ரஷ்யா பதிலடி: பைடன், ட்ரூடோ மீது பொருளாதார தடைகள்

Vigneshkumar

மாஸ்கோ: உக்ரைன் போரால் உலக நாடுகள் ரஷ்யா மீது கடும் பொருளாதாரத் தடைகளை அறிவித்து வரும் நிலையில், இதற்குப் பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் ரஷ்யா இறங்கி உள்ளது.

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடந்த பிப். 24ஆம் தேதி முழு வீச்சிலான போரை ஆரம்பித்தது. இது தொடர்பாக நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு ஏற்படாத நிலையில் போர் 3ஆவது வாரமாகத் தொடர்கிறது.

இந்தப் போர் காரணமாகப் பல நூறு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், லட்சக் கணக்கான மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் உக்ரைன் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பொருளாதாரத் தடைகள்

ரஷ்யாவின் இந்த நடவடிக்கை உலக நாடுகளை ஆத்திரப்படுத்தி உள்ளது. இந்தப் போருக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள உலக நாடுகள், ரஷ்யா இந்த போரை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். மேலும், அமெரிக்கா, பிரிட்டன், கனடா என பல்வேறு உலக நாடுகளும் ரஷ்யா மீது முன்னெப்போதும் இல்லாத அளவுக்குக் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்து வருகிறது. மேலும், ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்ய அதிபர் புதினின் சொத்துகளை முடக்கவும் அனுமதி அளித்துள்ளது.

இவை ரஷ்யா பொருளாதாரத்திற்கு கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்க அதிபர் பைடன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்ட பல சர்வதேச தலைவர்கள் மீது ரஷ்யா பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளது. மேலும், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் மற்றும் பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் ஆகியோர் மீதும் பொருளாதாரத் தடைகளை ரஷ்யா அறிவித்துள்ளது. ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்கா கொள்கையின் விளைவு இது என்று ரஷ்யா தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

அதேபோல ரஷ்யா வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அவரது பல அமைச்சர்கள் உட்பட 313 கனடா குடிமக்கள் மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை ரஷ்யா அறிவித்துள்ளது. அதேநேரம் இந்த பொருளாதாரத் தடைகளின் தன்மை குறித்து ரஷ்யா சரியாக விளக்கவில்லை. இதை ரஷ்யா தனிப்பட்ட தடைகள் என்றும் ஸ்டாப் லிஸ்ட் என்றும் குறிப்பிடுகிறது. ரஷ்யாவுக்கு எதிராக நடவடிக்கை எடுத்த உலக நாடுகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்த அறிவிப்புகளை ரஷ்யா வெளியிட்டுள்ளது.

தடை தொடரும்

அமெரிக்க முப்படை தலைமை தளபதி மார்க் மில்லி, தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், மத்திய புலனாய்வு முகமை இயக்குநர் வில்லியம் பர்ன்ஸ் மற்றும் வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி, துணை தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் தலீப் சிங் ஆகியோரும் ரஷ்யவாலின் இந்த பட்டியலில் உள்ளனர். அதிபர் பைடன் மகன் ஹண்டர் பைடன், முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் ஹிலாரி கிளிண்டன் ஆகியோர் ரஷ்யா நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கும் இன்னும் பல அமெரிக்கர்கள் மீதும் கூடுதல் தடைகளை அறிவிக்கப்படும் என்று ரஷ்யா வெளியுறவு அமைச்சகம் எச்சரித்தது.

Previous Story

ஒன்றரை வயதான குழந்தை உலக சாதனை!!!

Next Story

திடீர் திருப்பம்! கலங்கும் ஜெலன்ஸ்கி!