/

வாராந்த அரசியல் 5/12/2021

நஜீப்
பீடாதிபதியின் தகைமை!

அண்மையில் கொழும்பு பல்கலைக் கழகத்துக்கு ஜனாதிபதி ஆனந்த முறுத்தெட்டுவே தேரரை பீடாதிபதியாக நியமனம் செய்தார். இது பற்றி விமர்சனங்கள் வந்த போது அவர் எனக்கு வேண்டியவர். எனது வெற்றிக்கு பங்களிப்புச் செய்தவர் அவரை பீடதிபதியாக்கினால் என்ன என்றும் ஜனாதிபதி விமர்சிப்பவர்களைக் கேட்டிருந்தார். இந்த தேரரை ஒரு தொலைக் காட்சி பேட்டி கண்;டது. இப்படி ஒரு உயர் பதவியை வகிக்க உங்கள் கல்வித் தகைமை என்ன என்று அங்கு கேள்வி எழுப்பப்பட்ட போது, அதுதானே எனக்குப் பெரிய கல்வித் தகைமைகள் கிடையாது. இந்தப் பதவிக்கு நியமணம் செய்த ஜனாதிபதியிடம்தான் நீங்கள் இது பற்றிக் கேள்வி கேட்க வேண்டும் என அவர் கூறி இருந்தார். மக்களுக்கான எதிர் கட்சி என்ற பதாகையின் கீழ் இது பற்றி கருத்துக் கூறிய ஆனந்த லெனரோல் க.பொ.த.(சாதாரணம்) கூட சித்தியடையாத ஒருவர் என்று தேரர் கதையைச் சொன்னார்.

சமயலறையில் சஹ்ரான்!

வெடி குண்டு என்றால் இந்த நாட்டு மக்களுக்கு சஹ்ரனைத்தான் நினைவுக்கு வரும். இந்த மனித வேட்டைக்காரன் செய்த அக்கிரமம் இன்று நமது அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருவதுடன் அவன் ஒரு கைக்கூலி என்றுதான் புதிய தகல்கள் தெரிவிக்கின்றன. யாருடைய தேவைக்காகவே அவனும் அவனது கையாட்களும் காரியம் பார்த்திருக்கின்றார்கள். இதில் சமய சித்தாந்தங்களை விட அரசியல் நோக்கங்கள் தான் இருந்திருக்கின்றன என்று பரவலாக கதைகள் உல வருகின்றன. ஆனால் இன்று மக்கள் பணம் கொடுத்து தமது வீடுகளின் சமயல் அறைகளில் ஒவ்வொரு சஹ்ரான்களை வைத்திருப்பது போல் ஒரு நிலை நாடு பூராவிலும் இருந்து வருகின்றது. அவன் கூலிக்கு மார் அடித்திருக்கின்றான். மக்களோ விரும்பியே வெடி குண்டகளைத் தமது வீடுகளில் பணம் கொடுத்து வாங்கி நிம்மதியின்றித் தவிக்கின்றார்கள். என்ன அநியாயம் இந்த காட்சிகளை இந்த நாட்டில் மட்டுமே பார்க்க முடியும்.

ஜீ.ஆர்-மைத்திரி லடாய்!

புதிய களனிப் பாலத்தை திறந்து வைத்து உரையாற்றிய ஜனாதிபதி ஜீ.ஆர்.தான் விரைவில் தராதரம் பாராது ஈஸ்டர் தாக்குதல் பொறுப்புக் கூற வேண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இருப்பதாகத் தெரிவித்திருக்கின்றார். இது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு எதிராக தற்போதய ஜனாதிபதியின் அச்சுருத்தலாகத்தான் பார்க்கப்படுகின்றது. முன்னாள் ஜனாதிபதி மைத்தரியும் மூன்றில் இரண்டு தனது கைகளில்தான் இருக்கின்றது என்று ஜீ.ஆருக்கு எச்சரிக்கை விடுத்துக் கொண்டிருக்கின்றார். நாட்டில் சட்டம் என்று ஒன்று இருக்கும் போது ஜனாதிபதி நேரடியாக ஆளைப் பிடித்து உள்ளே போடுவேன் என்பதும் குற்றவாளிகள் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் அவன் தனக்கு வேண்டியவனாக இருந்தால் அவனை நான் வெளியே எடுப்பது மட்டுமல்ல அதி உயர் பதவிகளும் கொடுப்பேன் என்று இதே ஜனாதிபதி செய்து காட்டி இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒமிக்ரோனுக்கு பூட்டாம்!

தென்னாபிரிக்காவில் துவங்கிய கொரோனாவின் புதிய வடிவம் ஒமிக்ரோன். இது உலகில் இதுவரை இருபத்தி நான்கு நாடுகளுக்கு பரவி இருக்கின்றது மிகப் பிந்திய தகவல்களின் படி இந்தியாவுக்கு கூட அது நுழைந்து விட்டது என்று தெரிய வருகின்றது. ஆனால் நமது உல்லாசப் பிரயானத்துறை அமைச்சர் பிசன்னாவும் விளையாட்டுத் துறை அமைச்சர் நாமலும் நாங்கள் இங்கு ஒமிக்ரோனை நுழைய விட மாட்டோம் என்று சூழுறைத்துக் வருகின்றார்கள். வைத்திய வசதிகள் உச்சத்தில் இருக்கும் மேற்கத்திய நாடுகளே அச்சத்தில் உறைந்து போய் இருக்கின்ற இந்த ஒமிக்ரோன் விடயத்தில் நமது அமைச்சர்கள் கதவைப் பூட்டி விட்டது போல அதனை உள்ளே நுழைய விடமாட்டோம் என்பது எந்தளவுக்கு மடமைத்தனமானது என்று கேட்கத் தோன்றுகின்றது. வைத்தியர்களே அஞ்சுகின்றார்கள். அமைச்சர்கள் அதற்கு பெரியல் போட்டு விட்டதாக மார்தட்டுகின்றார்கள்.

வெடிப்பதுதான் கேஷ்!

சிலின்டர்-கேஷ் என்றால் வெடிக்கத்தானே செய்யும். அதனப் பெரிதாக எடுத்துக் கொண்டு பேசுவதில் அர்த்தம் இல்லை என்று சமயலறை கேஷ் வெடிப்புக்களை நமது சபநாயகர் மஹிந்த யாப்பா நியாயப்படுத்திய நிகழ்வொன்று அண்மையில் நாடாளுமன்றத்தில் நடந்தது. எதிரணியினர் தாருமாராக சமயலறை எரிவாயு நாடு பூராவிலும் வெடிப்பதை நாடாளுமன்றத்தில் பேசிக் கொண்டிருந்ததால் அதனைத் தாங்கிக் கொள்ள முடியாத நமது சபாநாயகர் சமயலறை எரிவாயு விபத்துக்கள் இயல்பானது. அது வெடிக்கத்தான் செய்யும் என்று கூறி ஆளும் தரப்புக்கு ஆதரவாக செயல்பட்டு அண்மையில் மூக்குடைபட்டிருக்கின்றார். இதற்கு முன்னரும் அவர் இப்படி பல சந்தர்ப்பங்களில் நடந்திருக்கின்றார். சபாநாயகர் தனது ஆசனத்தில் அமர்ந்து கொண்டிருப்பது கூட அளும் தரப்புக்கு இசைவாக உடலை வைத்துக் கொண்டுதான் என்று ஒரு முறை ஜேவிபி தலைவர் அணுர சபநாயகர் செயல்பாடுகளை கிண்டலடித்திருந்தார்.

Previous Story

வாராந்த அரசியல் - பீடாதிபதியின் தகைமை!

Next Story

அரபிக் கடலின் சிங்கம்