யுக்ரேனில் ரஷ்ய விமானங்கள் பறப்பதைத் தடுக்க நேட்டோவால் முடியாதது ஏன்?

யுக்ரேனிய வான் பகுதியை நோ ஃபிளை ஸோன் (No Fly Zone) அதாவது விமானங்கள் பறப்பதற்குத் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று யுக்ரேனிய அதிபர் வோலோடிமிர் ஸெலன்ஸ்கி கேட்டுக் கொண்டிருக்கிறார். ஒரு முறையல்ல, பல முறை மீண்டும் மீண்டும் வலியுறுத்தியிருக்கிறார்.

போலாந்து தலைநகர் வார்சாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் யுக்ரேனிய பெண் ஒருவர் கண்ணீருடன் இதே வேண்டுகோளை பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் வைத்தார்.

விண்ணில் இருந்து எப்போது குண்டுகளும் ஏவுகணைகளும் வருமோ என்று யுக்ரேனிய பெண்களும் குழந்தைகளும் அஞ்சிக் கொண்டிருக்கிறார்கள் என்று டாரியா என்று அந்தப் பெண் கூறினார்.

யுக்ரேனில் கிழக்கு, வடக்கு, தெற்கு என மூன்று திசைகளிலும் ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமடைந்திருக்கிறது. பொதுமக்கள் உயிரிழந்திருக்கிறார்கள். ஆயினும் ஸெலன்ஸ்கி கேட்டுக் கொண்டபடி யுக்ரேன் வான் எல்லையில் விமானங்கள் பறக்கத் தடை விதிப்பதற்கு மேற்கு நாடுகள் தயங்குவது ஏன்? யுக்ரேன் படைகளே தங்களது வான் எல்லையில் அப்படியொரு தடையை ஏற்படுத்த முடியாதா எனப் பல கேள்விகள் எழுகின்றன.

No-Fly Zone – பகுதி என்பது என்ன?

பறப்பதற்குத் தடை செய்யப்பட்ட பகுதி என்பது, வான் வெளியில் குறிப்பிட்ட விமானங்கள், ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவை பறப்பதற்குத் தடை செய்யப்பட்ட பகுதியாகும்.

அரண்மனைகள், நாடாளுமன்றங்கள், அதிபர் உள்ளிட்டோரின் வீடுகள், அணுமின் நிலையங்கள், ராணுவத் தளங்கள் உள்ளிட்ட முக்கியமான பகுதிகளைப் பாதுகாப்பதற்காக இத்தகைய தடை விதிக்கப்படுவது வழக்கம்.

ராணுவப் பயன்பாடு என்று வரும்போது, பறக்கத் தடை செய்யப்பட்ட பகுதி என்பது, பிற நாடுகளின் விமானத் தாக்குதலை முறியடிப்பதற்காகவும்,, உளவுப் பணிகளைத் தடுப்பதற்காகவும் உருவாக்கப்படுகிறது.

இதை அறிவிப்பதைக் காட்டிலும் அமல்படுத்துவதுதான் முக்கியம். இதற்கு ராணுவம் மற்றும் ஆயுதங்களின் உதவி அவசியமாகிறது.

தடை செய்யப்பட்ட மண்டலம் என அறிவிக்கப்பட்ட வான் எல்லையை ராடார் உள்ளிட்டவற்றின் மூலம் கண்காணிப்பது, தடையை மீறி எதிரி நாட்டு விமானங்கள் வந்தால் இடைமறித்துத் தாக்கும் ஏவுகணை அமைப்புகள் மூலமாகச் சுட்டு வீழ்த்துவது போன்றவற்றின் மூலம் இதை நடைமுறைப்படுத்தலாம்.

யுக்ரேனுக்கு அருகேயுள்ள மேற்கு ஐரோப்பிய நாடுகள் பலவும் ஏற்கெனவே தங்களது நாட்டு வான் எல்லையில் ரஷ்ய விமானங்கள் பறப்பதற்குத் தடை விதித்திருக்கின்றன. ஆனால் யுக்ரேன் மீது மட்டும் அத்தகைய தடையை விதிக்க இயலவில்லை.

மேற்கு நாடுகள் ஏன் தயங்குகின்றன?

யுக்ரேனிய வான்வெளியை பறப்பதற்குத் தடை செய்யப்பட்ட பகுதி என்று அறிவித்தால், அந்த வான்வெளியை நேட்டோ படைகள் கண்காணிக்க வேண்டியிருக்கும். ரஷ்ய விமானங்கள் எல்லைக்குள் நுழைந்தால் அவற்றைச் சுட வேண்டும். நேரடியாக மோதலில் ஈடுபடவும் நேரிடலாம். நேட்டோ படைகளுக்கும் ரஷ்யப் படைகளுக்கும் இடையே நேரடியான மோதலுக்கு வழிவகுக்கும்.

பறப்பதற்குத் தடை செய்யப்பட்டுள்ளது என்று அறிவித்தால் மட்டும் போதாது. அதை அமல்படுத்த வேண்டும் என்கிறார் அமெரிக்காவின் விமானப் படை முன்னாள் தளபதி பிலிப் ப்ரீட்லவ்.

யுக்ரேன் வான்வெளியை பறப்பதற்குத் தடை செய்யப்பட்ட பகுதியாக நிறுவுவது மிகவும் தீவிரமான ஒரு முடிவு என்று அவர் கூறுகிறார்.

இப்படியொரு முடிவு எடுப்பது போருக்குச் சமம் என்கிறார் பிலிப்.

யுக்ரேனில் விமானங்கள் பறக்கத் தடை விதிப்பது சாத்தியமில்லை என்கிறார் நேட்டோ தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பர்க்

அதே நேரத்தில் பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் டோபியஸ் எல்வுட் யுக்ரேனிய வான் எல்லையை முழுமையாகவோ, பகுதியளவிலோ பறப்பதற்குத் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

பொதுமக்கள் கொல்லப்படுவதாலும், போர்க்குற்றங்கள் நிகழ்த்தப்பட்டதாகக் குற்றம்சாட்டப்படுவதாலும் நேட்டோ படைகள் இந்த விவகாரத்தில் தலையிடலாம் என்கிறார் எல்வுட்.

ஆனால் நேட்டோவின் தலைவர் ஸ்டோலட்ன்பர்க் இத்தகைய யோசனைகளை நிராகரித்துவிட்டார். தரை வழியாகவோ, வான்வழியாகவோ யுக்ரேனுக்குள் நுழையும் திட்டம் ஏதுமில்லை என்று அவர் கூறினார்.

பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சர் பென் வாலேஸும் இந்த விவகாரத்தில் யுக்ரேனுக்கு உதவ முடியாது என்று தெரிவித்துவிட்டார். அத்தகைய முயற்சி ஐரோப்பா முழுவதும் போரைத் தூண்டுவிடும் என்று எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவும் இதே போன்ற காரணங்களுக்காக அதை நிராகரித்துள்ளது.

ரஷ்ய விமானங்களை நேட்டோ படைகள் சுட்டு வீழ்த்துவதில் உள்ள இன்னொரு முக்கியமான ஆபத்து அணு ஆயுதம். ஏற்கெனவே தங்களது அணுஆயுதப் படைகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் அறிவித்திருக்கிறார்.

யுக்ரேனிய வான் எல்லையை பறப்பதற்குத் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து, அதை நேட்டோ படைகள் அமல்படுத்துவதற்கு முயற்சி செய்தால், அது பெரும்போரைத் தூண்டும் புள்ளியாக மாறிவிடும் என்று பலரும் அச்சம் தெரிவிக்கிறார்கள்.

அதனால் யுக்ரேனில் ரஷ்யப் படைகள் எவ்வளவு தீவிரமாகத் தாக்குதல் நடத்தினாலும், கொடூரமான காட்சிகளைக் காண நேர்ந்தாலும் அந்த நாட்டின் வான் எல்லையை பறப்பதற்குத் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பதற்கு சாத்தியமில்லை என்றே கருதப்படுகிறது.

இதற்கு முன் எங்கெல்லாம் பறப்பதற்கு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது?

முதல் வளைகுடாப் போர் நடந்து முடிந்த பிறகு இராக்கில் இரண்டு பகுதிகளில் பறப்பதற்குத் தடை செய்யப்பட்ட மண்டலங்களை அமெரிக்காவும் அதன் கூட்டுப் படைகளும் நிறுவின. சில இன மற்றும் மதக்குழுக்கள் மீது தாக்குதல் நடத்துவதைத் தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

1992-இல் பால்கன் போரின்போது போஸ்னியாவின் வான் எல்லைக்குள் அந்நிய விமானங்கள் பறப்பதற்கு தடை விதித்து ஐக்கிய நாடுகள் அவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

லிபியாவில் கடாஃபி அரசுக்கு எதிராக மேற்கு நாடுகள் ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியபோது, அந்நாட்டு வான்வெளியை பறப்பதற்குத் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்க ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு அவையில் தீர்மானம் நிறைவேற்றபட்டது. அந்தத் தீர்மானத்துக்கு அமெரிக்கா, பிரிட்டன் மட்டுமல்லாமல், ரஷ்யாவும், சீனாவும் கூட ஆதரவு தெரிவித்திருந்தன. ஆனால் யுக்ரேன் விவகாரத்தில் அத்தகைய சூழல் இல்லை.

Previous Story

சவுதியில் ஒரே நாளில் 81 பேருக்கு மரண தண்டனை

Next Story

எரிபொருள், எரிவாயு நெருக்கடி தீர 7 மாதங்களாகும் - அமைச்சர் லொகுகே