ரஜினிகாந்த் பிறந்தநாள்

ச. ஆனந்த பிரியாதாரம்

இன்று (டிசம்பர் 12) தமிழ்த் திரையுலகின் ‘சூப்பர் ஸ்டார்’ என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்த்தின் 72வது பிறந்தநாள். பெங்களூருவில் நடத்துநராக தன் வாழ்க்கையை தொடங்கியவர் இன்று தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம். ரஜினி விரும்பி நடித்த கதாப்பாத்திரம் முதல் அவர் கடைசி என அறிவித்த படம் முதல் அவரது சினிமா வாழ்க்கை குறித்தான சில சுவாரஸ்யமான தகவல்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

  • தனது முதல் திரைப்படமான ‘அபூர்வராகங்கள்’ படத்தில் எதிர்மறையான கதாப்பாத்திரத்தில்தான் அறிமுகமானார் ரஜினிகாந்த். அந்த படத்தில் தொடங்கி ‘சுதா சங்கமா’, ‘காயத்ரி’, ‘மூன்று முடிச்சு’, ’16 வயதினிலே’, ‘எந்திரன்’ உள்ளிட்ட பல படங்களில் வில்லனாகவும் முத்திரை பதித்துள்ளார்.
  • நடிகராக மட்டுமே அறியப்பட்ட ரஜினிகாந்த்தின் அதிகம் அறியப்படாத இன்னொரு முகம் பாடகர் முகம். 1993 ஆம் ஆண்டு வெளியான ‘மன்னன்’ படத்தில் ‘அடிக்குது குளிரு’, 2013-ல் வெளியான ‘கோச்சடையான்’-ல் ‘எதிரிகள் இல்லை’ ஆகிய பாடல்களை பாடியுள்ளார்.
  • நடிகர் ரஜினிகாந்திற்கு ‘சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டம் ‘பைரவி’ திரைப்படத்தில்தான் கிடைத்தது. இந்த பட்டத்தை அவருக்கு வழங்கியவர் தயாரிப்பாளர் ‘கலைப்புலி’ எஸ். தாணு. ‘நான் போட்ட சவால்’ என்ற திரைப்படத்தில் இருந்துதான் இந்த பட்டம் அடுத்தடுத்த படங்களுக்கு தொடர்ச்சியாக பயன்படுத்தப்பட்டது. அதேபோல, நியான் சிவப்பு புள்ளிகளோடு ‘சூப்பர் ஸ்டார்’ டைட்டில் பயன்படுத்த ஆரம்பித்தது ‘அண்ணாமலை’ படத்தில்தான்.
  • ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் ‘இந்தியன்’. முதலில் இந்த கதையில் நஜினி நடிப்பதாகதான் இருந்தது. ஆனால், சில காரணங்களால் அது நடக்காமல் போக பின்பு கதையில் கமல்ஹாசன் நடிக்க ஒப்பந்தமானார். இதில் ‘இந்தியன்’ தாத்தாவின் தலை கோதும் விதம் எல்லாம் ரஜினியை மனதில் வைத்தே உருவாக்கியதாகவும் அதையே கமல் செய்து காட்டிய போது அது வேறு விதமான ஸ்டைல் ஆக வந்ததாகவும் இயக்குநர் ஷங்கர் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.
  • ‘இந்தியன்’ போலவே, கமலுக்காக எழுதி அதில் ரஜினி நடிக்க நேரிட்ட திரைப்படம் ‘எந்திரன்’. ரஜினியின் சினிமா வாழ்க்கையில் அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட நாட்கள் கழித்து ஹீரோ, வில்லன், ‘ரோபோ’ கதாப்பாத்திரம் என மூன்று விதமான கதாப்பாத்திரங்களை இந்த படத்தில் கையாண்டிருப்பார் ரஜினி.

லாதாநடிகர் கதாப்பாத்திரத்தில் ரஜினி நடித்த படங்கள் என்றால் அதில் ‘அன்புள்ள ரஜினிகாந்த்’, ‘குசேலன்’ படங்களை குறிப்பிடலாம். இதில் ரஜினிகாந்த் பெயரிலேயே ‘அன்புள்ள ரஜினிகாந்த்’ வெளியானது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

  • ரஜினிகாந்த் திரைக்கதை எழுதிய திரைப்படம் ‘வள்ளி’. அதில் முதலில் அவர் நடிப்பதாகவே இல்லை. ஆனால், அந்த படத்தை இயக்கிய நட்ராஜ், படத்தின் பங்குதாரர்கள் என அனைவருமே ரஜினியின் ஆரம்ப கால நெருங்கிய நண்பர்கள். அவர்களது வேண்டுகோளுக்கேற்ப அந்த படத்தில் நடித்தார் ரஜினி.
  • ரஜினிகாந்த் நடிக்க வேண்டும் என விரும்பி ஏற்ற கதாப்பாத்திரம் ஸ்ரீராகவேந்தருடையது. தீவிர ராகவேந்தர் பக்தரான ரஜினிகாந்த், 25வது படம் நடிக்கும்போதே தன்னுடைய 100வது படமாக ‘ஸ்ரீராகவேந்திரா’ இருக்க வேண்டும் என விரும்பி கவிதாலயா தயாரிப்பில் மகேந்திரன் இயக்கத்தில் அதில் நடித்தார். ஆனால், மகேந்திரன் கணித்தது போலவே படம் எதிர்ப்பார்த்த வரவேற்பை பெறாமல் போக ரஜினிக்கு அதில் வருத்தம். இதனால் சிறிது காலம் ராகவேந்திரா கோவிலுக்கு செல்லாமல் இருந்தவர், இது குறித்து தனது நெருங்கிய நண்பரான நடிகர் ராஜ் பகதூரிடம் பகிர்ந்து கொள்ள ஆறுதல் சொன்னவர், தனக்கும் இதுபோல நேர்ந்ததாகவும் சில காலம் கழித்து படம் வரவேற்பை பெற்றத்தை சொன்னதுமே பின்பு சமாதானம் அடைந்தார்.
  • 1999-ல் ‘படையப்பா’ படத்திற்கு பிறகு சில வருடங்கள் கழித்து ரஜினி நடித்த படம் ‘பாபா’. அது ஆன்மிகத்தில் ரஜினி தீவிரமாக ஈடுபட்டிருந்த சமயம். தனது கடைசி படமாகவும் அப்போது ‘பாபா’வை அறிவித்து இருந்தார். ஆனால், படம் பல அரசியல் பிரச்சனைகளை தாண்டி வெளியாகியும் எதிர்ப்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
  • ரஜினி படங்கள் மற்ற மொழிகளில் டப் செய்யப்படும்போது அங்கு ரஜினியின் குரலாக பெரும்பாலும் இருந்தவர் பாடகர் எஸ்.பி.பிதான். அதேபோல அவரது அறிமுக பாடல்களில் அந்த உற்சாகத்தை தக்க வைப்பது எஸ்.பி.பிதான். ரஜினி ரசிகர்களால் பெரிதாக கொண்டாடப்படும் இந்த இணை இடையில் சில காலங்களில் விடுபட்டு மீண்டும் ‘தர்பார்’ படத்தில் இணைந்தது. இதில் எஸ்.பி.பி. தன்னுடைய கடைசி பாடலை ரஜினியின் அறிமுக பாடலாக ‘அண்ணாத்த’ படத்திற்குதான் பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
  • ரஜினியின் 168-வது படமாக ‘அண்ணாத்த’ இந்த வருடம் தீபாவளிக்கு வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதற்கடுத்து மீண்டும் சிவா இயக்கத்தில் நடிப்பார், பாண்டிராஜ், தேசிங்கு பெரியசாமி என பல இயக்குனர்களது பெயர்கள் அடிபட்டாலும் இன்னும் அது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
  • இது குறித்தும், ரஜினியின் பிறந்தநாள் திட்டம் என்ன என்பது குறித்து அறிந்து கொள்ள அவரது மக்கள் தொடர்பாளர் ரியாஸிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம், ” ரஜினி அவரது பிறந்தநாளை இந்த ஆண்டும் வழக்கம் போலதான் கொண்டாட திட்டம். மற்றபடி பட அறிவிப்புகள் எதும் உண்டா என்பது பிறகுதான் தெரிய வரும். அதேபோல, ரசிகர்கள் சென்னையின் ஆல்பர்ட், கிருஷ்ணவேணி போன்ற திரையரங்குகளில் ‘பாட்ஷா’ உள்ளிட்ட திரைப்படங்களை வெளியிட திட்டமிட்டு கொண்டாட்டத்திற்கு திட்டமிட்டுள்ளார்கள்” என்கிறார்.

 

Previous Story

அமெரிக்கா சூறாவளி : பலி  120

Next Story

ரஷ்ய-இந்திய நெருக்கம் சர்வதேச சமநிலையைப் பாதிக்குமா?