நஜீப் பின் கபூர்
நன்றி:18.01.2025 ஞாயிறு தினக்குரல்
கட்சிக்குள்ளே சஜிதின் முதுகில் குத்தும் துரோகிகள்!
ஐமச.யை கைப்பற்றும் முயற்சியில் ரணில் தீவிரம்!
கோமாளிக் கதை விடும் ஐதேக. முக்கிய புள்ளிகள்!

ரணில் ஒரு அரசியல் வித்துவான் ஞானி என்றெல்லாம் நமது அரசியல்வாதிகள் பேசி இருந்ததை நாம் கடந்த காலங்களில் பார்த்திருந்தோம். இப்படி ரணிலை உச்சியில் வைக்க அந்த அரசியல் தலைவர்களுக்கு சில தேவைகள் தன்னல நியாயங்கள் இருந்தன. இன்றும் இருக்கின்றன. அவை பற்றியும் நாம் அந்த சந்தர்ப்பங்களில் எமது வாசகர்களுடன் பேசி வந்திருக்கின்றோம்.
இப்போது ஆளும் என்பிபி. அரசுக்கும் ஒட்டுமொத்த எதிரணிகளுக்கும் ரணிலை கோட்பாதர் அல்லது வித்துவானாக்கும் ஒரு விபரீதமான கனவில் ரணிலும் அவரது விசிரிகளும் இருக்கின்றார்கள். இது எப்படிச் சாத்தியம்.? இதற்கான பின்னணிகள் தேவைகள் என்ன என்பதை குடிமக்களுக்கு விளக்குவதுதான் இந்த கட்டுரையின் நோக்கமாகும்.
அனுர அதிகாரத்துக்கு வந்த நாள் முதல் என்பிபி. ஆதிக்கம் நாட்டில் மேலோங்கியது. இதனைத் தொடர்ந்து நாட்டில் இதுவரை பதவியில் இருந்த கட்சிகள் தலைமைகள் என்பன இப்போது பல்லிழந்த சிங்கங்களாக அரசியல் களத்தில் நிற்கின்றன. கடைசியாக ஜனாதிபதி பதவியில் இருந்த ரணில் ராஜபக்ஸாக்களின் முகவராக-ஏஜெண்டாகத்தான் அதிகாரத்துக்குக் கொண்டுவரப்பட்டார்.
அவருக்குத் தேவையான நாடாளுமன்றப் பெரும்பான்மையையும் ராஜபக்ஸாக்களே கொடுத்துக் கொண்டிருந்தனர். அரகலயாவுக்குப் பின்னர் ராஜபக்ஸாக்களின் செல்வாக்கு சீட்டுக்கட்டையாக சரிந்தது. ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களைத் தொடர்ந்து குடிகளின் ஆதரவு 1.அனுர 2.சஜித் 3.நாமல் என்ற வரிசையில்தான் இன்று இருக்கின்றது.
இந்தப் பின்னணியில் அனுர தலைமையிலான அரசுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை 159 ஆசனங்கள். ஒட்டுமொத்த எதிரணிக்கு 66 ஆசனங்கள். எதிரணியில் மிகப் பெரிய கட்சியாக சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி இருக்கின்றது. அவர்களுக்கு 40 வரையிலான ஆசனங்கள். என்றாலும் அவர்கள் பொதுத் தேர்தலில் ஒரு கூட்டணியாக களமிறங்கியதால் பல கட்சி-குழுக்கள் உறுப்பினர் அங்கு இருக்கின்றார்கள்.
அடுத்து நாடாளுமன்றத்தில் தமிழ் தரப்புக்கள். அவற்றில் தமிழரசு முன்னணியில் இருந்தாலும் தமிழ் பிரதிநிதித்துவம் என்று பார்க்கும் போது பல குழுக்கள் பிரதிநிதிகள். இவற்றில் தமிழர்களின் இனப்பிரச்சினை என்று வரும் போது முரண்பாடான சிந்தனைகள் கருத்து மோதல்கள். முஸ்லிம் பிரதிநிதித்துவம் என்று வரும் போது அதிகமான மக்கள் பிரதிநிதித்துவம் இன்று NPP. தரப்பில். மலையக பிரதிநிதித்துவமும் ஏறக்குறைய அப்படித்தான்.

பொதுவாக தேசிய பிரச்சனைகள் இன ரீதியான பிரச்சினைகள் என்று வரும் போது நாடாளுமன்றத்தில் இருக்கின்ற எதிரணியினர் மத்தியில் ஒத்த கருத்துகள் கிடையாது. அங்கு சலசலப்புக்கள். இதற்கு நல்ல உதாரணம்தான் மலையக மக்களின் சம்பள அதிகரிப்புத் தொடர்பான கருத்து முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டலாம். செல்வாக்கான மு.கா.நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் தேர்தல் காலங்களில் அனுரவையும் NPP.யை எப்படி எல்லாம் கடுமையாக விமர்சித்தார் என்பது தெரிந்ததே.
முஸ்லிம்களுக்கு நோன்பு கிடையாது பெருநாள் கிடையாது கலாச்சாரப் பாரம்பரியங்களுக்கும் அழிவுதான் என்று சொன்ன கலாநிதி ஹிஸ்புல்லாஹ் அனுர ஜனாதிபதியானதும் நாங்கள் என்றைக்கும் ஜனாதிபதி கட்சியில் இருந்துதான் அரசியல் செய்து வந்திருக்கின்றோம்.
இப்போதும் அப்படித்தான் என்று பல்டியடித்தார். எனவே ஒட்டு மொத்த சிறுபான்மைக் கட்சிகளும் எதிரணியில் இருந்தாலும் அவர்களிடையே முரண்பாடான அரசியல் உணர்வுகள்தான் இருக்கின்றன என்பது இதிலிருந்து தெரிய வருகின்றது.
இப்போது எதிரணியில் இருக்கின்ற அரசியல் கட்சிகளிடையே பல குழுக்கள் இருக்கின்றன. அதே போன்று அதன் தலைவர்கள் தொடர்பிலும் கட்சிக்குள்ளே மாறுபாடான சிந்தனை உள்ளவர்கள் இருக்கின்றார்கள். இனரீதியான தனிப்பட்ட நோக்கங்களை உடையோர்தான் இந்த எதிரணியில் இருக்கின்றார்கள்.
எனவே ஒட்டுமொத்தமாக ஆய்வு செய்து பார்க்கும் போது இந்த அனைத்து எதிரணியினரையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவருவது என்பது சிக்கலான ஒரு பணி. இப்போது எதிரணியில் தலைமைத்துவத்தில் இருக்கின்ற முக்கியஸ்தர்களை சற்றுப்பார்ப்போம். சஜித்தான் எதிரணியில் இருக்கின்ற செல்வாக்கான மனிதன்.
இவருக்கான அங்கிகாரம் என்பது வலதுசாரிப்போக்குள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணிலுக்கான நிராகரிப்புத்தான். அவர் அரசியல் ரீதியில் சிந்தனையாளர் என்பது கிடையாது. வாரிசு ரீதியில் அதிகாரத்துக்கு வந்த ஒரு அரசியல்வாதிதான் அவர்.

எப்படி இருந்தாலும் நிராகரிக்கப்பட்ட ரணிலுடன் சஜித்தை சமப்படுத்துவது ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த ரணில் கூட வாரிசு அரசியலால் ஐதேக. தலைமையைக் கைப்பற்றியவர்தான்.
ஜேஆர். ஜெயவர்தன மருமகன் என்பதுதான் இவர் அந்தப்பதவியைப் பெற்றுக் கொள்ள அவருக்கு இருந்த தகைமை. ரணிலும் தனக்குப் பின்னர் தனது மைத்துனர் ருவன் விஜேவர்தனதான் இந்தக் கட்சிக்குத் தலைமை தாங்க வேண்டும் என்று அதற்கான பின்னணியை உருவாக்கி வந்தார்.
அதனால்தான் அவருக்கு ஐதேக.வில் பிரதித் தலைமை கொடுக்கப்பட்டது. இதனால்தான் சஜித்தைக் கொச்சைப்படுத்தி ரணிலை மிகைப்படுத்தி காண்பிக்கும் ஒரு செயல் நமது அரசியலில் நடந்து கொண்டிருக்கின்றது.
இது மக்கள் விருப்புக்கு மாறான ஒரு செயலாகும். ஐதேக-ஐமச இணைவு விவகாரத்தில் மிகவும் அக்கறை காட்டுக்கின்ற தரப்பினர் தனி நபர்கள் என்று பார்க்கும் போது அவர்கள் அனைவரும் ஒட்டுமொத்த ரணில் விசிரிகள்-ஆதரவாலர்கள்.
நாடாளுமன்றத்தில் தனித்துப் போட்டியிட்டு ஒரு ஆசனத்தையேனும் வெற்றி கொள்ள முடியாத ஒரு கட்சியை அல்லது அதனை தலைவரை தமது அரசியல் கோட்பாதராக எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.
மேலும் எதிரணியை பலப்படுத்த ரணிலை சேர்த்துக் கொள்ளுங்கள் என்று சஜித்தை கேட்கும் ஐதேக. விசிரிகள் அதே நேரம் இந்த என்பிபி அரசை தொடர்ந்து பாதுகாக்க வேண்டுமாக இருந்தால் அனுர ரணிலையும் ஆட்சியில் பங்காளியாக சேர்த்துக் கொண்டு அவர் ஆலோசனையைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இந்தக் கருத்தை ஐதேக. செயலாளர் தலதாவே முன்வைத்திருந்தார். இது என்ன முரண்பாடு.

இதிலிருந்து ரணில் என்ற நிராகரிக்கப்பட்ட மனிதன் எதிரணிக்குள் நுழைந்து கொள்ள முனைகின்ற அதே நேரம் ஆளும் தரப்புக்குள்ளேயும் புகுந்து கொண்டு அங்கும் அதிகாரம் செலுத்த முனைவதும் தெளிவாகின்றது.
ரணிலை விட அவரது சில முக்கிய புள்ளிகளுக்கு பதவிகள் தேவைப்படுகின்றது. அதனால் ரணிலின் முதுகில் ஏறி இவர்கள் அரசியல் அதிகாரங்களைக் கைப்பற்றும் ஒரு முயற்சியாகத்தான் அரசில் இணைவதும் ஐதேக-ஐமச இணைவுக்கான அடிப்படை.
இந்த ரணில்-சஜித் அல்லது ஐமச-ஐதேக இணைவு பற்றிய நாம் நிறையவே இதற்கு முன்னரும் குறிப்புக்களைச் சொல்லி வந்திருக்கின்றோம். ஒரு ஆசனத்தை வைத்துக் கொண்டு ரணில் ஜனாதிபதியானதை முன்னுதாரணமாகக் கொண்டுதான் இந்த வண்ணக்கனவையும் அவரது கையாட்கள் காண்கின்றார்கள்.
அதனால்தான் ரணிலை மீண்டும் நாடாளுமன்றத்துக்குக் கொண்டுவரும் ஒரு கதையும் இங்கு வருகின்றது. சமகால அரசியலில் இது எந்தளவு சாத்தியம்.? அதற்கான எந்த அடிப்படை நியதிகளும் இங்கு கிடையாது. ஆனால் ஒருவருக்கு கனவு காணும் உரிமையை எவரும் மறுக்க முடியாது.
எதிரணியில் இருக்கின்ற அரசியல் தலைவர்கள் குறிப்பாக சஜித் நாமல் ரணில் போன்றவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றும் எதிர்பார்ப்பில்தான் இருக்கின்றார்கள். இது ஒரு கானல் நீர் அல்லது இலவுகாக்கின்ற கிளிபார்த்த தொழில் போலத்தான் நமக்குத் தெரிகின்றது.
மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலமுள்ள ஒரு அரசு அதிகாரத்தில் இருக்கும் போது பொறுப்புள்ள எதிர்க் கட்சிகளாக இருந்தால் இவர்கள் அனைவரும் மக்களுக்கான ஒரு பொது வேலைத் திட்டத்தின் கீழ் ஒன்றிணைவதுதான் ஏற்புடையதாக இருக்கும்.
ஆனால் இவர்கள் அடுத்த ஜனாதிபதி என்ற கற்பனையில்தான் தமது அரசியலை நகர்த்திக் கொண்டு வருகின்றார்கள். இந்த NPP அரசு அரசியல் யாப்புத்திருத்தத்தில் நடாளுமன்றத்துக்கு அதிகாரங்களைக் கையளிக்கின்ற ஒரு யாப்புக்கான அங்கிகாரத்தைப் பெற்றுக் கொள்ளுமாக இருந்தால் இவர்களின் ஜனாதிபதிக் கனவு என்னவாகும்.!
SJB-UNP இணைக்கும் முயற்சி சஜித்துக்கு எதிரான ஒரு சதியாகத்தான் நாம் பார்க்கின்றோம். சஜித் அணியில் குறிப்பாக அவரது சொந்தக் கட்சிக்குள்ளேயே இருக்கின்றார்கள். இதில் கனிசமான ஒரு தொகையினர் சஜித்துடன் நெருக்கமாக இருந்து அவர் முதுகில் குத்துபவர்கள். இவர்களை சஜித் நன்கு அறிந்துதான் வைத்திருக்கின்றார்.
அதனால்தான் இணைவு பற்றி பேச்சுவார்த்தைகளை அவரே நேரடியாக கையில் வைத்துக் கொண்டிருக்கின்றார். கபீர் – ஹர்ச ஏன் செயலாளர் மத்தும பண்டார கூட வெளியிடும் கருத்துக்கள் சஜித்துக்கு நேரடியாக குழிபறிப்பவையாக இருக்கின்றன.
சஜித் கூட்டணியில் இருக்கின்ற முஸ்லிம் மலையக அரசியல் கட்சிகள் தமது தன்னல அரசியல் பிரதிநிதித்துவங்களை மையமாக வைத்தே இந்தக் கூட்டணியில் இணைந்து இன்று அவர்களின் இலக்கை அடைந்து விட்டார்கள்.
தற்போதய அரசியல் பின்னணியில் உடனடியாக அரசியல் மாற்றங்களுக்கு வாய்ப்புக்கள் இல்லை என்பதால் இவர்கள் அடக்கி வாசிக்கின்றார்கள். தமக்குத் தேவைப்படுகின்ற போது ஜனாதிபதி அனுரவுடன் இணங்கிப்போகும் மன நிலையில்தான் இந்த சிறுபான்மைத் தலைவர்கள் இருந்து வருகின்றார்கள்.

இதனால் எதிரணி நடாத்துகின்ற போராட்டங்களில் இவர்கள் தள்ளி நின்று வேடிக்கை பார்க்கின்ற நிலையில்தான் இயங்கி வருகின்றார்கள்.
அதே நேரம் தாம் ஒரு ஜனாதிபதித் தேர்தலுக்கு முகம் கொடுக்கும் போது தமக்கு இவர்களின் ஆதரவு தேவை என்பதால் எதிரணித் தலைவர்கள் குறிப்பாக சஜித் அவர்களின் பச்சோந்தி தனத்தைக் கண்டு கொள்ளாமல் இருந்து வருகின்றார்.
பேரினக் கட்சித் தலைவர்களுக்கு ஜனாதிபதிக் கனவும் சிறுபான்மை கட்சித் தலைமைகளுக்கு நடாளுமன்ற பிரதிநிதித்துவமும் மற்றும் அமைச்சுக்களுமே பிரதான எதிர்பார்ப்புக்களாக இருந்து வருகின்றன.
இதனால்தான் இந்த அரசியல் வியாபாரம் முரண்பாடுகளின்றி சுமுகமாக நகர்கின்றது. ஆனால் இது முதிர்ச்சியும் தேசிய நலன்களுமற்ற ஒரு சந்தர்ப்பவாத அரசியல் வியூகம் என்றுதான் இதனைக் குறிப்பிட விரும்புகின்றோம்.
இப்படி அரசியல் கட்சிகள் தமது தன்னல நோக்கங்களுக்காக செய்து கொண்டுவரும் ஏமாற்று வேலைகளை சராசரி மக்களும் பாமர மக்களும் கண்டு கொள்ள மாட்டார்கள் அல்லது அவர்களுக்கு அவை பற்றிய தெளிவுகள் இல்லாமல் இருக்கும்.
ரணில் சஜித் இணைவு பற்றிய கதைகளையும் செய்திகளையும் ஒரு முறை எண்ணிப்பாருங்கள்.! இணைவு இன்று நாளை. எல்லாம் ஓகோ என்று சொல்லிக் கொண்டிருக்கும் அதே நேரம் ரணில் அரசு தரப்புக்கு ஆலோசனை கொடுத்து அதனையும் பாதுகாக்கின்ற செய்திகளையும் ஐதேக. முக்கியஸ்தர்களே பேசி வருகின்றார்கள்.
இந்த முரண்பாடுகள் பற்றி பொது மக்கள் எந்தளவுக்கு சிந்திக்கின்றார்கள்? அடுத்து சஜித் தலைமைத்துவத்துக்கு பொருத்தமில்லாத ஒரு மனிதன் என்று ஐதேக. முக்கியஸ்தர்கள் பகிரங்கமாக பேசி எதற்காக அவரைக் கொச்சைப்படுத்த வேண்டும்.
இதில் ஏதோ வஞ்கம் இருக்கின்றது.? இவை பற்றிய செய்திகளைச் சொல்கின்றவர்களும் ஊடகங்களும் எதற்காக அப்பட்டமான இணைப்புப் பற்றிய பொய்களை மக்களுக்கு சொல்ல வேண்டும். எனவே SJB-UNP இணைவு பற்றிய கதைகளில் குடிமக்கள் பெரிய நம்பிக்கைகளை வைத்துக் கொள்ள வேண்டாம். இது அப்பட்டமான ஏமாற்று நாடகம். ஒரு அரசியல் சதியும் கூட.
அதற்காக சஜித்தும் ரணிலும் இணையக் கூடாது என்பது அர்த்தமல்ல. ஆனால் குடிமக்ககுக்கு அல்லது அப்பாவி கட்சி ஆதரவாலர்களை ஏமாற்றுக்கின்ற போலியான பிரச்சார நடவடிக்கைகள்தான் இவை.
அந்தரங்க அரசியலில் SJB-UNP ஐதேக இணைவு வாய்ப்புகள் மிக மிகக் குறைவு. இது சஜித் மீது ஒரு அரசியல் வெறுப்பை ஏற்படுத்தும் பரப்புரை என்றும் நாம் எடுத்துக் கொள்ள முடியும்.! ரணிலுடன் இணைய ஆர்வம் காட்டும் தமது சகாக்கள் விவகாரத்தில் சஜித் மிகுந்த எச்சரிகையுடன் இருக்க வேண்டும்.
இந்த இணைவுக்கதைகள் அப்படி இருக்க இந்த நாட்களில் மொட்டுக் கட்சியை ஜனரஞ்சகப்படுத்துகின்ற ஒரு முயற்சியில் நாமலும் அவரது சகாக்களும் இறங்கி இருக்கின்றார்கள். இதில் ஒரு சிறிய முன்னேற்றம் ஏற்பட்டு வருவது போலத் தெரிகின்றது.
அடுத்து வருகின்ற மாகாணசபைத் தேர்தலில் ஒரு முன்னேற்றதைக் காட்டுவதுதான் இவர்களின் பிரதான இலக்காக இருக்கின்றது. அதன் பின்னர் ஜனாதிபதித் தேர்தல் வருமாக இருந்தால் நிலமையைச் சரி செய்து கொள்ளலாம் என்பது அவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
இதற்கிடையில் ரணிலை மீண்டும் பொது வேட்பாளராக்கின்ற ஒரு ஏற்பாடும் நடந்து கொண்டு வருகின்றது. நான் அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்கின்றேன் என்று சொன்ன ரணில் சில மணிநேரம் கழிந்து உடல் ரீதியாக நான் மிகவும் நல்ல நிலையில்தான் இருக்கின்றேன். என்னால் மீண்டும் நாட்டைப் பொறுப்பேற்று சிறப்பாக வழிநடாத்த முடியும் என்றும் சில தினங்களுக்கு முன்னர் சொல்லி இருந்தது நினைவில் இருக்கலாம்.
இவை எல்லாம் எதனைக் காட்டுகின்றன என்று கேட்கத் தோன்றுகின்றது. NPP அரசுடன் ரணிலையும் இணைத்துக் கொள்ளுமாறு ரணில் தரப்பினர் விடுக்கின்ற வேண்டுகோளை அனுர தரப்பினர் ஒரு நகைச்சுவையாகத்தான் பார்க்கின்றார்கள்.





