விழப்போன ஜோ பைடன்.. தாங்கி பிடித்த இந்தோனேசியா தலைவர்..

இந்தோனேசியாவின் பாலி நகரில் ஜி20 உச்சி மாநாட்டின் 2வது நாளான இன்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் படிக்கட்டில் ஏறி சென்றபோது கால் தவறி கீழே விழப்போனார். இதை கவனித்த இந்தோனேசியாவின் அதிபர் ஜோகோ விடோடோ, ஜோ பைடனை தாங்கி பிடித்தார்.

இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்தோனேசியாவில் ஜி20 நாடுகளின் கூட்டமைப்பு சார்பில் ஆண்டுதோறும் நடக்கும் உச்சி மாநாடு நேற்று துவங்கி இன்று வரை நடைபெற்றது.

இந்த மாநாட்டில் ஜி20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இதில் இந்தியாவும் அங்கம் வகிப்பதால் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.

உலக தலைவர்கள் பங்கேற்பு இந்தியா தவிர ரஷ்யா, சீனா, அமெரிக்கா, பிரிட்டன் உள்பட ஜி20 நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். அமெரிக்கா சார்பில் அந்நாட்டின் அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் சார்பில் அந்நாட்டின் பிரதமர் ரிஷி சுனக், சீனா சார்பில் அந்நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்றனர்.

ரஷ்யா சார்பில் அதிபர் விளாடிமிர் புதின் பங்கேற்கவில்லை. இருப்பினும் அந்த நாட்டின் அமைச்சர், அதிகாரிகள் பிரதிநிதிகளாக பங்கேற்றனர். 2வது நாள் மாநாடு இந்த நிலையில் 2வது நாள் மாநாடு இன்று துவங்கியது. அப்போது மாநாட்டின் ஒரு பகுதியாக பாலி நகரில் உள்ள மாங்குரோவ் காடுகளுக்கு அனைத்து நாடுகளின் தலைவர்கள் அழைத்து செல்லப்பட்டனர்.

உலக தலைவர்கள் அங்கு செல்வதால் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. சிவப்பு கம்பள வரவேற்பு தலைவர்கள் நடந்து செல்லும் இடங்களில் சிவப்பு கம்பளங்கள் விரிக்கப்பட்டு இருந்தன. இந்த சிவப்பு கம்பளங்களில் உலக தலைவர்கள் நடந்து சென்றனர்.

அனைத்து தலைவர்களும் சிவப்பு கம்பளங்களில் கம்பீரமாக நடந்து சென்றனர். அதன்பிறகு தலைவர்கள் அனைவரும் அங்குள்ள பகுதிகளை சுற்றி பார்த்தனர். அமெரிக்க அதிபர் ஜோபைடன், இந்தோனேசியா அதிபர் ஜோகோ விடோடோவுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். இருவரும் படிக்கட்டுகளில் நடந்து சென்றனர்.

படிக்கட்டில் விழப்போன ஜோ பைடன் அப்போது படியில் ஏறிய அமெரிக்க அதிபர் ஜோபைடனின் கால் தவறியது. இதனால் அவர் நிலை தடுமாறி கீழே விழுவதற்கு சென்றார். இதை கவனித்த இந்தோனேசியா அதிபர் ஜோகோ விடோடோ, ஜோ பைடனை தாங்கி பிடித்தார். இதனால் ஜோ பைடன் கீழே விழவில்லை.

இந்நிலையில் ஜோ பைடன் கால்தவறி கீழே விழப்போன வீடியோ இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. முன்பு நடந்தது என்ன? முன்னதாக கடந்த ஜூன் மாதம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அமெரிக்கா டெலாவேர் மாகாணத்திலுள்ள உள்ள தனது கடற்கரை வீட்டிற்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவர் திடீரென்று தடுமாறி கீழே விழுந்தார். அதிர்ஷ்டவசமாக அவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. இந்நிலையில் தான் ஜி20 மாநாட்டில் படிக்கட்டில் ஜோ பைடன் கால் தவறி தடுமாறியது குறிப்பிடத்தக்கது.

Previous Story

கடந்த கால தவறுகள் ரணிலை  அச்சுறுத்துகிறது?

Next Story

தனுஷ்க குணதிலக்க: முக்கிய வீடியோ நீதிமன்றத்தில்...