வாக்கு வங்கியும் வாக்குக் கொள்ளையும்!

-நஜீப் பின் கபூர்-

களத்துக்கான அரசியல் விழிப்பு சிறுபான்மைக்கில்லை

செல்லாக் காசாக நிற்கின்ற தனித்துவத் தலைமைகள்!

வாக்குக் கொள்ளையர்கள் புது வழிகளில் வருவார்கள்

Quo Vadis... or Which Way Sri Lanka - EDITORIAL

என்றுமில்லாதவாறு இந்த வாரம் கட்டுரைக்கான தலைப்பைத் தெரிவு செய்வதில் நமக்குள் ஒரு குழப்ப நிலை. தேர்தல் ஜூரத்தால் கொதிக்கின்ற தேசம் என்ற ஒரு தலைப்பும், அடுத்து ‘எச்சரிக்கை’ என்ற ஒற்றை வார்த்தையில் தலைப்பைக் கொடுத்து சில கருத்துக்களை சொல்ல   எதிர்பார்த்தாலும் அந்த இரு தலைப்புக்களையும் கிடப்பில் போட்டு இந்தத் தலைப்பை தெரிவாக எடுத்திருக்கின்றோம்.

வாக்கு வங்கி என்று நாம் இங்கு குறிப்பிடுகின்ற விடயம் வங்கியில்  வைத்திருக்கின்ற பணம் போன்று எண்ணிக்கையில் உள்ள கணக்கு. இது ஆண்டுதோரும் நடக்கின்ற ஒரு கணக்கெடுப்பில் பட்டியலிடப்படுகின்றது. இது தேசிய மட்டக் கணிப்பாக அமையும். இந்தத் தேசிய கணிப்பை மாவட்ட, தொகுதி, உள்ளூராட்சி சபை, வட்டாரங்கள் எனவும் பார்க்கலாம். இது வழக்கமான ஒரு நிகழ்வுதான்.

நாட்டில் தேர்தல்கள் நடைபெறுகின்ற போதும் அப்போது இருக்கும் வாக்காளர்களின் எண்ணிக்கை, அதில் வாக்களிப்போர் செல்லுபடியான வாக்குகள் என்ற அடிப்பiயில் இது கட்சி ரீதியாகவும் குழுக்கள் ரீதியாகவும் கணிக்கப்பட்டு முடிவுகள் வெளியிடப்படுவது வழக்கமானவை. அது பற்றியும் விரிவாக இங்கு பேச வேண்டிய தேவையில்லை. அப்படியாக இருந்தால் நாம் என்னதான் சொல்ல வருகின்றோம் என்ற புதிரை தொடராமல் விவகாரத்துக்கு நேரடியாக வந்து இதில் நடக்கின்ற அட்டகாசங்கள் திருகுதாளங்கள் தில்லுமுள்ளுகள் பற்றி மக்களை தெளிவு படுத்துவதுதான் நமது நோக்கம்;.

இதற்காக சில உதாரணங்களையும் தகவல்களையும் நாம் எடுத்துக் கொள்ள இருக்கின்றோம். இறுதியாக நடந்த ஜனாதிபத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்ற மொத்த வாக்களர்கள் 16263885. இதுதான் அந்தத் தேர்தலுக்கான  மொத்த வாக்கு வங்கி. இந்தத் தேர்தலில் கட்சிகள் அல்லது குழுக்கள் பெற்றுக் கொண்ட வாக்குகள் என்று வரும் போது ஜனாதிபத் தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தாபே ராஜபக்ஸ பெற்ற வாக்கு 6924255. இரண்டாம் இடத்துக்கு வந்த சஜித் பிரேமதாச பெற்ற வாக்குகள் 5564239. இது தவிர ஏனைய போட்டியாளர்கள் பெற்றுக் கொண்ட வாக்குகள் அந்த அணிகக்கு சொந்தமான வாக்குகள். இது அவர்களுக்குரிய வாக்கு வாங்கி.

கூட்டணிகள் வருகினற போது அதிலுள்ளவர்கள் தமது அணிக்குப் போடும் வாக்குகளும் ஒரு கூடையில் போடப்படும் பழங்கள் போல அந்தத் தேர்தலில் எண்ணிக்கைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. இதுதவிர தமது கூட்டணியில் இருக்கின்றவர்கள் சில சந்தர்ப்பங்களில் தனித்து களத்தில் இறங்குகின்ற போது அந்தக் கட்சிகளின் குழுக்களின் வாக்கு வங்கி தெளிவாகத் தெரியவரும். உதாரணமாக கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது யானைச் சின்னத்தில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச பெற்றுக் கொண்ட வாக்குகளில் அரைவாசி இந்த நாட்டில் வாழ்கின்ற சிறுபான்மை இன வாக்குகள்.

When politicians make the unthinkable happen! - EDITORIAL | Daily Mirror - Sri Lanka Latest Breaking News and Headlines - Print Edition

ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் நடந்த பொதுத் தேர்தலில் சஜித் பெற்றுக் அணி கொண்ட மொத்த வாக்குகள் 2771980 மட்டுமே. எனவே ஜனாதிபத் தேர்தலில் பெற்ற வாக்குகளில் அரைவாசி அவருக்குக் கிடைக்கவில்லை. இதற்குப் பிரதான காரணம் அவர் அணியில் இருந்த பல கட்சிகள் இந்தத் தேர்தலில் அவருடன் கூட்டணி வைத்துக் கொள்ளாது தனித்துத் தேர்தலின் நின்றதாகும்.

அப்போது பிரிந்து சென்றவர்கள் அல்லது அந்த அணிகளின் தனிப்பட்ட வாக்கு வங்கிகளை நாம் அந்தத் தேர்தலில் கண்டு கொள்ள முடிந்தது. எனவே வங்கியில் இருக்கின்ற பணம் போல இந்த வாக்கு வங்கியும் தளம்பல் நிலையில்தான் இருக்கும். இது கட்சிகளின் வாக்கு வங்கி தொடர்ப்பில் நமது ஒரு சிறிய விளக்கம்.

இதனை விட வாக்கு கொள்ளை விவகாரம் என்பதுதான் கட்டுரையில் நாம் சொல்ல நினைக்கின்ற முக்கிய கருவாக இருக்கின்றது. அது கடந்த காலங்களில் எப்படி அமைந்தது, 2024-ல் வரும்  தேர்தல்களில் இது எப்படி அமையும் என்பதனைப் இப்போது பார்ப்போம். பொதுவாக மக்களின் விருப்பத்துக்கு மாற்றமாக தேர்தல்களில் பதிவாகும் வாக்கை ஒரு மோசடி-கொள்ளையாகத்தான் நாம் குறிப்பிட வேண்டும்.

உடதலவின்ன படுகொலைகள்!

இந்த வாக்குக் கொள்ளை பல்வேறுவழிகளில் நடக்கின்றது. அடையாள அட்டை வாக்களிப்பில் கட்டாயப்படுத்தப்பட்டதால் இது கணிசமாக குறைந்துள்ளது. என்றாலும் மறைமுகமாக இந்த கொள்ளை பல்வேறு வகையில் இன்றும் நடந்து கொண்டுதான் வருகின்றது.

வாக்களிப்பு நிலையங்களில் இருந்த ஏனைய கட்சி முகவர்கள் அடித்து விரட்டி விட்டு அதனை தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து வாக்குகளை வன்முறையாக பதிந்து பெட்டியை நிரப்பிக் கொள்வது இதற்கு நல்ல உதாரணம். சந்திரிக்க அம்மையார் காலத்தில் வடமேல் மாகாணத்தில் (குருனாகல்) நடந்த வாக்குக் கொள்ளையும், 2001 பொதுத் தேர்தலின் உடதலவின்னையில் நடந்த படுகொலைகள் உச்சகட்ட தேர்தல் வன்முறைகளுக்கு நல்ல உதாரணங்கள்.

இதில் சம்பந்தப்பட்டவர்கள் இனம் காணப்பட்டு தண்டணைக்கு ஆளானாலும் பின்னர் பதவிக்கு வந்த ராஜபக்ஸாக்கள் குற்றவாளிகளை மன்னித்து விடுவித்த நிகழ்வுகளையும் இங்கு குறிப்பிட வேண்டும். இது தவிர பொருளாதார ரீதியில் பணம் மற்றும் பொருட்களை வழங்கி வாக்களார் வறுமையை தமக்கு சாதகமாக்கி பெற்றுக் கொள்ளும் வாக்குகளும் கொள்ளைதான்.

அடுத்துப் போலி வாக்குறுதிகளைக் கொடுத்துப் பெறப்படுகின்ற வாக்குகளும் இந்த கொள்ளையில் சேர்த்துக் கொள்ள வேண்டும். விண்ணிலிருந்து அரசி, எட்டு கிலோ தானியம், நாட்டை சிங்கப்பூராக்கும் கதைகள். ஆசியாவின் ஆச்சர்யம், தொழில் வாய்ப்புக்கள் தரும் கதைகள் போன்று சிறிதும் பெரிதுமாக அரசியல்வாதிகள் போலி வாக்குறுதிகளைக் கொடுத்து பெற்றுக் கொள்ளும் வாக்கும் கொள்ளைதான்.

அதே போன்று சிறுபான்மை சமூகங்களுக்கு இருக்கின்ற தனிப்பட்ட தேவைகள் பிரச்சினைகள் இயலாமையை முன்வைத்து அந்த சமூகங்களில் பேரில் கட்சி வைத்திருக்கின்றவர்கள் சமூகத்துக்கு ஏற்றவாறு போலி வாக்குறுதிகளை முன்வைத்து பெறும் வாக்குகளும் ஒருவகை வாக்குக் கொள்ளையே. இதனைப் பிரிதொரு இடத்திலும் நாம் சொல்லி இருக்கின்றோம்.

தேசிய ரீதியில் இனி இல்லை என்ற அளவுக்கு ஆட்சியாளர்களும் சிறுபான்மைத் தலைமைகளும் மக்களை ஏமாற்றி வாக்குகளைக் கடந்த காலங்களில் கொள்ளையடித்து வந்திருக்கின்றார்கள். தமக்கு இருக்கின்ற பணப் பலம் மக்களின் பலயீனம் என்பவற்றை தெரிந்து கொண்டுதான் கடந்த ஏழு தசாப்தங்களுக்கு மேலாக இந்த வாக்குக் கொள்ளைகள் நடந்து வருகின்றன. இதுதவிர இனங்களுக்கிடையில் போலியான கட்டு கதைகளைச் சொல்லியும் வாக்கு கொள்ளைகள் நடந்து வந்திருக்கின்றன.

கடந்த காலங்களில் இத்தகைய பரப்புரைகளை அரச மற்றும் தனியார் தொலைக் காட்சிகள்- ஊடகங்களும் வாக்கு வேட்டைக்காக பாவித்து தேர்தல்களில் அரசியல்வாதிகள் வெற்றிகளையும் பெற்றிருக்கின்றனர். மக்களிடத்தில் மத ரீதியான போலியான கதைகளை சொல்லியும் வாக்கு வேட்டைகள் நாட்டில் நடந்திருக்கின்றது. இதற்கு நல்ல உதாரணம் களனி விகாரை நாகப் பாம்பு கதை. இது பௌத்த சமயத்துக்கு பெரும் தலைகுனிவை கொடுத்தது. இதனையும் ஒரு தனியார் தொலைக் காட்சி ஊடகம்தான் பரப்புரை செய்தது. அதனை பௌத்தர்கள் நம்பினார்கள். இன்று ஏமாந்ததை பகிரங்கமாக ஏற்றுக் கொள்கின்றார்கள்.

இப்படிப் போலியான கதைகள் மற்றும் இனரீதியான வன்முறைகளைத் தூண்டிப் பெற்றுக் கொள்ளப்படும் வாக்குகளும் இந்த வாக்கு கொள்ளையில் சேர்க்கப்பட வேண்டிய ஒன்றே. இது போன்று குல ரீதியான போதங்களை முன்வைத்து பெற்றுக் கொள்ளப்படுக்கின்ற வாக்குகளும்  கொள்ளையே. இப்படி நமது நாட்டில் நடந்த-நடக்கின்ற வாக்குக் கொள்ளைகள் பற்றி நிறையவே கதைகள் இருந்தாலும் 2024 வருகின்ற தேர்தல்களில் அரசியல்வாதிகள் எப்படி எல்லாம் வாக்குகளை கொள்யடிக்க இடமிருக்கின்றது என்று நாம் இப்போது பார்ப்போம்.

கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட வாக்குக் கொள்ளைகள் தொடர்பில்  நிச்சயமாக மக்கள் மத்தியில் ஒரு தெளிவு இருப்பதால் கொள்ளையர்கள் புதிய யுத்திகளை கையாள முனைவார்கள். இதில் வழக்கமாக பெரும் செல்வாக்கு செலுத்துகின்ற பணம் இந்தத் தேர்தலிலும் முக்கிய இடத்தில் இருக்கும். புதிதாக கூட்டணிகளை உருவாக்கி மக்களுக்கு அல்லது சிறுபான்மைக் குழுக்களுக்கு விமோசனம் நன்மைகள் என்று எதனை முன்வைத்தாலும் அதனை மக்கள் எந்தளவுக்கு நம்புவார்களோ தெரியாது. கடந்த காலத்தை ஒரு படிப்பிணையாக எடுத்திருந்தால் மக்கள் எதிர்வரும் தேர்தல்களின் ஏமாறமாட்டார்கள்.

சிங்கள மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கின்ற அரசியல் விளிப்புணர்வு இன்னும் சிறுபான்மை சமூகங்கள் மத்தியில் ஏற்படவில்லை. இந்த பலயீனத்தை வைத்து தனித்துவ அரசியல் தலைமகள் இன்னும் வாக்குக் கொள்ளைகளை மேற்கொள்ள இடமிருக்கின்றது. எனவே தமிழ் முஸ்லிம் மலையக அரசியல் தலைமைகளிடம் நாம் கேட்பது வருகின்ற தேர்தல்களில் நீங்கள் சமூகங்களுக்கு எதனை சொல்லி வாக்குக் கோட்கப் போகின்றீர்கள்.? உங்களால் எதைத்தான் சாதிக்க முடியும்? இது இன ரீதியான தலைமைகளுக்கு எமது பகிரங்க கேள்வியாகும். உங்களது தனிப்பட்ட பிழைப்புக்காக நீங்கள் சொல்கின்ற படி சமூகம் தொடர்ந்தும் உங்களுக்கு வாக்களிக்க வேண்டுமா?

ஜனாதிபதித் தேர்தல் முதலில் வந்தால் ஒட்டு மெத்தமாக சிறுபான்மை தலைவர்கள் தேசிய மக்கள் கட்சி வேட்பாளர் சஜித்துக்கு தாம் சார்ந்த சமூகத்தின் வாக்குகளை கொட்டுச் சொல்வார்கள். அதற்குக் காரணம் பொதுத் தேர்தலில் அவரிடம் வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுக் கொள்வதும், சஜித் வெற்றி பெற்றால் பதவிகளைப் பெற்று மீண்டும் வியாபாரம்  பண்ணுவதுதான் இவர்களின் நோக்கம்.

ராஜபக்ஸாக்கள் மீது ஒரு வெறுப்பு சிறுபான்மையினருக்கு இருப்பதால் அவர்கள் சார்பில் வருகின்ற வேட்பாளருக்கு சிறுபான்மை தலைமைகளும் சமூகமும் வாக்குகளை வழங்கத் தயாராக இல்லை. ஜனாதிபதி ரணில் வேட்பாளராக வரவே வாய்பில்லை என்ற நிலைப்பாட்டில் நாம் தொடர்ந்தும் இருப்பதால் அவர் பற்றி  இங்கு பேசுவதைகத் தவிர்க்கின்றோம்.

அதே போன்று இன்று பெரும் நம்பிக்கையுடன் இருக்கின்ற அணுராவுக்கு சிறுபான்மைத் அரசியல் தலைமைகள் ஆதரவு வழங்க வாய்ப்பே கிடையாது. அத்துடன் சிறுபான்மை சமூகங்களும் எந்தளவுக்கு அவருக்கு வாக்களிக்கப் போகின்றார்கள் என்ற விடயத்தில் நமக்குத் தெளிவில்லாத நிலை. அத்துடன் சிறுபான்மை சமூகங்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதில் அணுர தரப்பினர் மிகவும் பலயீனமாக இருக்கின்றார்கள் என்பதும் நமது கணிப்பு. ஆனால்  சிங்கள சமூகதத்தின் மத்தியில் வழக்கமாக நடக்கின்ற வாக்கு கொள்ளையை இந்த முறை கட்டுப்படுத்துவதில் நல்ல முன்னேற்றங்கள் தெரிகின்றன.

விரக்தியில் சிறுபான்மை சமூகம்

முதலில் பொதுத் தேர்தல் என்று வந்தால் பேரின சமூகத்தை விட சிறுபான்மை சமூகங்களில்தான் அதிக எண்ணிக்கையில் வாக்குக் கொள்ளைகள் நடக்க வாய்ப்புக்கள் இருக்கின்றது. இதற்கு முக்கிய காரணம் அவர்கள் சமகால அரசியல் தொடர்பாக இன்னும் விளிப்புணர்வைப் பெற்றுக் கொள்ளாதாவர்களாக இருக்கின்றார்கள். அடுத்து வாக்களிக்கின்ற போது அவர்கள் மத்தியில் வருகின்ற இன உணர்வு காரணமாக சிறுபன்மை அரசியல்வாதிகளுக்கு அது அனுகூலமாக அமைந்து விடுகின்றது. எனவே இயல்பாக அமைந்திருக்கின்ற இந்த சாதக நிலையுடன் சிறுபான்மை அரசியல்வாதிகள் மற்றும் தனித்துவக் கட்சிகள் இதுவரை தாம் ஆதரவு கொடுத்து வந்த ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து விலகி இப்போது சஜித் ஆதரவு மனநிலையில் இருக்கின்றார்கள்.

Tamil parties unite behind call for Sri Lanka to face international accountability | Tamil Guardian

வடக்குக் கிழக்கு அரசியல் செயல்பாடுகளில் பிளவுகளும் விரிசல்களும் காரணமாக இந்த முறையும் கூட்டமைப்புக்கு ஏக பிரதிநித்துவத்தில் சரிவுதான். மேலும் தமிழ் தலைவர்களுக்கு தாம் சார்ந்த இனத்துக்கு தேர்தல்களில் கொடுக்கக் கூடிய எந்த நல்ல செய்திகளும் கிடையாது. ஒட்டு மொத்தமாக ஏமாந்த ஒரு கூட்டமாகத்தான் தமிழ் மக்கள் தமது அரசியல் கட்சிகளைப் பார்க்கின்றார்கள். பொதுத் தேர்தல்களில் இவர்களுக்கு தெற்கு கட்சிகளுடன் கூட்டணி போட வேண்டிய தேவைகள் கிடையாது.

இதனால் தமது அரசியல் இருப்பு பிரதிநிதித்துவம் தொடர்பாகத்தான் அங்குள்ள அரசியல்வாதிகள் சிந்திப்பார்கள். யார் நாடாளுமன்றம் போனாலும் ஆகப்போவது ஏதும் கிடையாது என்பதுதான் தமிழ் மக்களின் மனநிலையாக இருக்கின்றது. இதனால் முதலில் வடக்குக் கிழக்கில் உணர்வுபூர்வமான அரசியல் தலைமைத்துவம் கட்டியெழுப்பப்பட வேண்டி இருக்கின்றது.

முஸ்லிம் தனித்துவ அரசியல்வாதிகள் பொதுத் தேர்தல் வந்தால் சஜித் காதைப் பிடித்த வெளியே தள்ளினாலும் அவருடன்தான் நமக்குக் கூட்டணி என்று இருக்கின்றார்கள். ஆனால் ரணில் போல சஜித் இன்று அவர்களிடத்தில் அனைத்தையும் விட்டுக் கொடுக்கின்ற நிலையில் இல்லை. தனித்துவ அரசியல் என்பது அஸ்ரஃபுக்கு பின் செல்லாக் காசு நிலை. அதனால் பேரம் பேசும்  அரசியல்  என்ற பேச்சுக்கே அங்கு இடம் கிடையாது.

தெற்கில் தனித்துவக் கட்சிகளுக்கு இன்று செல்வாக்கு கம்மி. உதாரணம் ஹக்கீமின் கண்டி மாவட்டத்தில் இப்போது மு.கா வாக்களர் என்று ஒரு பத்தாயிரம் பேராவது இல்லை. ஆனால் ஹக்கீம் தேர்தல்களில் அதிகப்படியான வாக்குகளை பெறுகின்றார். இதற்கு இனரீதியான வாக்களிப்பும், பிரதான கட்சி வாக்காளர்களின் அரசியல் புரிதலுமே இதற்குக் காரணம். அத்துடன் சஜித் அணியில் கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்கள் மத்தியில் செல்வாக்கான ஒரு அரசியல் தலைமைத்துவம்; இன்மையும் இதற்கு காரணம். இதனால் தனித்துவத் தலைமைகள் பிரதான கட்சியில் இருக்கின்ற தமது சமூக வாக்குகளைக் கொள்ளையடித்து தனது உறுப்புரிமையை வென்றெடுக்க முடிகின்றது. அந்த வாக்குகளைக் கொள்ளையடிக்கத்தான் இந்த தனித்துவத்தார் சஜித் அணியடன் கூட்டணிக்கு வருகின்றார்கள்.

ஆற்றைக் கடந்த பின்னர் நீ யார் என்று வழக்கம் போல அவர்கள் நிற்பார்கள். இதனைத்தான் கடந்த தேர்தல்களிலும் அவர்கள் செய்தார்கள். இந்த தேர்தலில் சஜித் அணியினர் தனித்துவ முஸ்லிம் தலைவர்களுடன் கூடட்ணி போடுகின்ற விடயத்தில் கண்டிப்பாக நடந்து கொள்ள வேண்டும் என்ற அதிலுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் எதிர்பார்க்கின்றார்கள்.

How are Tamil people treated in Sri Lanka? - Quora

மலையத்தைப் பொறுத்தவரை அந்த சமூகத்தின் தேவைகளும் எதிர்பார்ப்புக்களும் விசலாமானது. சமகால அரசியலில் வடக்குக் கிழக்கு இனப்பிரச்சினைக்கு தீர்வு விவகாரத்தில் மக்கள் எப்படி எல்லாம் ஏமாற்றப்படுகின்றார்களோ அதனை விட மலையக அரசியல் தலைமைகள் அப்பாவி மக்கள் வாக்குகளை பெற்றுக் கொண்டு கடந்த இரு தசாப்தங்களாக உருப்படியாக ஏதையுமே அவர்களுக்கச் செய்யவில்லை. இந்த முறை அங்குள்ள அனைத்து அரசியல் தலைமைகளும் சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தியின் பின்னால் நின்று பதவிகளுக்காக தமது பயணத்தை தொடரும் நிலை அங்கு காணப்படுகின்றது.

நன்றி: 14.01.2024 ஞாயிறு தினக்குரல்

Previous Story

"தமிழரசுக் கட்சி: கிழக்கிற்கு செயலாளர் பதவி வேண்டும்"

Next Story

தைவான் தேர்தலில் அமெரிக்க ஆதரவு கட்சி வெற்றி