யுத்த களமான தேசத்தில் அரசு-கூட்டமைப்பு நடாத்தும் நகைச்சுவை நாடகங்கள்!!

-நஜீப் பின் கபூர்-

பூனைக்கு மணி கட்டுவது யார் என்ற தலைப்பில் இலங்கையில் ஆட்சியாளருக்கு எதிரான போராட்டங்கள் பற்றி நாம் கடந்த வாரம் எச்சரித்திருந்ததுடன், அது பற்றிய பல தகவல்களையும் சொல்லி இருந்தோம். ஒரு வாரம் நிறைவடைவதற்கு முன்னரே மக்கள் ஜனாதிபதியின் வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டங்களில் இறங்கி தமது எதிர்ப்பைக் காட்டி இருக்கின்றனர்.

தாங்க முடியாத பொருளாதார சுமையால் அல்லல் படுகின்ற மக்கள் வேறுவழியின்றி தற்போது தமது உயிர்களையும் துச்சமாக மதித்து போராட்ட களத்தில் இறங்கி வருவதை கடந்த வியாழன் இரவு நடந்த சம்பவங்கள் நமக்கு காட்சிப் படுத்தி இருக்கின்றன.

இந்தப் போரட்டங்களை மக்கள் சுயமாகவே முன்வந்து நடாத்தி வருவதாகத்தான் தெரிகின்றது. அந்தப் போராட்டத்தில் தாய் ஒருவர் கையில்  கைக்குழந்தை ஒன்றையும் மறுகையில் பதாகை ஒன்றையும் ஏந்திக் கொண்டிருந்தது மிகவும் நெகிழச்சி மிக்க சம்பவமாக இருந்தது.

எனவே எதிர் வரும் நாட்களில்  மக்கள் தமது எதிர்ப்புக்களை மேலும் தீவிரப்படுத்தலாம் என்று எதிர்பார்க்க முடியும். மக்கள் பல்லாயிரக் கணக்கில் ஒன்று கூடி ஜனாதிபதியின் மிரிஹானை வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வேலை, ஜனாதிபதி அங்கிருந்து முன்கூட்டியே வெளியேறி விட்டதகாவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி அங்கிருந்த படையினருக்கு எக்காரணம் கொண்டும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாகிப் பிரயோகம் பண்ணக் கூடாது என்று கண்டிப்பாக உயர் அதிகாரிகளிடத்தில் கட்டளை பிறப்பித்ததாகவும் ஒரு தகவல் தெரிவிக்கின்றன.

அப்படி ஏதும் நடந்தால் மேலும் நிலமை சிக்கலாகி நாட்டில் பெரும் கலவரம் வெடிக்கலாம் என்ற அச்சம் ராஜபக்ஸாக்களிடத்தில் இருக்கின்றது. இதனால்தான் படையினர் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருக்கின்றது. என்றாலும் பலர் பொலிசாரின் தாக்குதல்களுக்கு இலக்காகி வைதியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிகின்றது.

அரசுக்கு எதிரான மக்கள் போராட்டங்களை அரசியல் கட்சிகளும் ஏற்பாடு செய்கின்ற கதைகள் பல இடங்களில் பகிரங்கமாக உச்சரிக்கபட்டு வருகின்றது. எனவே இந்த வருடப் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் எல்லாம் வீதிப் போராட்டங்களாக மாறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகத்தான் தோன்றுகின்றது. புத்தாண்டு மாதப் பிறப்பே போரட்டத்துடன் துவங்கி இருக்கின்றது. அரசு தற்போது கொழும்பிலும் அதனைச் சுற்றிய இடங்களிலும் ஊரடங்குச் சட்டத்தை பிறப்பித்திருக்கின்றது.

அதே நேரம் அதிகாரத்தில் இருக்கின்ற பலர் உடனடியாக பாதுகாப்பு தரப்பினர்களுடன் தொடர்பு கொண்டு தமது பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளும் முயற்ச்சிகளில்  இறங்கிய சம்பவங்கள் பல இடங்களில்  நடந்ததாகவும் தகவல்கள் வருகின்றன. சில ஆளும் தரப்பு முக்கியஸ்தர்களின் மனைவிமார் பிள்ளை குட்டிகளுடன் ஏதாவது வெளி நாடுகளுக்கு இப்போதே தப்பியோடி விடுவோம்.

எதிர்வரும் நாட்களில் நிலமை மேலும் மோசமாகலாம். கணவன்மாரிடம் நச்சரிப்பதாகவும் தகவல். மக்கள் கோபம் தம்மீதும் திரும்பலாம் என்று அவர்கள் அச்சப்படுவதாகவும் தெரிகின்றது. முன்பு ஆளும் தரப்பில் சண்டியர்கள் போல் பேசித் திரிந்த அரசியல்வாதிகள் தற்போது பெட்டிப் பாம்பாக அடங்கி இருக்கின்றார்கள் என்று செய்திகளையும் நாம் கடந்த வாரமே பதிவிட்டிருந்தோம்.

ஞானசாரத் தேரர் மற்றும் ஆனந்த முறுத்தெட்டுவே தேரர்கள் தற்போது தமது சுருதியை மாற்றி வாசிக்கத் துவங்கி இருக்கின்றார்கள். இவர்கள் பயங்கரமான சந்தர்ப்பவாதிகள்.  பண்டரவளை மைதாணம் திறப்பு விழாவுக்குப்போன விளையாட்டுத்துறை அமைச்சர் நமால் ராஜபக்ஸ நகரில் நடந்து கொண்டிருந்த மக்கள் எதிர்ப்புப் போராட்டத்துக்குப் பயந்து விழாவுக்கே போகாது அங்கிருந்து தலைமறைவான கதையும் தெரிந்ததே. மேலும் இதற்குப் பின்வரும் செய்தி நல்ல ஒரு தகவலாக அமைந்து இருக்கின்றது, அதனையும் ஒருமுறை பார்ப்போம்.

பாகிஸ்தானில்; இலங்கையர் ஒருவரை அடித்தக் கொன்றது போல எம்மையும் மக்கள் தெருவில் போட்டு அடித்துக் கொல்லும் ஒரு நிலை வரலாம் என்று ஜகத் குமார என்ற ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் சுட்டிக்காட்டி இருக்கின்றார். இன்று (03.04.2022) மக்களை வீதிக்கு வருமாறு மற்றுமொரு முகநூல் அழைப்பு விடுக்கபட்டிருக்கின்றது.

இது கேலிக்கூத்தா அல்லது மக்களின் உணர்வுபூர்வமான அழைப்பா என்று இன்று மாலைக்குள் தெரிந்து விடும். பேர் ஊர் தெரியாத இந்த அழைப்பு விடயத்தில் மக்கள் அவதானமாக நடந்து கொள்ள வேண்டும் என்று ஜேவிபி தலைவர் அணுரகுமார திசாநாயக்க எச்சரித்திருக்கின்றார். ஆனால் சஜித் தானும் இதில் கலந்து கொள்வதாக அறிவித்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதன் பின்னணியில் ஐக்கிய மக்கள் சக்திதான் இருக்கின்றது போலும்!

நாட்டு நிலமைகள் நாளுக்கு நாள் எவ்வளவு தூரம் மோசமடைந்து வருகின்றது என்பது இலங்கையிலுள்ளவர்கள் அனுபவித்துக் கொண்டும,; உலகத்தார் ஆச்சர்யமாகப் பார்த்துக் கொண்டும் இருக்கின்றார்கள். ஆட்சியாளர்கள் மக்களின் தலைகளில் மண்ணை வாரிப் அள்ளிப் போட்டு விட்டது மட்டுமல்ல அவர்கள் தற்போதும் கூறுகின்ற கதைகள் மக்களிடத்தில் மிகப் பெரிய கோபத்தை ஏற்படுத்தியும் வருகின்றது.

தனக்கு புதிதாக எரி சக்தி அமைச்சுப் பதவி கிடைத்ததும் நெருக்கடிகள் இன்னும் ஒரிரு தினங்களில் அதாவது மார்ச் ஐந்தாம் திகதி தீர்ந்து விடும் என்றார் துறைக்குப் பொறுப்பான அமைச்சர் லொகுகே. ஜனாதிபதி தடையில்லாது மக்களுக்கு மின்சாரத்தையும், எரி பொருளையும், சமையல் எரிவாயுவையும், வழங்க பணிப்புரைகளை வழங்கி இருக்கின்றார் என்றும் அமைச்சர்  காமினி லொகுகே அன்று அறிவித்தார்.

அப்போது மின்வெட்டு 2-3 மணி நேரங்கள்  என்றுதான் இருந்தது. அவர் பதவியேற்ற பின்னர் அது 4-5. 6-7. என்று முடிவில்லாது இன்று  15 மணித்தியாலங்கள் வரை நீண்டு சென்றிருக்கின்றது. எனவே ஜனாதிபதியின் கட்டளைகளும் அமைச்சர்களின் அறிவிப்புக்களும் இந்த நாட்டில் கேலிக் கூத்தாகி இருக்கின்றது. பாலர் வகுப்பொன்றில் இருக்கும் மாணவ தலைவர் கட்டளையளவு கூட நமது நாட்டுத் தலைவர்களின் கட்டளைகள் இப்போது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.

எனவே மக்கள் இன்று எப்படியான கேவலமான வார்த்தைகளில் நாட்டுத் தலைவர்களைத் திட்டக் கொண்டிருக்கின்றார்கள் என்பதனை ஒவ்வொரு வீடுகளிலும் சந்தியிலும் பார்க்க முடிகின்றது. இந்த நாட்டை ஆசியாவின் ஆச்சர்யமான நாடாக மாற்றிக் காட்டுகின்றோம் என்று இவர்கள் பதவிக்கு வந்தார்கள்.

இப்போது உலகிலே கேவலமான-பிச்சைக்கார நாடாக நமது தலைவர்கள் இதனை மாற்றி விட்டிருக்கின்றார்கள். எமக்கு இது பற்றி இப்படியும் ஒரு சந்தேகம் வருகின்றது. இந்த மாற்றத்தைதான் அவர்கள் நமக்கு அன்று வேறுவிதமாக சொல்லி இருந்தார்களோ? இதுதானோ அந்த ஆச்சர்யம் என்றும் தற்போது யோசிக்க வேண்டி இருக்கின்றது.

இந்தியாவிடம் மேலும் 1.2 பில்லியன் டொலர்களையும், பங்களாதேஷிடம் இருந்து மேலும் 250 மில்லியன்கள். அவுஸ்திரேலியாவிலிருந்து 300 மில்லியன் என்று யாரிடமெல்லாம் கை நீட்ட முடியுமோ அவர்களிடம் கடன்களைக் கேட்டு நிற்கின்றது நாடு. இப்போது நான் உலகம் பூராவிலும் டொலர் பிச்சை கேட்கின்ற ஒரு ஆளாக மாறி இருக்கின்றேன் என்று ஜனாதிபதி ஜீ.ஆர்.சில நாட்களுக்கு முன்னர் பேசி இருந்தார்.

இதற்கு முன்னர் நம்மிடம் பணம் இல்லை என்று யார் சொன்னது? எமக்கு வேண்டிய அளவு காசு கைவசம் இருக்கின்றது என்று சொல்லித் திரிந்த அமைச்சர் ஜொன்ஸ்டன்,  நாமல், மற்றும் மஹிந்தானந்த போன்றவர்கள் இப்போது கடன் வாங்கியாவது நாம் மக்களைப் பசியில் போடாமல் பாதுகாப்போம் என்று புதுக் கதை சொல்ல ஆரம்பித்திருக்கின்றார் அமைச்சர் ஜென்ஸ்டன். யார் இல்லை என்று சொன்னாலும் நாடு வங்குரோத்து நிலையில்தான் இருக்கின்றது என்பது முழு உலகமும் அறிந்த கதை.

இன்றும் கொரோனாதான் நமது நெருக்கடி நிலைக்கு மூலகாரணம் என்று ஜனாதிபதி கொழும்பில் நடந்த ஒரு மாநாட்டில் மீண்டும் பேசி இருக்கின்றார். அதே மாநாட்டில் நாம் கொரோனாவுக்கு மத்தியில் 6.7சதவீத பொருளாதார வளர்ச்சியை அடைந்திருக்கின்றோம் என்று பங்களாதேஷப் பிரதமர் சேக் ஹசீனா கண்ணத்தில் அறைந்தது போல பேசி இருந்தார்.

நம்மைவிட கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக பங்களதேஷம் இருந்தது. எனவே இது நமது ஜனாதிபதியின் இயலாமையையே காட்டுகின்றது என்பது தெளிவு. தெற்காசியாவில் எந்த ஒரு நாடும் இந்தளவுக்கு கொரோனாவை தனது பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் என்று சொல்ல முனையவுமில்லை அவை கொரோனாவுக்குள் தனது பொருளாதாரத்தை காத்துக் கொண்டது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு முகாமைத்துவத்திலுள்ள குறைகள்தான் பிரதான காரணம் என்பது ஆட்சியாளர்களுக்குப் புரியாவிட்டாலும் ஏனையோருக்குப் புரிகின்றது. எனவே கொரோனாவை காரணம் காட்டித் தலைவர்கள் தப்பிக் கொள்ள முனைவது இந்த நாட்டில் மட்டும்தான் நடந்து வருகின்றது.

பிச்சைக்காரன் தனது காலில் உள்ள புண்மை காட்டி பிச்சை எடுப்பது போல ஒரு நிலைதான் இங்கு தலைவர்கள் நடந்து கொண்டிருக்கின்றார்கள்.

இந்த நெருக்கடியான நேரத்தில் தெற்கு ஆட்சியாளர்களும் வடக்கில் தமிழ் தரப்பினரும் நடாத்திக் கொண்டிருக்கின்ற நாடகங்களையும், கள சூழ்நிலையைப் பாவித்து இந்திய மேற்கொள்ளும் இராஜதந்திர நகர்வுகள் பற்றியும் இப்போது பார்ப்போம். எவனுடைய பக்கட்டில் ஒரு டொலர் காசி இருக்கின்றதோ அதனைத் தட்டிப் பறிப்பதற்குத்தான் அரசு திட்டம் போட்டுக் கொண்டிருக்கின்றது.

அரச வங்கிகளை விட சில தனியார் பணமாற்று முகவர்கள் டொலருக்கு அதிக காசு கொடுக்கின்றார்கள் என்று அந்த நிறுவனங்களை சுற்றி வலைத்து அரசு அதற்குத் தடைவித்திருக்கின்றது.

தேர்தல் காலங்களில் அதிகாரப் பகிர்வும் கிடையாது மாகாணசபைகளும் கிடையாது என்று பேரினத்தரை உசுப்பேற்றியதும், வீரசேக்கர போன்றவர்களையும் பேச வைத்தும் இதே ஆட்கள்தான். இப்போது அவர்களுக்குத் திடிரென தமிழ் மக்கள் மீது அனுதாபம் வந்து கூட்டமைப்பினரை அழைத்துப் பேச்சு வார்த்தை நடத்தியது ஏன் என்று நாம் கேட்கத் தோன்றுகின்றது. இது இந்தியாவின் நல்லெண்ணத்தை பெற்று அதிக உதவிகளை இந்த நேரத்தில் அடைந்து கொள்ளும் ஒரு கபடத்தனமான நாடகமென்றே நாம் இதனை நினைக்கின்றோம்.

தெற்கு தலைமையகளிடமும் வடக்குத் தலைமைகளிடமும் நாம் கேட்பது இந்தப் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் குறைந்தது மாகாணசபைகளையாவது நடாத்தப் பின்னவாங்குகின்றவர்கள் அதிகாரப் பகிர்வுகளைத் தருவார்களா? அதற்கான நேரமா இது என்று சிந்தித்துப் பாருங்கள்.!

இந்த ஆட்சியாளர்கள் இன்னும் எத்தனை நாட்களுக்கத்தான் கதிரைகளில் இருக்கப் போக்கின்றார்கள்? மக்கள் அவர்களின் வீடுகளை சுற்றிவலைக்கின்ற இந்த நேரத்தில் ஜனாதிபதி எப்படித் தீர்வுகள் தரமுடியும்.? இது வெரும் ஏமாற்று வேலை என்பது மூத்த தலைவர்களுக்குப் புரியவில்லையா?

இது அதிகாரப் பகிர்வு பற்றிப் பேசக்கூடிய நேரமல்ல. மேலும் புதிய அரசியல் யாப்பு என்றும் சிலர் நம்பிக்கை வெளியிட்டு வருகின்றனர். நமக்குத் தெரிந்த அரசியல்படி தற்போது மக்கள் பசி-பட்டினி  என்று ஓலமிடுகின்ற ஒரு நேரத்தில், நாம் நினைத்துக் கொண்டிருக்கின்ற மூத்த அரசியல்வாதிகள்-அரசியல் அமைப்பு விற்பன்னர்கள் எல்லோரும் இந்த நேரத்தில் காரியத்தை சாதிக்க முடிவும் என்று எதிர் பார்ப்பதாக இருந்தால் இதனை விட பெரிய முட்டால்தனம் ஏதும் இருக்க முடியாது.

காணி விவகாரம் சிறைக் கைதிகள் விடுதலை என்பன பற்றி நம்பிக்கைகள் தெரிந்தாலும் அவை தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சனைகள் அல்ல இடையில் வந்த-வருகின்ற சாவால்களதான் இவை.

ஈழத் தமிழர்களின் செயல்பாடுகள்தான் தமிழர்களுக்கு உலகலவிய கௌரவங்களைக் வாங்கிக் கொடுத்து வருகின்றது என்ற இமேஜ் இருக்கின்ற போது, இப்படியான அரசியல் தலைமைகள் மீது ஈழத் தமிழ் சமூகத்தினர் என்ன கருத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்று நாம் கேள்வி எழுப்புகின்றோம்.

தனிப்பட்ட ரீதியில் நமக்கு கூட்டமைப்பு மீதோ குறிப்பாக ஐயா சம்பந்தன் மற்றும் சுமந்திரன் மீதோ எந்த முறன்பாடுகளும் கிடையாது. அதற்கான அவசியமும் நமக்கு இல்லை. என்றாலும் அவர்கள் செயல்பாடுகள் மீது நமக்கு நிறையவே கேள்விகள்-விமர்சனங்கள் இருக்கின்றன.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலங்களில் சுமந்திரன் தெரிவித்த சில கருத்துக்களை அன்று நாம் விமர்சனம் செய்திருந்தோம். அவர் ராஜபக்ஸ விசுவாசிபோல நடந்து கொண்ட சந்தர்ப்பங்கள் ஏராலம். பின்னர் அதற்கு நியாயமும் பல்டிகளும் அடித்ததும் நமக்குத் தெரியும்.

இன்று அவரது செயல்பாடுகளைப் பார்க்கும் போதும் அவர் ராஜபக்ஸ ஏஜெண்டாகவே அவர் தொடர்ந்தும் பணியாற்றிக் கொண்டு வருகின்றார் என்று எண்ணத் தோன்றுகின்றது. உலகத் தமிழர்களுடன் அரசுக்கான இணைப்புப் பாலமாக தான் இருக்கத் தயார் என்று அவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சொல்லி இருந்தார்.

அதற்குப் பின்னர் ஜனாதிபதி அச்சப்படாமல் புலம் பெயர் தழிழர்கள் இலங்கைப் பொருளாதாரத்தில் மூலதனமிடலாம் என்று  அழைப்பும் விடுத்திருந்தார். சுமந்திரன் கருத்தும் ஜனாதிபதியின் கருத்துக்கும் நாம் முடிச்சுப் போட்டுப் பார்த்தால் சம்திங் ரோங் அல்லது டீல் என்றுதான் சிந்திக்க வேண்டி இருக்கின்றது. ஆனால் தமிழர்களின் அரசியல் பகிர்வுக்கும் இந்த சந்திப்புக்களுக்கும் எந்தத் தொடர்புகளும் கிடையாது இது முற்றிலும் அரசியல் வியாபார கருத்துகள்தான்-சந்திப்புக்கள்.

ஏதோ கையில் புலம் பெயர்ந்த மக்கள் சிறிது சிறிதாக சேர்த்த பணத்தை வைத்திருக்கின்றார்கள் என்று வைத்தக் கொள்வேம். அந்தப் பணத்தை சேர்க்க அவர்கள் சிந்திய இரத்தம் செய்த தியாகங்கள் எப்படிப்பட்டவை என்பதை அந்த சமூககம் நன்கு அறியும். அப்படி இருக்க, வங்குரோத்து நிலையில் இருக்கின்ற இந்த நாட்டில் அவற்றை எடுத்து வந்து மூலதனமிடுவதற்கு என்ன புலம் பெயர் தமிழ் சமூகத்தினர் மூளை வளர்ச்சி குறைந்தவர்களா என்று அரசியல் விற்பண்ணரான சுமந்திரன் ஐயாவிடம் நாம் கேள்வி எழுப்புகின்றோம்.

நாட்டிலுள்ள செல்வந்தர்கள்-இளைஞகள் எல்லாமே பிழைப்புக்கு வேறுநாடுகளுக்கு ஓடிக் கொண்டிருக்கும் இந்த நெருக்கடியான நேரத்தில் புலம் பெயர் தமிழர்கள் இங்கு வந்து மூலதமிட வேண்டும் என்று எதிர்பார்ப்பது எதற்காக என்று இதற்கு தரகர் வேலை செய்பவர்களிடத்தில் தமிழ் சமூகம் கேள்வி எழுப்ப வேண்டும்.

இந்தப் பின்னணிக்கு மத்தியில் தற்போது இலங்கை;கு மிகவும் விசுவாசமாகக் கை கொடுக்கின்ற நாடாக இந்தியா இருந்த வருகின்றது. அதற்குப் பிராந்திய அரசியல் ஆதிக்கமே காரணம் என்பது அனைவரும் அறிந்த கதை. சீனாவை அண்ணியப்படுத்தி இந்தியா இலங்கை மீது ஆதிக்கம் செலுத்த முனைவதை நாம் விமர்சிக்க முடியாது. அது அவர்களது அரசியல் பாதுகாப்பு பொருளாதார நலன்களுடன் சம்பந்தப்பட்ட விடயம். இதில் அவர்கள் ஈழத் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை இரண்டாம் தரப் பிரச்சனையாக வைத்துத்ததான் காய் நகர்த்திக் கொண்டிருக்கின்றார்கள்.

அதில் அவர்களுக்கு மிகுந்த ஈடுபாடு இருந்தால் குறைந்தது 13 பற்றி அழுத்தங்களைக் கொடுத்திருக்கலாம். அல்லது குறைந்த பட்சம் மாகாணசபைத் தேர்தல்களையாவது  நடாத்துவதற்கு கட்டாயப்படுத்தி இருக்கலாம். இந்தியாவுக்கு அதில் பெரிய ஆர்வம் இருப்பதாக நமக்குத் தெரியவில்லை.

இந்தியாவின் நிகழ்சி நிரலில் அவை இருக்கின்றது என்று சிலர் நமக்கு கதை சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் முன்னணி நிகழச்சி நிரலில் அது இன்று வரை இடம் பிடித்திருக்கவில்லை என்பதுதான் நமது கருத்து.

மீனவர் பிரச்சினைகளை எடுத்துக் கொள்வோம். அதிலும் மனிதாபிமான அடிப்படையில்தான் அவை கையாளப்பட வேண்டும் என்று இந்தியா எதிர்பார்க்கின்றது. இது எதனை அடையாளப்படுத்துகின்றது என்பதனை எண்ணிப் பாருங்கள். இலங்கை அரசும் இந்த விடயத்தில் முட்டி மோதாது. தமிழ் அரசியல் தலைமைகளும் மௌனித்து நிற்பார்கள்.

கடைசியில் அதிலும் பாதிக்கப்படுவது ஈழத்துத் தமிழர்கள்தான். எனவே அரசியல் உரிமைகளைப் பெற்றுத் தருகின்றோம் என்ற போர்வையில் இங்கு நடப்பது என்னவென்று புரிந்து கொள்ள முடியும்.

இதற்கிடையில் விமல் வீரவன்ச தெரிவித்துள்ள ஒரு கருத்தில் நிதி அமைச்சர் பீ.ஆருக்கும். இந்தியாவின் ரோ உளவுத்துறையின் முக்கியஸ்தருக்கும் உறவு முறையாம். இப்படிப் பல கதைகள் இருக்கின்றன. அவற்றை நாம் வெளியில் சொன்னால் நாட்டில் பெரும் கொந்தளிப்பு வரும் என்றும் அவர் சுட்டிக் காட்டி இருக்கிகின்றார்.

எனவே அரசும் குறிப்பாக ஜனாதிபதி ஜீ.ஆரும் நெருக்கடியான இந்த நேரத்தில் புலம் பெயர் தமிழர்கள் தன்னிடம் உள்ள டொலர்களை இங்கு கொண்டு வந்து கொட்ட வேண்டும் என்று எதிர் பார்க்கின்றார்.

அதற்கு தரகர் வேலை பார்ப்பதற்கும் முகவர்கள் வேறு தயாராக இருக்கின்றார்கள். இந்த அரசியல் பின்னணியில் இந்தியா சீனாவிடம் இருந்து இலங்கையை அண்ணியப்படுத்துவதில் கடந்த சில மாதங்களாக பெரு வெற்றிகளை ஈட்டிவருகின்றது.

அதே நேரம் சீனாவுக்கும் இலங்கை கொடுக்க வேண்டிய கடன் பாக்கிகள் மற்றும்  இலங்கை மீதான அதன் அகண்ற கால் பதிவுகள் இங்கு மிகவும் வலுவாக இருக்கின்றன. எதிர் காலத்தில் இலங்கை ஆட்சி மாற்றங்களின் போது இந்தியா, சீனாவின் நேரடி ஆதிக்க மோதல்களும் வரலாம் என்று நாம் நம்புகின்றோம்.

மொத்தத்தில் தற்போது தெற்கு சிங்கள சமூகத்தையும் வடக்கு கிழக்கில் தமிழ் சமூகத்தினரையும். அரசியல் தலைமைகள் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றன என்பது மிகத் தெளிவு.

இதற்கு மற்றுமொரு நல்ல உதாரணம் கடந்த ஜனாதிபதி தேர்தலில் தெற்கில் முஸ்லிம் ஆக்கிரமிப்பு அட்டகாசங்கள் என்று சிங்கள மக்கள் மத்தியில் கடும் போக்குப் பேரினவாதிகளை வைத்து அரசியல் பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வாக்கு வேட்டை நடந்தது. அதற்கு நல்ல அறுவடையும் கிடைத்தது.

அதே நேரம் முஸ்லிம் பிரதேசங்களில் குறிப்பாக கிழக்கில் ராஜபக்ஸ அட்டூழியங்களைச் சொல்லி முஸ்லிம் தனித்துவத் தலைமைகள் வாக்கு கொள்ளையை நடாத்தியது.

அப்படி வெற்றி பெற்ற அனைவரும் இப்போது எங்கு இருக்கின்றார்கள் என்பதனைப் பார்க்கும் போது இந்த நாட்டில் இனத்தை மதத்தை சொல்லி அரசியல் செய்கின்றவர்கள் சமகாலத்தில் எப்படியெல்லாம் நாடகங்களை ஆடுகின்றார்கள் என்பதனை மக்கள் புரிந்து பாடங்களைக் கற்றுக் கொள்ள இது தக்க நேரமாக அமைந்திருக்கின்றது.

நன்றி:ஞாயிறு தினக்குரல் 03.04.2022

Previous Story

என் பதவியை பறிக்க அமெரிக்கா சதி :இம்ரான் கான் 

Next Story

ஜனாதிபதி ஊடகம் செல்வது பொய்- சரத் வீரசேக்கர