லதா மங்கேஷ்கர்  ஐசியு சிகிச்சை தொடரும் – மருத்துவமனை

லதா மங்கேஷ்கரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டாலும், தொடர்ந்து அவர தீவிர சிகிச்சை பிரிவிலேயே சிகிச்சை பெறுவார் என்று அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

திரைப்பட்துறையில் முதுபெரும் பாடகியான லதா மங்கேஷ்கருக்கு, ஜனவரி 8ஆம் தேதி, லேசான அறிகுறிகளுடன் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் தெற்கு மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையின் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது உடல்நிலை மோசமடைந்து வருவதாக கூறப்பட்டதால் அவரது ரசிகர்களும் திரைத்துறையினரும் சோகத்தில் இருந்தனர்.

இந்த நிலையில், லதா மங்கேஷ்கரின் உடல்நிலை குறித்த அறிவிப்பை அளித்து, ப்ரீச் கேண்டி மருத்துவமனையின் இணைப் பேராசிரியர் டாக்டர் பிரதித் சம்தானி வெளியிட்டுள்ளார்.

“லதா மங்கேஷ்கர் உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்து வருகிறார். ஆனாலும், அவர் ஐசியுவிலேயே சிகிச்சை பெறுவார். எவ்வளவு காலம் மருத்துவமனையில் இருப்பார் என்பதை இப்போதே சொல்வது கடினம்” என்று அவர் கூறியுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை, லதா மங்கேஷ்கரின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவின. அவற்றை லதா மங்கேஷ்கரின் குடும்பத்தினருக்கு நெருக்கமான அனுஷா சீனிவாசன் ஐயர் நிராகரித்தார்.

“இதுபோன்ற தவறான செய்திகளைப் பரப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். அவரது குடும்பத்தினரும் மருத்துவர்களும் தங்கள் வேலையைச் செய்யட்டும். லதா அம்மா விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வாழ்த்துகிறேன்” என்று அவர் தெரிவித்தார்.

மூத்த பாடகி லதா மங்கேஷ்கர் 1942ஆம் ஆண்டு தனது 13வது வயதில் தனது திரைத்துறை வாழ்க்கையைத் தொடங்கினார். கலை உலகில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக லதா மங்கேஷ்கருக்கு நாட்டின் உயரிய சிவிலியன் விருதான பாரத ரத்னா விருதும் வழங்கப்பட்டுள்ளது.

Previous Story

கேமரூன் கால்பந்து காண நெரிசலில் சிக்கி 9பேர் பலி!

Next Story

அரசியல் கைதிகள்: விரைவில் தீர்வு – நீதி அமைச்சர்