யாஹ்யா சின்வார் எங்கே ? இஸ்ரேல் இவருக்கு குறி வைப்பது ஏன்? 

-பிராங் கார்ட்னர்-

“யாஹ்யா சின்வாரைக் காணவில்லை”

Hamas Gaza chief Yahya Sinwar tests positive for coronavirus – www.israelhayom.com

இஸ்ரேல் ராணுவம் பல ஆயிரம் துருப்புகள், ஆளில்லா விமானங்கள், மின்னணு ஒட்டுக்கேட்கும் சாதனங்கள், மற்றும் மொசாத் உளவாளிகள் ஆகியோர் அவர் இருக்கும் இடத்தைக் கண்டறிய முயன்று கொண்டிருக்கையில் அவர் காணாமல் போனதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

வெள்ளை முடி மற்றும் கருப்பு புருவங்களைக் கொண்ட சின்வார், காஸாவில் ஹமாஸின் அரசியல் பிரிவின் தலைவராகவும், இஸ்ரேலால் மிகவும் தேடப்படும் நபர்களில் ஒருவராகவும் இருக்கிறார்.

கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி தெற்கு இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 200-க்கும் மேற்பட்டோர் கடத்தப்பட்டனர்.

இதற்குக் காரணமானவர்களில் ஒருவராக சின்வாரையும் இஸ்ரேல் சேர்த்திருக்கிறது.

“யாஹ்யா சின்வார் தான் தளபதி

அவருக்கு இலக்கு வைக்கப்பட்டுள்ளது” என்று இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி அக்டோபரில் அறிவித்தார்.

“இந்த அருவருப்பான தாக்குதலை நடத்த யாஹ்யா சின்வார் தான் முடிவு செய்தார்,” என்று ஐ.டி.எஃப் தலைமை அதிகாரி ஹெர்சி ஹலேவி கூறினார். “ஆகையால் அவர் மீதும் அவருக்குக் கீழ் இருப்பவர்கள் மீதும் குறிவைத்திருக்கிறோ,” என்றார்.

அதில் ஹமாஸின் இராணுவப் பிரிவான இஸ்ஸடீன் அல்-கஸ்ஸாம் படைப்பிரிவின் தலைவரான முகமது டெய்ஃப் என்பவரும் அடங்குவார்.

அக்டோபர் 7-ஆம் தேதியின் தாக்குதலுக்குத் திட்டமிடப்பட்டதற்குப் பின்னால் டெய்ஃப் மூளையாக இருந்தார், ஏனெனில் அது ஒரு இராணுவ நடவடிக்கை. ஆனால், சின்வார் ‘திட்டக்குழுவில் ஒரு பகுதியாக இருந்திருக்கலாம்,’ என்று ஐரோப்பிய வெளியுறவு கவுன்சிலின் (ECFR) மூத்த கொள்கை ஆராய்ச்சியாளர் ஹக் லோவாட் கூறுகிறார்.

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவுக்குப் பிறகு இரண்டாவது இடத்தில் இருக்கும் சின்வார், தனது சிக்னல் கண்காணிக்கப்பட்டு, கண்டுபிடிக்கப்பட்டு விடும் என்ற அச்சத்தில் யாருடனும் தொடர்பு கொள்ளாமல், காஸாவிற்கு கீழே எங்கோ சுரங்கப்பாதையில் தனது மெய்க்காப்பாளர்களுடன் ஒளிந்துகொண்டிருப்பதாக இஸ்ரேல் நம்புகிறது.

யார் இந்த சின்வார்?

அபு இப்ராஹிம் என்று பரவலாக அறியப்படும் 61 வயதான சின்வார், காஸா பகுதியின் தெற்கு முனையில் உள்ள கான் யூனிஸ் அகதிகள் முகாமில் பிறந்தார். அவரது பெற்றோர் இன்று இஸ்ரேலில் இருக்கும் அஷ்கெலோன் நகரைச் சேர்ந்தவர்கள். ஆனால் பாலத்தீனர்கள் ‘அல்-நக்பா’ (பேரழிவு) என்று அழைக்கும் சம்பவத்திற்குப் பிறகு அவர்கள் அகதிகளானார்கள்.

1948-இல் நடந்த இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து இஸ்ரேல் என்ற நாடு ஸ்தாபிக்கப்ப்பட்டது. அதைத் தொடர்ந்து நடந்த போரில் பாலத்தீனர்கள் அவர்களின் மூதாதையர் வீடுகளில் இருந்து பெருமளவில் இடம்பெயர்ந்தனர்.

அவர் கான் யூனிஸில் ஆண்களுக்கான மேல்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றார். பின்னர் காஸா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் அரபு மொழியில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

அந்த நேரத்தில், கான் யூனிஸ் இஸ்லாமிய சகோதரத்துவ ஆதரவிற்கான கோட்டையாக இருந்தது என்று கூறுகிறார், கிழக்கு நாடுகள் கொள்கைக்கான வாஷிங்டன் மையத்தின் ஆராய்ச்சியாளர் எஹுட் யாரி. இவர் சின்வாரை நான்கு முறை சிறையில் பேட்டி கண்டவர்.

அந்த இஸ்லாமியச் சகோதரத்துவக் குழு “அகதி முகாமில் வறுமையின் பிடியில் வாழ்ந்த, மசூதி செல்லும் இளைஞர்களுக்கான ஒரு பெரிய இயக்கமாக இருந்தது,” என்று யாரி கூறுகிறார். பின்னாளில் அது ஹமாஸுக்கும் முக்கியமானதாக மாறும் என்கிறார்.

சின்வார் முதன்முதலாக, 1982-இல், தனது 19 வயதில், இஸ்ரேலால் அவரது ‘இஸ்லாமிய நடவடிக்கைகளுக்காக’ கைது செய்யப்பட்டார். பின்னர் மீண்டும் 1985-இல் கைது செய்யப்பட்டார். இந்த நேரத்தில் அவர் ஹமாஸின் நிறுவனர் ஷேக் அகமது யாசினின் நம்பிக்கையைப் பெற்றார்.

இருவரும் ‘மிகமிக நெருக்கமானார்கள்’ என்று டெல் அவிவில் உள்ள தேசியப் பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவனத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் கோபி மைக்கேல் கூறுகிறார். அமைப்பின் ஆன்மீகத் தலைவருடனான இந்த உறவு பின்னர் சின்வாருக்கு இயக்கத்திற்குள் ஒரு முக்கியத்துவத்தைக் கொடுத்தது, என்கிறார் அவர்.

ஹமாஸ் 1987-இல் நிறுவப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் அக்குழுவின் பயங்கரமான உள்நாட்டுப் பாதுகாப்பு அமைப்பான அல்-மஜ்தை நிறுவினார். அப்போது அவருக்கு வயது 25 தான்.

அல்-மஜ்த் அமைப்பு ‘தார்மீகக் குற்றங்கள்’ என்று அழைக்கப்படுபவற்றைத் தண்டிப்பதில் பிரபலமடைந்தது. இந்த அமைப்பு பாலியல் வீடியோக்களை விற்ற கடைகளை குறிவைத்ததாக கூறுகிறார் மைக்கேல். அத்துடன் இஸ்ரேலுடன் ஒத்துழைப்பவர்கள் என்று சந்தேகிக்கப்படும் எவரையும் வேட்டையாடிக் கொன்றது.

இஸ்ரேலுடன் ஒத்துழைப்பதாக சந்தேகிக்கப்படும் பல நபர்களை ‘மிருகத்தனமாக கொலை செய்ததற்கு’ சின்வார் தான் பொறுப்பு என்று யாரி கூறுகிறார். “அதில் சில கொலைகளை அவர் தனது கைகளால் செய்ததாக என்னிடமும் மற்றவர்களிடமும் பேசிப் பெருமைப்பட்டார்,” என்று கூறினார்.

இஸ்ரேலிய அதிகாரிகள் இந்தச் சம்பவத்தைக் கூறுகின்றனர். பின்னாளில் அவர் ஒரு வாக்குமூலம் கொடுத்தார். அதில் உளவாளி என்று அவர் சந்தேகப்பட்ட ஒருவரை, அந்த நபரின் சகோதரரை வைத்தே உயிருடன் புதைக்க வைத்தார். மண்வெட்டிக்குப் பதிலாக ஒரு ஸ்பூனை வைத்து அந்த வேலையைச் செய்ய முடிக்க வைத்தார்.

“அவர் தன்னைச் சுற்றிப் பல தொண்டர்கள், ரசிகர்கள், பேன்றவர்களைச் சேர்த்தார். அவர்களில் பலரும் அவரைக் கண்டு பயப்படுபவர்கள். அவருடன் எந்த பிரச்னையையும் வைத்துக்கொள்ள விரும்பாதவர்கள்,” என்று யாரி கூறுகிறார்.

1988-இல், சின்வார் இரண்டு இஸ்ரேலிய வீரர்களைக் கடத்திச் சென்று கொல்ல திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. அதே ஆண்டு அவர் கைது செய்யப்பட்டார். 12 பாலத்தீனர்களைக் கொன்றதற்காக இஸ்ரேலால் தண்டிக்கப்பட்டார். அவருக்கு நான்கு ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பட்டன.

இஸ்ரேல், பாலத்தீனம், ஹமாஸ், காஸா

யாஹ்யா சின்வார்

சிறை வாழ்க்கை

சின்வார் தனது வாழ்வில் 22 ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்ரேலிய சிறைகளில் கழித்துள்ளார். 1988 முதல் 2011 வரை. அங்கு அவர் தனிமைச் சிறையில் இருந்த காலம், அவரை மேலும் தீவிரமாக்கியதாகத் தெரிகிறது.

“அவர் தனது அதிகாரத்தை இரக்கமின்றிப் பயன்படுத்தினார்,” என்கிறார் யாரி. அவர் கைதிகள் மத்தியில் ஒரு தலைவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். அவர்கள் சார்பாக சிறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் மற்றும் கைதிகளிடையே ஒழுக்கத்தை அமல்படுத்தினார்.

சின்வார் சிறையில் இருந்தபோது அவரை மதிப்பீடு செய்த இஸ்ரேலிய அரசு, அவரது குணாதிசயத்தை “கொடுமை, அதிகாரம், செல்வாக்கு, வலியைத் தாங்கும் திறன், தந்திரம் மற்றும் சூழ்ச்சியின் அசாதாரண திறன்கள், கொஞ்சம் கிடைத்தாலே மன நிறைவடையும் தன்மை… மற்ற கைதிகள் மத்தியில் சிறைக்குள் கூட ரகசியங்களை வைத்திருப்பது… திறமை உள்ளது. கூட்டத்தைத் தக்கவைப்பது,” என்று வரையறுத்தது.

சின்வாரைச் சந்தித்துப் பேசிய யாரியின் மதிப்பீடு, ‘அவர் ஒரு மன நோயாளி’ என்பதுதான். “ஆனால் ‘சின்வார் ஒரு மனநோயாளி’, என்று பொதுப்படையாகச் சொல்வது தவறு” என்று அவர் கூறுகிறார், “ஏனென்றால் அந்த விசித்திரமான, சிக்கலான மனிதரை நீங்கள் புரிந்துகொள்ளாமல் போகக்கூடும்,” என்கிறார்.

யாரியின் கூற்றுப்படி, சின்வார் ‘மிகவும் தந்திரமானவர், புத்திசாலி – ஒரு வகையான தனிப்பட்ட வசீகரம் கொண்டவர்’.

சின்வார் யாரிஒயிடம் ‘இஸ்ரேல் அழிக்கப்பட வேண்டும்’ என்றும், பாலத்தீனத்தில் யூத மக்களுக்கு இடமில்லை என்றும் கூறியபோது, கேலியாக, ‘உங்கள் ஒருவருக்கு மட்டும் விதிவிலக்காகச் செய்கிறேன்,’ என்பாராம்.

இஸ்ரேல், பாலத்தீனம், ஹமாஸ், காஸா

எகிப்து எல்லையில் சின்வார் (படத்தின் நடுவே இருப்பவர்), 2017-இல் எடுக்கப்பட்ட படம்

சிறையிலிருந்து விடுதலை

சிறையில் இருந்த சின்வார் இஸ்ரேலிய செய்தித்தாள்களைப் படித்து ஹீப்ரு மொழியில் சரளமாக பேசக் கற்றுக்கொண்டார். யாரி அரபு மொழியில் சரளமாக இருந்தபோதிலும், சின்வார் தன்னுடன் எப்பொழுதும் ஹீப்ருவில் பேச விரும்புவதாக யாரி கூறுகிறார்.

“அவர் தனது ஹீப்ருவை மேம்படுத்த முயன்றார்,” என்று யாரி கூறுகிறார். “சிறைக் காவலர்களை விட நன்றாக ஹீப்ரு பேசும் ஒருவரிடமிருந்து அவர் பயனடைய விரும்பினார் என்று நான் நினைக்கிறேன்,” என்கிறார் அவர்.

சின்வார் 2011-இல் ஒரு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக விடுவிக்கப்பட்டார். அதில் 1,027 பாலத்தீன மற்றும் இஸ்ரேலிய அரேபிய கைதிகள், ஒரே ஒரு இஸ்ரேலிய பணயக்கைதியான இஸ்ரேல் ராணுவ வீரர் கிலாட் ஷாலிட்டிற்கு ஈடாக சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

ஹமாஸின் மூத்த இராணுவத் தளபதியான சின்வாரின் சகோதரரால் கடத்தப்பட்டு ஐந்து வருடங்களாக ஷாலித் சிறைபிடிக்கப்பட்டிருந்தார்.

சின்வார் மேலும் இஸ்ரேலிய ராணுவ வீரர்களைக் கடத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார்.

அந்தத் தருணத்தில், இஸ்ரேல் காஸா பகுதியில் தன் ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவந்திருந்தது. ஹமாஸ் தேர்தலில் வெற்றி பெற்று, அதன் போட்டியாளர்களான யாசர் அராஃபத்தின் ஃபத்தாஹ் கட்சியின் பல உறுப்பினர்களை உயரமான கட்டிடங்களின் உச்சியில் இருந்து தூக்கி எறிந்துவிட்டு, ஆட்சிப் பொறுப்பில் இருந்தது.

இஸ்ரேல், பாலத்தீனம், ஹமாஸ், காஸா

சின்வாரின் கூட்டத்திற்குப் பாதுகாப்பாக நிற்கும் ஆயுதமேந்திய போராளி

‘கொடூரமும் கவர்ச்சியும் கலந்த நபர்’

சின்வார் காஸாவிற்கு திரும்பியதும், அவர் உடனடியாக ஒரு தலைவராக ஏற்றுக்கொள்ளப்பட்டார், என்று மைக்கேல் கூறுகிறார். இஸ்ரேலிய சிறைகளில் தனது வாழ்நாளின் பல ஆண்டுகளை தியாகம் செய்த ஹமாஸின் ஸ்தாபக உறுப்பினர் என்ற பெருமை பெற்றார்.

ஆனால், “மக்கள் அவரைப் பார்த்து பயந்தார்கள். இவர் தனது கைகளால் மக்களைக் கொன்றவர் என்ற முறையில்,” என்று மைக்கேல் கூறுகிறார். “அவர் மிகவும் கொடூரமானவர், ஆனால் அவரிடம் ஒரு கவர்ச்சி இருந்தது,” என்கிறார்.

“அவர் ஒரு சொற்பொழிவாளர் அல்ல,” என்கிறார் யாரி. “அவர் பொது மக்களிடம் பேசும் போது, ஒரு கும்பலைச் சேர்ந்தவர் போலப் பேசுவார்.”

சிறையை விட்டு வெளியேறிய உடனேயே, சின்வார் இஸ்ஸெடின் அல்-கஸ்ஸாம் படை மற்றும் அதன் தலைமைப் பணியாளர் மர்வான் இசாவுடன் ஒரு கூட்டணியை உருவாக்கினார் என்று யாரி கூறுகிறார்.

2013-இல், அவர் காஸா பகுதியில் உள்ள ஹமாஸின் அரசியல் பணியகத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், 2017-இல் அதன் தலைவராக ஆனார்.

சின்வாரின் இளைய சகோதரர் முகமதுவும் ஹமாஸில் பங்கு வகித்தார். 2014-இல் ஹமாஸால் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்படுவதற்கு முன்னர் பல இஸ்ரேலிய படுகொலை முயற்சிகளில் இருந்து தப்பியதாக அவர் கூறிக்கொண்டார். ஆனால், ஊடக அறிக்கைகள், அவர் இன்னும் உயிருடன் இருப்பதாகவும், காஸாவின் அடியில் உள்ள சுரங்கப்பாதைகளில் மறைந்திருக்கும் ஹமாஸின் இராணுவப் பிரிவில் சுறுசுறுப்பாகவும் இருக்கலாம் என்றும், அக்டோபர் 7-ஆம் தேதி நடந்த தாக்குதல்களில் பங்கு வகித்திருக்கலாம் என்றும் கூறுகின்றன.இஸ்ரேல், பாலத்தீனம், ஹமாஸ், காஸா

ஹமாஸ் இயக்கத்தின் முன்னாள் ஆன்மீகத் தலைவர் ஷேக் அகமது யாஸீனின் படம் தாங்கிய சுவரோவியம்

‘மூர்க்கத்தனமான விதிகளை விதிப்பவர்’

சின்வாரின் இரக்கமற்ற தன்மை மற்றும் வன்முறைப் போக்கு ‘கான் யூனிஸின் கசாப்புக்காரன்’ என்ற புனைப்பெயரை அவருக்குப் பெற்றுத் தந்தது.

“அவர் மூர்க்கத்தனமான ஒழுக்க விதிகளை விதிப்பவர்,” என்று யாரி கூறுகிறார். “ஹமாஸில் அனைவரும் அறிந்த ஒன்று, நீங்கள் சின்வாருக்கு கீழ்ப்படியாவிட்டால், உங்கள் வாழ்க்கையைப் பணயம் வைக்கிறீர்கள்.”

மோசடி மற்றும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட மஹ்மூத் இஷ்டிவி என்ற ஹமாஸ் தளபதி 2015-இல் சிறைப்பிடிக்கப்பட்டு, சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டதற்கு அவர்தான் பொறுப்பு என்று கூறப்படுகிறது.

2018-ஆம் ஆண்டில், சர்வதேச ஊடகங்களுக்கு அளித்த ஒரு அறிக்கையில், அமெரிக்கா தன் தூதரகத்தை டெல் அவிவிலிருந்து ஜெருசலேமுக்கு மாற்றுவதை எதிர்த்து, இஸ்ரேலில்-காஸா எல்லை வேலியை உடைத்துக்கொண்டு செல்ல ஆயிரக்கணக்கான பாலத்தீனர்களுக்கு அவர் தனது ஆதரவை சமிக்ஞையாகத் தெரிவித்தார்.

அந்த ஆண்டின் பிற்பகுதியில், மேற்குக் கரையில் இருக்கும் போட்டி அமைப்பான பாலஸ்தீன அதிகாரத்திற்கு (PA) விசுவாசமானவர்கள் நடத்திய படுகொலை முயற்சியில் இருந்து தப்பியதாகக் கூறினார்.

ஆயினும்கூட, அவர் சில சமயங்களில் நடைமுறையில் சாத்தியமான பார்வைகளையும் முன்வைத்தார். இஸ்ரேலுடன் தற்காலிக போர் நிறுத்தங்களை ஆதரித்தார், கைதிகள் பரிமாற்றங்கள் மற்றும் பாலத்தீன அதிகாரத்துடன் நல்லிணக்கம் போன்றவற்றை ஆதரித்தார்.

இதனால் அவரது போக்கு மிகவும் மிதமானது என்று அவரது எதிரிகள் சிலர் விமர்சித்தனர் என்று மைக்கேல் கூறுகிறார்.

இஸ்ரேல், பாலத்தீனம், ஹமாஸ், காஸா

ஹமாஸ் இயக்கத்தால் கடத்தப்பட்ட இஸ்ரேலிய குழந்தைகள் படங்களைத் தாங்கிய போஸ்டர்கள்

இரானுடன் நெருக்கம்

இஸ்ரேலின் பாதுகாப்பு மற்றும் காவல் அமைப்பில் உள்ள பலர், கைதிகள் பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக சின்வாரை சிறையில் இருந்து வெளியேற்றியது மிகப்பெரிய தவறு என்று கருதுகிறார்கள்.

ஹமாஸுக்குப் பொருளாதார ஊக்குவிப்பு மற்றும் வேலைக்கான அனுமதிகளை வழங்குவதன் மூலம், அந்த இயக்கம் போர் செய்வதறகான உந்துதலை இழந்துவிடும் என்ற தவறான கணிப்பில் அந்தக் கைதிகள் பரிமாற்றத்தைச் செய்ததாக இஸ்ரேலியர்கள் கருதுகின்றனர்.

அது மிகத் தவறான கணிப்பாகிப் போனது.

“பாலத்தீனத்தை விடுவிக்க வந்த நபராக அவர் தன்னைப் பார்க்கிறார். காஸாவின் பொருளாதார நிலைமையை மேம்படுத்துவதோ, சமூக சேவைகள் செய்வதோ அவரது நோக்கம் இல்லை, ” என்று யாரி கூறுகிறார்.

2015-ஆம் ஆண்டில், அமெரிக்க வெளியுறவுத்துறை, சின்வாரை ‘உலகளாவிய பயங்கரவாதி’ என்று அதிகாரப்பூர்வமாக வகைப்படுத்தியது. 2021-ஆம் ஆண்டு மே மாதம் இஸ்ரேலிய விமானத் தாக்குதல்கள் காஸா பகுதியில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகத்தைக் குறிவைத்தன. 2022-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், ஒரு தொலைக்காட்சி உரையில், கிடைக்கக் கூடிய எந்தவொரு வழியிலும் இஸ்ரேலைத் தாக்குமாறு மக்களை அவர் ஊக்குவித்தார்.

ஹமாஸின் அரசியல் பணியகத்தை அதன் ஆயுதப் பிரிவான இஸ்ஸடீன் அல்-கஸ்ஸாம் படையுடன் இணைக்கும் முக்கிய நபராக சின்வாரை ஆய்வாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். இஸ்ஸடீன் அல்-கஸ்ஸாம் அமைப்புதான், தெற்கு இஸ்ரேலில் அக்டோபர் 7-ம் தேதி நடந்த தாக்குதல்களுக்குத் தலைமை தாங்கியது.

அக்டோபர் 14 அன்று, இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் ரிச்சர்ட் ஹெக்ட், சின்வாரை ‘தீமையின் முகம்’ என்று குறிப்பிட்டார். மேலும் “அந்த மனிதரும் அவரது முழு குழுவும் எங்கள் பார்வையில் உள்ளனர். நாங்கள் அவருக்கு பதிலடி கொடுப்போம்,” என்றார்.

சின்வார் இரானுக்கும் நெருக்கமானவர். ஒரு ஷியா நாட்டிற்கும் சன்னி அரபு அமைப்புக்கும் இடையிலான கூட்டு என்பது வெளிப்படையான ஒன்றல்ல. ஆனால் இருவருக்கும் உள்ள ஒரே நோக்கம், இஸ்ரேல் அரசை முடிவுக்குக் கொண்டு வந்து, ஜெருசலேமை இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிலிருந்து ‘விடுவிப்பது’.

இருவரும் ஒன்றாக வேலை செய்கின்றனர். இரான் ஹமாஸுக்கு நிதியுதவி அளித்து, பயிற்சியும் ஆயுதங்களும் வழங்குகிறது, அதன் ராணுவத் திறன்களை கட்டமைக்க உதவுகிறது, மற்றும் ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளைக் கொடுக்கிறது. இது இஸ்ரேலிய நகரங்களை குறிவைக்க பயன்படுத்துகிறது.

சின்வார் 2021-இல் ஒரு உரையில் இரானின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார். “இரான் இல்லாதிருந்தால், பாலத்தீனத்தின் எதிர்ப்பு இவ்வளவு வலுவாக இருந்திருக்காது,” என்றார்.

எதிர்காலம் என்னவாகும்?

ஆயினும்கூட, சின்வாரைக் கொல்வது இஸ்ரேலுக்கு ஒரு “விளம்பர வெற்றியாக’ இருக்குமே தவிர, அது ஹமாஸ் இயக்கத்தை உண்மையில் பாதிக்காது என்று லோவாட் கூறுகிறார்.

அரசு எதிர்ப்பு நிறுவனங்களில் ஒரு தளபதியோ தலைவரோ கொல்லப்பட்டால், அவர்களுக்கு பதில் மற்றொருவர் வருவார். அடுத்து வருபவர்களுக்கு அதே அனுபவம் அல்லது நம்பகத்தன்மை இல்லாமல் இருக்கலாம். ஆனால் அமைப்பு வேறு வடிவத்தில் தன்னை மீண்டும் உருவாக்கிக் கொள்ளும்.

“அவர் கொல்லப்பட்டால், அது ஹமாஸுக்கு இழப்பாகத்தான் இருக்கும்,” என்று லோவாட் கூறுகிறார். “ஆனால் அவருக்குப் பதில் இன்னொருவர் வருவார். அதற்கான கட்டமைப்புகள் உள்ளன. இது பின்லேடனைக் கொல்வது போல் இல்லை. ஹமாஸுக்குள் மற்ற மூத்த அரசியல் மற்றும் இராணுவத் தலைவர்கள் உள்ளனர்,” என்றார்.

ஆனால், மிகப்பெரிய கேள்வி, ‘இஸ்ரேல் ஹமாஸை ஒழிப்பதற்கான தனது தாக்குதலை இராணுவப் பிரசாரத்தை முடிக்கும்போது, காஸாவுக்கு என்ன நடக்கும், இறுதியில் யார் பொறுப்பேற்பார்கள்?’ என்பதுதான்.

மேலும், ‘காஸா மீண்டும் இஸ்ரேல் மீதான தாக்குதல்களுக்கான ஏவுதளமாக மாறுவதைத் தடுக்க முடியுமா? அப்படித் தடுப்பதன் மூலம் தற்போது நடப்பது போன்ற பெரும் மனிதாபிமானப் பேரழிவுகளைத் தடுக்க முடியுமா?

Previous Story

2024 தேர்தலுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 10 பில்லியன்

Next Story

காஸாவில் போர் நிறுத்தம், 50:300 பணயக் கைதிகளை விடுவிக்க உடன்பாடு