வாக்னர் குழு – உருவான வரலாறு

ரஷ்ய அரசுக்கு மிகவும் நெருக்கடியான வாரமாக, கடந்த வாரம் அமைந்தது. ஓராண்டை கடந்து தொடர்ந்து வரும் யுக்ரேன் மீதான படையெடுப்பு ஒருபுறம் இருக்க, தங்களின் `விசுவாசிகள்` என்று நம்பிய வாக்னர் படையினர் ரஷ்ய அரசுக்கு எதிராக திரும்பியது புதினை அதிர்ச்சியடையச் செய்தது.

இந்தச் செயல் முதுகில் குத்துவதைப் போல் உள்ளது என்று வாக்னர் படையினரின் செயலை புதின் கடுமையாக விமர்சித்தார்.

வாக்னர் குழு

வாக்னர் கமாண்டர் யெவ்கெனி ப்ரிகோஜின் 5,000 படை வீரர்களுடன் தலைநகர் மாஸ்கோ நோக்கி அணிவகுத்துச் சென்றார். ஆனால் தலைநகரில் இருந்து 200கிமீ தொலைவில் நிறுத்தப்பட்டார்.

தற்போது, நிலைமை கட்டுக்குள் வந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், ரஷ்ய அரசாங்கம் வாக்னர் கூலிப்படையைக் கலைத்து வருவதாகத் தெரிகிறது.

தனியார் ராணுவப் படையான வாக்னர் படையின் கனரக ஆயுதங்கள் மற்றும் ராணுவ தளவாடங்களைத் திரும்ப எடுத்துக்கொள்வதாக பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது.

வாக்னர் குழு என்றால் என்ன, அது எவ்வளவு பெரியது?

வாக்னர் குழு (அல்லது பிஎம்சி வாக்னர்) 2014இல் கிழக்கு யுக்ரேனில் ரஷ்ய சார்பு பிரிவினைவாத சக்திகளை ஆதரிக்கத் தொடங்கியது. அப்போதுதான் அந்தக் குழு வெளியே தெரியத் தொடங்கியது. அதே ஆண்டில் ரஷ்யாவுடன் கிரைமியாவை இணைப்பதில் இந்தக் குழு உதவியாக இருந்ததாகக் கருதப்படுகிறது.ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும் வாக்னர் படைகள் செயல்பட்டு வருகின்றன.

யுக்ரேனில் போருக்கு முன்பு, வாக்னர் படையில் 5,000 வீரர்கள் இருந்ததாகக் கருதப்பட்டது. அவர்களில் பெரும்பாலானோர் ரஷ்யாவின் உயரடுக்கு படைப்பிரிவுகள் மற்றும் சிறப்புப் படைகளின் வீரர்கள். பிறகு, வாக்னர் படையில் உள்ளவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது.

Russia highlights: Wagner mercenary chief Prigozhin starts exile in Belarus | Mint

மாஸ்கோவில் தனது “நீதிக்கான அணிவகுப்பை” அறிவித்தபோது, ​​யெவ்கெனி ப்ரிகோஜின் 25,000 துருப்புகளுக்கு கட்டளையிட்டதாகக் கூறினார்.

கூலிப்படைகள் ரஷ்யாவில் தொழில்நுட்பரீதியாக சட்டவிரோதமாக இருந்தாலும், வாக்னர் 2022இல் ஒரு நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டது.

வாக்னர் குழுவை தேசிய குற்றவியல் அமைப்பாக வகைப்படுத்துவோம் என்று கடந்த ஜனவரி மாதம் அமெரிக்கா தெரிவித்திருந்தது.

வாக்னர் குழு
ரோஸ்டோவ்-ஆன்-டானை ஆக்கிரமித்தபோது வாக்னர் குழுவுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு

யுக்ரேனில் வாக்னர் குழு செய்தது என்ன?

ரஷ்யாவுக்காக கிழக்கு யுக்ரேனில் உள்ள பாக்முட் நகரைக் கைப்பற்றுவதில் வாக்னர் பெரிதும் ஈடுபட்டது. வாக்னர் படையினர் அதிகளவில் தாக்குதலுக்கு அனுப்பப்பட்டனர் என்றும் இதனால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டது என்றும் யுக்ரேனிய துருப்புகள் கூறுகின்றன.

வாக்னர் குழு இந்தச் சண்டையில் ஈடுபட்டதை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் முதலில் ஒப்புக்கொள்ளவில்லை. இது ரஷ்யாவின் ராணுவத் தலைவர்களுக்கு எதிராக யெவ்கெனி ப்ரிகோஜினை தூண்டியது.

வெடிமருந்துகளை இழந்துவிட்டதாகக் கூறி, வாக்னர் படைகளை பாக்முட்டில் இருந்து வெளியேற்றுவதாகவும் அச்சுறுத்தினார்.

ரஷ்யா யுக்ரேன் மீது படையெடுப்பதற்கு சில வாரங்களுக்கு முன்பு, கிரெம்ளின் மீது படையெடுப்பதற்கான சாக்குப்போக்கைக் கொடுப்பதற்காக வாக்னர் “பொய்க் கொடி” தாக்குதல்களை நடத்தினார் என்று கருதப்படுகிறது. ஒரு தரப்பினர் அரசியல் அல்லது ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு, பிறகு மற்றொரு தரப்பு மீது அதற்குப் பழி கூறுவதைத் தான் இப்படி அழைக்கின்றனர்.

இந்தக் குழு யுக்ரேனில் வழக்கமான ரஷ்ய துருப்புகளையும் கட்டுப்படுத்தியது என லண்டனின் கிங்ஸ் கல்லூரியைச் சேர்ந்த டாக்டர் மெரினா மிரோன் கூறுகிறார்.

வாக்னர் குழு

வாக்னர் குழு ரஷ்யாவில் ஒரு முக்கிய அமைப்பாக மாறியதை அதன் பிரமாண்ட புதிய தலைமை அலுவலகம் காட்டுகிறது

வாக்னர் குழு எப்போது தொடங்கப்பட்டது? வாக்னர் என பெயர் வந்தது எப்படி?

வாக்னர் குழுவை 2014 இல் நிறுவியதாக யெவ்கெனி ப்ரிகோஜின் கூறுகிறார். பணக்கார தொழிலதிபர் மற்றும் தண்டனை பெற்ற குற்றவாளியான ப்ரிகோஜின் கிரெம்ளினுக்கு உணவு வழங்குவதில் ஈடுபட்டார். இதன் காரணமாக “புதினின் சமையல்காரர்” என்று செல்லமாக அவர் அழைக்கப்பட்டார்.

கடந்த 2021 பிபிசி விசாரணை, வாக்னர் குழுவின் உருவாக்கத்தில் ரஷ்ய முன்னாள் ராணுவ அதிகாரி டிமிட்ரி உட்கினுக்கு சந்தேகத்திற்குரிய தொடர்பு இருப்பதை எடுத்துக்காட்டியது.

செச்சினியாவில் ரஷ்யா நடத்திய போர்களில் டிமிட்ரி முக்கிய பங்காற்றியவர். இவர் வாக்னரின் முதல் களத் தளபதியாக இருந்ததாகக் கருதப்படுகிறது. ரஷ்ய சிறைக் கைதிகளைத் தங்கள் படையில் இணைத்ததன் மூலம் வாக்னர் குழுவின் எண்ணிக்கையை பன்மடங்கு அதிகரித்தார் ப்ரிகோஜன்.

ப்ரிகோஜின் 2022 இல் ரஷ்ய கைதிகளைத் தனது படையில் சேர்த்ததன் மூலம் வாக்னர் படையின் எண்ணிக்கையை உயர்த்தினார். யுக்ரேனில் உள்ள அதன் துருப்புகளில் சுமார் 80% சிறைகளில் இருந்து படையில் சேர்ந்தவர்கள் என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்துள்ளது.

வாக்னர் குழு

யுக்ரேனில் தனது வாக்னர் படையினருடன் ப்ரிகோஜின்

ரஷ்யா ராணுவத் தளபதிகளுடன் வாக்னர் குழு மோதியது எப்படி?

பாதுகாப்பு அமைச்சர் செர்கேய் ஷோய்கு, யுக்ரேனில் உள்ள ஆயுதப்படைகளின் தலைவர் வலேரி ஜெராசிமோவ் ஆகியோர் திறமையற்றவர்கள் என்று ப்ரிகோஜின் பலமுறை குற்றம் சாட்டியுள்ளார்.

வாக்னர் குழுவை நேரடியாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவையும் அவர் ஏற்க மறுத்தார். ஜூன் 23ஆம் தேதியன்று, யுக்ரேனில் உள்ள வாக்னர் துருப்புகள் மீது ரஷ்ய பாதுகாப்பு அதிகாரிகள் குண்டுவீச்சு நடத்தியதாக ப்ரிகோஜின் குற்றம் சாட்டினார்.

ஒரு நாள் கழித்து, அவரது துருப்புகள் தெற்கு ரஷ்ய நகரமான ரோஸ்டோவ்-ஆன்-டானின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றி, ராணுவத் தலைமையை அகற்றும் குறிக்கோளுடன் மாஸ்கோவை நோக்கி தங்கள் அணிவகுப்பைத் தொடங்கினர்.

இருப்பினும், பெலாரூஸ் தலைவர் அலெக்சாண்டர் லுகாஷென்கோவின் மத்தியஸ்தத்தில் ரஷ்ய அரசுடனான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு ப்ரிகோஜின் மாஸ்கோ நோக்கிய தனது அணிவகுப்பை நிறுத்தினார். தனக்கு விசுவாசமாக இருந்த வாக்னர் படையினருடன் சேர்ந்து பெலாரூஸுக்கு நாடு கடத்தப்படுவதற்கு அவர் ஒப்புக்கொண்டார்.

வாக்னர் படையின் மற்ற வீரர்கள் ரஷ்ய ராணுவத்துடன் இணைக்கப்படுவார்கள். கிளர்ச்சியில் ஈடுபட்டவர்கள் மீதான குற்ற வழக்குகள் கைவிடப்பட்டுள்ளன.

வாக்னர் குழு

மாஸ்கோவிற்கு அருகே நடைபெற்ற ஒரு விருந்தில் விளாதிமிர் புதினுடன் ப்ரிகோஜின் – நவம்பர் 2011இல் எடுக்கப்பட்ட புகைப்படம்

வாக்னர் குழு வேறு எங்கெல்லாம் செயல்படுகிறது?

கடந்த 2015 முதல், வாக்னர் கூலிப்படையினர் சிரியாவில் உள்ளனர், அரசு சார்பு படைகளுடன் சண்டையிட்டு எண்ணெய் வயல்களைப் பாதுகாத்து வருகின்றனர்.

லிபியாவிலும் வாக்னர் படையினர் உள்ளனர். ஜெனரல் கலீபா ஹப்தாருக்கு விசுவாசமான படைகளை அவர்கள் ஆதரிக்கின்றனர்.

இதேபோல், மத்திய ஆப்ரிக்க குடியரசு (CAR) வைரச் சுரங்கங்களைப் பாதுகாக்க வாக்னரை படையைப் பயன்படுத்துகிறது. இது சூடானில் உள்ள தங்கச் சுரங்கங்களைப் பாதுகாப்பதாகவும் நம்பப்படுகிறது.

மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள மாலி அரசாங்கம், இஸ்லாமிய போராளிக் குழுக்களுக்கு எதிராக வாக்னர் குழுவைப் பயன்படுத்துகிறது.

இந்தப் படைகளுக்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

ப்ரிகோஜின் வெளிநாட்டில் தனது படைகளின் நடவடிக்கை மூலம் பணம் சம்பாதித்ததாகக் கூறப்படுகிறது.

தனக்குச் சொந்தமான சுரங்க நிறுவனங்களை வளப்படுத்த வாக்னர் குழுவை அவர் பயன்படுத்தியதாக அமெரிக்க கருவூலம் கூறுகிறது. தற்போது இவற்றின் மீது தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

வாக்னர் குழு

சிறையில் கைதிகளை வேலைக்கு எடுக்கும் ப்ரிகோஜன

வாக்னர் குழு செய்த குற்றங்கள் என்ன?

வாக்னர் குழு மீது ஏராளமான குற்றச்சாட்டுகளும் உள்ளன. ஏப்ரல் 2022இல், வழக்கமான ரஷ்ய துருப்புகளுடன் சேர்ந்து, மூன்று வாக்னர் குழு கூலிப்படையினர் கீய்வ் அருகே பொதுமக்களைக் கொன்று சித்திரவதை செய்ததாக யுக்ரேனிய வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.

மார்ச் 2022இல் புச்சாவில் வாக்னர் துருப்புகள் பொதுமக்களை படுகொலை செய்திருக்கலாம் என்று ஜெர்மன் உளவுத்துறை கூறுகிறது.

இதேபோல், மத்திய ஆப்ரிக்க குடியரசில் பொதுமக்களுக்கு எதிராக வாக்னர் உறுப்பினர்கள் பாலியல் வன்கொடுமைகள் மற்றும் கொள்ளையில் ஈடுபட்டதாக ஐ.நா மற்றும் பிரெஞ்சு அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளன.

கடந்த 2020ஆம் ஆண்டில், வாக்னர் கூலிப்படையினர் லிபிய தலைநகர் திரிபோலியிலும் அதைச் சுற்றிலும் கண்ணிவெடிகள் மற்றும் பிற மேம்படுத்தப்பட்ட வெடிபொருட்களைப் புதைத்ததாக அமெரிக்க ராணுவம் குற்றம் சாட்டுகிறது.

Previous Story

"இதுதான் ஐஎம்எப்"

Next Story

12 கோடி வாகனங்கள் கொள்ளை : அரசியல்வாதியின் மகன் வத்தேகம பொலிஸால் கைது