தில் ஜனாதிபதி அனுராவின் தலை ஏழு எட்டு துண்டுகளாக வெடித்துச் சிதற வேண்டும் என்று சூனியம் செய்த பௌத்த தேரர்கள் சூனியத்தில் அங்கு பிரார்த்தனை பண்ணி இருக்கின்றார்கள். மண்ணால் செய்யப்பட்ட ஜனாதிபதி அனுரவுக்கு அமைவான ஒரு உருவத்தை வைத்தே இந்த சூனியம் செய்யப்பட்டிருக்கின்றது. இது பற்றி பொலிஸ் அமைப்பொன்றுக்குத் தலைமைத்துவம் கொடுத்து வருகின்ற அஜித் தர்மபால என்ற ஜனரஞ்சக யூடிபர் ஜனாதிபதி அனுராவை குண்டு வைத்து அல்லது ஸ்னைப்பர் தாக்குதல் ஒன்றில் கொலை செய்து விட்டு பார்த்தீர்களா நாம் பண்ணிய சூன்னியத்தால்தான் ஜனாதிபதியை கடவுள் கொன்றுவிட்டார் என்று அவர்கள் அந்தக் கொலையைக் கொண்டாடவும் இருக்கின்றார்கள்.
அதுதான் விகாரமகாதேவி பூங்காவில் கூடாரம் போட்டிருக்கின்ற தேரர்களின் எதிர்பார்ப்பாகவும் இருக்கின்றது என்று அஜித் தர்மபால என்ற பிரபல்யமான யூடிபர் கூறுவதுடன் நான் சொல்கின்ற இந்த தாக்குதல் நடக்கின்றதா இல்லையா என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள் என்று அஜித் தர்மபால சவால்விடுகின்றார். அத்துடன் அரசுக்கு எதிரான இந்த அணியில் இருக்கின்ற ஒரு முக்கியஸ்தரைக் கொன்றுவிட்டு அதனைச் செய்தது அரசுதான் என்று நாட்டில் வன்முறையைத் தூண்டிவிடவும் இடமிருப்பதாகவும் தர்மபால பகிரங்களமாக கூறிவருகின்றார்.
இந்தக் கடும்போக்கு பௌத்த தேரர்கள் எந்தளவு அரசு மீதும் மக்கள் ஆணை மீதும் வைராக்கித்தில் இருக்கின்றார் என்பதைப்பார்க்க முடிகின்றது. ஆனால் அதனைவிட ஆபத்து நாம் கடந்த வாரம் பேசியது போல பிரதான எதிர்க்கட்சியான சஜித் தலைமையிலான அணியினர் இந்த கடும்போக்கு பௌத்த தேரர்களுக்கு ஆதரவாக இப்போது பகிரங்கமாக பேசிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் மொட்டுக் கட்சியினர் அவர்களுக்கு ஆதரவாக பேசுவது செயலாற்றுவது தொடர்பில் எந்த அதிர்ச்சியும் கிடையாது. இவர்கள் இனவாதத்தை முன்னிறுத்தி அதிகாரத்துக்கு வந்தவர்கள். மீண்டும் வரலாம் என்று எதிர்பார்க்கின்றவர்கள். அதனால் மொட்டுத் தலைவர்கள் இனவாத தேரர்களுடன் கூட்டணி அமைப்பது ஒன்றும் புதிரல்ல. இந்த தேரர்கள் அணியில் இருக்கின்ற ஒவ்வொரு தேரர்கள் மீதும் பல குற்றச்சாட்டுக்கள் பொலிஸ் முறைப்பாடுகளில் இருந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் தற்போது விகாரமகாதேவி பூங்காவில் கூடாரம் அமைத்திருக்கின்ற தேரர்களில் பலர் நாம் மொட்டு நாமலை அதிகாரத்துக்குக் கொண்டு வருவதற்காகத்தான் முயற்சி செய்கின்றோம் என்பதனையும் பகிரங்கமாக ஏற்றுக் கொள்கின்றார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த நாட்டை ராஜபக்ஸாக்கள்தான் ஆட்சி செய்ய வேண்டும் என்பது அவர்களின் விருப்பமாகவும் இருந்து வருவது இதிலிருந்து தெளிவாக அவதானிக்க முடிகின்றது. இதற்கு முன்னர் சட்டதரணிகளை சங்கத்தை வைத்து அனுர அரசுக்குத் தலைவலி கொடுத்துக் கொண்டு வந்த அரசியல் தலைமைகள் இன்று இந்த இனவாத பௌத்த தேரர்களுக்கு பக்கபலமாக இருந்து செயலாற்றிக் கொண்டு வருகின்றன. தற்போது சிறையில் இருக்கின்ற ஞானசரரை காவி உடையில்தான் வெளியில் கொண்டுவர வேண்டும் என்று துவங்கிய போராட்டத்தில் இந்த அணியினர் வெற்றி பெற்றுவிட்டதாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதுவரை சிறையில் இருக்கும் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்ட தேரர்கள் சிவில் உடையில்தான் வெளியில் எடுத்துவரப்பட்டனர். அந்த விதி தற்போது மாற்றி அமைக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. அதன்படி அப்படி குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்ட ஏனைய சமூக மத குருமார்களும் இதன் மூலம் தத்தமது சமூக அடையாளங்களுடன் நீதி மன்றத்துக்கு வெளியே அழைத்து வருகின்ற சந்தர்ப்பங்களில் ஆடைகளை அணிந்து கொள்ள முடியும் என்ற நிலை தோன்றி இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த மாற்றம் தொடர்பான கடுமையான ஒரு விமர்சனம் இன்று பேரின சமூகத்தினர் மத்தியிலே நடந்து கொண்டிருக்கின்றது. அரசு இந்த மாற்றத்தை செய்து பௌத்த சமயத்துக்கு அவமானத்தை ஏற்படுத்தி இருக்கின்றது என்று குற்றம் சாட்டுபவர்களும் பௌத்த சமூகத்தினர் மத்தியிலே இருந்து வருகின்றார்கள் என்பதும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.





