வங்கதேசத்தில் அமையும் இடைக்கால யூனுஸ்அரசு!

வங்கதேசத்தில் இப்போது அமைதியற்ற ஒரு சூழலே நிலவி வருகிறது. அந்நாட்டின் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஹசீனா அங்கிருந்து வெளியேறிவிட்டார். இதற்கிடையே விரைவில் அங்கு அமையும் இடைக்கால அரசை நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் வழிநடத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பிறகாவது அங்கே வன்முறை மெல்லக் கட்டுக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நமது அண்டை நாடான வங்கதேசத்தில் மிக மோசமான ஒரு சூழலே நிலவி வருகிறது. அங்கு இட ஒதுக்கீட்டிற்கு எதிராகத் தொடங்கி மாணவர் போராட்டம் மெல்லப் பிரதமராக இருந்த ஹசீனாவுக்கு எதிராகத் திரும்பியது.

மாணவர் போராட்டம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு விஸ்வரூபம் எடுத்த நிலையில், ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டுத் தனி விமானம் மூலம் வங்கதேசத்தில் இருந்து வெளியேறினார். இருப்பினும், வங்கதேசத்தில் அடுத்து யார் ஆட்சியை அமைக்கப் போகிறார்கள் என்பது தெளிவாகத் தெரியாத நிலையில், அங்கே வன்முறை தொடர்ந்து வந்தது. முகமது யூனுஸ்: இதற்கிடையே வங்கதேசத்தில் இப்போது அமைந்துள்ள இடைக்கால அரசை வழிநடத்த நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

வங்கதேச அதிபர் முகமது சஹாபுதீன் தலைமையில் நடைபெற்ற முக்கிய கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறி இருக்கும் நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வறுமையை எதிர்த்துப் போராடியதற்காகப் பெயர் பெற்றவர் தான் இந்த யூனுஸ்..

வங்கதேசத்தில் இப்போது இடைக்கால அரசு அமைத்துள்ள நிலையில், அதை யூனுஸ் தலைமை ஏற்க வேண்டும் என்று மாணவர் அமைப்பினர் வலியுறுத்தினர். நேற்று செவ்வாய்க்கிழமை இந்த பிரதமர் பதவியை ஏற்கத் தயார் என்றும் அவர் கூறியிருந்தார். இந்தச் சூழலில் தான் அவரை பிரதமராகத் தேர்வு செய்துள்ளனர்.

அதிபர் முகமது சஹாபுதீன் தலைமையில் நடந்த கூட்டத்தில் முகமது யூனுஸை பிரதமராக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முப்படைகளின் தளபதிகளுடன் இட ஒதுக்கீடு போராட்டத்தை முன்னின்று நடத்திய மாணவர் அமைப்பினரும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

யூனுஸ் தலைமையில் விரைவில் இடைக்கால அரசு விரைவில் அமைக்கப்படும் என்று தங்களிடம் உறுதி அளிக்கப்பட்டதாக மாணவர் அமைப்பினர் தெரிவித்தனர். மேலும், இடைக்கால அரசில் அங்கம் வகிக்கும் 10- 14 முக்கிய நபர்களின் பெயர் பட்டியலை மாணவர் அமைப்பினர் சமர்ப்பித்துள்ளனர்.

வங்கதேசத்தின் சிட்டகாங்கில் 1940இல் பிறந்தவர் இந்த முகமது யூனுஸ்.. ஒரு சிறந்த தொழில்முனைவோர், பொருளாதார நிபுணர் மற்றும் சிவில் சமூகத் தலைவர் எனப் பல சிறப்புகளை இவர் பெற்றவர். 2006ஆம் ஆண்டில் மைக்ரோ கிரெடிட் மற்றும் மைக்ரோ ஃபைனான்ஸ் முறையில் முன்னோடியாக இருந்ததற்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

அவரது இந்த முன்னெடுப்பில் பின்தங்கிய தொழில்முனைவோருக்குச் சிறியளவில் கடன்களை வழங்கப்பட்டன. இதன் மூலம் சமூகத்தில் பின்தங்கி இருந்த பலரும் பயன் பெற்றனர். இவரது பணிக்காக நோபல் பரிசு மட்டுமின்றி 2009இல் அமெரிக்காவின் அதிபரின் பதக்கம் உள்ளிட்ட பல விருதுகளை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Story

 நாட்டை விட்டு வெளியேறும் பசில்

Next Story

 வங்கதேச வன்முறைக்கு இடஒதுக்கீடு மட்டுமே காரணமா?