வாக்கு எண்ணிக்கையும் புதிய ஜனாதிபதியும்!

-நஜீப் பின் கபூர்-

“நாம் தலதா மாளிகையில் வைத்து

தேர்தல் விஞ்ஞாபனத்தை

வெளியிட்டதால் புத்தபெருமான்

ஆசீர்வாதம் நமக்குத்தான்.

அதனால்  தோல்வி கிடையாது.

நமக்குத்தான் வெற்றி

அதனை எவரும் தடுக்க முடியாது.

நாம் அனுராவை இருபது இலட்சம்

வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்

இது உளவுத்துறை தகவல்கள்

என்று எம்பிலிபிட்டியாவில்

நடந்த இறுதித் தேர்தல் பரப்புரையில்

சஜித் கூறி இருந்தார்.”

Sajith Premadasa Reduces Gap with A.K. Dissanayake in Presidential Election - Groundviews

நாடும் சர்வதேசமும் எதிர்பார்த்திருந்த நமது 2024 ஜனாதிபதித் தேர்தல் முடிந்து இப்போது வாக்குகள் எண்ணப்பட்டு ஏறக்குறைய யார் ஜனாதிபதி என்று தெரிய வந்திருக்கும். இது சுமுகமான ஒரு தேர்தலில் நாம் எதிர்பார்க்கின்ற நிலை. ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான நாம் தொடர் கதைபோல நிறையவே செய்திகளை நமது வாசகர்களுக்குச் சொல்லி வந்திருக்கின்றோம்.

நமது அந்தக் கதைகள் எந்தளவுக்கு நடுநிலையானது அல்லது பக்கச்சார்பானது என்பதும் இப்போது வாசகர்களுக்குத் தெரிய வந்திருக்கும். எம்மைப் போன்றவர்களும் சமூக ஊடகங்களும் தேர்தல் பற்றி நிறைய தகவல்களை-கணிப்புக்களைச் சொல்லி இருந்தது நாம் அனைவரும் அறிவோம்.

இந்தக் கதைகளை நம்பிய மக்கள் எந்தளவுக்கு வெற்றி பெற்றிருக்கின்றார்கள் அல்லது ஏமாற்றப்பட்டிருக்கின்றார்கள்; என்பதனையும் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள முடியும். நமது வார இதழ் வாசகர்களின் கரங்களுக்கு வந்து சேர்கின்ற இந்த நேரத்தில் மக்கள் தேர்தல் முடிவுகளை ஆவலுடன் பார்த்தும் கேட்டும் கொண்டிருப்பார்கள்.

தமது நம்பிக்கை நிறைவேறி இருப்போர் மகிழ்ச்சியிலும் அதில் தோற்றுப் போனவர்கள் பெரும் கவலையில் இருக்கின்ற இந்த நேரத்தில் தேர்தல் முடிவுகள் பற்றி முன்பு சொல்லப்பட்டிருந்த சில செய்திகளை மீண்டும் சுருக்கமாக ஒரு இப்போது முறைபார்ப்போம்.

ஜனாதிபதி ரணில் நூறு இலட்சம் வாக்குகளை பெற்று வெற்றி பெறுவார். நாம் தலதா மாளிகையில் வைத்து தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டதால் புத்தபெருமான் ஆசீர்வாதம் நமக்குத்தான். அதனால்  தோல்வி கிடையாது. நமக்குத்தான் வெற்றி அதனை எவரும் தடுக்க முடியாது. நாம் அனுராவை இருபது இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் இது உளவுத்துறை தகவல்கள் என்றும் எம்பிலிபிட்டியாவில் நடந்த இறுதித் தேர்தல் பரப்புரையல் சஜித் கூறி இருந்தார்.

தேர்தல்களில் வெறும் மூன்று சதவீதம் வாக்குகளைப் பெறுகின்ற அனுர எப்படி வெற்றி பெற முடியும்? இது சாத்தியமா? என்போரும், இல்லை அனுரவுக்கு ஒரு கோடி வாக்குகளைப் பெற்றுக் கொடுப்போம் என்ற கோஷங்களையும் நாம் தேர்தல் களத்தில் பார்த்தோம். ஆனால் இப்போது வந்து கொண்டிருக்கின்ற தேர்தல் முடிவுகள் தமது நம்பிக்கையில் எந்தளவு யதார்த்தமாக இருக்கின்றது அல்லது மண்ணைப் போட்டிருக்கின்றது என்பதும் இப்போது தெரிய வந்திருக்கும்.

Anura Kumara Dissanayake is new Sri Lanka President, calls win 'vote for change' - India Today

வெற்றி பெற்ற தரப்பினர் ஆட்சியைப் பெறுப்பேற்க தயாராகிக் கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில் தோற்றுப் போனவர்கள் அதற்கான காரணங்களை மக்களுக்குச் சொல்லிக் கொண்டிருப்பார்கள். அல்லது கடந்த தேர்தலில் நடந்தது போன்று தலைமறைவாகி விடவும் இடமிருக்கின்றது.

அல்லது தோல்வியின் பலியை அடுத்தவர்களின் தலையில் கட்டிவிடுகின்ற முயற்சிகளும் இப்போது நடந்து கொண்டிருக்கும். எது எப்படி இருந்தாலும் பொதுமக்கள் மிகவும் அமைதியாக தமது வெற்றியை கொண்டாட உரிமை இருக்கின்றது. தோற்றுப் போனவர்களுக்கு நோவினைகளைச் செய்யாது மனித நேயத்துடன் நடந்து கொள்ள வேண்டியதும் கட்டாயமாகும்.

இப்போது தேர்தல் முடிவுகளை குடிமக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில் இருமுனைப் போட்டிதான் என்று நாம் தொடர்ச்சியாக சொல்லி வந்திருந்தோம் அதில் மாற்றங்கள் இருக்கும் என்று நாம் இப்போதும் எதிர்பார்க்கவில்லை. அதே போன்று களநிலவரம் பற்றி நாம் வாசகர்களுக்குச் சொல்லி இருந்த தகவல்கள் பிழைத்துப் போய் இருந்தால் நமது மூக்கும் உடைபட்டிருக்கின்றது என்பதனை நாம் உளப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு அதற்காக வாசகர்களிடம் தாழ்மையுடன் மன்னிப்பும் கேட்டுக்கும் மன நிலையும் நமக்கு என்றும் இருக்கின்றது.

இந்தத் தேர்தலில் வெற்றி வாய்ப்புப் பற்றிய நமது கருத்துக்கள் பிழைத்துப் போய் இருக்காது. அப்படி நடந்திருந்தலும் முன் சொன்ன கதையைத்தான் சொல்ல வேண்டி இருக்கின்றது. எனவே அணுரவுக்கும் சஜித்துக்கம் தான் போட்டி.

ஆறுதல் பரிசுக்காக போட்டியிட்டவர்கள் பிரதான பேட்டியாளர்களின் வெற்றியில் எந்தளவுக்குத் தாக்கங்களைச் செலுத்தி இருக்கின்றார்கள் என்பதும், தமிழ் பொது வேட்பாளர் இந்தத் தேர்தலில் எந்தளவுக்குத் தாக்கங்களை செலுத்தி இருக்கின்றார், தமிழர்களின் உணர்வுகள் எப்படி அமைந்திருக்கின்றது என்பதுதான் நாம் ஆவலுடன் எதிர்பார்க்கின்ற செய்திகளாக இருந்து வருகின்றன. அது கூட தேர்தல் முடிவுகளில் இப்போது ஏறக்குறைய தெளிவாகி இருக்கும்.

தேர்தலில் தோற்றுப் போன தரப்பினர் விட்ட தவறுகள் தொடர்பான பட்டியலைக் கூட நாம் ஏற்கெனவே தயார் நிலையில் வைத்திருக்கின்றோம். அவர்கள் இதற்கு என்ன நியாயங்களை சொல்ல இருந்தாலும் நமது காரணங்கள் என்றும் பல செய்திகள் நமது கைவசம் இருக்கின்றன. அவற்றை அடுத்த வாரம் பார்ப்போம். இப்போது தேர்தல் பரப்புரைகள் தொடர்பில் சில தகவல்களப் பார்ப்போம். அதில் முதலாம் இடத்தில் இருந்தது அனுரதாரப்பினர்தான் என்பனை அவரது எதிரிகள் கூட பகிரங்கமாக ஏற்றுக் கொள்கின்றனர்.

அவர்களது பரப்புரைகள் விளம்பரங்கள் பேரணிகள் உணர்வுபூர்வமாகவும் நேர்த்தியாகவும் அமைந்திருந்தன. இரண்டாம் இடத்தில் சஜித். மூன்றாம் இடத்தில் ரணில் நான்காம் இடத்தில் நாமல் என்று அது அமைந்திருந்தன. நாமல் இதில் எந்தளவுக்குப் பின் தங்கி இருந்தார் என்றால் தொகுதிவாரியாக அவர் கூட்டங்களை நடத்த முடியாமல் இருந்தது. ஆச்சர்யம் என்னவென்றால் சில மாவட்டங்களில் கூட அவரால் ஒரு கூட்டத்தையேனும் நடத்த முடியவில்லை.

ஜனாதிபதி ரணிலின் தேர்தல் பரப்புரை கூட பெரிதாக எடுபடவில்லை அதனை அறுவடையை தேர்தல் முடிவுகளில் இப்போது மக்கள் பார்த்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும். அதே நேரம் பலர் ஏற்கெனவே தலைமறைவாகி இருந்தனர். இதனை மஹிந்தானந்த பகிரங்கமாகக் கூட ரணிலிடத்தில் முறைப்பட்டிருந்தார். இந்த தகவல்களையும் நாம் முன்பு சொல்லி இருந்தோம்.

அதே நேரம் சஜித் தரப்பில் இருந்த முஸ்லிம் தனித்துவத் தலைவர்கள் சஜித் வெற்றிக்காக அநாகரிகமானதும் உண்மைக்குப் புரம்பான கதைகளையும் சொல்லி எப்படியாவது தமது இலக்கை அடைய வேண்டும் என்று செயல்பட்டுக் கொண்டிருந்ததை இந்தத் தேர்தலில் பார்க்க முடிந்தது.

Anura Kumara openly challenges Sajith for a debate

ஆனாலும் அவர்களது  அந்த முயற்சிகள் மக்கள் மத்தியில் எடுபடுவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அவர்கள் தலைவர்களின் முடிவுகளைக் கேட்டு இந்த முறை வாக்களிக்கவில்லை என்றதான் சொல்ல வேண்டும். அதனால்தான் அனுரவால் அவர்களது கோட்டைகளுக்குள்ளே புகுந்து இந்தத் தேர்தலில் அதிர்ச்சி வைத்தியம் பார்க்க முடிந்தது.

மலையகத்தில் தலைவர்கள் ஏறக்குறைய சஜித் (திகாம்பரம், மனோ,  ராதா) ரணில் (ஜீவன். செந்தில் வடிவேல், குமார்)  என்று ஒரு சமநிலையில் இருந்ததாலும் பெரும்பாலான வாக்குகள் சஜித்துக்குத்தான் என்று அமைந்திருக்க வேண்டும். அதனையும் இப்போது தேர்தல் முடிவில் பார்க்க முடியும். அதே நேரம் தமிழ் பிரதேசங்களில் தெற்கைப் போன்று உணர்வுபூர்வமாக தேர்தல் பரப்புரைகள் அமைந்திருக்கவில்லை. ஆனாலும் அங்கு வாக்குகள் அரியநேந்த்ரன் சஜித் ரணில் அனுர என்றுதான் போயிருக்க வேண்டும்.

ஆனால் தேர்தலுக்கு முன்னர் தமிழரசுக் கட்சியின் செயல்பாடுகள் நமக்கு ஜீரணிக்க கஸ்டமாகவும் அசிங்கமாகவும் தெரிந்தது. குறிப்பாக மாவை சேனாதிராஜா என்ற மூத்த அரசியல்வாதி ஒரு பச்சோந்தியை விட இந்தத் தேர்தலில் கேவலமாக நடந்து தமிழ் மக்கள் மத்தியில் ஒரு அவமானச் சின்னமாக இன்று தன்னைக் காட்சிப்படுத்தி இருக்கின்றார். அதே போன்று தலைவர் என்று இருக்கும் சிரிதரன் மீது நமக்கு இருந்து நல்லலெண்ணமும் இப்போது கேள்விக்குறியாகி இருக்கின்றது.

ரணில் அபிவிருத்திப் பணிகளுக்கு காசு வழங்குவதாகவும் நீங்கள் இன்னும் அதனைப் பெற்றுக் கொள்ளவில்லையா என்று சிரிதரன் தன்னிடம் கேட்டதாகவும் அதன் பின்னர்தான் ரணில் பணம் கொடுக்கின்ற கதையே தனக்குத் தெரிய வந்தது என்று சுமந்திரன் கூறி இருந்தார். ஒரு இலட்சிய அரசியல் செய்கின்ற கட்சித் தலைவர் ஒருவருக்கு இது எந்த வகையிலும் பொறுத்தமில்லாத ஒரு செயல் என்பது எமது கருத்து.

அதனால்தான் சிரிதரனும் பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவதை தாமதப்படுத்தி இருக்க வேண்டும் என்று நாம் சந்தேகிக்கின்றோம். அடுத்து பொது வேட்பாளருக்கு ஆதரவாக களத்தில் இருப்பவர்கள் ரணிலிடம் பார் பேர்மிட் வாங்கி இருப்பதையும் சுமந்திரன் போட்டுடைத்திருந்தார். இது என்ன கேவலமான காரியம்? தமிழர் அரசியலில் இப்படியான நிகழ்வுகள் எப்போதாவது நடந்திருக்கின்றதா?

அதே போன்று தமிழரசுக் கட்சி தீர்மானம் எடுப்பதற்கு முன்னரே சஜித்துக்கு ஆதரவாக சுமந்திரனும் சாணக்கியனும் செயல்பட்டிருந்ததும் அவர்கள் கதைகளில் இருந்தே தெரிய வந்திருக்கின்றது. சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தனது வார்த்தைகள் இருந்ததாகவும் அதில் மொழிபெயர்ப்புப் பிழைகள்தான் இருக்கின்றது என்ற சுமாந்தரணின் கதை அரசியல் ரீதியில் எந்தளவு நயவஞ்சகத் தனமானது.

Former Batticaloa MP P. Ariyanethran named common Tamil candidate - Breaking News | Daily Mirror

அறிவுபூர்வமான தழிழ் சமூகம் இவர்களை இன்னும் தமது அரசியல் தலைவர்களாக வைத்திருப்பார்களானால் அவர்கள் அரசியல் உணர்வுகள் பற்றி உலகம் எப்படிப் பார்க்கும்.? ஆனால் அவர்கள் போடுகின்ற கூட்டத்துக்கும் போய் மக்கள் அமர்ந்திருப்பதைப் பார்க்க முடிகின்றது. அவர்கள் எப்படி அங்கு கூட்டி வரப்பட்டார்கள் என்பதிலும் நிறையவே குழறுபடிகள் இருக்கலாம் என்பதும் நமக்குத் தெரியும்.

இந்தக் காட்சிகளை எல்லாம் பார்க்கின்ற போது வடக்குக் கிழக்குத் தமிழ் மக்களுக்குப் புதியதோர் அரசியல் தலைமைத்துவத்துக்கான ஒரு இடைவெளி தெளிவாகத் தெரிகின்றது. எனவே இந்தத் தேர்தல் முடிவுகளுடன் தமிழ் சமூகத்தினர் இது பற்றி சிந்திக்க வேண்டி இருக்கும். தமிழர் தரப்பில் நடக்கின்ற இந்த அவலங்களின் தாக்கம் அரியநேந்திரன் பெற்ற வாக்குகளில் தெரியவரும். சுமந்திரன் சணக்கியன் போன்றவர்கள் துவக்கம் முதலே தெற்கு முகவர்களாக செயல்பட்டு வந்தது தமிழ் சமூகத்துக்கு நன்றாகத் தெரியும்.

அதே நேரம் தீர்மானம் எடுக்காது காலத்தை நீட்டிக் கொண்டு இறுதி நேரம் வரை தமிழ் சமூகத்தை ஒரு கொந்தளிப்பான நிலையில் வைத்திருந்தது, முன்னுக்குப் பின் முரணாக நடந்து தனிப்பட்ட ரீதியில் தாம் கோமாளிகள் என்பதனை சமூகத்துக்குக் காட்சிப்படுத்தியது மட்டுமல்ல இந்த செயல்பாடுகளால் பொது வேட்பாளருக்கான பிரச்சாரப் பணிகளில் இருந்து விலகி நின்று இவர்கள் தமிழ் சமூகத்தின் உணர்வுகளுக்கும் வேட்டு வைத்திருக்கின்றார்கள் என்றவகையில் சிரிதரன் மற்றும் மாவை போன்றவர்கள் செயல்பாடுகள் முதுகில் குத்துக்கின்ற ஒரு செயல் என்பது நமது குற்றச்சாட்டாக இருக்கின்றது.

இப்போது தேசிய மட்ட தேர்தல் முடிவுகளைப் பற்றி மீண்டும் பார்ப்போம் கடைசி நேரத்தில் தமக்கு வாய்ப்புக்குறைவு என்ற காரணத்தால் இரண்டாம் மூன்றாம் தெரிவுகள் பற்றி கடைசி நேரத்தில் சிலர் பரப்புரைகளைச் செய்து கொண்டிருந்ததை நமக்குப் பார்க்க முடிந்தது. ஆனால் அது எந்தளவுக்கு வாக்காளர்கள் எடுத்துக் கொண்டர்கள் என்பதும் இந்த வாக்கு எண்ணிக்கையின் போது தெரிய வந்திருக்கும்.

உளவுத்துறை ஆய்வாலர் நிலாம்தீனின் தகவல் படி இந்திய றோ இந்த தேர்தலில் வடக்குக் கிழக்கில் களமிறங்கி இருக்கின்றது. அந்தக் கதை உண்மையாக இருந்தால் இது இலங்கை அரசியலில் இந்தியாவின் நேரடித் தலையீடாக அமையும். அனுரவுக்கு வாய்ப்பான தேர்தல் களத்தை இந்தியா மாற்றி விட்டது என்ற குற்றச்சாட்டு இதனால் வரலாம்.

இது தெற்கே சிங்கள மக்கள் மத்தியில் பெரும் கோபத்தையும் ஆத்திரத்தையும் உண்டு பண்ணும். அத்துடன் பொதுவாகவே இந்திய தொடர்பில் என்றுமே சிங்கள மக்களுக்கு நல்லலெண்ணம் கிடையாது. அப்படியான பின்னணியில் இந்தியாவின் இந்த செயல் தெற்கு சிங்கள மக்களை மேலும் சீனா பக்கம் தள்ளிவிடுக்கின்ற ஒரு செயலாகவும் இது அமையும். ஆனால் இந்திய அப்படி நடந்து கொள்ளும் என்று நாம் எதிர்பார்க்கவில்லை.

இதற்கிடையில் தேர்தல் பரப்புரைகள் முடிந்து ஓய்வாக இருக்கின்ற என்பிபி. தலைவர்கள் 19,20ம் திகதிகளில் தமது தலைமையகத்தில் கூடி முக்கிய தீர்மானங்கள் பலவற்றை எடுதிருந்தார்கள்.  அதன்படி அனுர ஜனாதிபதியானதும் யாரை ஜனாதிபதி செயலாளராக நியமனம் செய்வது. மாகாண ஆளுநர்களாக நியமிக்கப்பட இருப்பவர்கள்.

அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் போன்ற முக்கியமான பதவிகளுக்கு நியமனம் செய்ய இருப்பவர்கள் தொடர்பாக அவர்கள் முடிவுகளையும் எடுத்திருந்ததாக முன்கூட்டியே லால்காந்த தெரிவித்திருந்தார் அனுர வெற்றியில் அவர்களுக்கு சிறிதலவேனும் சந்தேகம் இல்லை என்பதனையே இந்த விடயத்தில் இருந்து அவதானிக்க முடிகின்றது.

இந்தக் கருத்துக்களுக்கு மாற்றமாக தனது வெற்றி வாய்ப்பு உறுதி அதனால் பதவியேற்கும் முகூர்த்ததடதையும் தானும் பார்த்திருப்பதாக ஜனாதிபதி ரணில் முன்பே குறிப்பிட்டிருந்தார். அதே போன்று தமது வேட்பாளர் சஜித்தான் தேர்தலில் வெற்றிபெறுவது உறுதி அவரும் பதவி ஏற்பது தொடர்பான அனைத்து ஏற்பாடுகளையும் நாம் செய்திருக்கின்;றோம் என்று ஐக்கிய மக்கள் சக்தி செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்திருக்கின்றார்.

தேர்தல் முடிவுகளில் வெளிவந்து கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில் வெற்றியும் தோல்வியும் தெரிய வந்து சந்தியில் இது தொடர்பான காட்சிகளை மக்கள் இப்போது பார்த்துக் கொண்டிருப்பார்கள். யார் வெற்றி பெற்றாலும் குடி மக்களுக்கு நல்லது நடந்தால் சரி.

நன்றி: 22.09.2024 தினக்குரல் ஞாயிறு வாரஇதழ்

Previous Story

சர்வதேச ஊடகங்களின் முக்கிய தலைப்பு செய்தியாக மாறிய இலங்கை ஜனாதிபதி தேர்தல்

Next Story

22மாவட்டங்கள் ரணில் பிடியில்!