ரணில் பிறப்பித்த உத்தரவால் சர்ச்சை – ஹிஜாஸ் ஹிஸ்புல்லா

ரணில் விக்ரமசிங்க இதுவரை  பதில் ஜனாதிபதியாக பொறுப்பேற்கவில்லை என சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

பதில் ஜனாதிபதி என்ற பெயரில் இன்று காலை ரணில் விக்ரமசிங்கவினால் அவசரகால சட்டம் மற்றும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது. எனினும் அந்த உத்தரவுகள் சட்டவிரோதமானது என வழக்கறிஞர் ஹிஜாஸ் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 40 (சி) பிரிவின் கீழ், ஜனாதிபதியின் பதவி வெற்றிடமான பின்னரே பிரதமர் தற்காலிக ஜனாதிபதியாக மாறுவார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரதமரின் உத்தரவின் கிழ் ஒருவர் கைது செய்யப்பட்டால் அது சட்டத்தை மீறும் செயல் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய ஜனாதிபதி அந்த பதிவிக்கு ஒருவரை நியமித்தால் அல்லது அவர் பதவி விலகினால் மாத்திரமே பிரதமர் பதில் ஜனாதிபதியாக முடியும் என சட்டத்தரணி சுரேன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தீர்மானமிக்க இந்த சந்தர்ப்பத்தில் நாட்டு மக்கள் அனைவரும் அரசியல் யாப்புக்கும் அமுலிலுள்ள சட்டத்திற்கும் அமைவாக செயற்படுவது அவசியம் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிவித்துள்ளது.

நாட்டின் சட்டவாட்சியையும் அரசியல் யாப்பையும் சீர்குலைப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் பற்றியும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக, சங்கம் அறிவித்துள்ளது.

Previous Story

கோட்டாபயவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாலைதீவு ஜனாதிபதி இல்லத்தை முற்றுகை

Next Story

நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயன்ற மக்கள்  கண்ணீர் புகைகுண்டு வீச்சு