நஜீப் பின் கபூர்
(நன்றி: 07.09.2025 ஞாயிறு தினக்குரல்)
இரு கட்சிகளையும் இணைப்பது என்பது இலகுவான காரியமல்ல!
விகாரைகளுக்குப்போய் நாமல் மூக்குடைபட்டதாகவும் தகவல்கள்!
*****
‘எதிரியின் எதிரி நண்பன்
இராஜதந்திரம் எல்லா
இடங்களிலும் வெற்றி
பெறுவது கிடையாது’
*****
முன்னாள் ஜனாதிபதி ரணில் கைதுக்குப் பின்னர் எதிரணிகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து அவருக்காக குரல் கொடுத்ததை நாம் பார்த்தோம். ஆனால் இந்த இணைவு குடிமக்களின் நலன்களுக்கானதல்ல.
அது தன்னல மற்றும் ஊழல் அரசியல்வாதிகளின் நலன்-பாதுகாப்பை மையமாகக் கொண்ட ஒரு கூட்டணியாகத்தான் அமைந்திருந்தது. அதனால் அது தொடர்பாக பொது மக்களிடத்தில் பெரிய எதிர்பார்ப்புக்கள் காணப்படவில்லை. தங்களுக்கும் இப்படியான ஒரு நிலை வரப்போகின்றது அதனால்தான் இந்த அரசியல் தலைவர்கள் ஒரு கூட்டணி பற்றி இரவு பகலாக ஓடித்திரிந்தனர்.
இந்தப் பின்னணியில்தான் ரணில்-சஜித் அதாவது ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் ஓரணியில் இணைவது பற்றியும் அதிகளவில் பேசப்பட்டது. இதற்கிடையில் சஜித் தரப்பினருக்கு ஐதேக.வில் விதிக்கப்பட்ட தடையும் நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் ஆறாம் திகதி நடைபெற இருந்த ஐதேக. மாநாட்டுக்கும் சஜித்துக்கும் அழைப்பு என்றும் சொல்லப்பட்டது. பிந்திய தகவல்களின்படி இந்த ஐதேக. மாநாடு இன்னும் சில வாரங்களில் நடைபெறும் என்று சொல்லப்பட்டிருக்கின்றது. ரணிலின் சுகயீனமும் காரணமாக சொல்லப்படுகின்றது. ஆனால் இது காலவரையின்றி பின்போடப்பட்டிருக்கின்றது என்று தெரிகின்றது.
அதே நேரம் ஐதேக.-ஐமச. இணைவு குறித்து சஜித் தரப்பில் முன்னுக்கப் பின் முரணான கருத்தக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. சஜித் அணியில் இருக்கின்ற ஒரு தரப்பினர் தமது அணிதான் மிகப் பெரிய கட்சி அதனால் இந்த ஐதேக-சஜித் அணிகள் இணைந்தால் சஜித்தான் அதன் தலைவர். மாற்றுக் கருத்துக்களுக்கு அதில் இடமே கிடையாது என்று அடித்துச் சொல்கின்றார்கள்.
அதே கட்சியில் உள்ள மற்றுமொரு தரப்பினர் அதனை ரணிலும் சஜித்தும் பேசித் தீர்த்துக் கொள்வார்கள் என்று நம்பிக்கை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றனர். நாம் தாய்க்கட்சியுடன் இணைவதில் கொளரவப் பிரச்சனைகள் இல்லை என்றும் சொல்லப்படுகின்றது.
கட்சியில் இருக்கின்ற கனிசமான ஒரு தொகையினர் தலைமைத்துவத்துவத்தில் மாற்றம் தேவை என்று எதிர்பார்க்கின்றார்கள். இவர்கள் சஜித்தை விட ரணில் ஆளுமை மிக்கவர் என்றும் கருதுகின்றார்கள்.
இந்த ஐதேக.-ஐமச. இணைவு தொடர்ப்பில் அவசரப்படாது தீர்க்கமாக முடிவுகளுடன் செயல்பட வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றவர்களும் இதில் இருக்கின்றார்கள். அவர்களுக்கு இதிலுள்ள சிக்கல்கள் நெருக்கடிகள் புரிகின்றது என்று நாம் நம்புகின்றோம்.
இன்று நாடாளுமன்றத்தில் இருக்கின்ற 225 உறுப்பினர்களில் என்பிபி. 159. ஐமச. 40. வரை தமிரரசுக்கு 8. தேஜமு. 5. மொட்டுக்கு 3. இதர கட்சிகள் தலா ஒன்று என்று ஆசனங்களை வைத்திருக்கின்றன. சஜித் தரப்பில் இருக்கின்ற உறுப்பினர்களில் பலர் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவர்கள்.
தெற்கில் அமைகின்ற அரசியல் கூட்டணி தொடர்ப்பில் வடக்கு-கிழக்கு தமிழ் மக்கள்- கட்சிகள் மத்தியில் பெரியளவில் ஆர்வம் கிடையாது. இருந்தாலும் அதில் நாட்டம் உள்ள தனி நபர்கள் சிலர் அந்த அரசியல் கட்சிகளில் இருக்கின்றார்கள்.
பெரும்பாலும் இவர்கள் கொழும்பு ஆளும் தரப்புடன் உறவுகளை வளர்த்துக் கொண்டு தம்மை சமூகத்தின் மீட்பாளர்கள் என்று தமிழ் மக்களிடத்தில் காட்டிக் கொள்ள விரும்புகின்றாவர்கள் என இவர்களை எடுத்துக் கொள்ள முடியும்.
இதிலிருக்கின்ற தனித்தவ முஸ்லிம் மலையக் கட்சிகள் தேர்தல்களில் தமது பிரதிநிதித்துவத்தை மையமாக வைத்துத்து தன்னலத்துடன்தான் என்றும் கூட்டணி பற்றிய முடிவுகளை எடுப்பதை நாம் பார்க்கின்றோம். இவர்களுக்கு தேசிய சமூக நலன்களைவிட தன்னல அரசியலில்தான் அதித ஆர்வம்.
மேலும் இந்த அரசை உடனடியாக வீழ்த்துவது முடியாத காரியம். எனவே அரசுடன் எப்படியாவது நல்லுறவை ஏற்படுத்திக் கொண்டு அபிவிருத்தியில் தமக்கு ஏதாவது பெற்றுக் கொள்ள முடியுமா என்றுதான் அவர்கள் இப்போது சிந்திக்கின்றார்கள்.
நாடாளுமன்ற ஆசனங்களின் அடிப்படையில் கட்சிகளின் பலத்தை பார்ப்பதை விட வாக்காளரை வைத்துப்பார்த்தால் என்பிபி. அறுபத்து இரண்டு (62) சதவீத வாக்குகளைப் பெற்றிருக்கின்றது. ஐமச. பதினெட்டு (18) சதவீதம். இதில் கூட்டணிக் கட்சி வாக்குகளும் அடங்கும். அடுத்து தேஜமு. நாலு (4) சதவீத வாக்குகள். மொட்டுக் கட்சிக்கு மூன்று (3) சதவீதம் என்ற அளவில்தான் பொதுத் தேர்தல்லில் அவை பெற்றிருந்தன.
சஜித் அணியுடன் கூட்டணி அமைப்பதில் ஆர்வமாக இருக்கின்ற ரணில் தரப்பினர் மிகவும் பலயீனமான நிலையில் களத்தில் இருக்கின்றனர். எனவே அப்படி கூட்டணி ஒன்று அமையுமாக இருந்தால் சஜித் ஐதேக. வுக்கு பெரியளவில் விட்டுக்கொடுப்பதற்கு ஏதுமில்லை என்பது எமது வாதமாகும்.
ஐதேக. பலம் என்ன?
ஆனால் சஜித்துடன் ஒப்பிடும் போது ரணில் நம்மைப் பொறுத்தவரை ஒரு அரசியல் நயவஞ்சகர் கோமாளி என்று இருந்தாலும், அவர் ஒரு சபையில் அல்லது கூட்டத்தில் அமர்க்கின்ற போது அந்த சபையில் ரணில் முன்னால் சஜித் காணாமல் போய்விடுவார்.
இது சஜித்துக்கும் நன்றாகத் தெரியும். இந்த இடத்தில்தான் வடுக்கள் அல்லது காயங்களுடன் அமைக்கின்ற இந்தக் கூட்டணி பதவிகள் தெடர்ப்பில் பெரும் குழறுபடிகளுக்கு அல்லது ரணகளங்களுக்கு அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன.
இதனை ரணில் தரப்பினர் புரிந்து கொள்ள வேண்டும். எனவே விரலுக்கு ஏற்ற வீக்கத்துடன்தான் பங்கு என்பதுதான் அரசியல் கொடுக்கல் வாங்கள்கள் நடக்க வேண்டும். சஜித்தின் பலயீனம்தான் ரணிலை எதிரணி ஹீரேவாக அரங்கில் காட்சிப்படுத்தி வருகின்றது. சஜித்தின் அந்தப் பலயீனங்கள் சரி செய்யக் கூடியதொன்றாகவும் நாம் நம்பவில்லை.
இதற்கிடையில் ஐதேக-ஐமச. இணைவதாக இருந்தால் யாருக்குத் தலைமைப் பதவி என்று கேள்வி வருகின்றது. அனுபவத்தையும் நயவஞ்சக அரசியலையும் வைத்துப்பார்க்கின்ற போது ரணிலுக்கு அதிக வாய்ப்பு. ஆனால் மக்கள் செல்வாக்கை வைத்துப்பார்க்கின்ற போது ஐதேக. என்பது காணாமல் போன ஒரு அரசியல் இயக்கம் என்று சொல்வதை விட பிரபுத்துவ கும்பல் என்றுதான் சொல்ல வேண்டும்.
இதனால் இணைத் தலைமைத்துவம் அல்லது கூட்டுத் தலைமை அல்லது ரணிலுக்கு சிரேஸ்ட தலைமையும் சஜித்துக்குத் தலைமை என்று யோசனைகள் வருகின்றன. அத்துடன் தலைவர் செயலாளர் பதவிகள் பங்கிடப்பட வேண்டும் என்றும் யோசனைகளும் வருகின்றன.
நமது கணிப்புப்படி அதற்குக் கூட வாய்ப்புக்கள் கிடையாது. இது விடயத்தில் சஜித் மிகவும் உறுதியான நிலைப்பாட்டில் இருக்கின்றார். தலைவர் செயலாளர் என்ற இரு பதவிகளும் தனது தரப்பிற்கு என்ற இடத்திலிருந்து பேச்சுவார்த்தைகள் வந்தால்தான் அடுத்த கட்டம் பற்றி சிந்திக்க முடியும் என்று அவர் இருக்கின்றார்.
அவரது கோரிக்கையில் நமக்கும் இணக்கப்பாடுகள் உண்டு. ஐதேக.வில் வஜிர தலதா ருவன் ரங்கே நவின் சாகல ஹரின் மற்றும் ரணிலின் இன்னும் பல சகாக்கள் அங்கு இருக்கின்றார்கள். இணைவில் அவர்களை எந்த இடத்தில் வைப்பது. இவர்களுடன் சஜித் அணியில் இருக்கின்ற இரண்டாம் மட்டத் தலைவர்கள் என்று பார்த்தால் ரஞ்சித் மத்தும பண்டார மட்டும்தான் இருக்கின்றார்.
அப்படியானால் அர்ஷ திஸ்ஸ போன்றவர்கள் என்று கேள்விகள் வரலாம். இவர்கள் தொடர்பில் சஜித்துக்கு நல்லெண்ணம் கிடையாது. கபீர் முஜிபர் மரிக்கார் போன்றவர்களும் இருக்கின்றார்களே என்று கேட்கலாம். இனம் என்று வரும் போது கட்சியில் இவர்கள் எந்தளவுக்குச் செல்வாக்குச் செலுத்த முடியும் என்பதற்கு இம்டியாஸ் பாக்கர் மாக்கார் நல்ல உதாரணம்.
இனவாதம் என்ற ஒன்று இல்லாவிட்டால் கட்சியில் தலைமைப் பதவிக்கு இம்டியாஸ் என்றோ வந்திருக்க வேண்டும். ரணில் சஜித் என்போர் வாரிசு அரசியல்வாதிகளே. மேலும் கடுமையான காயங்களுடன் இந்தக் கூட்டணி வருகின்றது என்று வைத்துக் கொண்டால் ஏனைய பதவிகள் அதன் செயற்குழுக்கள் அமைக்கின்ற போது கட்சிகளின் பங்கு செல்வாக்கு என்ன.?
நமது அரசியல் நியாயத்தின்படி அதில் ஒரு பத்து (10) சதவீத பங்கைகூட ஐதேக. வுக்கு வழங்குவது மிகப்பட்;ட தொகையாகவே நாம் பார்க்கிறோம். இன்றுள்ள அரசியல் செல்வாக்கைப் பொறுத்தவரை ஒரு இரண்டு இலட்சம் ஆதரவாளர்கள் கூட இந்த ஐதேக. வுக்குக் கிடையாது என்ற கணக்குப்படிதான் நமது இந்த ஒதுக்கீடு.
எதிரணி என்று பார்க்கின்ற போது ஐமச அணிதான் மிகப் பெரிய காட்சி. ஆனால் அந்தக் கட்சியில் இருக்கின்ற அரசியல்வாதிகளை ஒப்பீடு செய்து பார்க்கின்ற போது அவர்கள் ரணில் அணியில் இருக்கின்ற முக்கியஸ்தர்களைவிட மிகவும் பலயீனமானவர்கள் ஜூனியர்கள்.
ரணில் கைதுடன் பெரிய எதிர்பார்ப்புடன் ஒன்று சேர்ந்த எதிர்க் கட்சிகள் இப்போது பொதுக் கூட்டணி பற்றிப் பேசுவதில்லை. இன்னும் சில முக்கியஸ்தர்கள் இது அரசின் அடக்கு முறைக்கு எதிரான கூட்டணி மட்டுமே இதனைத் தேர்ல்தலுக்கான ஒரு கூட்டணியாக எவரும் எடுத்துக் கொள்ள கூடாது என்றும் கருத்துத் தெரிவித்து வருகின்றார்கள்.
எதிர்வரும் நாட்களில் இன்னும் பலர் ஊழல் மோசடிகள் தொடர்ப்பில் கைது செய்யப்படுவார்கள். அப்போது இந்தக் கூட்டணி என்ன செய்யப் போகின்றது என்பதனை அப்போதுதான் பார்க்க வேண்டும்.
இதற்கிடையில் சஜித்தும் அவரது கட்சியினரும் ஐக்கிய தேசியக் கட்சியில் வந்து அங்கத்துவத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். அவர்கள் மீதான அனைத்துத் தடைகளும் விலக்கிக்கொள்ளப்படும் என்று ரணில் தரப்பில் சொல்லப்பட்டது. இந்தக் கதைக்கு கடுப்பாகிய சஜித் அப்படி எங்களுக்கு அவர்களுடன் போய் இணைந்து கொள்ள வேண்டும் என்ற எந்தத் தேவையும் கிடையாது.
வேண்டுமானால் அவர்கள் எமது தலைமையை ஏற்று இங்கு வந்து அரசியல் செய்ய முடியும் என்று பதில் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இந்தக் கடுமையான பதிலைத் தொடர்ந்துதான் ஐக்கிய தேசியக் கட்சி ஆறாம் திகதி நடத்த இருந்த கூட்டமும் தள்ளிப் போய் இருக்கின்றது என்றும் ஒரு தகவல்.
மஹிந்தவுக்காக உதவுங்கள்!
மொட்டுக் கட்சி தாம் ரணில்-சஜித் அரசியல் கூட்டணியில் ஒருபோதும் இணைந்து கொள்ள போவதில்லை என்று ஏற்கெனவே கூறிவிட்டது. ஆனால் அரசின் அடக்கு முறைக்கு எதிரான ஒரு பொதுக் கூட்டணி நாட்டில் இருக்க வேண்டும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.
மொட்டுக் கட்சியினர் மீண்டும் விகாரைகளுக்குப் போய் தமக்கான ஆதரவைத் திரட்டும் முயற்சியில் இறங்கி வருகின்றனர். ஆனால் முக்கியமாக பல தேரர்கள் அவர்களுக்கு திருப்திகரமான பதில்கள் எதனையும் கொடுக்கவில்லை. சிலர் கண்ணத்தில் அறைவது போல பதில்களைக் கொடுத்திருக்கின்றார்கள் என்றும் தெரிகின்றது.
மேலும் அண்மையில் இந்தோனேசியாவில் கைது செய்து நாட்டுக்கு அழைத்து வரப்பட்டவர்கள் நமக்கு ஆதரவாக இருந்த பிள்ளைகள் என்று கூறி இருக்கின்ற நாமல் அவர்கள் அப்பாவிகள் என்றும் தூய்மைப்படுத்தி இருப்பதுடன், இப்போது அவர்களை வைத்து எம்மையும் சிக்கலில் மாட்டிவிடப்பார்க்கின்றார்கள்.
எனவே நாட்டை மீட்டெடுத்த மஹிந்தாவுக்காக மக்கள் எங்களுக்கு ஆதரவு தர வேண்டும் என்று நாமல் ராஜபக்ஸா பகிரங்கமாக கேட்டிருப்பது பல கோணங்களில் இன்று விமர்சிக்கப்பட்டு வருகின்றது. மேலும் ராஜபக்ஸாக்கள் கைது செய்யப்பட்டிருக்கின்ற பாதாள உலகத்தார் போதை வியாபாரிகளடன் நல்ருறவில் இருந்திருக்கின்றனர் என்று பல தகவல்கள் இப்போது கசிந்து கொண்டிருக்கின்றன.