அமெரிக்காவின் 47வது அதிபராக குடியரசு கட்சியின் டொனால்ட் டிரம்ப் பதவியேற்க உள்ளார். இந்த வெற்றிக்கு உலகம் முழுவதிலும் இருந்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபர் பதவிக்கு வருவது ஒரு பக்கம் பதற்றத்தை அதிகரித்துள்ள நிலையில் மற்றொரு தரப்பு மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிகிறது. இந்த பட்டியலில் வங்கதேசமும் ஒன்று.
இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா அந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டியிருந்தது.
வன்முறை போராட்டங்களுக்குப் பிறகு வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ், அந்த அரசின் தலைமை ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
ஒரு வகையில் அவர்தான் இந்த அரசின் தலைவர். முகமது யூனுஸ், அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சி மற்றும் பைடன் நிர்வாகத்தின் நண்பராக கருதப்படுகிறார்.
அவரை இந்தப் பதவியில் அமர்த்தியதில் பைடன் நிர்வாகமும் ஜனநாயகக் கட்சியினரும் முக்கியப் பங்கு வகித்துள்ளனர் என்று நம்பப்படுகிறது.
இவ்வாறான நிலையில் அமெரிக்காவின் அதிகார மாற்றம் வங்கதேச அரசியலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது மிகப்பெரிய கேள்வி. முகமது யூனுசுக்கு முன்பு கிடைத்த அதே ஆதரவு டிரம்பின் ஆட்சிக் காலத்திலும் கிடைக்குமா?
அவாமி லீக் தலைவர் ஷேக் ஹசீனா இழந்த அரசியல் அதிகாரத்தை மீண்டும் கைப்பற்ற முடியுமா? இறுதியாக இந்திய-வங்கதேச உறவுகள் எந்த திசையில் செல்லும்?
டிரம்பின் வெற்றி குறித்து ஷேக் ஹசீனா என்ன சொன்னார்?
அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதையடுத்து ஷேக் ஹசீனா அவாமி லீக்கின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்த பதிவில் டொனால்ட் டிரம்புடன் ஷேக் ஹசீனா இருக்கும் புகைப்படமும் பகிரப்பட்டுள்ளது.
“அமெரிக்காவின் 47வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்புக்கு வங்கதேச அவாமி லீக் தலைவர் ஷேக் ஹசீனா வாழ்த்து தெரிவிக்கிறார்” என்று அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.
டிரம்பின் அமோக தேர்தல் வெற்றி அவரது தலைமை மற்றும் அமெரிக்க மக்கள் அவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு சான்றாகும் என்று அவர் பதிவிட்டுள்ளார்.
அவரது முந்தைய பதவிக்காலத்தில் டொனால்ட் டிரம்ப் மற்றும் மெலனியா டிரம்ப் ஆகியோருடன் நடத்திய சந்திப்புகள் மற்றும் உரையாடல்களை ஷேக் ஹசீனா மிகவும் மகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
டிரம்பின் இரண்டாவது பதவிக்காலத்தில் வங்கதேசத்திற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான நட்பு மற்றும் இருதரப்பு உறவுகள் வலுவடையும் என்று தான் நம்புவதாக ஷேக் ஹசீனா கூறினார்.
இருதரப்பு மற்றும் பலதரப்பு நலன்களை முன்னோக்கி கொண்டுசெல்வதில் மீண்டும் இணைந்து பணியாற்றுவதற்கான தமது உறுதிப்பாட்டை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்க அதிபர் மற்றும் அவரது குடும்பத்தினர், நல்ல ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுள் பெறவும் அவர் வாழ்த்தினார்.
அதிபர் டிரம்ப் வருகையால் பிரச்னைகள் அதிகரிக்குமா?
2016 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலரி கிளிண்டனை தோற்கடித்தார் டொனால்ட் டிரம்ப்.
அப்போது இதுகுறித்து வருத்தம் தெரிவித்த வங்கதேசத்தின் இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ், டிரம்பின் வெற்றி சூரிய கிரகணம் மற்றும் இருண்ட நாட்கள் போன்றது என்று கூறியிருந்தார்.
2016 தேர்தல் தவறான அரசியலுக்கு பலியாகிவிட்டது என்று அவர் கூறினார். அந்த நேரத்தில் டிரம்பிற்கு ஆலோசனை வழங்கிய அவர், சுவர்களுக்கு பதிலாக பாலங்களைக் கட்ட வேண்டும் என்றும் தாராளவாத அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
முகமது யூனுஸ் அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சியினருக்கு நெருக்கமானவர் என்று டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் தெற்காசிய ஆய்வுப் பேராசிரியர் சஞ்சய் பரத்வாஜ் கூறினார்.
“வங்கதேசத்தில் அதிகார மாற்றம் ஏற்பட்டு இடைக்கால அரசின் தலைவராக நியமிக்கப்பட்ட நேரத்தில் முகமது யூனுஸ் ஜனநாயகக் கட்சியினர், பைடன் நிர்வாகம் மற்றும் ஹிலரி கிளிண்டன் ஆகியோருடன் நெருக்கமாகப் பணியாற்றி வந்தார். அவரை இந்தப் பொறுப்புக்குக் கொண்டு வந்ததில் அமெரிக்காவுக்கு முக்கியப் பங்கு உண்டு,” என்று அவர் குறிப்பிட்டார்.
பைடன் கொள்கைகளை டிரம்ப் தொடர்வாரா?
இந்த புதிய பொறுப்பை ஏற்றுக் கொண்டபிறகு யூனுஸ் மேற்கொண்ட அமெரிக்க சுற்றுப்பயணம் பற்றி அதிகம் விவாதிக்கப்பட்டது. செப்டம்பர் 25-ம் தேதி அவர் ‘கிளிண்டன் உலகளாவிய முன்முயற்சி’ என்ற (Clinton global initiative) நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டனும் கலந்து கொண்டார்.
“அமெரிக்காவில் அதிகார மாற்றம் நடந்துள்ளது. ஜனநாயகக் கட்சிக்கு பதிலாக குடியரசுக் கட்சியினர் ஆட்சியில் இருப்பார்கள். இவ்வாறான நிலையில் பைடன் ஆட்சியில் இருந்த கொள்கைகளை டிரம்ப் தொடர்வாரா அல்லது அவற்றில் சில மாற்றங்களைச் செய்வாரா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது,” என்று பரத்வாஜ் குறிப்பிட்டார்.
“முன்பு அமெரிக்கா இந்தியாவின் கண்ணோட்டத்தை மனதில் வைத்து தெற்காசியா முழுவதையும் ஒரே பிராந்தியமாக பார்த்தது. ஆனால் ஜோ பைடன் நிர்வாகம் வங்கதேசத்தை ஒரு தனியாகவே பிரித்துப் பார்த்தது. இதன் விளைவுதான் வங்கதேசத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம்,” என்றார் அவர்.
“வங்கதேசத்தில் மனித உரிமைகள் மற்றும் தேர்தல்கள் குறித்து முன்பும் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. ஆனால் பைடன் காலத்தில் இவை தொடர்பாக அதிக கண்டிப்பு இருந்தது. அவருக்கு ஷேக் ஹசீனாவுடன் நல்லுறவு இருக்கவில்லை,” என்று பரத்வாஜ் தெரிவித்தார்.
வங்கதேச மக்கள் என்ன நினைக்கிறார்கள்?
ஷேக் ஹசீனா – டொனால்ட் டிரம்ப் ஆட்சிக் காலத்தில் அமெரிக்க -வங்கதேச உறவுகள் பதற்றம் நிறைந்ததாக இருக்கவில்லை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்கிறார் வங்கதேசத்தில் உள்ள பெங்காலி மொழி நாளிதழான பிரதோம் அலோவின் (Prothom Alo) அரசியல் ஆசிரியர் காதில் கல்லோல் கூறுகிறார்.
பிபிசியிடம் பேசிய அவர், ”அப்படி இருந்த போதிலும் வங்கதேசத்தில் அந்த நேரத்தில் தேர்தல் செயல்முறை குறித்து பலர் கேள்விகளை எழுப்பினர். ஆனால் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்துவதற்கான வேண்டுகோளைத் தவிர டிரம்ப் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக எதுவும் கூறவில்லை. இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம் மற்றும் பேச்சுவார்த்தை தொடர்ந்தது,” என்று குறிப்பிட்டார்.
சமீபத்தில் முகமது யூனுஸ் அமெரிக்கா சென்று ஜோ பைடனை சந்தித்ததையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். அவருக்கு அங்கு நல்ல மரியாதை கிடைத்தது என்றார் கல்லோல்.
இத்தனை நிகழ்வுகளையும் பார்க்கும்போது அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற ஆர்வத்தில் அனைவரும் உள்ளனர்.
டொனால்ட் டிரம்ப் நரேந்திர மோதிக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால் இந்திய துணைக்கண்டத்தைப் பற்றி வேறுபட்ட பார்வையைக் கொண்டுள்ளார் என்று NTV பங்களாதேஷின் மூத்த தொலைக்காட்சி செய்தியாளர் பர்ஷோன் கபீர் பிபிசியிடம் தெரிவித்தார்.
“டிரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வருகிறார் என்று தெரிந்ததும் வங்கதேச மக்களிடையே கலவையான உணர்வுகள் இருந்தன. ஆனால் யூனுஸ் தலைமையிலான தற்போதைய அரசு அமெரிக்காவுடன் மிகவும் நல்ல உறவைக் கொண்டுள்ளது. ஏனெனில் யூனுஸுக்கு கிளிண்டன் குடும்பத்துடன் தனிப்பட்ட தொடர்பு உள்ளது. அவரது செய்தித் தொடர்பாளர் இந்த விஷயத்தை தெரிவித்துள்ளார்,” என்று அவர் குறிப்பிட்டார்.
“இந்தியாவும் வங்கதேசமும் வரலாற்று ரீதியாக நல்ல அண்டை நாடுகள். எனவே டிரம்ப் அதிபராவது சாமானிய மக்களின் வாழ்க்கையில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும். இதைத்தான் நாங்கள் அனைவரும் எதிர்பார்க்கிறோம்,”என்று பர்ஷோன் கபீர் கூறினார்.
“அடுத்த சில மாதங்களில் விஷயங்கள் எவ்வாறு முன்னேறுகின்றன என்பதைப் பார்க்க அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்,” என்றார் அவர்.
“அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை அப்படியே உள்ளது. எனவே டிரம்ப் அதிபராக வருவதால் இந்திய-வங்கதேச உறவுகளுக்கு குறிப்பிடத்தக்க பாதிப்பு எதுவும் ஏற்படாது என்று நம்பலாம். ஆனால் தற்போது அவாமி லீக் என்ன நினைக்கிறது என்று யாருக்குத் தெரியும்,” என்று கபீர் குறிப்பிட்டார்.
வங்கதேச இந்துக்கள் குறித்து டிரம்பின் அறிக்கை
டிரம்ப் தனது தீபாவளி செய்தியில் வங்கதேச இந்துக்கள் மற்றும் பிரதமர் நரேந்திர மோதி குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டார். இதுபற்றி சமூக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.
“வங்கதேசத்தில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் பிற சிறுபான்மையினருக்கு எதிரான காட்டுமிராண்டித்தனமான வன்முறையை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். கும்பல் அவர்களைத் தாக்குகிறது, கொள்ளையடிக்கிறது. இது முழுமையான அராஜகத்தின் நிலைமை,” என்று டிரம்ப் பதிவிட்டார்.
”நான் பதவியில் இருந்திருந்தால் இதுபோல நடந்திருக்காது. கமலாவும் ஜோ பைடனும் அமெரிக்கா உட்பட உலகம் முழுவதும் உள்ள இந்துக்களை புறக்கணித்துள்ளனர். அவர்கள் இஸ்ரேலில் இருந்து யுக்ரேன் வரை மற்றும் நமது சொந்த தெற்கு எல்லை வரை பேரழிவை ஏற்படுத்தியுள்ளனர். ஆனால் நாங்கள் அமெரிக்காவை மீண்டும் பலப்படுத்துவோம். வலிமையின் மூலம் அமைதியை மீட்டெடுப்போம்,” என்றார் டிரம்ப்.
“தீவிர இடதுசாரிகளின் சமய எதிர்ப்பு நிகழ்ச்சி நிரலுக்கு எதிராக இந்து அமெரிக்கர்களையும் பாதுகாப்போம். உங்கள் சுதந்திரத்திற்காக நாங்கள் போராடுவோம். எனது நிர்வாகத்தின் கீழ், இந்தியாவுடனும் எனது நல்ல நண்பரான பிரதமர் மோதியுடனும் எங்கள் கூட்டுறவை வலுப்படுத்துவோம்,”என்று டிரம்ப் குறிப்பிட்டார்.
வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் குறித்து முதன்முறையாக பேசிய அமெரிக்காவின் முதல் பெரிய அரசியல்வாதி டிரம்ப் ஆவார். கமலா ஹாரிஸ் இந்து சமய வேர்களை உடையவர் என்றாலும் இந்த விஷயத்தில் அவர் மெளனம் காத்தார்.
டிரம்ப் வெற்றி பெற்றால் பைடன் தூண்டுதலின் பேரிலான யூனுஸின் நடவடிக்கைகள் முடிவுக்கு வரக்கூடும் என்று பாதுகாப்பு நிபுணர் பிரம்மா செல்லானி அப்போது எழுதியிருந்தார்.
மனோகர் பாரிக்கர் இன்ஸ்டிடியூட் ஃபார் டிஃபென்ஸ் ஸ்டடீஸ் அண்ட் அனாலிசஸின் ஆராய்ச்சி கூட்டாளியான ஸ்மிருதி பட்நாயக்கும் இதே போன்ற கருத்துக்களை முன்வைக்கிறார். பிபிசியிடம் பேசிய அவர், ”தீபாவளி அன்று இந்துக்கள் குறித்து டிரம்ப் கூறிய கருத்து வங்கதேசத்தின் இடைக்கால அரசை விமர்சிப்பதாக எடுத்துக் கொள்ளப்பட்டது. எப்படியிருந்தாலும் டிரம்புடனான யூனுஸின் உறவு நன்றாக இல்லை,” என்று கூறினார்.
இருப்பினும் சில வல்லுநர்கள் அதை தேர்தலுடன் இணைத்து, ’தேர்தலில் இந்துக்கள் மற்றும் இந்திய வாக்காளர்களை கவரும் வகையில் டிரம்ப் இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுகிறார்’ என்று கூறினர்.
“ட்ரம்ப் தலைமையின் கீழ் வங்கதேசத்திற்கு அமெரிக்கா எந்த அளவு பாதுகாப்பை வழங்கும் என்பது மிகப்பெரிய கேள்வி. ஏனெனில் அமெரிக்கா இல்லாமல் வங்கதேச அரசு இயங்க முடியாது,” என்று சஞ்சய் பரத்வாஜ் குறிப்பிட்டார்.
ஷேக் ஹசீனா மீண்டும் வர முடியுமா?
வங்கதேசத்தில் தற்போது ஒரு நிலையற்ற அரசியல் சூழ்நிலை உள்ளது. ஷேக் ஹசீனா ஆட்சியை விட்டு வெளியேறிய பிறகு ஒரு இடைக்கால அரசு அங்கு இயங்குகிறது.
“வங்கதேசத்தில் இன்னும் ஜனநாயகம் மீட்கப்படவில்லை. புதிய அரசு எப்போது அமையும் என்று தற்போது யாருக்கும் தெரியாது” என்றார் சஞ்சய் பரத்வாஜ்.
வங்கதேசத்தில் புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் எப்போது நடத்தப்படும் என்பதுதான் கேள்வி.
இடைக்கால அரசின் ஆலோசகர் டாக்டர் ஆசிஃப் நஸ்ருல் கடந்த மாதம் வெளியிட்ட அறிக்கையில் தேர்தல் பற்றி சூசகமாக தெரிவித்திருந்தார்.
அடுத்த ஒரு வருடத்திற்குள் தேர்தலை நடத்த வாய்ப்புள்ளது. ஆனால் இதற்கு தேர்தல் திசையில் முன்னேற்றம் மற்றும் அரசியல் உடன்பாடுகள் அவசியம் என்றும் அவர் கூறினார்.
இப்போது நாட்டில் தேர்தல் ஆணையம் அமைக்கப்பட்டு வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படும். இந்தப் பணி முடிந்தால் அடுத்த ஆண்டுக்குள் தேர்தலை நடத்தலாம் என்றும் நஸ்ருல் கூறினார்.
நாட்டில் தேர்தலை அறிவிக்கும் அதிகாரம் இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸுக்கே உள்ளது என்றார் அவர்.
”அத்தகைய சூழ்நிலையில் யூனுஸ் மீதான அழுத்தம் அதிகரிக்கும். ஏனெனில் பைடனை ஒப்பிடும் போது டிரம்ப் அவருக்கு அதிக நேரம் கொடுக்க மாட்டார்,” என்று ஸ்மிருதி எஸ் பட்நாயக் கூறினார்.
வங்கதேசத்தில் கூடிய விரைவில் தேர்தலை நடத்துமாறு முகமது யூனுஸிடம் டிரம்ப் கேட்டுக் கொள்வார். இரண்டாவதாக தேர்தலில் அவாமி லீக் பங்கேற்கும் வாய்ப்பு தற்போது அதிகரித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஷேக் ஹசீனாவின் கட்சிக்கு தான் இழந்த அரசியல் தளத்தை மீட்டெடுக்க உதவி கிடைக்கும் என்று பட்நாயக் தெரிவித்தார்.
ஷேக் ஹசீனாவின் தலைமையில் அல்லது அவர் இல்லாவிட்டாலும் அவாமி லீக் வங்கதேசத்தில் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று சஞ்சய் பரத்வாஜ் குறிப்பிட்டார்.
“அவாமி லீக்கில் உள்ள பல தாராளவாத ஜனநாயகவாதிகள் ஷேக் ஹசீனாவை விரும்புவதில்லை. ஆயினும் வங்கதேசத்தில் தான் விரும்பும் அரசியல் இடத்தை தன்னால் பெறமுடியும் என்று அவாமி லீக் நம்புகிறது,” என்று அவர் தெரிவித்தார்.