வன்முறையாளர் கூடாரமாகின்றது பாராளுமன்றம்!!

-நஜீப் பின் கபூர்-

ஆளும் தரப்பு இந்த நாடாளுமன்றத்துக்கு பதவிக்கு ஆட்களை நியமனம் செய்யும் போதே இது வன்முறைக்கான துவக்கம் என்று நாம் அன்று பதிவு செய்திருந்தோம். குறிப்பாக அமைச்சர் ஜொன்ஸ்டனை ஆளும் தரப்பு கொரோடாவாக நியமனம் செய்த போதே இந்த அச்சத்தை நாம் வெளியிட்டிருந்தோம். அவர் இந்த நாடாளுமன்தில் எதிர்க் கட்சிகளைத் தொடர்ச்சியாக அச்சுறுத்தி வருகின்றார்-வந்திருக்கின்றார். கௌரவமான பன்பட்ட நல்ல படித்த அனுபவசாலிகள் பலர் இந்தப் பதவிக்கு தகுதியாக இருந்த போதும் அவர்களுக்கு அந்தப் பதவி சென்றடையவில்லை. கடந்த தேர்தலில் குருனாகலையில் களமிறங்கிய மஹிந்த ராஜபக்ஸாவின் வெற்றிக்கு ஜொன்ஸ்டன் செய்த பங்களிப்புக்காக இன்று ராஜபக்ஸாக்கள் அவருக்கு நன்றிக் கடனாக மிகப் பெரிய பொறுப்புக்களை ஒப்படைத்திருக்கின்றார்கள் என்பது எமது அவதானம்.

இந்த நியமனங்கள் எல்லாம் விஞ்ஞான ரீதியிலான தெரிவுகள் என்று வேறு கதைகள் சொல்லப்பட்டன. ஆனால் அந்தக் கதைகள் அனைத்தும் தோல்வியைத் தழுவி இருக்கின்றது என்பது ஆளும் தரப்பினரே நன்கு உணர்ந்திருக்கின்றனர். ஆனாலும் அப்படி ஒன்றும் பின்னடைவு இல்லை எல்லாம் சரியாகத்தான் செய்திருக்கின்றோம் என்றுதான் அதிகாரத்தில் இருக்கின்றவர்கள் இன்றும் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். நாடாளுமன்ற அமர்வுகளைத் தொடர்ந்து உன்னிப்பாக அவதானிப்பவர்களுக்கு ஆளும் கட்சிக் கொரோடாவின் செயல்பாடுகள் பற்றிப் புரிந்து கொள்ள முடியும். சபாநாயகரைக் கூட ஜொன்ஸ்டன் மற்றும் மஹிந்தானந்த போன்ற அமைச்சர்கள் நெறிப்படுத்துவது போல காரியங்கள் அங்கு நடந்து வருவதை நாம் இதற்கு முன்னரும் பதிவு செய்திருந்தோம்.

அந்த வகையில் கடந்த மூன்றாம் திகதி அமர்வின் போது நாடாளுமன்றத்தில் சஜித் தரப்பு உறுப்பினர் மனுஷ நாணயக்கார அரசுக்கு எதிரான கருத்துக்களை சொல்லிக் கொண்டிருந்த போது நாம் முன்பு சொன்ன ஆளும் தரப்பு கொரோடா ஜொன்ஸ்டன், மற்றும் சர்ச்சைக்குரிய லோஹன் ரத்வத்தை போன்றவர்கள் மனுஷ நாணயக்காரவின் தனிப்பட்ட வாழ்கை தொடர்பாக நாடாளுமன்றத்தில் கருத்துக்களை வெளியிட்டு அவரது பேச்சுக்கு இடையூரு விளைவித்திருக்கின்றனர். ஒரு கட்டத்தில் அவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தெற்கில் நடந்த குண்டுத் தாக்குதலினால் நோவாய்ப்பட்டிருக்கின்ற மஹிந்த விஜேசேக்கரவின் நாமத்தை உச்சரிக்க முட்பட்டிருக்கின்றார். அவர் என்ன பேச வருகின்றார் என்பது தெளிவில்லாத ஒரு நேரத்தில் நாடாளுமன்றத்தில் மின்சாரம் தடைப்பட்டு விடுகின்றது.

முடமாக இருக்கும் தனது தந்தை பற்றி ஏதோ தப்பாக மனுஷ பேச முயன்றார் என்று கருத்தில் மனுஷ மீது தற்போது நாடாளுமன்றில் இருக்கின்ற மஹிந்த விஜேசேக்கரவின் மகன் காஞ்சனா விஜேசேக்கர கோபத்தில் இருந்திருக்கின்றார். எனவே நான்காம் திகதி நாடாளுமன்றம் கூடிய போது ஆளும் தரப்பு உறுப்பினர்கள் குறிப்பாக காஞ்சன விஜேசேக்கர மனுஷவைத் தாக்கும் எண்ணத்தில் எதிக்கட்சி லெபிக்குப் போய் வன்முறையில் இறங்கி இருக்கின்றார். அவர் துணைக்குப் பெரும் தொகையான ஆளும் தரப்பு உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து இந்த தாக்குதல் முயற்ச்சிகள் நடந்திருக்கின்றன. இதற்கு தாக்குதலை மேற் கொண்டவர்கள் கூறுகின்ற காரணம், மனுஷ சபாநாயகரை தாக்க முனைந்தார். அதனால்தான் நாம் அவருக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்க வேண்டி வந்தது என்று மலைக்கும் மடுவுக்கும் முடிச்சுப் போட்டு தற்போது இந்த சம்பவத்தை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றனர். மனுஷ சபாநாயகரைத் தாக்க முயன்றார் என்று வேறு குற்றச்சாட்டுக்கள். எனவே நாடாளுமன்றத்தில் இதன் பின்னர் உறுப்பினர்கள் கருத்துக்களை சுதந்திரமாக வெளியிட முடியாத ஒரு அவல நிலை இன்று நமது நாட்டில் காணப்படுகின்றது. அப்படிப் பேசுகின்றவர்கள் நாடாளுமன்றத்தில் பின்வாசலால் தப்பி ஓடுக்கின்ற ஒரு கலாச்சாரம் இன்று தோன்றி இருக்கின்றது. நாடாளுமன்றத்திலே கருத்துச் சுதந்திரத்திற்கு இடமில்லை. இது பற்றிக் கேட்டால் உலகில் பல நாடுகளில் இப்படியான சம்பவங்கள் நடந்துதானே இருக்கின்றன என்று வேறு நியாயங்கள் சொல்லவும் அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன.

எனவே அந்த இரு நாட்களிலும் நடந்த சம்பவங்கள் தொடர்பில் சபாநாயகர் பத்துப்பேர் அடங்கிய விசாரணைக் குழு ஒன்றை இப்போது அமைத்திருக்கின்றார். இதில் ஆளும் எதிரணிக் கட்சி உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். எனவே அந்த குழு கூடி இது பற்றித் தேடிப் பார்க்கின்ற நேரத்தில் அங்கும் இருதரப்பும் தங்களுக்காக தாமே வாதம் புரியும். அப்படி இதற்கு முன்னர் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுக்களினால் ஏதாவது உறுப்படியான காரியங்கள் இந்த நாட்டில் நிகழ்ந்திருக்கின்றனவா என்று கேட்கத் தோன்றுக்கின்றது. பண்டோரப் பேப்பருக்கு குழு என்றார்கள். ஒரு மாதத்துக்குள் அறிக்கை என்றார்கள். லோகன் சிறைக்குச் சென்று பண்ணிய துப்பாக்கி அச்சுறுத்தலுக்கு விசாரனை என்றார்கள் இது பற்றிய அறிக்கைகளை நாம் எங்காவது பார்க்க முடிந்தா? ஈஸ்டர் தாக்குதல் அறிக்கை வெளியே வந்தாலும் பெரும்பாலான பாகங்கள் இன்னும் மறைத்து வைக்கபட்டடிருக்கின்றது. குதிரைக் கொம்பு போல அறிக்கை வந்தாலும் அதில் என்னதான் அடங்கி இருக்கப் போகின்றது.அது வெரும் சிபார்சுகளைத்தானே முன்வைக்கு முடியும். குற்றவாளிகளுக்கு இது எப்போதாவது தண்டனைகளை கொடுத்திருக்கின்றதா? திஸ்ஸ குட்டியாரச்சி போன்றவர்களின் கத்திரிக்காய் கதை எவ்வளவு தூரம் அசிங்கமானது அதற்குக் கூட நடவடிக்கை இல்லாத ஒரு நாடு இது.

இந்த லச்சனத்தில் நாடாளுமன்ற வன்முறைக்கும் விசாரணைக் குழு என்பது கேலிக் கூத்தன்றி என்னவாக இருக்க முடியும்? எனவே அணுரகுமார சொல்வது போல நாடாளுமன்றத்தில் எல்லா இடங்களிலும் சீசிரிவி கொமராக்கள் பொருத்தப் பட்டிருக்கின்றன. அதன் மூலம் யார் வன்முறையை ஆரம்பித்தார்கள் என்று கண்டறிவது ஒன்றும் பெரிய காரியம் அல்ல. சபாநாயகரே பக்கச் சார்பாக நடந்து கொள்கின்ற ஒரு நாடாளுமன்றத்தில் விசாரணைக் குழுக்கள் போட்டு தேடுவது என்பது காலத்தைக் கடத்தி கதையை முடித்து விடுகின்ற இராஜதந்திரம் என்பது இந்த நாட்டில் வாழ்கின்ற மக்களுக்கு நன்கு தெரிந்த கதைதான். எனவே இதில் நல்ல தீர்ப்பு வரும் என்று எவரும் நம்பிக் கொள்ளக் கூடாது என்பது எமது உபதேசமாகும்.

இந்த நாட்டில் சஜித் தலைமையிலான எதிரணி நோய்வாய்பட்ட ஒரு எதிர்க் கட்சி. எனவே அதனால் இந்த அரசுடன் மல்லுக் கட்ட முடியாது. எனவே இது விடயத்தில் பகிஷ்கரிப்பை மேற்கொண்டிருக்கும் அவர்கள், விவகாரத்தை சர்வதேசத்தின் கவனத்துக்கு கொண்டு செல்ல இருக்கின்றார்கள். ஏற்கெனவே சர்வதேசத்திடம் நாடு சிக்கித் தவிக்கின்ற நிலையில் பேரின சமூகங்களே இப்போது அரசுக்கு எதிராக சர்வதேசத்திடம் நீதி கேட்டுப் போகும் அவல நிலை ஏற்பட்டிருக்கின்றது. இன்னும் சில நாட்களில் ஜீஎஸ்பி வரிச்சலுகை பற்றிய தீர்மானம் வர இருக்கின்றது. அடுத்து மார்ச் அளவில் ஜெனிவா அச்சுறுத்தலும் இருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. தலைவர்கள் தமக்குக் கீழ் இருக்கின்ற உறுப்பினர்களை கட்டுப்படுத்தி வைத்துக் கொள்ள முடியுமாக இருந்தால் இது போன்ற வன்முறைகள் நாடாளுமன்றத்தில் இருக்க மாட்டது.

ஆனால் தேர்தல் காலங்களில் இருந்து அல்லது அதற்கு முன்பிருந்தே தலைவர்கள் இனவாதத்தையும் வன்முறையையும் வளர்த்து வந்திருப்பதால் தான் இந்த நிலை தோன்றி இருக்கின்றது. மேலும் நாடாளுமன்றத்தில் துறைக்குப் பொறுப்பான அமைச்சுக்களின் விவகாரங்கள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்ற போது குறிப்பிட்ட அமைச்சர்கள் அங்கிருந்து தலைமறைவாகும் நிலையும் காணப்படுகின்றது. எனவே இதனைக் கூட ஒரு வன்முறையாகத்தான் நோக்க வேண்டும். மேலும் அரசை எதிரணியினர் விமர்சிக்கும் போது அதற்கு எதிராக வன்முறையாக செயலாற்றுகின்ற உறுப்பினர்களை எந்த ஒரு இடத்திலும் தலைவர்கள் தடுத்து நிறுத்தியதை நாம் கடந்த காலங்களில் பார்க்க முடியவில்லை.

எனவே இந்த நாட்டில் நாடாளுமன்றம் மட்டுமல்ல அமைச்சரவை தீர்மானங்கள் கூடக் கோலிக் கூத்தாகி இருக்கின்றது. அமெரிக்காவுடன் செய்து கொள்ளப்பட்ட யுகதனவி ஒப்பந்தங்கள் தொடர்பில் அமைச்சரவையில் விவதிக்ப்படாமலே அதற்கு அங்கிகாரம் தன்னிச்சையாகப் பெறப்பட்டிருக்கின்றது. அல்லது பலத்காரமாக அது மேற்கொள்ளப் பட்டிருக்கின்றது. இதனை ஆளும் தரப்பினரே கடந்த காலங்களில் பகிரங்கமாக பேசியும் இருந்தார்கள். அதனை நாடாளுமன்றத்தில் அணுரகுமார ஒரு கேள்வியாக எழுப்பிய போது துறைக்குப் பொறுப்பான அமைச்சர் அங்கு இருக்கவில்லை. அதற்கு விளக்கம் கொடுக்க முட்பட்ட அமைச்சர் தினேஷ் ஐக்கிய தேசியக் கட்சிக் காலத்தில் கூட இது மாதிரியான பதில் வழங்காத சம்பங்கள் நடந்திருக்கின்றன என்று பதில் கொடுத்துத் தப்பிக்க முனைந்ததைப் பார்க்க முடிந்தது.

இந்த அமெரிக்காவுடன்; செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் தொடர்பில் இன்னும் இரண்டு வருடங்களுக்கு வெளியில் தகவல்கள் சொல்லக் கூடாது என்ற ஒரு விதியும் அதில் அடங்கி இருப்பதாகப் பத்திரிகைக் குறிப்பொன்றில் நாம் பார்க்க முடிந்தது. ஆனால் இலங்கையில் தகவல் அறியும் உரிமை என்று ஒரு சட்டம் அமுலில் இருக்கின்றது. எனவே எல்லாமே இந்த நாட்டில் தலை கீழாக நடந்து கொண்டிருக்கின்றது. அல்லது கேலிக் கூத்தாகிக் கொண்டிருக்கின்றது.

சட்டங்கள் எல்லாம் குப்பையில் வன்முறையில்தான் எல்லாவற்றிற்கும் தீர்வு என்ற நிலைதான் நாட்டில். இதற்கிடையில் ஞானசாரவை வைத்து ஒரு நாடு ஒரு சட்டத்தை நமது ஜனாதிபதி உருவாக்கப் போகின்றாராம்.! இப்படி எல்லாம் நடந்து கொள்கின்றவர்கள் இது பற்றி ஒரு போதும் வெக்கப்பட்டதாகவோ கவலைப்பட்டதாகவோ எந்த ஒரு இடத்திலும் தெரியவில்லை. நாம் செய்வதுதான் சரி என்று அவர்கள் தான்தோன்றித் தனமாக நடந்து கொண்டிருக்கின்றார்கள். அரசுக்குள் இருந்து கிளர்ச்சி செய்வதாக மக்களுக்கு காட்டிக் கொள்கின்றவர்கள் கூட இது விடயத்தில் பாராமுகமாக நடந்து கொள்கின்றார்கள்.

வரலாற்றில் என்றுமில்லாதவாறு பொருட்களின் விலையேற்றம் நடந்து கொண்டிருக்கின்றது. இது பற்றி நாடாளுமன்றத்தில் கேள்விகள் எழுப்பப்படுகின்ற போது அதிகாரிகள் அட்டகாசம்தான் இதற்குக் மூலம் காரணம் என்று அவர்கள் பந்தை அதிகாரிகள் பக்கத்தில் எறிந்து விடுகின்றார்கள். அப்படியானால் ஒரு இராணுவ அதிகாரியாக இருந்து சாதனை படைத்ததாகச் சொல்கின்ற நமது ஜனாதிபதி ஜீ.ஆர். இந்த அதிகாரிகளிடத்திலும் தோற்றுப் போய் இருக்கின்றார். அல்லது எதிரணிகள் சொல்வது போல் சேர் இது விவகாரத்திலும் சித்தியடையத் தவறி இருக்கின்றார்.

அதே போன்று இந்தியாவுக்குப் பெரும் எதிர்பார்ப்புக்களுடன் சென்ற நமது நிதி அமைச்சர் பசில் பயணமும் வெற்றியளிக்கை வில்லை என்று தெரிகின்றது. இது பற்றி நாடாளுமன்றத்துக்கு அவர் விளக்கம் தரவேண்டும் என்று ஐதேக தலைவர் ரணில் வேண்டுகோள் விடுத்தாலும் அந்த வேண்டு கோளும் இன்றுவரை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. எனவே அமெரிக்காவுடன் யுகதனவிய திட்டம் போல இதிலும் ஏதாவது இரகசியம் இருக்கலாம் என்று ஒரு பேச்சும் அரசியல் வட்டாரங்களில் அடிபடுகின்றது. எனவே இந்த அரசாங்கத்தில் முக்கியமான சில தீர்மானங்களை ஆளும் தரப்பைச் சேர்ந்த இராஜபக்ஸாக்கள் தன்னிச்சையாக எடுத்து வருகின்றார்கள் என்பது தெளிவாகின்றது. தமிழக அரசியல் விமர்சகர்கள் பலர் நமது நிதி அமைச்சரை உயர் மட்டத் தலைவர்கள் கண்டு கொள்ளவில்லை என்று செய்தி வெளியிட்டு வருகின்றனர்.

இந்தியத் தரப்பில் எது செய்வதாக இருந்தாலும் அரசியல் யாப்பில் பதிமூன்று விவகாரத்தில் இலங்கை நகர்வுகைளச் செய்யாதவரை பெரிதாக ஏதும் இல்லை என்ற நிலைதான் தெரிகின்றது. அதே நேரம் குறைந்த பட்சம் மாகாணசபைத் தேர்தல் விடயத்தில் அழுத்தங்கள் நடந்திருக்க வாய்ப்பு இருக்கின்றது. எனவே அதனை சிங்கள சமூகத்திடம் சந்தைப்படுத்தவது நெருக்கடி என்பதால் இரு தரப்பும் அடக்கி வாசித்திருக்க வேண்டும் என்று எடுத்துக் கொள்ள முடியும். புதிய அரசியல் யாப்பு திசம்பரில் வருகின்றது என்று சொல்லப்பட்டு வந்தது. இன்று நாம் இந்த கட்டுரையை தயாரிக்கின்ற நேரம் ஏறக்குறை மாதத்தின் மத்தி என்று வருகின்றது. ஆனால் யாப்பையும் காணவில்லை. அதற்கான குறிப்பையும் காணவில்லை. மொத்தத்தில் இந்த அரசாங்கம் மெல்லவும் முடியாது விழுங்கவும் முடியாது என்ற ஒரு நிலையில் இருக்கின்றது. என்றுதான் சொல்ல வேண்டும்.

-நன்றி ஞாயிறு தினக்குரல்

Previous Story

விராட் கோலி OUT?

Next Story

பாக். இடம் அமைதிப் பேச்சு:வேறு வழி இல்லை-பரூக் அப்துல்லா