துருக்கி தலைநகர் அங்காராவிலிருந்து புறப்பட்ட தனியார் ஜெட் விமானம் விபத்துக்குள்ளானதில், லிபியாவின் இராணுவத் தளபதி ஜெனரல் முகமது அலி அஹ்மத் அல்-ஹத்தாத் உயிரிழந்துள்ளார். தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்த விபத்து நிகழ்ந்ததாக லிபிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த விபத்தில், 4 உயர் அதிகாரிகள் மற்றும் 3 விமானக் குழுவினர் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். லிபியப் பிரதமர் அப்துல்-ஹமீத் திபைப் தனது பேஸ்புக் பக்கத்தில் இச்செய்தியை உறுதிப்படுத்தினார். நாடு திரும்பி கொண்டிருந்த இத்தூதுக்குழுவுக்கு நிகழ்ந்த துயரச் சம்பவம் பெரும் இழப்பு என்று, அவர் வருத்தம் தெரிவித்தார்.
மேற்கத்திய லிபியாவின் உயர்மட்டத் தளபதியான அல்-ஹத்தாத், ஐ.நா. உதவியுடன் லிபிய இராணுவத்தை ஒன்றிணைப்பதில் முக்கியப் பங்காற்றினார்.

லிபியாவின் தரைப்படைத் தலைவர் ஜெனரல் அல்-ஃபித்தோரி கிராய்பில், இராணுவ உற்பத்தி ஆணையத்தின் தலைவர் பிரிகேடியர் ஜெனரல் மஹ்மூத் அல்-கடாவ், தலைமை அதிகாரியின் ஆலோசகர் முகமது அல்-அசாவி தியாப், மற்றும் இராணுவப் புகைப்படக் கலைஞர் முகமது உமர் அஹ்மத் மஹ்ஜூப் என 4 முக்கிய அதிகாரிகள் இந்த விபத்தில் உயிரிழந்திருக்கின்றனர்.
லிபியக் குழு, இரு நாடுகளின் இராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்த உயர்மட்டப் பாதுகாப்புப் பேச்சுவார்த்தைகளுக்காக துருக்கிக்கு வந்திருந்தது. இந்த குழு வந்த ஃபோல்கன் 50 ரக வர்த்தக ஜெட் விமானம் அங்காரா எஸ்என்போகா விமான நிலையத்திலிருந்து இரவு 8:30 மணிக்கு புறப்பட்டது.
விமானம் புறப்பட்டு 40 நிமிடங்களுக்குப் பிறகு தொடர்பு துண்டிக்கப்பட்டது. விமானத்தின் சிதைவுகள் அங்காராவிலிருந்து சுமார் 70 கிலோமீட்டர் தெற்கேயுள்ள ஹேய்மனா மாவட்டத்தின் கெசக்காவக் கிராமத்திற்கு அருகில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.





