வெற்றிகரமாகத் தொடரும் ராஜாக்கள் நாடகங்கள்

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் ராஜபக்சர்களின் மற்றுமொரு நாடகம் முடிவுக்கு வந்துள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்றத்தின் புதிய பிரதி சபாநாயகராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் ஒரு மாத காலமாக அரங்கேற்றப்பட்ட நாடகம் முடிவுக்கு வந்துள்ளது.

கடந்த ஏப்ரல் மூன்றாம் திகதி பதில் சபாநாயகராக ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவு செய்யப்பட்டார். ஏப்ரல் ஐந்தாம் திகதி தனது பதவியை ராஜினாமா செய்வதாக கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்தார். இந்நிலையில் அதே தினத்தில் சியப்பலாபிட்டியவின் ராஜினமாவை ஜனாதிபதி கோட்டாபய நிராகரித்திருந்தார்.

இதனையடுத்த மீண்டும் ஏப்ரல் 30ஆம் திகதி தனது பதவியை ராஜினமா செய்வதாக பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தனது கடிதத்தை கையளித்தார். இதனையடுத்து நேற்றையதினம் அவரது ராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொள்வதாக நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் அந்தப் பதவிக்கு ரஞ்சித் சியம்பலாபிட்டிய பரிந்துரைக்கப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன்மூலம் மீண்டும் பிரதி சபாநாயராக ரஞ்சித் சியம்பலாபிட்டிய நியமிக்கப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சியம்பலாபிட்டிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியால் பரிந்துரைக்கப்பட்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவைப் பெற்றார்.

எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினால் பிரதி சபாநாயகர் பதவிக்கு இம்தியாஸ் பகீர் மார்க்கார் பரிந்துரைக்கப்பட்டார். அவருக்கு எதிராக போட்டியிட்ட சியம்பலாபிட்டிய மீண்டும் பிரதி சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

புதிய பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டதுடன், ரஞ்சித் சியம்பலாபிட்டிய 148 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.

வாக்கெடுப்புக்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய சபையின் பிரதி சபாநாயகராக செயற்பட்டார். எப்படியிருப்பினும் நாட்டில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இருக்கப்போவதாக அறிவித்ததையடுத்து அவர் அந்த பதவியில் இருந்து விலகினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் பிரதி சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு, தற்போது அதே பதவிக்கு போட்டியிடுவது ஏன் என்பது குழப்பமான விடயமாகியுள்ளது.

இந்த வாக்கெடுப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், அண்மையில் அரசாங்கத்தில் இருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் அரசாங்கத்துடன் இணைந்த ஏனைய கட்சிகளின் உண்மையான விசுவாசத்தை இந்த வாக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளதென குறிப்பிட்டுள்ளார்.

ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் பிரதி சபாநாயகருக்கான வேட்புமனுவை ஆதரிப்பதாக அரசாங்கம் தெரிவித்திருந்த நிலையில், இம்தியாஸ் பாக்கீர் மார்க்கரை ஐக்கிய மக்கள் சக்தி கட்சியை பரிந்துரை செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஏனையவர்கள் அரசாங்கத்தில் இருந்து வெளியேறிவிட்டதாகக் கூறி இத்தனை நாட்கள் ஆடிய நாடகத்தை இன்றைய சம்பவம் அம்பலப்படுத்துவதாகவும் சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

 

Previous Story

ராஜபக்சாக்கள் பற்றிய கருத்துக் கணிப்பு!

Next Story

நாடாளுமன்ற வளாகத்தில் கொந்தளிப்பு பொலிஸார் குவிப்பு