நெதன்யாகுவுக்கு எல்லாம் போச்சு..
இஸ்ரேலில் கடந்த வாரம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் எந்தக் கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், புதிய ஆட்சியை அமைக்க எதிர்க்கட்சி தலைவர் காடி ஐசன்கோட்டுக்கு அதிபர் ஐசக் ஹெர்சாக் அழைப்பு விடுத்துள்ளார்.
இதனால் நீண்டகாலமாக இஸ்ரேல் அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வந்த பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு புதிய சவால் உருவாகியுள்ளது. அரசை அமைக்க ஐசன்கோட்டுக்கு 28 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் கடந்த சில மாதங்களாக எந்தளவுக்கு பதற்றம் நிலவுகிறது என்பது அனைவருக்கும் தெரியும். இந்த குழப்பங்களில் சிக்கிய நாடுகளில் ஒன்று இஸ்ரேல்.
அங்கு சமீபத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இது அந்நாட்டின் பிரதமர் நெதன்யாகு தலையெழுத்தை தீர்மானிக்கும் தேர்தலாக பார்க்கப்பட்டது.

இஸ்ரேல்
இஸ்ரேலின் நாடாளுமன்றமான நெசெட்டில் மொத்தம் 120 இடங்கள் உள்ளன. அங்கு ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 61 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
ஆனால், தேர்தலில் நெதன்யாகுவின் வலதுசாரி லிகுட் கட்சி தலைமையிலான கூட்டணிக்கு 53 இடங்கள் மட்டுமே கிடைத்தன. மறுபுறம், எதிர்க்கட்சியான ஐசன்கோட்டின் யாஷர் கட்சி தலைமையிலான கூட்டணிகள் இணைந்து 48 இடங்களை கைப்பற்றின.
இந்த தேர்தலில் அரபு வாக்காளர்களின் வாக்குப்பதிவு அதிகரித்ததது. இதனால் யுனைடெட் அரபு லிஸ்ட் மற்றும் ஜாயின்ட் லிஸ்ட் ஆகிய இரு கூட்டணிகளும் சேர்ந்து 19 இடங்களைக் கைப்பற்றியுள்ளன.
இது முன்னெப்போதும் இல்லாத அளவிலான வெற்றியாகும். இதனால் இஸ்ரேலில் அடுத்த ஆட்சியை தீர்மானிப்பதில் அரபு கட்சிகள் முக்கிய பங்கு வகிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
அரபு கட்சிகள்
ஆனால் தேர்தலுக்கு முன்பே பிரதான யூத கட்சிகள் அனைத்தும் அரபு கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்க மாட்டோம் என்று உறுதியளித்திருந்தன.
ஐசன்கோட்டும் அவரது கூட்டணியில் உள்ள பெரும்பாலான கட்சிகளும் அரபு கட்சிகளுடன் இணைந்து ஆட்சியை அமைக்க மாட்டோம் என மறுத்துள்ளன.
தேர்தலில் தொங்கு நாடாளுமன்றம் அமைந்த நிலையில், அதிபர் ஹெர்சாக், புதிய நாடாளுமன்றத்தில் இடம்பெற உள்ள கட்சிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைகளுக்கு பிறகு, பிரதமர் பதவிக்கு ஐசன்கோட்டுக்கு 67 உறுப்பினர்களும், நெதன்யாகுவுக்கு 46 உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்ததாக அதிபர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கூட்டணி ஆட்சி
இஸ்ரேலில் எந்தவொரு அரசியல் கட்சியும் இதுவரை தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதில்லை. எனவே அங்கு கூட்டணி ஆட்சிகளே வழக்கமாக இருந்து வருகின்றன.
பிரதமர் பதவிக்கான நபரை தேர்வு செய்யும் அதிகாரம் அதிபருக்கு உள்ளது. அதிக இடங்களை பெற்ற கட்சியின் தலைவருக்கு தான் வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. யாரால் கூட்டணியை அமைக்க முடியும் என்று கருதுகிறாரோ அவரைத் தேர்வு செய்யலாம்.
இப்போதைய சூழலை வைத்து பார்த்தால் இஸ்ரேலில் மூன்று விதமான ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. நெதன்யாகுவும் ஐசன்கோட்டும் இணைந்து அரசை அமைப்பது முதல் ஆப்ஷன்..
ஐசன்கோட் அணியில் இருந்து சில உறுப்பினர்களை தங்கள் பக்கம் இழுத்து நெதன்யாகு வலதுசாரி கூட்டணியை அமைப்பது இரண்டாவது ஆப்ஷன்.
அரபு கட்சிகளின் ஆதரவுடன் ஐசன்கோட் தலைமையில் புதிய அரசு அமைப்பது 3வது ஆப்ஷன். இதில் என்ன நடக்கும் என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ஐசன்கோட்
இப்போது ஐசன்கோட் அரசை அமைக்க 28 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்குள் அவர் அரசை அமைத்து பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.
28 நாட்களுக்குள் அவரால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போனால் கூடுதலாக 14 நாட்கள் அவகாசம் தருவார்கள்.
அப்போதும் ஆட்சியை அமைக்க முடியவில்லை என்றால் அடுத்த ஆதரவு இருக்கும் நெதன்யாகுவுக்கு அழைப்பு விடுக்கப்படும்.





